இவர்களை அறிவோம் -

“வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம். அதை நழுவ விடாதீர்கள். வாழ்க்கை என்பது ஒரு கடமை. அதை நிறைவேற்றுங்கள். வாழ்க்கை என்பது ஓர் இலட்சியம், அதைச் சாதியுங்கள், வாழ்க்கை என்பது ஒரு சோகம், அதைத் தாங்கிக்கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது ஒரு போராட்டம், அதை வென்று காட்டுங்கள். வாழ்க்கை என்பது ஒரு பயணம்,


அதை நடத்தி முடியுங்கள்” என்று சொன்னார், இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம். “வாழ்க்கை என்பது ஒரு பயணம், நாம் அதை நிறுத்தும்போது, காரியங்கள் சரியாகச் செல்லாது” என்று சொன்னார், திருத்தந்தை பிரான்சிஸ். “வாழ்க்கை என்பது ஒரு பயணம். அதிலுள்ள சாலைகளும், வசதிகளும் எவ்வளவு மோசமாக இருந்தாலும், அதில் கட்டாயம் பயணம் செய்ய வேண்டும்” என்றார் ஆலிவர் ஸ்மித். வாழ்க்கை என்பது ஒரு பயணம், அது பந்தயமல்ல. அந்தப் பயணத்தில் எதிர்வரும் அத்தனையையும் சமாளித்து தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருப்பவர்கள் சமூகத்தின் பாராட்டையும் பெறுகிறார்கள்.    

பணியில் நேர்மை - மாணிக்கம் என்பவர், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள செந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 1998ம் ஆண்டு ஓட்டுனராகப் பணிக்குச் சேர்ந்தார். தொடர்ந்து 20 ஆண்டு காலம் தஞ்சாவூர் நகரக் கிளை 2-ல் பணியாற்றி, கடந்த ஜூன் 30-ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் பணி புரிந்த காலத்தில் சிறு விபத்துகூட ஏற்படுத்தியது இல்லை. அதோடு ஒரு நாள்கூட வேலைக்கு வராமல் இருந்தது இல்லை. அதேபோல், போக்குவரத்துக் கழகம் நிர்ணயம் செய்த டீசல் சிக்கனத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்ததோடு, அரசுக்கு அதிக இலாபமும் பெற்றுத் தந்தவர். `மாணிக்கம் போல் எல்லாரும் பணியில் இருந்துவிட்டால் போதும். யாராலும் போக்குவரத்துத் துறையை அசைக்க முடியாது’ எனக் கூறி, சகப் பணியாளர்கள், அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் எனப் பலர் பாராட்டி, வாழ்த்துக்களையும் கூறினர். இவர் ஓட்டுனராகப் பணியாற்றியது மட்டும் இல்லாமல், அச்சமயங்களில் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக நடந்த போராட்டங்களிலும் தொடர்ந்து கலந்துகொண்டு சமூகத்தின்மீது அவருக்கு இருந்த அக்கறையையும் காட்டினார் எனப் பாராட்டு விழாவில் இவரைப் பற்றிப் புகழ்ந்து பேசியுள்ளனர்.