Get Adobe Flash player

ஜீசஸ் வந்திருக்கார் (2) - டாக்டர் ஜான் பெனோ , சென்னை


‘ஜிஎஸ்டி’யில் ஒரு ஜீரோ அதிகம் இருந்தது. மனக்கணக்கியை நம்பாமல், செல்ஃபோனிலும் கணக்கிட்டுப் பார்த்துவிட்டு, “என்ன ஸார்! நாலாயிரத்து இருநூறு போட்டிருக்கீங்க?” என்று லேசாகக் குரலை உயர்த்தினேன். ஜீசஸ் மட்டும் பக்கத்தில் இருந்திருக்காவிட்டால், என் சவுண்டை புரசைவாக்கமே கேட்டிருக்கும்.

“ஆமாம் ஸார்! நேத்து பில்லையும் சேர்த்து டோட்டல் அமௌன்ட் ஃபார்ட்டி தவுஸண்ட்! அதில் 12% நாலாயிரத்து இருநூறு! கரெக்ட்தானே! டோட்டல் அமௌன்டுக்கு தான் பில் போடுவோம். தனித்தனி பில் போட்டா ஆடிட்டிங்க்ல ப்ராப்ளம் வரும்! உங்க கிட்ட கேட்டுட்டுதானே பில் போட்டேன்!”

என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை; ஜீசஸ் கூட இருந்ததால், சண்டையும் போட முடியவில்லை. ‘நாலாயிரத்து இருநூறு! நாலாயிரத்து இருநூறு!’ மனக்கணக்கி செந்தில் வாய்ஸில் கிண்டல் பண்ணியது. அதை ‘தேங்கா மண்டையா!’ என்று கவுண்டமணி வாய்ஸில் அடக்கிவிட்டு, பேக்-ஸீட்டில் துணிப்பையைப் போட்டுவிட்டுக் கிளம்பினேன்.

வழியெல்லாம் முனகல்தான். “ஜிஎஸ்டி நாலாயிரத்து இருநூறு ரொம்ப அதிகமில்லையா ஜீசஸ்?”

அவர் புன்னகைத்துக் கொண்டே, “(சீஸர்) அரசுக்குரியதை (சீஸர்) அரசுக்கும், கடவுளுக்குரியதைக் கடவுளுக்கும் கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறேனே! படித்ததில்லையா சாம்?”

எனக்கு சப்போர்ட் செய்வார் என்று பார்த்தால், இவர் எதிர்க்கட்சிக்காகப் பேசுகிறாரே? “இங்க ரோடெல்லாம் பாருங்க ஜீசஸ்! மேடு, பள்ளம், குப்பை, சாக்கடை! நாங்க கட்டுற வரியை எல்லாம் ஏப்பம் விட்டுடுறானுங்க! வரி கட்டுறதே வீண்!” என்று அவரைப் பார்த்தேன்.

அவர் புன்னகை மாறாமல், “சாம்! உன் கண்ணில் உள்ள விட்டத்தை எடுக்காமல், அடுத்தவன் கண்ணில் உள்ள துரும்பை எடுக்க முயல்வது ஏன்?” என்று அமைதியாக சொன்னார். இருந்தாலும், எனக்கு மனம் ஆறவேயில்லை. நொந்தவாறே நுங்கம்பாக்கம் சிக்னலை அடைந்தேன்.

வழக்கம் போல ரெட் சிக்னல்! ஜன்னல் தட்டப்படத் திரும்பினேன்; இரண்டு அழுக்குப் பிள்ளைகள் – கையில் கிறிஸ்துமஸ் தாத்தா முகமூடியுடன். சீஸனுக்குத் தகுந்தபடி வியாபாரப் பிச்சை எடுக்கும் இவர்களையெல்லாம் கண்டாலே எனக்கு எரிச்சல் வரும். இருந்தும், ஜீசஸ் முன்னால் கொஞ்சம் ‘தர்மவான்’ ஸீன் போடலாம் என்று பர்ஸில் சில்லறைத் தேட ஆரம்பித்தேன். ஜீசஸ் அந்தப் பிள்ளைகளைத் தன்பக்கம் வருமாறு சைகை செய்தார். நான் மும்முரமாக சில்லறைத் தேடிக்கொண்டிருந்தேன். ஒரு ஐந்து ரூபாய் அகப்பட்டது.

“சாம்! இந்த பிள்ளைகளுக்கு உன் பிள்ளைகள் வயதுதான் இருக்கும். இல்லையா?”

“ஆமாம்!” தலையை ஆட்டிவிட்டு, இன்னொரு ஐந்து ரூபாயைத் தேட ஆரம்பித்தேன். ஜீசஸ் பின் ஸீட்டின் பக்கம் திரும்புவது மாதிரி தோன்றியது. நிமிர்ந்து பார்த்தேன். ஆயிரம் வாட் ஷாக்! கொஞ்ச நேரத்துக்கு முன்னால் ஸ்ரீராம் டெக்ஸ்டைல்ஸில் வாங்கிய ஜீன்ஸ், டீ-ஷ்ர்ட், காக்ரா சோலி எல்லாம் அந்த அழுக்குப் பிள்ளைகளின் கையில்! “டாங்க்ஸ் சார்!” சொல்லிவிட்டு வாயெல்லாம் பல்லாக அந்த இரண்டு பிள்ளைகளும் ட்ராஃபிக்கில் மறைந்தார்கள்.

“நாலாயிரம் ரூபா காலி!” மனதுக்குள் சொல்ல, மனக்கணக்கி சிரித்துக் கொண்டே, “வாட் அபௌட் குட் ஸிம்பிள் டாக்ஸ் சாம்!” என்று எஃப் எம் பாணியில் கிண்டல் பண்ணியது. ஜீசஸ் என் அதிர்ச்சியான முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தார்: “கவலைப்படாதே சாம்! உன் பிள்ளைகளுக்கு ஒரு செட் பத்திரமாக இருக்கிறது!”
“ஜீசஸ்! அந்த பிள்ளைகளுக்கு ஏதாவது பணம் கொடுத்திருக்கலாமே!” என்று என் கையிலிருந்த ஐந்து ரூபாயை பரிதாபமாகக் காண்பித்தேன்.

“நான் ஆடையின்றி இருந்தேன்! எனக்கு ஆடை கொடுத்தீர்கள்! வாசகம் ஞாபகமில்லையா சாம்!” மீண்டும் புன்னகை.

“‘ஏழைகள் உங்களோடு எப்போதும் இருக்கிறார்கள். மணமகன் கொஞ்ச காலம்தான் இருப்பார்’ என்று கூட சொல்லியிருக்கிறீர்களே!” அவர் வார்த்தையை வைத்தே அவரை மடக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் என் ‘ஆர்க்யூமென்ட்’ எனக்கே வலுவாகத் தெரியவில்லை.

“இந்த சின்னஞ்சிறியவர்களுக்கு செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள் – என்று கூட சொல்லியிருக்கிறேனே!” அதற்கு மேல் நான் பேசவில்லை. மனக்கணக்கி மட்டும், ‘ஜீசஸ் விஷிட் பட்ஜெட் 4000 ப்ளஸ் 4800’ என்று டிஜிட்டலில் ஸிந்தஸைஸிக்கொண்டே வந்தது. (தொடரும்)

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org