Get Adobe Flash player
ஓய்வில்லாச் சேவைகள்
மேரி தெரேசா -
வத்திக்கான் செய்திகள்
இயலாதவர்களுக்கும், தேவையில் இருப்பவர்களுக்கும் அளிப்பதுதான்,
இறைவனுக்கு கொடுக்கும் மிகப் பெரிய காணிக்கை.

 

இயலாதவர்களுக்கு உதவி -

கங்கை நதியில் ஒரு செம்பில் புனித நீரை எடுத்து, அதைத் தங்கள் ஊர் கோவிலில் இறைவனுக்கு அபிசேகம் செய்ய விரும்பிய குரு, சீடன் கதை நமக்குத் தெரியும். ஒருநாள், அந்தக் குருவும், அவரது சீடரும், புனித நீரை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பியவேளை, இரவாகி விட்டதால் வழியிலிருந்த ஒரு சத்திரத்தில் தங்கினார்கள். காலையில் எழுந்து ஊருக்குச் சென்று, கங்கை நீரை இறைவனுக்கு அபிசேகம் செய்ய வேண்டுமென்பது அவர்களின் திட்டம்.

அங்கு அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது முணகல் சத்தம் கேட்டது. அது என்னவென்று பார்த்து வருவதற்காக சீடர் எழுந்து சென்றார். அங்கே ஒரு கழுதை உடல்நலம் சரியில்லாமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. நாக்கு வறண்டு தண்ணீருக்காகத் தவித்துக்கொண்டிருந்த அந்தக் கழுதையால் எழுந்து நடக்கக்கூட முடியவில்லை. அதைப் பார்த்து பதைப்பதைத்துப்போன அந்தச் சீடர், குடுகுடுவென ஓடிச்சென்று,  இறைவனுக்குப் பூஜை செய்வதற்காக எடுத்து வந்திருந்த அந்த நீரை கழுதைக்கு கொடுத்துவிட்டார். காலையில் எழுந்த குரு, செம்பில் கங்கை நீர் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இறைவனுக்காகக் கொண்டுவந்திருந்த நீரை, கேவலம், இப்படி கழுதைக்கு கொடுத்துவிட்டானே எனச் சாடினார். செய்வதறியாமல் திகைத்து நின்றார் சீடர்.  வேறு வழியில்லாமல் சொந்த ஊருக்கே இருவரும் திரும்பி வந்துவிட்டார்கள். குருவுக்கு மனம் அமைதிப்படவே இல்லை. இறைவனுக்காகக் கொண்டுவந்திருந்த புனித நீரை, கேவலம், கழுதைக்கு கொடுத்துவிட்டானே என வருந்தினார் குரு. மறுநாள் இறைவன் குருவுக்கு கனவில் தோன்றினார். இறைவா, உமக்காகக் கொண்டுவந்திருந்த அந்தப் புனித நீரை உன்னிடம் கொண்டுவந்து சேர்க்க முடியாத பாவியாகி விட்டேன், என்னை மன்னித்துவிடு என்று கண்ணீரோடு மன்றாடினார். அப்போது இறைவன், குருவிடம், அந்த நீர் ஏற்கனவே என்னிடம் வந்துவிட்டது. இயலாத ஒரு கழுதையைப் பார்த்து, அந்த நீரைக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் எப்பொழுது உன் சீடன் மனதில் உதித்ததோ, அப்போதே அந்த நீர் என் திருவடிகளை வந்து சேர்ந்துவிட்டது என்றார்.

இறைவனுக்கு வழங்க விரும்புகின்ற பொன்னும் பொருளும் இறைவனை நேரடியாகச் சென்று சேரவேண்டுமென்றால், அவற்றை இயலாதவர் களுக்கும் தேவையில் இருப்பவர்களுக்கும் கொடுப்பதே சிறந்தது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். இந்த உலகத்தை இறைவன் அத்தனை பேருக்காகவும் படைத்திருக்கிறார். இந்த உலகில் இருக்கின்ற செல்வமும், பொருளும், இயற்கையும், அத்தனையும், அனைவருக்கும் உரியவை. செலவு செய்யப்படாத பணமும், செலுத்தப்படாத அன்பும், இருந்தாலும் இல்லாததற்குத்தான் சமம். புனித பெரிய பேசில் அவர்கள் சொன்னார் - மரம் கனியால் அறியப்படுவது போல, ஒருவர் அவருடைய செயல்களால் அறியப்படுவார். மரியாதை காட்டுபவர் நட்பை பெறுவார். அன்பைப் பயிரிடுபவர் அன்பை அறுவடை செய்வர். எதுவும் வீணாவதில்லை என்று. தமிழில், பசிலியார் என நாம் அழைக்கும் இப்புனிதர், பஞ்ச காலத்தில், தனது சொத்துக்கள் அனைத்தையும், உணவு, உடை இல்லாமல் வாடிய மக்களுக்காகச் செலவிட்டவர். உலகில் செல்வந்தர்களின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரிக்க, மறுபக்கம், இயலாதவர்கள், தேவையில் இருப்பவர்கள் போன்றோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2018ம் ஆண்டின் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 119 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இல்லாதவர்கள், இயலாதவர்களின் எண்ணிக்கையை, வறட்சியும், வறுமையும், போர்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அதேநேரம் ஓய்வில்லா மனிதாபிமானச் சேவைகளும் வளர்ந்து வருகின்றன. ஜப்பானில் வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றிய இளைஞர் போன்று, பல உள்ளங்கள் இயலாதவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org