மறை உரை : “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்”

- அருள்வாக்கு இணையதளம் -

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு -  அவன் ஊருக்குப் புதியவன். அதனால் அவன் ஒரு வாடகை டாக்சியை எடுத்துக்கொண்டு, நாள் முழுவதும் ஊரைச் சுற்றிப்பார்த்தான்.  அந்தநாள் முடியும்வேளையில் அவன் தன்னுடைய மணிபர்சை எடுத்து, அதிலிருந்து ஆயிரம் ரூபாயை டாக்சி டிரைவரிடம் வாடகையாகக் கொடுத்தான். ஆனால் அந்த டாக்சி டிரைவரோ, அவன் கொடுத்த பணத்தை வாங்க மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்னார், “ஐயா! நான் இங்கே இருபது ஆண்டுகளுக்கும் மேலாக டாக்சி டிரைவராக வேலைபார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் யாரும் என்னிடம் இவ்வளவு கண்ணியமாக, அன்பாகப் பேசியது கிடையாது. ஆனால் நீங்களோ ஒரு நண்பரைப் போன்று, உங்களுடைய வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் என்னோடு பகிர்ந்துகொண்டீர்கள். அதோடு, ஒரு நண்பனைப் போன்றுதான் என்னைப் பார்த்தீர்கள். ஆதலால் ஒரு நண்பராகிய உங்களிடம் நான் கட்டணம் வசூலிப்பது முறையாகுமா? என்று சொல்லி பணத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டார். நாம் அன்போடு இருந்தால், நம்மைச் சுற்றி இருக்கும் உலகமும் அன்புமயமாக மாறிவிடும். அப்போது எப்படிப்பட்ட மனிதர்களும் நமக்கு நண்பர்களாகிவிடுவார்கள் என்ற உண்மையை இந்நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளில் நாம் படித்த வாசகங்கள், “ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழவேண்டும்” என்றதொரு அழைப்பினைத் தருகிறது. இன்றைய நாள் இறைவார்த்தையை நாம் ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பாக அறிஞர் பெருமக்கள் “அன்பு” என்றால் என்ன? என்று சொல்லியிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வோம்.

“அன்பு உள்ளம்தான் உலகத்தில் அனைத்துக்கும் ஆதார சுருதியாகத் திகழ்கிறது. ஆண்டவனை எளிதாகத் தரிசனம் செய்வதற்கான ஒருவழி அன்பு எனலாம்”.  – சாண்டில்யன்.

உலகம் நம்மிடம் இருந்துதான் ஆரம்பிக்கிறது. உலகத்தின் மையமாக நம்மைப் பொறுத்தவரை நாம்தான் இருக்கின்றோம். எனவே எதையும் நம்மிடமிருந்து ஆரம்பிப்பதுதான் நல்லது. நாம் மாறினால் உலகமும் அன்புமயமாக மாறும். – வெ.இறையன்பு.

உலக அமைதியை தன் உடலை வருத்திக்கொள்வதன்மூலம் உண்டாக்கிவிட முடியாது. நாம் நம்மைச் சுற்றி அன்பின் அதிர்வுகளை ஏற்படுத்துவதன் மூலம்தான் அதனைச் சாதிக்கமுடியும்” – விவேகானந்தர்.

மேலே சொல்லப்பட்ட அறிஞர் பெருமக்களின் கூற்றுகளைப் பார்க்கும்போது அன்புதான் அனைத்திற்கும் ஆதார சுருதியாக இருக்கிறது என்ற உண்மையை நாம் மிக எளிதாக உணர்ந்துகொள்ளலாம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய இறுதி இரவு உணவின்போது சீடர்களைப் பார்த்துச் சொல்கிறார்,  “நான் உங்களை அன்புசெய்தது போன்று, நீங்களும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்” என்று. இயேசுவைப் பொறுத்தளவில் அன்புதான் திருச்சட்ட நூல் முழுமைக்கும், இறைவாக்கு நூல்களுக்கும் அடிப்படையாக இருக்கின்றது (மத் 23:40). எனவே நாம் ஒருவர் மற்றவரை அன்புசெய்து வாழ்கிறபோது நாம் திருச்சட்டத்தையும், இறை வாக்கையும் நிறைவேற்றுபவர்களாக இருக்கின்றோம்.

அடுத்ததாக ஒருவர் மற்றவரை அன்பு செய்யவேண்டும் என்று சொன்ன இயேசு நாம் எப்படி மற்றவரை அன்பு செய்யவேண்டும் என்பதையும் நமக்கு எடுத்துரைக்கிறார். “நான் உங்களை அன்பு செய்ததுபோல, நீங்களும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்” என்கிறார். இயேசுவின் அன்பை நம்மால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த அன்பு எல்லையில்லா அன்பு; நாம் பாவிகளாக இருந்தபோதும் நமக்காகத் தன்னுடைய உயிரையே தரும் அன்பு; பரந்த பேரன்பு. இயேசுவிடம் விளங்கிய அதே அன்பு நம்முடைய உள்ளத்தில் விளங்கவேண்டும் என்பதுதான் இயேசுவின் விருப்பம், எண்ணம் எல்லாம்.

ஆனால் இன்றைக்கு நம்மால் ஆண்டவர் இயேசு இந்த உலகத்தினை / மக்களை அன்புசெய்ததுபோன்று அன்புசெய்ய முடிகிறதா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. பிரான்சு தேசத்து தத்துவவியலாளரான சாத்தர் கூறுவார், “Other is Hell”. அதாவது அடுத்தவன் எனக்கு நரகமாக/ வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறான் என்பதே இதன் அர்த்தமாக இருக்கின்றது. ஒருவர் மற்றவரை எதிரியாக, பகையாளியாக, வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவனாகப் பார்த்தால் நம்மிடத்தில் உண்மையான அன்பு இருக்காது, போலியான அன்புதான் இருக்கும்.

இன்றைக்கு நமது சமூகத்தில், ஏன் நமது குடும்பத்தில்கூட உண்மையான அன்பு இல்லை. அதனால்தான் எல்லாவிதமான பிரச்சனைகளும், குழப்பங்களும் ஏற்படுகின்றன.

முன்பொரு காலத்தில் பரத்திரகிரி என்ற மன்னன் நமது பாரதத்தை ஆண்டுவந்தான். அவன் தன்னுடைய நேர்மையும், உண்மையுமான வாழ்வால் மக்களுக்கு நல்ல ஒரு ஆட்சியை அமைத்துக்கொடுத்தான். ஒருநாள் ஏழை ஒருவன் தான் கண்டடைந்த அதிசயக் கனியை கொண்டுவந்து அரசனிடம் கொடுத்து “மன்னா! இது அதிசயக் கனி, இதை உண்பவர்கள் நீண்ட நாட்களுக்கு வாழ்வார்கள். ஆதலால் நேர்மையோடும், உண்மையோடும் மக்களை ஆட்சிசெய்யும் நீங்கள் இந்தக் கனியை உண்டால், நீண்ட நாட்களுக்கு வாழ்ந்து, மக்களை இன்னும் சிறப்பாக ஆட்சி செய்வீர்கள் என்று நினைத்துதான் இந்தக் கனியை உங்களிடம் தருகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றான். உடனே அரசன், “இந்தக் கனியைத் தான் மட்டும் உண்டு, நீண்ட நாட்கள் வாழ்வதனால் என்ன பயன்?, தான் மிகவும் அன்புசெய்யும் அரசியிடம் கொடுத்தால், அவள் நீண்டால் நாட்கள் வாழ்வாளே” என்று நினைத்துக்கொண்டு அதிசயக் கனியை அரசிடம் கொடுத்தான். அங்கேதான் விதியானது விளையாடத் தொடங்கியது. அதிசயக் கனியைப் பெற்றுக்கொண்ட அரசி, அதைத் தான் உண்ணாமல், தான் மிகவும் (இரகசியமாக) நேசிக்கும் அரண்மனைக் காவலாளிக்குக் கொடுத்தாள். அந்த காவலாளியோ தன்னுடைய மகளை அதிக அதிகமாக அன்பு செய்யக்கூடியவன். எனவே அவன் அந்த அதிசயக் கனியை தன்னுடைய மகளிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னான். காவலாளியின் மகளோ கனியை தான் உட்கொள்ளாமல் “மக்களை நேர்மையோடு நல்லாட்சி செய்யக்கூடிய அரசன் சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்” என்று நினைத்து அதிசயக் கனியை அரசனிடமே கொண்டுபோய் கொடுத்தாள். இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போன அரசன் அச்சிறுமியிடம், “இக்கனி உனக்கு எப்படிக் கிடைத்தது?” என்று கேட்டான். அதற்கு அவள், “அரண்மனையில் காவலாளி வேலைப் பார்க்கும் தன்னுடைய தந்தைதான் கனியைக் கொடுத்தார்” என்று சொன்னாள். உடனே அரசன் காவலாளியை வினவ, காவலாளி தனக்கு அரசிதான் தந்தாள் என்ற உண்மையை ஒத்துக்கொண்டான். இறுதியில் அரசி தனக்குத் துரோகம் செய்துவிட்டதை உணர்ந்த அரசன் அவளை வாளால் வெட்டி எறிந்தான். அதன்பிறகு இந்த உலகத்தில் இருக்கும் மனிதர்களின் அன்பில் உண்மை இல்லை. கடவுள்தான் நம்மை உண்மையாக அன்புசெய்வார் என்பதை உணர்ந்துகொண்டு, தன்னுடைய அரசவாழ்வை தூக்கி எறிந்துவிட்டு, துறவறம் பூண்டான். மனிதர்களின் அன்பில் எவ்வளவு போலித்தனம் இருக்கிறது என்பதை இக்கதை மிக வேதனையோடு கூறுகிறது.

இக்கதை முற்றிலுமாக உண்மையாக இல்லாவிட்டாலும்கூட நமது அன்பில் போலித்தனம் எந்தளவுக்கு மலிந்து போய்விட்டது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆகவே அன்பில்லாச் சூழலில், பகையும், வெறுப்பும் உள்ள இந்த காலக்கட்டத்தில் ஆண்டவர் இயேசு நம்மை எப்படி முழுமையாக அன்புசெய்தாரோ, அதுபோன்று நாமும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவேண்டும் என்பதுதான் நமக்கு முன்னால் இருக்கும் சவாலாக இருக்கின்றது.

நிறைவாக இயேசு சொல்வது போன்று நாம் ஒருவர் மற்றவரை, அவர் அன்புசெய்தது போன்று அன்பு செய்தால், உண்மையில் நாம் அவருடைய சீடர்களாக இருப்போம். இது உண்மை. மேலும் திருவெளிப்பாட்டு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் படிப்பது போன்று ‘கடவுள் நம் மத்தியில் உறைந்திடுவார், நமது துன்பம், துயரம், சாவு, கண்ணீர் அனைத்தையும் போக்கிடுவார்’.

ஆம், நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ்கிறபோது கடவுள் நம் மத்தியில் உறைந்திடுவார், நமது கண்ணீர், கவலை, துன்பம், துயரம் அத்தனையும் போக்கிவிடுவார். இது இறைவன் நமக்கு அளிக்கும் ஆசிராக இருக்கிறது. நமது திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவார், “அடுத்தவர்மீது அக்கறைகொண்டு வாழும்போது கடவுள் அங்கே உண்மையில் பிரசன்னமாக இருக்கிறார். அதுவே உண்மையான நற்செய்திப் பணியாகும்” என்று குறிப்பிடுவார். ஆகவே நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் அன்பு கட்டளையை கடைப்பிடித்து, இறையாட்சியை இம்மண்ணில் நிலைநாட்டும் மக்களாவோம்.

அருளே வடிவான ஓர் இறையடியார் சாக்கடல் (Dead Sea) ஓரமாக நடந்துகொண்டிருந்தார். அப்போது திடிரென்று ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் அவர் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டார். அலைகளுக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட அவர் அதற்கு எதிராக எவ்வளவோ முயன்று பார்த்தார். ஆனால் அவரால் கடலிருந்து தப்பித்தது வெளியே வரமுடியவில்லை.

ஆர்ப்பரித்து எழுந்த அலைகளையும், கடுமையான உவர்ப்புத்தன்மைகொண்ட கடல்தண்ணீரையும் பார்த்து அவர் இன்னும் பீதியடைந்தார். இனிமேல் உயிர்பிழைக்க முடியாது என்ற நினைத்த அவர் கடல் அலையில் தன்னையே ஒப்படைத்து சரணாகதி அடைந்தார்.

என்ன ஆச்சரியம். சிறுது நேரத்தில் அவர் கடலிலே மிதக்கத் தொடங்கினார். அலையை எதிர்த்துப் போராடாமல், அலையின் போக்கில் தன்னை விட்டுவிட்டதன் காரணத்தால் கடலில் மிதந்து வந்து கரையை அடைந்தார்.

துன்பங்கள், சோதனைகள் வரும்போது அதை எதிர்த்துப் போராடாமல், கடவுளின் கரங்களில் நம்மையே நாம் முழுமையாக ஒப்படைத்து, சரணாகதி ஆகின்றபோது நமது துன்பங்கள் எல்லாம் மறைந்து இன்பமாக மாறும்.

ஆகவே இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம், அவர் நமக்குப் போதித்தது போன்று ஒருவர் மற்றவரை நிபந்தனை இன்றி அன்பு செய்வோம், துன்பங்கள், துயரங்கள் இன்றி மகிழ்வான ஒரு வாழ்வைப் பெறுவோம்.