Get Adobe Flash player
இறைவன் பேசுகிறார் 

கவிக்கோ அப்துல்ரகுமான்


இறந்த மனிதர்கள் அனைவரும் எழுப்பப்பட்டு இறைவன் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். நீதிபதி ஆசனத்தில் இறைவன் அமர்ந்திருந்தான். முதலில் ஒரு நாத்திகன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டான். இறைவன் தேவதூதர்களை நோக்கி ‘‘இவரைச் சகல மரியாதையுடன் கூட்டிக் கொண்டுபோய் சொர்க்கத்தில் விடுங்கள்’’ என்றான்.

அடுத்து ஓர் ஆத்திகன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டான். ‘நாத்திகனுக்கே சொர்க்கம் என்றால் இறை வனை வழிபட்ட எனக்கு அதைவிட உயர்ந்த எதையோ அவன் கொடுப்பான்’ என்று எண்ணி மகிழ்ந்துகொண்டிருந்தான். இறைவன் தேவதூதர்களை நோக்கி, ‘‘இவனைத் தரதர என்று இழுத்துக் கொண்டுபோய் நரகத்தில் போடுங்கள்’’ என்றான். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆத்திகன், ‘‘இறைவா! நாத்திகனுக்குச் சொர்க்கம். அன்றாடம் உன்னை வழிபட்ட எனக்கு நரகமா? இது என்ன நியாயம்?’’ என்று கேட்டான்.
 
இறைவன் ‘‘நாத்திகன் யோக்கியன். என்னை இல்லையென்று சொல்லிவிட்டு அவன் வேலையைப் பார்க்கப் போய்விட்டான். நீயோ என்னை ‘உண்டு’ என்று கூறி என்னை உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டாயே. பாவி! என் பெயரால் நீ செய்த அக்கிரமங்கள் கொஞ்சமா நஞ்சமா?
வயதுக்கு வந்தும் சிறு பிள்ளைத்தனமாய் என்னை பொம்மையாக்கி விளையாடினாய். மனிதனைப் போல் எனக்கு ஆசாபாசங்கள் இல்லை. நீயோ எனக்கு மனைவி மக்களை உண்டாக்கினாய். எனக்கு வைப்பாட்டியும் கூட்டி வைத்தாய். பசித்த ஏழைகளுக்கு உணவு தராமல் பசிக்காத எனக்கு உணவு படைத்தாய். மூட நம்பிக்கைகளை மதமென்று நம்பினாய். பக்தி என்ற பெயரால் அருவருப்பான செயல்களைச் செய்தாய்.
 
நான்தான் அண்ட சராசரங்களைப் படைத்தேன். நீ என்னை வணங்காமல் யார் யாரையோ, எதை எதையோ இறைவன் என்று எண்ணி வணங்கினாய். எதைக் கேட்டாலும் கொடுக்கும் சக்தி உடையவன் நான். நீயோ கொடுக்க சக்தி இல்லாதவர்களிடம் எல்லாம் சென்று கையேந்தினாய். எனக்குப் பெயர் கிடையாது. நீயோ என்னை ஆயிரம் பெயரால் கூப்பிட்டாய். அதாவது பரவாயில்லை. எனக்கு உருவம் கிடையாது. நீயோ எனக்கு ஆயிரம் உருவம் கொடுத்தாய். நீ என்னைப் பார்த்ததில்லை. பிறகு எப்படி எனக்கு உருவம் கொடுத்தாய்?
 
எனக்கு உருவம் இருந்திருக்குமானால் ஒன்றுதானே இருந் திருக்கும்? நீ இவ்வளவு வகையாய்ச் செய்கிற பொழுதே இவை என்னுருவம் இல்லையென்பது தெரியவில்லையா? எல்லா மத வேதங்களும் எனக்கு உருவம் இல்லை என்று கூறுவதை நீ படித்ததில்லையா? படைப்புகளுக்குத்தான் உருவம் இருக்கும். படைத்தவனுக்கு இல்லை. உருவம் என்றாலே அதற்குத் தோற்றமும் அழிவும் உண்டு. எனக்குத் தோற்றமும் இல்லை. அழிவும் இல்லை என்பது உனக்குத் தெரியாதா? எல்லாம் அறிந்தவர்களாக நடிக்கும் உன் குருமார்களும் இந்த உண்மையை உனக்கு போதிக்கவில்லையா?
 
நான் உனக்குள்ளேயே இருக்கிறேன். நீயோ என்னை வெளியில் தேடி அலைந்தாய். ஊருக்கு ஊர் எனக்கு ஆலயம் கட்டினாய். உள்ளூரிலேயே ஆலயம் இருக்க வெளியூர் ஆலயத்தை நாடிச் சென்றாய். கேட்டால் வெளியூர் தெய்வத்துக்குச் சக்தி அதிகம் என்றாய். உள்ளூரில் இருப்பவனும் நான்தான். அதெப்படி ஓர் ஊரில் இருக்கிற தெய்வத்துக்கு சக்தி அதிகமாகவும், மற்றோர் ஊரில் இருக்கும் தெய்வத்துக்கு சக்தி இல்லாமலும் இருக்கும். அது உண்மையானால் சக்தி இல்லாத தெய்வத்துக்கு ஏன் ஆலயம் கட்டினாய்?
சக்தி இல்லாத தெய்வம் என்பவனே! நீதான் தெய்வ நிந்தனை செய்பவன்.
 
ஆலயங்களை வியாபாரத் தலங்கள் ஆக்கினாய். என் பெயரை லேபிளாகப் பயன்படுத்திப் பணம் சம்பாதித்தாய். ஆலயத்தை மூடிவைத்தாய். உண்டியலைத் திறந்துவைத்தாய். பக்தர்கள் பெருகுகிறார்கள். ஆனால் பாவி களும் பெருகுகிறார்களே, இதெப்படி? ஆலயங் கள் மன அழுக்கை வெளுக்கும் சலவைத் துறைகள். இங்கே வந்த பிறகும் ஒருவன் அழுக்காக இருக்கின்றான் என்றால் என்ன அர்த்தம்?
 
தவறான வழியில் பணம் சம்பாதிப்பவனும் என்னை வணங்குகிறான். திருடனும் என்னை வணங்குகிறான். ஊழல் பேர்வழிகள் எல்லாரும் கூச்ச நாச்சமில்லாமல் என்னை வணங்குகிறார்கள். இவர்களை விட என்னை வணங்காத நாத்திகன் மேலானவன் இல்லையா?
 
ஆலயங்கள் என்ன பாவிகளின் சரணாலயங்களா?‘அதைக் கொடு இதைக் கொடு’ என்று கேட்பதற்காகவே ஆலயங்களுக்கு வருகிறார்கள். ‘இனி யாருக்கும் எதையும் கொடுப்பதில்லை’ என்று நான் பிரகடனம் செய்தால், எத்தனைப் பேர் ஆலயங்களுக்கு வருவார்கள்? மனிதப் பிறவி தந்து, இன்ப சாதனங்களைத் தந்து, அதை அனுபவிக்கப் புலன்களையும் தந்தேனே அதற்கு எவனாவது நன்றி செலுத்துகிறானா? ‘பொன்னைக் கொடு’ என்று கேட்கிறானே தவிர, ‘உன்னைக் கொடு’ என்று எவனாவது கேட்கிறானா?
 
லஞ்சம் ஆலயங்களில்தான் தொடங்கியது. ‘எனக்குத் தென்னந்தோப்பைக் கொடு. உனக்கு நான் ஒரு தேங்காய் உடைக்கிறேன்’ என் கிறார்கள். ஒரு தேங்காய்க்காக ஒரு தென்னந்தோப்பையே தர நான் என்ன கேவலமான தரகனா? என்னை மனிதனை விடக் கேவலமாகச் சித்தரித்து ஆபாசக் கதைகளை எழுதி வைத் திருக்கிறார்கள். இவற்றை நம்பும் மூடர்களா பக்தர்கள்?நாத்திகர்கள் ஆலயங்களை இடிப்பதில்லை. ஆத்திகர்களே பிற மத ஆலயங்களை இடிக்கிறார்கள். இடித்த ஆலயத்திலும் நான்தான் இருக்கிறேன் என்பது ஏன் இந்த மூடர்களுக்குப் புரிவதில்லை.
 
ஆலயம் கட்டியவனையே ஆலயத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கிறார்கள். அவன் கையால் கட்டிய ஆலயம் தீட்டாகவில்லையே? அவனையும் நான் என் கையால்தானே படைத் தேன். அப்படியென்றால் நானும்தானே தீட்டு? தீட்டான ஆலயத்தில் தீட்டான இறைவனை ஏன் வணங்குகிறீர்கள்? நீங்களும் தீட்டாகி விடுவீர்களே?
 
நான் ஒரே பூமியைத்தான் படைத்தேன். மனிதர்கள்தாம் இது இந்தியா, இது பாகிஸ்தான், இது அமெரிக்கா, இது ரஷ்யா என்று பிரித்துச் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். நான் ஒரே மனித சாதியைத்தான் படைத்தேன். மனிதர்கள்தாம் ‘நான் இந்தச் சாதி, அவன் இந்தச் சாதி, நான் உயர்ந்தவன், அவன் தாழ்ந்தவன்’ என்று பிரித்துக் கலவரங்கள் செய்கிறார்கள்.
 
யாரும் அவரவர் சமயக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கத் தயாராயில்லை. ஆனால், மதத்துக்காகச் சண்டை போடத் தயாராக இருக்கிறார்கள். பிற மதத்தவரைத் துன்புறுத்து பவன், பிற மதத்தவரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பவன் யாரோ அவனே நாத்திகன். ஏனெனில், பெயர்கள் வேறாக இருந்தாலும் எல்லா மதத்தவருமே ஒரே இறைவனையே வணங்குகிறார்கள்.
 
ஒவ்வொரு மனிதனும் உயிராலயம். ஏனெனில், நான் அங்கே எழுந்தருளியிருக்கிறேன். மூடர்கள் உயிரற்ற ஆலயத்தைக் கட்டுவதற்கு உயிராலயங்களை இடிக்கிறார்கள். நீ தீபமேற்றினாய்; ஆனால் நீ இருளாக இருந்தாய். நீ தூபமேற்றினாய்; ஆனால் நீ துர்நாற்றமாக இருந்தாய். நீ மலர் அர்ச்சனை செய்தாய்; ஆனால் நீ முள்ளாக இருந்தாய்.
 
ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதுதான் உண்மையான வழிபாடு. அதை நீ செய்யவில்லை. எனவே நீதான் நாத்திகன். ஆத்திகன் என்று சொல்லிக்கொள்பவனே! நீதான் நாத்திகர்களை உண்டாக்கினாய். கோயிலிலிருந்து வரும் மந்திர ஒலியும், பள்ளிவாசலிலிருந்து வரும் அழைப்பொலியும், சர்ச்சிலிருந்து வரும் மணியொலியும் காற்றில் கலந்து ஒன்றாவதை மூடர்கள் எப்போது உணரப் போகிறார்கள்?
 
ஆத்திகன் என்ற போர்வையில் பாவங்கள் புரிந்தவனே! நரகத்தை உனக்காகவே படைத்து வைத்திருக்கிறேன். இவனை நரகத்திற்கு இழுத்துக்கொண்டு செல்லுங்கள்’’ என்றான் இறைவன்.
 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org