‘மனம்மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்’

அருள்பணி மரிய அந்தொனிராசு


lost sheep

Christoper Notes என்னும் நூலில் இடம்பெறக் கூடிய ஒரு நிகழ்வு.

ஒரு சமயம் கடவுளைச் சந்தித்த சாத்தான் அவரைக் குறித்த தன்னுடைய ஆவலாதியை (முறையீடு) எடுத்துச் சொன்னது:

“நீர் மிகவும் பாரபட்சமாக நடந்து கொள்கின்றீர். மீண்டும் மீண்டும் தவறு செய்யக்கூடியவர்கள் மனம் வருந்தி உம்மிடம் திரும்பி வரும்போது, நீர் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்கிறீர். ஆனால், ஒரே ஒரு பாவம் மட்டும் செய்த என்னை மன்னிக்கவில்லை.  அது ஏன்?”

 

கடவுள் மிகவும் பொறுமையாக சாத்தானிடம், “ஏனென்றால் நீ மனந்திருந்தவும் இல்லை, என்னிடம் பாவமன்னிப்பும் கேட்கவில்லை” என்றார்.

ஆம், மனந்திரும்பி தன்னிடம் திரும்பி வருகின்றவர்களை ஆண்டவர் மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார் என்பதை இந்த நிகழ்வானது மிக அருமையாக எடுத்துரைக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மனம்மாறியவர்களால் விண்ணகத்தில் எத்தகைய மகிழ்ச்சி உண்டாகின்றது என்பதைக் குறித்துப் பேசுகின்றார். நாம் அதனைப் பற்றி இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவர் இயேசு யூத சமுதாயத்தால் பாவிகள் என்று முத்திரை குத்தப்பட்ட வரிதண்டுவோர், விலைமகளிர், ஏழைகள், அனாதைகள் இவர்களோடு நல்லவிதமாய் பழகினார்; அவர்களோடு உறவாடினார்; கடவுளின் பேரன்பை அவர்களுக்கு எடுத்துச் சொன்னார். இது பிடிக்காத பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் விமர்சித்தார்கள், ‘இவர் பாவிகளோடு விருந்துண்கிறார்’ என்று. அப்போதுதான் இயேசு அவர்களுக்கு காணமல் போன ஆடு, திராக்மா மற்றும் ஊதாரி மைந்தனின் உவமையை எடுத்துச் சொல்கின்றார். இன்றைய நற்செய்தி வாசத்தில் முதல் இரண்டு உவமைகள் இடம் பெறுகின்றன. அந்த இரண்டு உவமைகளில் நேர்மையாளர்களைக் குறித்தல்ல, மனமாறிய பாவியைக் குறித்து விண்ணகத்தில் எத்தகைய மகிழ்ச்சி உண்டாகின்றது, இறைவன் பாவியின் மனமாற்றத்தை எந்தளவுக்கு விரும்புகின்றார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. அது எப்படி என்று பார்ப்போம்.

பரிசேயர்கள் மண்ணின் மைதர்கள் (People of the Land) என்று கருதப்பட்ட மக்களை மிகவும் கீழ்த்தரமாகப் பார்த்தார்கள். அவர்ளோடு பேசுவதோ, பழகுவதோ மிகவும் தீட்டான காரியம் என்று நினைத்தார்கள், அது மட்டுமல்லால் அவர்களுடைய சாட்சியத்தைக் கூட ஏற்றுக்கொள்ளாமல் இருந்தார்கள். இப்படிப்பட்ட மக்கள்தான் மனந்திரும்பி ஆண்டவர் இயேசுவின் போதனையைக் கேட்க ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களோ இயேசுவின் பேச்சில் எப்படி குற்றம் கண்டுபிடிக்கலாம் என்றுதான் இருந்தார்கள். எனவே குற்றம் கண்டுபிடிப்பதையே தங்களுடைய குலத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைப் பார்த்துத்தான் இயேசு உவமைகளைச் சொல்கின்றார்.

லூக்கா நற்செய்தி பதினைந்தாம் அதிகாரம் ‘நற்செய்திக்குள் ஒரு நற்செய்தி ‘ என்று அழைக்கபப்டுகின்றது. காரணம் இந்த அதிகாரத்தில் வரக்கூடிய மூன்று உவமைகள் கடவுளின் பேரன்பும் மன்னிப்பும் எந்தளவுக்கு உயர்ந்தவை என்பதை எடுத்துச் சொல்கின்றது.

இயேசு கூறும் காணாமல் போன ஆடு உவமையில் வரக்கூடிய ஆயனும், காணாமல் திராக்மா உவமையில் வரும் பெண்மணியும் தங்களிடம் இருந்த மற்றவற்றை விட்டுவிட்டு காணாமல் போனதைத் தேடி அழைக்கின்றார்கள். அவர்கள் அவற்றைக் கண்டுபிடித்ததும் மட்டிலா பெருமகிழ்ச்சி கொள்கின்றார்கள். இந்த உவமைகளைச் சொல்லிவிட்டு ஆண்டவர் இயேசு, “மனம் மாறத் தேவையில்லாதத் தொண்ணூற்று ஒன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து உண்டாகும் விண்ணகத்தில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்” என்கின்றார். ஆம் ஒரு பாவி மனம் மாறுகின்றபோது அவருக்கு மட்டும் மகிழ்ச்சி கிடையாது, அவரைச் சார்ந்த அவருடைய குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் ஏன் கடவுளுக்கும் மகிழ்ச்சி உண்டாகின்றது. அப்படியென்றால் பாவிகளின் மனந்திரும்புதலை ஆண்டவர் எந்தளவுக்கு எதிர்பார்க்கின்றார் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.

இந்த உலகம் பாவிகளை, குற்றவாளிகளை இழிவானவர்களாகப் பார்க்கின்றது.  ஆனால் ஆண்டவராகிய கடவுள் அப்படி இல்லை. அவர் பாவத்தை வெறுத்தாலும் பாவிகளை அன்போடு ஏற்றுக்கொள்ளக் கூடியவராகிய இருக்கின்றார். எனவே, ‘நான் நேர்மையாளன், ஒரு பாவமும் செய்யாதவன், மற்றவர்கள் குற்றவாளிகள் என்று பிறரைத் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல், நம்முடைய குற்றங்களை உணர்ந்து ஆண்டவரிடம் திரும்பி வருவோம். ஏனென்றால், நம்முடைய கடவுள் பாவிகளை அன்பு செய்யும் கடவுள்.

எனவே, நாம் நம்முடைய உணர்ந்து ஆண்டவரிடம் திரும்பி வருவோம், பிறரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடுவதையும் விடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.