Get Adobe Flash player

மறு  உருவம். - சிறு கதை

ரவி ரப்பன், சர்சல்

கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தார் அருள்சாமி.

"என்ன சகாயம்! தெருக் கோடியிலேயே  வாசனை தூக்குது நீ செய்யிற பலகாரத்தால."

" என்னங்க நான் மட்டுமா பலகாரம் சுடுறேன் ; கூட அமலோற்பவமும்  உதவி செய்யிறாளே "

"ஓ ஓ ஓ   அமலோற்பவமும் செஞ்சா  கேக்கவா வேணும் !" கிண்டலை நிறுத்திவிட்டு, இடத்தைக் காலி செய்தார்  அருள்சாமி

வயதான அந்தத் தம்பதியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டாள்  அமலோற்பவம். அவள் அந்த வீட்டின் வேலைக்காரப்  பெண்.ஆனாலும் சகாயத்துக்குச் சகோதரி போல் இருந்தாள் . அந்த வீட்டின் வளர்ச்சியில் அவளுக்குப் பெரும் பங்கு உண்டு.

கிறித்துப் பிறப்பு விழாவுக்காக வீட்டை ஒழுங்குபடுத்திகொண்டு இருந்தார் அருள்சாமி ; டெலிபோன் மணி அடித்தது.

மூத்த மகன் ரவிதான் பேசினான்." அப்பா, நல்லா இருகீங்களா? அம்மா நலமா?..."

அடுத்து அவன் சொன்ன செய்தி கேட்டுப்  பூரித்துப் போனார் அருள்சாமி

"நாங்க  எல்லாரும் நாளைக்கு ஊருக்கு வருகிறோம் அப்பா" என்றான் ரவி.

"மகிழ்ச்சிப்ப்பா ...உன் தம்பி அருணும் நாளைக்கே வர்றாம்பா ..."

தந்தையின் குரலில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

"சரிப்பா அம்மாகிட்டே சொல்லுங்க.அமலோற்பவ  அத்தைய கேட்டதா  சொல்லிடுங்க. நாளைக்கு எல்லாரையும் பாக்கலாம்..."

மனைவியை அழைத்துச்  செய்தியைப் பகிர்ந்துகொண்டார் அருள்சாமி.செய்தி கேட்ட  சகாயம் கண்களில் ஆனந்தக்  கண்ணீர் துளிர்த்தது. அடுக்களையில்  இருந்த அமலோற்பவத்தைக்  கூப்பிட்டுச் செய்தியைக் கூறினாள் .அவளுக்கும் மகிழ்ச்சி .

" அமலோற்பவம் , நாளைக்கு சீக்கிரம் வந்துடு ; உன் பொண்ணு ஆஞ்சலாவையும் அழைச்சுண்டு வா  நேறைய வேலை இருக்கும்..." என்றாள்  சகாயம். அமலோற்பவத்தின்  முகம் சட்டென வாடியது.பதில் ஏதும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டுப் போனாள் .

அன்று இரவு முழுதும் அந்த வயதான தம்பதிக்குத் தூக்கமே இல்லை இதனைக் காலம் வராத பிள்ளைகள் வருகிறார்களே என்ற மகிழ்ச்சி. பொழுது ஒரு வழியாக விடிந்தது. மனைவி பிள்ளைகளுடன்  ரவி வந்து இறங்கினான் "என்னப்பா இன்னும் அருண் வரவில்லையா?" - கரிசனமாகக் கேட்டான் ரவி. அதற்குள்  வீட்டின் முன் கார் வந்துநின்றது. அருண் வந்து இறங்கினான்.  வீட்டில் மகிழ்ச்சி வெள்ளம்.சுற்றும் முற்றும் பார்த்த ரவி கேட்டான் :

"எங்கம்மா, அமலோற்பவ அத்தையைக் காணோமே?"

"இன்னிக்கு காலையிலேயே வந்துடறதா சொல்லிட்டுப் போனா ; ஆனா இன்னும் காணலியே அவ கவலை அவளுக்கு... இம் இம் இம் ..." சகாயம் இழுத்தாள்.

"சொல்லுமா..."

"என்னத்த  சொல்ல ... அவ பொண்ணு ஆஞ்சலாவை வளர்த்து ஆளாக்கினா. அவளை ஒருத்தனுக்குக்  கட்டி வச்சா. அந்த பய மொதல்ல நல்லாத்தான் இருந்தான். அப்புறம், அவன் குடி கூத்துனு கெட்டழிஞ்சு போனான். ஒரு நா மித மிஞ்சிய  குடியில லாரியில அடிபட்டு செத்துப்போனான். அப்போ ஆஞ்சலா இரண்டு  மாசமா இருந்தா. அவன் செத்து ஆறுமாசம் ஆகுது. ஆஞ்சலாவுக்கு இது 3 ஆவது மாசம். இதெல்லாம் நெனச்சுதான்  அமலோற்பவம் ரொம்ப வேதனையில் இருக்கா..."

அம்மா சொல்லி முடிக்கும் முன் தம்பி அருணை  அழைச்சுக்கிட்டு ரவி வெளியே போனான்.

எங்கே என்று தெரியாமல் சகாயம் திகைத்தாள்.

----------------------------------------------------------------

கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத் திறந்த அமலோற்பவத்துக்கு ஒரே வியப்பு,  மகிழ்ச்சியில் கண்ணில் நீர் பெருகியது.

"அத்தே, கெளம்புங்க . எங்க ஆஞ்சலா ? ஒங்க எல்லாரையுù அம்மா கூட்டி வரச்  சொன்னாங்க..."

ரவி முடிக்கும் முன்    அமலோற்பவம் குறுக்கிட்டால் :

" இருக்கட்டும்பா. நீங்க மகிழ்ச்சியா விழாவ  கொண்டாடுங்க. அங்கு வந்து உங்களுக்கு துன்பம் குடுக்க விரும்பல .."

"என்னத்த நீங்க நாங்க சின்ன பிள்ளைகளா இருக்கும்போது தூக்கி வளர்த்திங்க. உங்களைத்தான் நாங்க உறவா நெனைச்சி வளர்ந்தோம் வாழ்ந்தோம்.நீங்க இல்லாம எந்த விழாவையும் நாங்க கொண்டாடியது இல்லையே உங்களுக்கு ஒரு துன்பம்ன்னா ...நாங்க சும்மா இருக்க முடியுமா? அஞ்சலா பத்தி நீங்க வருத்தப்படாதீங்க அத்தே நாங்க இருக்கோம் ; கடவுள் இருக்கார். கிளம்புங்க..."

ரவியின் பேச்சைத் தட்ட முடியாமல் அம்மாவும் மகளும் கிளம்பினார்கள்.

----------------------------------------------------------------

த் தட்ட முடியாமல் அம்மாவும் மகளும் கிளம்பினார்கள்.

----------------------------------------------------------------

" ஏண்டி நா சொல்ல சொல்ல தலைய தலையை ஆட்டிட்டு போனியே நீ வருவேன்னு காத்து காத்து பாத்தேண்டி. ஒன்னைய காணோம்.அதான் பசங்க உன்னைய  தேடி ஒன்  வூட்டுக்கே வந்துட்டாங்க. சரி சரி வேலை எல்லாம் அப்படி அப்படியே கெடக்கு. போய்  மளமளன்னு வேலய கவனி..." சகாயம்  செல்லமாகக் கோபித்துக்கொண்டாள்.

ரவி ஆஞ்சலாவிடம் பேசத்  தொடங்கினான் : " ஆஞ்சலா, ஒனக்கு என்ன வேல தெரியும்னு சொல்லு.தையல் வெளித்தெரியுமா? சொல்லு. ஒரு மஷின்  வாங்கித்தரட்டுமா? இல்லே சின்னதா கடை வச்சுத்  தரவா?  ஒனக்கு என்ன விருப்பமோ  சொல்லு செஞ்சு தரேன். அம்மா கூட யிருந்து பாத்துப்பாங்க பயப்படாதே " என்றான்.

அருண் ஒரு படி மேலே போய்  "ஒனக்கு எல்லா விதத்திலும் துணையா  இருப்பேன் ஆஞ்சலா.  தைரியமா இரு " என்றான்.இவர்களின் ஆறுதலான பேச்சைக் கேட்டு ஆஞ்சலா நெகிழ்ந்துபோனாள்.

--------------------------------------------------------------

அருண் தன அண்ணன்  ரவியிடம் பேசினான் : "அண்ணே,  ஆஞ்சலாவுக்கு நாம ஏதேனும் செய்யணும். ஆமாம் என்று தலை ஆட்டினான் ரவி. "நான் ஒன்னு சொல்றேன் ; தப்பா எடுத்துக்காதே : ஆஞ்சலாவ நான் திருமணம் செய்துக்கலாம்னு நெனைக்கிறேன் நீ என்ன சொல்ற?"அருணின் இந்தக் கருத்து ரவிக்குப் பெரும் மன

அமைதி தந்தது. ஆனாலும்  அவன்  சொன்னான் : "அருண்,  நீ சொல்வது சரி வருமா? நல்லா  யோசனை பண்ணிப்பார்.  வேறு எந்த வகையிலாவது அவங்களுக்கு உதவி செய்யலாமே "

"இல்லேண்ணா , வேற யாருக்காவது திருமணம் செஞ்சு வச்சா மறுபடி அதே நெலமை வந்துச்சுன்னா? எனக்கு அந்தப் பெண் மீது எந்தவிதப் பரிதாபமோ இரக்கமோ இல்ல. ஆஞ்சலாவை எனக்கு மிகவும் பிடிக்கிறது. வரக் கூடிய எந்தப் பிரச்சனையா இருந்தாலும் அத சமாளிக்கற எண்ணமும் இருக்கு.அந்தக் குழந்தையை என் குழந்தையாவே நேசிப்பேன். இத அப்பா அம்மாவிடம் பேசுவதை விட உன்னிடம் பேசி அப்புறம் அவங்களுக்குத் தெரிவிக்கலாம் என்றுதான் உன் கிட்டே சொல்றேன்.உன் கருத்து என்ன " என்றான் அருண்.

அருணின் பேச்சும் வார்த்தைகளும் திடமாக இருந்ததை உணர்ந்த ரவி, "சரி வா; பெற்றோரிடம் பேசலாம் என்று சொல்ல இருவரும்  அவர்களை நாடிச் சென்றார்கள்.

------------------------------------------------------------

 சகோதரர்கள் கருத்தைப் பொறுமையாகக்  கேட்டார்கள் அருள்சாமியும் சகாயமும் .சற்று நேரம் அமைதி நிலவியது .அருள்சாமி மவுனத்தைக் கலைத்தார் : "அருண், உன் எண்ணத்தைப் பாராட்டுறேன்பா அந்தப் பெண்ணோடு சேர்ந்து வாழப் போறவன் நீ.  மைக்க போட்டு விதவித திருமணத்தை வாய் கிழிய பேசுறதைவிட அதைச் செயலில் காட்டுவதுதான் சிறந்தது .அத நீ செஞ்சு காட்டப்போறது மகிழ்ச்சிதான். ஆனா, நெறைய  கல்லடி பட வேண்டி இருக்கும்.எல்லாத்தையும் தங்க வேண்டிய பக்குவம் ஒனக்கு இருக்கணும்பா  உன் முடிவு எனக்குச் சம்மதம்."  எனக்கும்தாங்க என்றாள்  சகாயம். மகனை உச்சி மோந்து முத்தம் இட்டாள் .

---------------------------------------------------------------

கிறித்துப் பிறப்புச் சிறப்புத் திருப்பலி நடைபெற்றுக்கொண்டிருட்ந்தது ; குழந்தை இயேசுவைக் குடிலில் வைத்துவிட்டுக் குருவானவர் மறையரை தொடங்கினார் ; " குழந்தை இயேசுவையம் அன்னை மரியாவையும் அதிக பேசும் நாம் சூசை தந்தையைப் பற்றிச் சிறிதும் நினைப்பதில்லை. உண்மையில் இந்த விழாவின் சிறப்பு சூசை தந்தையே! காரணம்... இளைஞர்கள் தம் மனைவியர் திருமணத்துக்குப் பின் தனக்கு  குழந்தை  பெற்றுத்தரவேண்டும் என்றே  விரும்புவார்கள் ; மணமாவதற்கு முன்பே கர்ப்பம் தரித்தவளை எவன் ஏற்றுக்கொள்வான்? பிள்ளை இல்லாமல் கணவன் இறக்க நேர்ந்தால் கணவனின் சகோதரன் அந்த விதவையை மணந்துகொண்டு மகப்பேற்றை அளிக்க வேண்டும் என்று மோயீசன் கட்டளை கூறுகிறது.ஆனால், பிள்ளை வயிற்றில்  இருக்க கணவனை இழக்க நேரும் பெண்களின் கதி பற்றி ஏதும் கூறவில்லை. அதனால் அவள் வாழ்க்கை கேள்விக் குறியாகவே இருக்கும்.

அந்த கேள்விக்குறிக்குப் பதில் அளிக்கும் விதமாக சூசை தந்தையின் வாழ்வு அமைகிறது . மணக்க இருக்கும் பெண்  கர்ப்பவதி ஆனது எப்படி என்பதை வானதூதர் விளக்குவதை உணர்ந்து இறைவன் திரு வளத்தை ஏற்றுக்கொள்கிறார்  சூசை. கன்னிமரியாளை மணந்து இறை    மகனுக்கு வளர்ப்புத் தந்தை ஆகிறார். கைவிடப்படார், கைம்பெண்கள் ...போன்றோரை மணப்பவர்கள் இறையாசீர் பெட்ரா சூசையைப் போல் இறைவனுக்கு முன்னால் மதிப்புக்கு உரிய பிள்ளைகளாய்  இருப்பார்கள்..." என்று கூறி முடித்தார். அருள்சாமியும் சகாயமும் தம் மகன் எடுத்த முடிவு குறித்து மகிழ்ச்சியுடன் இறைவனுக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தார்கள்.

 சூசையைப் பார்த்து 'ஐயா உன்னைப்போல் என் மகளுக்கு நல்ல வரனாகத் தருவாய் " என மனமுருக வேண்டினாள்

அமலோற்பவம. ஆஞ்சலவோ மரி அன்னையைப் பார்த்து "உன்னையும் இயேசுவையும் வழி நடத்திய  சூசை தந்தையைப் போன்ற நல்ல கணவனை எனக்குத் தாரும் அம்மா " என வேண்டினாள்.

எல்லாரும் வீடு திரும்பி குடிலின் முன் நின்று  செபித்தார்கள்.பின்,  ஒரு மனிதன்"அமலோற்பவம்,  ஆஞ்சலோ இங்க வாங்க" என்று அழைத்தார் ."அமலோற்பவம், எங்களை உன் சம்பந்தியாதா  ஏற்றுகொள்ளச் சம்மதமா? " என்று கேட்டபடியே  பழம் வெற்றிலை பாக்கு வைத்த தட்டை நீட்டினார். அவளோ தயங்கினாள்  ; மறுத்தாள் ; ஏதேதோ சொல்லிப் புலம்பினாள். "நாங்க எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு இது ; இந்தத் தட்டை வாங்கினாதான் நம் இந்த விழாவை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியும் " என்றார் அருள் சாமி. அப்படியே ஆஞ்சலோவைப் பார்த்து "நீ என்னமா சொல்ற?" என்று கேட்டார். நாணப்  புன்  முறுவலோடு,

"எனக்குச் சம்மதம் மாமா" என்றாள்  ஆஞ்சலோ.   தட்டை வாங்கிக்கொண்ட அமலோற்பவம், " காலம் முவதும் உங்க அன்புக்கு நாங்கள் கடன் பட்டு இருக்கிறோம் சம்பந்தி " என்று நாத் தழுதழுக்க கூற அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. அவர்களை ஆசீர்வதித்த குழந்தை இயேசுவின் திருமுகத்தில் மகிழ்ச்சிப் பூக்கள். மறு உருவாய் அவர்கள் நடுவில் குழந்தை இயேசு  மலர்ந்து இருந்தார்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org