Get Adobe Flash player

பத்து ரூபாய்க்கு சாப்பாடு -

 

மதுரை ராமு தாத்தா அவர்களுக்கு வயது எண்பதுக்குமேல். இவர் 1967ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல ஆண்டுகளாக ஏழை எளியவர்களுக்காக பத்து ரூபாய்க்கு சாப்பாடு போட்டுக்கொண்டு இருக்கிறார். விருதுநகர் அருகே உள்ள வில்லுாரைச் சேர்ந்த இவர், தனது 13வது வயதில் உணவகம் ஒன்றில் உணவு பரிமாறுகிறவராக உழைக்க ஆரம்பித்தார்.


பல ஊர்களில் பல உணவகங்களில் வேலை பார்த்து இருக்கிறார் இவர். அப்படி ஒரு சமயம் வடலுார் போயிருந்த போது, பசிப்பிணியகற்றும் வள்ளலார் ஆசிரமத்திற்கு சென்றிருக்கிறார். அங்குள்ளவர்கள் வயிறார சாப்பிட்டு மனமார வாழ்த்துவதைப் பார்த்தார் ராமு தாத்தா. அப்போது முதல், தானும் இது போல முடிந்தவரை எளியவர்களின் பசி அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். மதுரை குருவிக்காரன் சாலையில் தெருவோரத்தில் ரோட்டுக்கடை போட்டு, ஒரு இட்லி பத்து பைசாவிற்கு விற்று தனது தொழிலை ஆரம்பித்தார். அப்போது முதல், இப்போது பத்து ரூபாய்க்கு சாப்பாடு போடுவது வரை, காசு இல்லாதவர்கள் இவரது கடையில் இலவசமாகச் சாப்பிட்டுவிட்டு போகலாம். மேலும் தினமும் பத்து இருபது சாப்பாட்டை பொட்டலமாகக் கட்டி நடக்க முடியாதவர்களுக்கு கொண்டுபோய் கொடுத்துவிட்டு வருவார். இப்போது வயதாகிவிட்டதால் கொடுத்தனுப்பிவிடுகிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு, ராமு தாத்தாவின் மனைவி பூரணத்தம்மாள் இறந்துபோனார். அவரின் ஆசையைச் சொல்கிறார் ராமு தாத்தா... அந்த மகராசி இல்லாமல் நான் மனதால் கஷ்டப்படுறேன், ஆனால் கடைக்கு நம்பி வரக்கூடிய தொழிலாளர்கள், ஏழைகள் ஆகியோர் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, இந்த வயதிலும் மனதார உழைத்துக் கொண்டு இருக்கிறேன்'' என்று நெகிழ்கிறார் ராமு தாத்தா. இவரின் குடும்பத்தினரும் இவருக்கு நிறையவே உதவுகின்றனர். மேலும் சொல்கிறார் ராமு தாத்தா... அந்தந்த மாதம் உணவுப்பொருள் வாங்குவதற்கும், வேலையாட்களுக்கு சம்பளம் போடுவதற்கும் எவ்வளவு செலவாகுமோ? அதை வைத்துதான் சாப்பாட்டின் விலையை நிர்ணயம் செய்கிறேன். எனது செலவிற்கு கட்டுப்படியானால் போதும். ஒரு பைசா இலாபம் வேண்டாம். மதிய சாப்பாடு பத்து ரூபாய்க்கு தருவதுபோல இப்போது காலையில் இட்லி தோசையும் குறைந்த விலைக்குத் தருகிறேன். யாரிடமும் எந்தவித உதவியும் எதிர்பார்ப்பது இல்லை. இருந்தாலும் சில புண்ணியவான்கள் தேடிவந்து உதவும் போது மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறேன். அப்படித்தான் கோலி சோடா குழுவினர் வழங்கிய பரிசினையும் பாராட்டையும் ஏற்றுக்கொண்டேன் என்று சொல்லும் ராமு தாத்தா தொல்லையாக நினைத்து கைபேசிக்கு விடை கொடுத்துவிட்டார் என, இவர் பற்றி பல தினத்தாள்களில் வாசித்தோம். ஆம், கருணைகொண்ட மனிதரெல்லாம் கடவுள் வடிவங்கள். இதையறிந்து செயல்படுபவர்கள், சமுதாயத்திற்கு உயரிய சேவை செய்கிறார்கள்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org