Get Adobe Flash player

இதயம் உள்ள இனிய நண்பர்

 

சென்னையில் வேலை பார்க்கும் ராஜ்குமார் என்பவர், 2007ம் ஆண்டில் ஒருநாள், தனது சொந்த ஊரான குடியாத்தத்தில் உள்ள குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தார். அவர் பயணம் செய்துகொண்டிருந்த அதே பேருந்தில் ஒரு கிராமத்து அம்மாவும், அவரின் ஏழு வயது மகள் மணிமேகலையும் பயணம் செய்தனர்.

மணிமேகலைக்கு கடுமையான இதய நோய் என்பதும், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அவ்விருவரும் வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும், சென்னைக்கு புதிது என்பதுடன் கையில் போதுமான பணம் இல்லை என்பதும், ராஜ்குமார் அவர்களுக்குத் தெரியவந்தது. வீட்டிற்கு பிறகு போகலாம், முதலில் இவர்களுக்கு உதவுவோம் என்று முடிவு செய்து, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் ராஜ்குமார். மணிமேகலையின் அழகுச் சிரிப்பும், பேச்சும் காந்தம் போல இழுக்க, திரும்பத் திரும்ப மருத்துவமனைக்குச் சென்று பார்த்து அன்பையும் ஆறுதலையும் வழங்கினார் இவர். அரசு மருத்துவமனையில் மருத்துவ கட்டணம் கிடையாது. ஆனால் தொடர்ந்து தங்கியிருக்கும்போது ஏற்படும் குடும்பத்தினரின் பிற செலவிற்காக நண்பர்கள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டுபோய்க் கொடுத்தார். இன்னும் கொஞ்சம் பணம் திரட்டினால் மணிமேகலையை விரைவில் குணப்படுத்தலாம் என்பது தெரியவரவே, மீண்டும் பணத்தை திரட்ட தொடங்கினார். முன்பின் தெரியாத யாரோ ஒருவரின் உயிருக்காக ராஜ்குமார் பாடுபடுவதைக் கேள்விப்பட்ட அவர் வேலை பார்த்த டாடா நிறுவனம், ராஜ்குமாரை அழைத்து உனக்கு தேவைப்படும் பணத்தை கம்பெனி அறக்கட்டளையில் இருந்து தருகிறோம் என்று சொல்லி, தந்தும் விட்டனர், மணிமேகலையும் அபாயக்கட்டத்தை தாண்டி பிழைத்துக்கொண்டார். மணிமேகலையுடன் ராஜ்குமார் தனது சேவையை நிறுத்திக்கொள்வார் என்று எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்தபோது, இன்னும் பல மணிமேகலைகளுக்கு நமது உதவி தேவை என்று முடிவு செய்து, இதய நோயாளிகளுக்கான சிகிச்சை களத்தில் முழுமையாக இறங்கிவிட்டார் ராஜ்குமார். தினமலரில் வெளிவரும் உயிர்காக்க உதவுங்கள் விளம்பரங்களில் உள்ள நபர்களை நேரில் தொடர்பு கொள்வது, சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுடன் பேசுவது என்று, நிறைய நேரம் செலவிட்டு, கிடைத்த அவர்கள் பற்றிய விவரங்களையும், தேவையையும் டாடா அறக்கட்டளையிடம் கொடுத்துவிடுவார் ராஜ்குமார். அவர் பரிந்துரை செய்யும் நோயாளிகளுக்கு அறக்கட்டளை உதவ ஆரம்பித்தது. இப்படி 2007ம் ஆண்டில் ஆரம்பித்த இதய நோயாளிகளுக்கான இலவச சிகிச்சைக்கான பயணம், 2017ம் ஆண்டு வரை தொடர்கிறது. ராஜ்குமார் அவர்களின் முயற்சியால் இதுவரை 347 நோயாளிகள் சிகிச்சை பெற்று பூரணநலம் பெற்றுள்ளனர். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ராஜ்குமார் அவர்கள், டாடா நிறுவனத்தைவிட்டு வெளியேறி வேறு நிறுவன வேலையில் சேர்ந்துவிட்டார் ஆனாலும் டாடா அறக்கட்டளை, இவர் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக இப்போதும் இவர் பரிந்துரை செய்யும் நோயாளிகளுக்கு உதவி வருகிறது. இதய நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொண்டால், மற்றவர்களைப் போல மகிழ்வாக வாழமுடியும் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும் விதத்தில், ராஜ்குமார் அவர்கள் இதய நோயாளியான பத்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது மகிழ்வாக குடும்பம் நடத்தும் தன் மனைவி பத்மா பெயரில் பத்மா அறக்கட்டளையை உருவாக்கி, சதிஷ், எல்டின் கெல்லி மற்றும் சிவராம் ஆகிய அறக்கட்டளை உறுப்பினர்களுடன் இணைந்து இதய நோயாளிகளுக்கான சேவை தற்போது விரிவுபடுத்தியுள்ளார். தன் வேலை நேரம் போக, மற்ற நேரம் முழுவதையும் இதய நோயாளிகளின் நலனிற்காகவே ராஜ்குமார் செலவிடுகிறார். இதயத்தில் ஒட்டை, இதய வால்வு பாதிப்பு, இதய வால்வு மாற்றம் என்று, இதயம் சம்பந்தமான எந்த பிரச்சனை என்றாலும் கவலைப்படவேண்டியது இல்லை, பணம் அதிகம் செலவாகுமோ என்று பயப்படவேண்டியதும் இல்லை. தன்னைத் தொடர்புகொண்டால் முடிந்தளவு உதவுகிறோம் என்று ராஜ்குமார் அவர்கள் சொல்கிறார். 347 இதயங்கள் வாழ்த்தும் ராஜ்குமார் என்று, தினமலர் தினத்தாளில் இந்தத் தகவல் இருந்தது. ராஜ்குமார் போன்ற நல்ல உள்ளங்களைப் பின்பற்றி இதயங்களைக் காப்போம், இதய அமைதி பெறுவோம். பூமியில் விதைக்கப்பட்ட விதைகூட எதிர்ப்பை சமாளித்து முளைத்து விடுகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் மனிதர்களால் வெட்டப்படுகின்ற வாழ்வை அனுபவிக்கும் மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன. ஒருநாள் மட்டுமே வாழ்க்கை, என்ற நிலையிலிருக்கும் பல்வேறு உயிரினங்கள் ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன. இப்படி பலகோடி உயிரினங்கள் அமைதியாக வாழ முடியுமென்றால், நாமும் மகிழ்வாக அமைதியில் வாழலாமே. நம்மை ஆழமாகச் சிந்திக்க வைப்பதற்காக, துயரத்தைத் தந்த பிரச்சனைகளுக்கு மனதார நன்றி சொல்வோம். நமது ஆணவத்தைத் தவிடுபொடியாக்கி, பணிவைக் கற்றுத்தந்த நம் துன்பங்களுக்கு நன்றி சொல்வோம். வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வும் ஓர் உண்மையைக் கற்றுத் தருகின்றது. வாழ்வோம் நிம்மதியாக, அயலவரும் நிம்மதியாக வாழ உதவுவோம்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org