Get Adobe Flash player

கசப்பும் களிப்பாகும்!
whatsup - இல் வந்த கதை


கர்த்தருடைய தேசமான இஸ்ரவேல் தேசத்தின் மோரியா மலை அடிவாரம். அங்கு கனிதரும் மரங்கள் ஏராளமாய் இருந்தன. அந்த பகுதியில் குறிப்பிடும்படியாய் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்துக்கு “ மர் “( எபிரேய பெயர் ) என்று பெயர். அந்த மரம் மிக உயரம் குறைவானது; அதனால் மிகப் பெரிதாக வளர முடியவில்லை; அதன் அதிக பட்ச உயரமே 12 அடிதான்; அவ்வளவே அதன் உயரம்;
Myrrhe

ஆகையால் அதைச் செடி என்றும் சிலர் கருதுவதுண்டு. அதன் கிளைகளும் அவ்வளவு பெரிதாக வளரவில்லை; அதன் தண்டுப்பகுதி மிக கடினமான ஒன்றாயிருந்தது; அதன் இலைகளும் அவ்வளவு அடர்த்தியாயில்லை. ஆனாலும் மஞ்சள் நிறப்பூக்களோடும், திராட்சைப் பழ வடிவில் அதன் சிறிய கனிகளோடும் பார்ப்பதற்கு மிக அழகாக காணப்பட்டது.

       இஸ்ரவேலர்கள் கூடாரப் பண்டிகை கொண்டாட நற்கனிகளைத் தேடி மலைக்கு வருவது வழக்கம். அந்தப் பிரகாரம் பழங்களைத் தேடி அநேக இஸ்ரவேலர் வந்தார்கள். ஆனால் அந்த மர் மரத்தின் அருகே ஒருவர் கூட வரவில்லை. அந்த மரத்தைப் பார்க்கிற போதே எல்லாருக்கும் ஒரு வெறுப்பு ஏற்பட்டது. மற்ற மரங்களை எல்லாம் விரும்பி நாடிச் சென்றவர்கள் இந்த மர் மரத்தை மட்டும் உதாசீனப்படுத்தினார்கள்.

       சரி மனிதர்கள்தான் இப்படி என்றால் பறவையினங்களும் ஒன்று கூட அதன் கிளைகளில் வந்து அமரவோ அதன் கனிகளைப் புசிக்கவோ வரவில்லை. இது ஏன் என்று அந்த மரத்துக்கு புரியவேயில்லை. இது அந்த மர் மரத்துக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது.

       ஒரு நாள் அந்த மரம் பார்த்துக் கொண்டிருக்கையில் அதன் அருகில் நின்ற ஒலிவ மரத்தில் அநேகர் ஒலிவப் பழங்களைப் பறித்தார்கள். ஆனால் அந்த மர் மரத்தை ஒருவர் கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை. அந்த மர் மரம் மனமுடைந்து போனது. அது பார்த்துக் கொண்டிருக்கையில் இஸ்ரவேலனாகிய ஒரு சிறுவன் ஓடி வந்து மர் மரத்தின் கனிகளில் சிலதைப் பறித்தான். மர் மரத்துக்கோ மிகுந்த சந்தோஷம்.

       தன் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சிறு பையன் தன் கனிகளைப் பறித்துப் புசிக்கப் போவதை ஆவலாய்ப் பார்த்தது. ஆனால் அதற்குள் அந்த சிறு பையனுடைய தகப்பன் விரைந்து வந்து அவன் கையில் இருந்த மர் மரத்தின் கனிகளைத் தட்டிவிட்டான். அவன் அந்தப் பையனிடம் அந்த மர் மரத்தைக் காட்டி, “ இந்த மர் மரத்தின் உச்சிக் கொப்பு முதல் அதன் வேர் வரை அத்தனையும் கசப்பு சுவை உடையது. அதைத் தொடாதே ” என்றான்.

       மர் மரத்துக்கு அப்பொழுதுதான் காரியம் புரிய ஆரம்பித்தது. தன் பூ, இலை, கனி, மரப்பட்டை, வேர் என்றூ அத்தனை பாகங்களும் கசப்பு ( Bitterness ) மிகுந்தது என்று. ஆம் அதன் சகல பாகங்களும் வாயில் வைக்க முடியாத அளவு கசப்பானது. அந்த மரம் மிகவும் துயருற்றது.

       மர் மரம் தன் அருகே நின்றவர்களை எல்லாம் கூப்பிட்டு புலம்ப ஆரம்பித்தது. “ ஐயா கசப்போடு படைக்கப்பட்டது என் தவறல்ல, என் கசப்புச் சுவைக்கு நான் காரணமல்ல, உங்களைப் படைத்த தேவன் தான் என்னையும் படைத்தார். அவர் தான் இந்த கசப்பை என்னுள் வைத்துவிட்டார். நான் என்ன செய்வது. ஐயா என்னைப் புறக்கனிக்காதீர்கள், என் கனிகளிலும் சிலதை எடுத்துச் செல்லுங்கள். ஐயா எடுத்துச் செல்லுங்கள் “ என்று கெஞ்சியது. ஆனால் ஒருவர் கூட அதன் சத்தத்தைக் கேட்கவில்லை.

       மனிதர்கள் தான் தனக்குச் செவிகொடுக்கவில்லை. பறவைகளையாவது கூப்பிடலாம் என்று அவற்றையும் கூப்பிட்டுப் பார்த்தது. ஆனால் பறவைகளோ மாறுத்தரமாக “ நாங்கள் எத்தனையோ கசப்பான மரங்களின் கனிகளைப் புசிக்கிறோம். ஆனால் உன்னுடைய கனிகளைப் போல் கசப்பான கனியை நாங்கள் பார்த்ததில்லை. அது எங்களுக்கு வேண்டாம். அவை புசிக்கத் தகாதவை “ என்று சொல்லி விட்டன. மர் மரம் தன்னுள் உடைந்து போனது.

       அந்த மர் மரம் தேவனை நோக்கி கூப்பிட ஆரம்பித்தது.     “ என்னை உருவாக்கின என் தேவனே, எத்தனையோ சிருஷ்டிப்புகள் இருக்கின்றன. எத்தனையோ விதமான மரங்கள் உள்ளன. ஆனால் எனக்குள் மட்டும் இப்படி ஒரு கசப்பை நீர் வைத்ததென்ன ? கசப்போடு படைக்கப்பட்டது என்னுடைய தவறா? நான் என்ன செய்வேன் ? ஏன் என் வாழ்க்கையில் இவ்வளவு கசப்பு ? ஏன் என் வாழ்க்கையில் இந்த கசப்பை அனுமதித்தீர் ? என் கசப்பை என்னிடத்தில் இருந்து எடுத்துவிடும், என்னை மாற்றும் “ என்று கெஞ்ச ஆரம்பித்தது..

       தன்னை நோக்கி கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் பதில் கொடுக்கிற இரக்கமுள்ள தேவன் அல்லவா அவர். தேவன் பதில் கொடுத்தார். அவர் கொடுத்த பதில் இதுதான், “ காத்திரு “ என்பதே. தேவனுடைய வார்த்தையை நம்பி மர் மரமும் காத்திருந்தது. மாதங்கள் சென்றது. வருஷங்கள் கடந்தது. ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. அதன் வளர்த்தியிலோ உருவத்திலோ அதன் சுவையிலோ எந்த மாற்றமும் வரவில்லை.

       மர் மரம் தினமும் பரலோகத்தின் தேவனை நோக்கிப் பார்த்து கூப்பிட ஆரம்பித்தது. தன்னைப படைத்த தேவனிடத்தில் முறையிட்டது. சில நேரங்கள பதில் வந்தது. பல நேரங்களில் பரலோகம் மெளனமாயிருந்தது. மர் மரத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. தன்னுடைய கசப்பைக் குறித்த தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்கள் எல்லாம் பொய்த்து விட்டனவோ என்று கூட எண்ணியது. தன் வாழ்க்கையில் ஏன் இந்த கசப்பு ? ஏன் இந்த Bitterness ? ஏன் இந்தக் குறை ? இயற்கைக்கு அப்பாற்பட்டு என் வாழ்க்கையில் ஏன் இப்படி ? என்று அங்கலாய்த்தது. மர் மரமும் எத்தனை நாள் தான் பொறுத்திருக்கும் ?

       ஒரு நாள் வியாகுலத்தின் மிகுதியால் உரத்த சத்தத்தோடு தேவனிடத்தில் விண்ணப்பிக்க ஆரம்பித்தது.     “ என் தேவனே எனக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள் எல்லாம் என்னவாயிற்று ? என் கசப்பு என்றைக்கு ஐயா மாறும் ? என் வாழ்க்கையில் உள்ள கசப்பைக் குறித்து உம்முடைய திட்டம்தான் என்ன ? ஏன் அதை என் வாழ்க்கையில் அனுமதித்தீர் ? என்னுடைய மனக்குறை என்றைக்கு தீரும் ? நானும் மற்றவர்களைப் போல் ஆசீர்வதிக்கப்படுவது எப்போது? என்னுடைய ஏக்கங்களுக்கெல்லாம் ஒரு முடிவில்லையா ? என்னுடைய கசப்பை மாற்ற மாட்டீரா ? எனக்கு ஒரு அற்புதத்தைச் செய்ய மாட்டீரா ? தேவனே எனக்கு இரங்கும், இரங்கும் “ என்று கதற ஆரம்பித்தது.

       அதன் உச்சிக் கொப்பு முதல் அதன் வேர் வரை தேவனை நோக்கி கூப்பிட்டன. அதன் ஆழ் மனதில் இருந்து அங்கலாய்ப்பு வெளிப்பட்டது. அந்த மரத்தின் கூக்குரல் மேலெழும்ப ஆரம்பித்தது. அதன் பெருமூச்சு அதிகமாயிற்று. அதன் வியாகுலத்தினால் அதன் கனத்த இருதயம் வெடித்து விடும் போல் இருந்தது.

       அதன் உள்ளமெல்லாம் உடைய ஆரம்பித்தது. அதன் இருதயம் நொறுங்க ஆரம்பித்தது. தன் இருதயத்தை உடைத்து ஊற்றி அது அழ ஆரம்பித்தது. அதன் வேதனையை அதனால் தாங்கிக் கொள்ள முடியாமல் மர் மரம் வியாகுலத்தால் கண்ணீர் விட்டது. அதன் பட்டைகள் எல்லாம் உறிய ஆரம்பித்ததன. அதன் தண்டு பகுதிகளெல்லாம் வெடிக்க ஆரம்பித்தது. அதன் கிளைகளில் கீறல்கள் விழுந்தன. அதன் கிளை மூட்டுகளில் எல்லாம் விரிசல் ஏற்பட்டது. அவற்றின் வழியே அதன் கசப்பு எல்லாம் கண்ணீராக வெளிவர ஆரம்பித்தது. அதன் கசப்பான அதன் தாவர உயிர்ச்சாறு ( Sap ) எல்லாம் வெடிப்புகள் வழியாய் கொட்ட ஆரம்பித்தது. அது வேதனையை அடக்கமாட்டாமல் அதன் கண்ணீர் பெருக்கெடுத்தது. அதன் கூக்குரல் பரலோகத்தை எட்டியது.

       மர் மரத்தின் கசப்பு எல்லாம் கண்ணீராக வெளிப்பட வெளிப்பட .அந்தப் பகுதியில் இருந்த எல்லோரும் ஒரு தெய்வீக வாசனையை உணர ஆரம்பித்தார்கள். உலகம் அதுவரை கண்டிராத வாசனை. அப்படி ஒரு சுகந்த வாசனையை மனுஷர் நுகர்ந்ததேயில்லை. அந்த பிராந்தியமே நறுமணத்தால் நிரம்பினது. அந்த வாசனையை நுகர்ந்தவர்கள் அத்தனை பேரையும் அது தன்பால் சுண்டி இழுக்க ஆரம்பித்தது. அந்த வாசனை எங்கிருந்து வருகிறது என்று தேடி அலைய ஆரம்பித்தார்கள். எல்லாரும் அந்த வாசனை வந்த திசையை நோக்கி ஓடி வர ஆரம்பித்தார்கள்.

       அந்த வாசனை வருவது மர் மரத்தில் இருந்துதான் என்பதை எல்லோரும் அறிந்து கொண்டார்கள். மர் மரம் வடித்த அதன் கசப்பான கண்ணீர் ( Tears ) அதன் தண்டைச் சுற்றிலும் பிசினாக வடிந்து நின்றது. அதன் கிளைகளிலிருந்து தரையெல்லாம் சிந்தியிருந்தது. எல்லோரும் அதை போட்டி போட்டு பொறுக்கினார்கள். அதன் பிசினையெல்லாம் எனக்கு உனக்கு என்று பிய்த்து எடுத்தார்கள். அந்த மர் மரத்தின் கசப்பு எழும்பப் பண்ணின வாசனை அவ்வளாவாய் அவர்களை ஈர்த்தது. அந்த கசப்பான மர் மரத்தின் கண்ணீருக்கு ( பிசினுக்கு ) வேதம் ஒரு பெயர் கொடுத்திருக்கிறது     “ வெள்ளைப்போளம் ”

       யாத்திராகமம் 30 : 23-25 ல் ஆசரிப்புக் கூடார பரிசுத்த அபிஷேக தைலத்துக்கு தேவையான ஐந்து பொருள்களில் முதலாவதாய் தேவனால் குறிக்கப்பட்டது இந்த வெள்ளைப்போளம் தான். மர் மரத்தின் கசப்பு தெய்வத்தின் பார்வையிலே மட்டுமல்ல. உலகத்தின் பார்வையிலும் பிரீதியாய்க் காணப்படுகிறது. மர் மரத்தின் கசப்பான கண்ணீர் தான் வெள்ளைப்போளம் ( Myrrh Tears ) என்ற பெயரில் உலகமே விரும்பப்படத் தக்க ஒன்றாய் மாறிவிட்டது. வெள்ளைப்போளத்தை வணிகர்கள் இன்றும் Myrrh Tears (வெள்ளைப்போள மரத்தின் கண்ணீர்) என்றே அழைக்கிறார்கள். தங்கத்தைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. மர் மரத்தின் கசப்புதான் (Bitter) அதன் சிறப்பாக (Better) மாறிவிட்டது. மர் மரத்தின் Bitterness ஐ எல்லாம் தேவன் அதன் Betterness ஆக மாற்றிவிட்டார்.

       எனக்கன்பானவர்களே, மர் மரத்தைப் போல் உங்கள் வாழ்க்கையில் உள்ள சில குறைவுகள், அல்லது நீங்கள் சந்தித்த நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையை கசப்பாக்கி இருக்கிறதா ? கசப்பான காரியங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறீர்களோ ? இயற்கைகு அப்பாற்பட்டு காரியங்கள் உங்கள் வாழ்க்கையை கசப்பாக்கி விட்டதா ? கலங்க வேண்டாம். நிச்சயமாய் உங்கள் வாழ்க்கையின் Bitterness ஐ எல்லாம் உங்களுடைய Betterness ஆக மாற்ற தேவன் போதுமானவர்.

       அன்னாளுடைய Bitterness என்ன ? பிள்ளையில்லாதது. ஆனால் அன்னாளுடைய Betterness சாமுவேல் என்கிற பிள்ளை.

       ரூத்தினுடைய Bitterness என்ன ? தன் கணவனை இழந்தது. ஆனால் ரூத்தின் Betterness போவாஸ் அல்லவா ?

       கிறிஸ்துவின் Bitterness என்ன ? சிலுவை. ஆனால் கிறிஸ்துவின் Betterness ம் சிலுவை தானே.

       உங்கள் வாழ்க்கையில் ஒரு Bitterness   உண்டானால் நிச்சயமாய் ஒரு Betterness உண்டு.

       பரிசுத்த வேதாகமத்தில் சிலரோடு இந்த வெள்ளைப்போளம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. அவர்களில் முதல் நபர் யோசேப்பு. இரண்டு இடங்களில் யோசேப்பின் வாழ்க்கையில் வெள்ளைப்போளம் பற்றி குறிக்கப்பட்டுள்ளது. வெள்ளைப்போளம் விற்கச் சென்ற இஸ்மவேலரிடத்தில்தான் யோசேப்பு விற்கப்பட்டதுதான் ( ஆதி :37:25 ) யோசேப்பின் வாழ்க்கையில் Bitterness ஆன தருணம். ஆனால் அதையே யோசேப்பின் Betterness ஆன வாழ்க்கைக்கு அச்சாரமாய் தேவன் மாற்றிப் போட்டார். வெள்ளைப்போள வியாபாரிகளிடத்தில் விற்கப்பட்டபோது துவங்கிய யோசேப்பின் Bitterness எல்லாவற்றையும் - யோசேப்பின் தகப்பன் யோசேப்புக்கு வெள்ளைப்போளம் கொடுத்தனுப்பின போது (ஆதி:43:11) Betterness ஆக தேவன் மாற்றியிருந்தார்.

       கிறிஸ்து சிலுவையில் மரிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அவருடைய சிரசின் மீது வெள்ளைக்கல் பரணியில் இருந்த வெள்ளைப்போளத்தை ஊற்றினாள். அவள் வாழ்க்கையின் கசப்பு (Bitterness) என்ன என்று தெரியவில்லை. ஆனால் அதை Betterness ஆக கர்த்தர் மாற்றினார். சுவிசேஷம் அறிவிக்கப்படும் இடங்களில் எல்லாம் அவளைக் குறித்தும் அறிவிக்கப்படுகிறதே. இதுதான் அவளுடைய Betterness. (மத்தேயு:26:13 )

       நம்முடைய இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவையே கண்ணோக்கிப் பார்ப்போமே. அவருடைய வாழ்க்கையின் Bitterness என்ன ? பரலோகத்தைத் துறந்து பூமியில் வந்து ஏழ்மைக்கோலம் எடுத்து பிறந்ததா ? அவர் சிலுவையிலே பட்ட பாடுகளா ? அல்லது ஜீவனுள்ள தேவனாகிய அவர் மரணத்தை ருசி பார்த்தாரே அதுவா ? ஆம் இவை மூன்றுமே நம் இரட்சகர் அநுபவித்த கசப்பான காரியங்கள் தான். அவருடைய பிறப்பு - பாடுகள் – இறப்பு. இவை மூன்றிலுமே வெள்ளைபோளம் பற்றி குறிப்பிடப்பட்டூள்ளது.

       கர்த்தர் பிறந்தபோது வெள்ளைப்போளம் காணிக்கையாக கொடுக்கப்பட்டது (மத்தேயு : 2 : 11). கர்த்தர் சிலுவையில் பாடுகளை அனுபவித்த போது திராட்சரசத்தின் காடியில் வெள்ளைபோளம் கலந்து கொடுக்கப்பட்டது. (மாற்கு:15:23.,மத்தேயு 27:34) கர்த்தர் மரித்து அடக்கம் பண்ணும் போதும் அவர் சரீரத்தில் வெள்ளைப்போளம் பூசினார் நிக்கோதேமு (யோவான் 19:39,40) இதன் அடையாளம் என்ன ? இவை எல்லாம் கர்த்தர் கடந்து வந்த கசப்பான பாதைகள். ஆனால் கர்த்தருடைய Bitterness எல்லாம் முழு உலகத்துக்கும் Betterness ஆக மாறிவிட்டதே.

       அன்பான தேவ ஜனமே உங்கள் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் மிகுந்துள்ளதா ? கலங்க வேண்டாம். நீங்கள் கர்த்தரின் பார்வையில் வெள்ளைப்போளம். கர்த்தர் நம் வாழ்க்கையில் சில கசப்புகளை அனுமதிப்பது நம் வாழ்க்கை கசந்து போகவேண்டும் என்பதற்காய் அல்ல; நம்மைக் கொண்டு அநேகருடைய வாழ்க்கையை இனிமையானதாக மாற்ற கர்த்தர் விரும்புகிறார். வெள்ளைப்போளத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. அது எதன் மீதெல்லாம் படுகிறதோ அவை எல்லாவற்றயும் இனிமையானதாக மாற்றிவிடும். உங்களைகொண்டு லட்சங்களுடைய வாழ்க்கையை கர்த்தர் இனிமையானதாக மாற்ற விரும்புவதால் தான் உங்கள் வாழ்க்கையில் சில கசப்புகளை அனுமதித்திருக்கிறார். பொறுத்திருங்கள். உங்கள் Bitterness எல்லாம் Betterness ஆக மாறும்.

       “ மர் “ ( கசப்பு என்று பொருள் ) என்ற பெயரில் இருந்துதான் “ மாரா “ என்ற சொல் பிறந்தது. இதற்கும் கசப்பு என்றே பொருள். மாராவிலே இஸ்ரவேல் ஜனங்கள் குடிக்கக் கூடாதபடி தண்ணீர் கசப்பாயிருந்தது. அப்போது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார். அதை தண்ணீரில் போட்டபோது அது இனிமையானதாக மாறிற்று. அந்த மரம் இந்த மர் மரம் தான் என்பது மேலான வேதபண்டிதர்கள் ஏற்றுக்கொண்ட ஒன்று. மர் மரம் ஒரு கசப்பான மரம் ஆயிற்றே, அதைப் போட்டால் எப்படி தண்ணீரி கசப்பு நீங்கும் என்று நினையாமல் மோசே கர்த்தருக்கு கீழ்படிந்தான். மர் மரத்தின் கசப்பைக் கொண்டே கர்த்தர் மாராவின் கசப்பை மதுரமாக மாற்றினார். உங்கள் கசப்பான அநுபவங்களையே நினைத்துக் கொண்டிராமல் கர்த்தருக்கு கீழ்படிந்திருங்கள். உங்களைக் கொண்டு அநேகருடைய கசப்பான வாழ்க்கையை கர்த்தர் மாற்ற திட்டம் பண்ணியிருக்கிறார். உங்கள் வாழ்வின் கசப்பான அனுபவங்களுக்குள் அநேகருடைய வாழ்வின் கசப்பை மாற்றும் வல்லமையைக் கர்த்தர் வைத்திருக்கிறார்.

       கடைசியாக, எலியாவின் அபிஷேகம் எலிசா மீது இரண்டு பங்காக ஊற்றப்பட்டது. எலியா உயிரோடிருக்கையில் மொத்தம் எட்டு அற்புதங்களைச் செய்தார். அப்படியானால் எலிசா எத்தனை அற்புதங்களைச் செய்யவேண்டும் ? பதினாறல்லவா. ஆனால் எலிசா உயிறோடிருந்த காலத்தில் அவர் பதினைந்து அற்புதங்களையே செய்தார். அதற்குப் பிறகு அவர் வியாதிப்பட்டு மரித்துப் போனார். எல்லோரும் எண்ணினார்கள். கர்த்தர் எலிசாவுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறவில்லை. இனி அவ்வளவுதான். வார்த்தை நிறைவேறாது. எலிசாவே மரித்தாயிற்று. இனி அவருக்கு கொடுத்த வாக்குத்தத்தம் எப்படி நிறைவேறும் என எண்ணினார்கள். எலிசா மரித்து மறு வருஷமாயிற்று. எல்லாரும் எலிசாவை மறந்து போனார்கள். ஆனால் கர்த்தரோ எலிசாவையும் மறக்கல. அவருக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்ததையும் மறக்கல. இஸ்ரவேலில் ஒரு வாலிபன் மரிக்கப்பண்ணி, அவன் சடலத்தை எலிசாவின் கல்லறயிலே போடும்படியான சூழலை கர்த்தர் உண்டுபண்ணுகிறார். அப்படியே அவனை எலிசாவின் கல்லறையிலே போட்டார்கள். வாலிபனின் சரீரம் எலிசாவின் எலும்புகள் மேல்பட்டவுடனே வாலிபன் உயிர்த்தான். எலிசாவின் எலும்புகளைக் கொண்டு பதினாறாவது அற்புதத்தைச் செய்து கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தை நிறைவேற்றினார்.

       தேவன் உங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறாத நிலையில், முழு உலகமுமே அழிஞ்சாலும் சரி கர்த்தர் ஒரு புது உலகத்தை உண்டுபண்ணி அதிலே உங்களை வைத்து உங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தை நிறைவேற்றியே தீருவார். கலங்க வேண்டாம்.

       உங்கள் கசப்பு எல்லாம் களிப்பாக மாறும். உங்கள் வாழ்க்கையின் Bitterness எல்லாவற்றையும் அவர் Betterness ஆக மாற்றியே தீருவார். ஏனெனில் நீங்கள் கர்த்தரின் பார்வையிலே வெள்ளைபோளம்.

24/06/17, 9:59 - benjaminlebeau☺: <Fichier omis>

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org