Get Adobe Flash player

அருள் வாக்கு - வசன கவிதை
ரவி ரப்பன், சர்சல்

 பொன்நகையோ  இல்லை புன்னகையோ முல்லை

சின்ன குடில் தன்னிலே சிறுகாலை பொழுதிலே

கந்தை உடுத்தி வந்தஎன்   தெய்வமே

சிந்தையில் வைத்துனைத்  தொழுதேன்!

ஆதியிலே  ஒருநாள் -

எந்தை ஆதாமும் என் அன்னை  ஏவாளும்

சிந்தை கெட்டுச் செய்தனர் பாவம்!

சென்மப்  பாவம்  எமையது  தொடர

வருந்தினோம் வாடியே வருந்தினோம்.  அப்போது 

எம் ஆண்டவர்,

எந்தைக்கும் எம்தாய்க்கும் ஏதெனில் வாக்குரைத்தார்

" கனிமரத்தால்   விளைந்த  வினைதனைத் திருமகன்

கழுமரத்தால் களைந்திடுவார். காத்திருப்பீர்! என்றாரே."

ஒருமனிதன் வழியாக உள்நுழைந்த இறப்பும்

திருமகன் பலியாகப்  பகல்முன்   பனியாகக்

கரைந்தோடிப் போகத்தம்  திருமகனை அளித்தாரே !

விரைந்தோடி வந்தோம் அவர்பாதம் பணிந்திடவே!

கல்லை    நிகர்த்த கடின மனத்தோர்

இல்லை இடமென விரட்டி அடிக்க

மரியும்  சூசையும் மாடடை கொட்டிலில்

பிரியமுடன் தங்கினார் இறைவன் புகழ்பாடியே !

அங்கே

காரிருளில் பேரொளி பிறந்ததுவே  அன்றொருநாள் 

ஆண்டவர் அளித்த அருள்வாக்குப்  பலித்ததுவே !

வானமெங்கும் வானவர் வாழ்த்தொலி! மண்ணில்

தூய மனத்தோர்க்கு   நல்லமைதி! வயல்வெளியில்

படையோடு வானவர்கள் மங்கலம் பாடினர் !

கிடையோடு இடையர்கள் வந்தங்கே  கூடினர்.

ஆண்டவர் அளித்த அருள்வாக்கு பலித்தது

ஈண்டவரைத் தாழ்ந்து பணிந்து  ஆராதிப்போம் !

வாழ்வளிக்கும் வள்ளலே! வானமுதத்  தெய்வமே!

வாழ்த்தினோம் வாழ்த்தினோம் வாழ்த்தினோம் உம்மையே  

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org