அன்பு பற்றி பாடம் -

ஆசிரியர் ஒருவர், தன் வகுப்பு மாணவிகள் நால்வரிடம், அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று, சொல்லி அனுப்பி வைத்தார். திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.


இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது. முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு திரும்பி வந்தாள். ஏனென்று கேட்டபோது சொன்னாள்: “நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்…” இவ்வாறு பதில் சொன்ன அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்: “அன்பு என்றால் இதுதான்!”. ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும். எதையும், யாரையும் காயப்படுத்தாமல் இருப்போமே. நாம் உலகிற்கு எதையேனும் கொடுக்க வேண்டுமென நினைத்தால் அன்பைக் கொடுப்போம்… ஏனெனில் உலகில் எங்கும் பரவிக் கிடப்பது அன்பு ஒன்றுதான்… ஆனால் உலகம் அதிகமாக ஏங்கிக் கிடப்பதும் அதே அன்புக்காகத்தான்…

எனவே நம் வாழ்வுப் பயணத்தில் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் அனைவரிடமும் அன்புடன் பழகுவோம். நம் குடும்பத்தில் பெற்றோரிடம், தாத்தா பாட்டிகளிடம், உடன்பிறப்புக்களிடம், உண்மையான அன்பைப் பொழிவோம். சமூகத்தின்மீது அன்புகொண்டு செயல்படும் மனிதர்களில் நாமும் ஒருவராக வாழ முயற்சிப்போம்.