Get Adobe Flash player

இன்றைய புனிதர் †(ஜூலை 6)
புனிதர் மரியா கொரெட்டி

Maria Coreti

கன்னியர் மற்றும் மறைசாட்சி :

பிறப்பு : அக்டோபர் 16, 1890

கொரினல்டோ, அன்கோனா பிராந்தியம், மர்ச்சே, இத்தாலி அரசு

இறப்பு : ஜூலை 6, 1902 (வயது 11)

நெட்டுனோ, ரோம் பிராந்தியம், லஸியோ, இத்தாலி அரசு

ஏற்கும் சமயம் :

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

முக்திபேறு பட்டம் : ஏப்ரல் 27, 1947

திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்

புனிதர் பட்டம் : ஜூன் 24, 1950

திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்

 
முக்கிய திருத்தலம் :

நெட்டுனோ, ரோம் பிராந்தியம், லஸியோ, இத்தாலி அரசு

நினைவுத் திருவிழா : ஜூலை 6

பாதுகாவல் :

பாலியல் வன் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், குற்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், இளம் பெண்கள், நவீனகால இளைஞர்கள், மரியாளின் குழந்தைகள்

புனிதர் மரியா கொரெட்டி, இத்தாலிய கன்னியரும், கத்தோலிக்க திருச்சபையின் மறைசாட்சியும், கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரபூர்வமாய் புனிதர் பட்டம் பெற்றவர்களுள் மிக இளையவரும் ஆவார். தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முனைந்தவனுக்கு மறுப்பு தெரிவித்ததால், அவனாலேயே பதினான்கு முறை கத்தியால் குத்தப்பட்டு இவர் இறந்தார்.

வரலாறு :

மரியா தெரெசா கொரெட்டி” (Maria Teresa Goretti) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கல்வி கற்குமளவுக்கு வசதி இல்லாத ஏழைகுடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தையின் பெயர், “லுய்கி கொரெட்டி” (Luigi Goretti) ஆகும். தாயாரின் பெயர், “அசுன்ட்டா நீ கர்லினி” (Assunta née Carlini) ஆகும். தமது பெற்றோரின் ஏழு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை ஆவார். மரியாவுக்கு ஐந்து வயதாகையில் வறுமை காரணமாக இவர்களது குடும்பம் கொஞ்ச நஞ்சமிருந்த நிலங்களை விற்றுவிட்டு ஊர் ஊராக சென்றனர். இறுதியில் கி.பி. 1899ம் ஆண்டு, லீ ஃபெர்ரியர்” (Le Ferriere) என்ற ஊருக்கு சென்றனர். அங்கே அவர்கள், “லா கசினா அன்டிகா” (La Cascina Antica) என்ற பெயருள்ள வீட்டில் தங்கினர். அந்த வீட்டை செரனெல்லி” (Serenelli) என்ற குடும்பத்தினருடன் பகிர்ந்துகொண்டனர். அந்த குடும்பத்தில், “ஜியோவன்னி செரனெல்லி” (Giovanni Serenelli) என்பவரும் அவரது மகனான அலெஸ்ஸாண்ட்ரோ செரனெல்லி” (Alessandro Serenelli) என்ற 18 வயது இளைஞனும் வசித்தனர்.

விரைவில், மரியாவுக்கு ஒன்பது வயதாகையில் அவரது தந்தை மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரித்தார். பகல் நேரங்களில் மரியாவின் தாயாரும் சகோதரர்களும் விவசாய கூலி வேலை செய்வதற்காக செல்ல, மரியா வீட்டில் தனது சின்னத் தங்கையை கவனிப்பதுவும், வீட்டை சுத்தம் செய்வதுவும், சமையல் பணிகளை செய்வதுமாக இருப்பார். 11 வயதில் இவருக்குப் புது நன்மை கொடுக்கப்பட்டது.

கி.பி. 1902ம் ஆண்டு, ஜூலை மாதம் 5ம் தேதி, மரியா தமது வீட்டின் வெளிப்புறம் அமைந்திருந்த படிக்கட்டில் அமர்ந்திருந்தார். அவர் தனித்திருந்ததை அறிந்து, சற்று நேரத்தில் அங்கு வந்த அலெஸ்ஸாண்ட்ரோ” (Alessandro Serenelli), ஒரு கத்தியைக் காட்டி, தாம் சொன்னபடி கேட்கவில்லை என்றால் குத்தி விடுவதாக பயமுறுத்தினான். அவனுடைய நோக்கம், பாலியல் வன்கொடுமையால் மரியாவை அடைவதாகும். "இது சாவான பாவம், இதற்காக நீ நரகத்திற்குப் போவாய்”, என்று மரியா பலவிதமாக கதறி அழுதும் பயனில்லை. மரியா அதற்கிணங்க மறுத்ததால் அவரின் உடலைப் பலமுறை கத்தியால் குத்திக் கிழித்தான். குற்றுயிராய் மருத்துவமனை எடுத்துச் செல்லப்பட்ட மரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், 24 மணி நேரம் மரணப்படுக்கையில் இருந்த மரியா கொரெட்டி மன்னித்துவிட்டேன் அவரைஎன்று கூறிவிட்டு மரித்தார்.

கொலை செய்ததற்காக அலெஸ்ஸாண்ட்ரோவுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. பலகாலமாக மனந்திரும்ப மனமி்ல்லாதிருந்த அலெஸ்ஸாண்ட்ரோ, மரியா கொரெட்டி, விண்ணினின்று மலர்களை தன் கை நிறையக் கொடுத்ததாகக் கனவு கண்டதாகவும் அதனால் மனமாற்றம் அடைந்ததாகவும் அறிவித்தான். 27 ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் சிறையிலிருந்து விடுதலை பெற்றான். அப்போது மரியாவின் தாயிடம் சென்று மன்னிப்புக் கேட்டான். மன்னிப்பு பெற்ற அலெஸ்ஸாண்ட்ரோ, தமது இறுதி நாட்களில் கப்புச்சின் 3ம் சபையின் பொதுநிலை துறவியாக (Lay Brother) வாழ்ந்து கி.பி. 1970ம் ஆண்டு காலமானார்.

மரியா கொரெட்டி இறந்து 45 ஆண்டுகளுக்குள் மரியாவுக்கு திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ், புனிதர் பட்டமளித்தார். இந்த நிகழ்வுக்கு மரியாவின் தாயும், இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரரும், அலெஸ்ஸாண்ட்ரோவும் வந்திருந்தனர். இவரது புனித பட்டமளிப்பு விழாவுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000 மக்கள் ரோம் நகருக்கு வருகை தந்தனர்.

--

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org