Get Adobe Flash player

இன்றைய திருவிழா † (அக்டோபர் 7)
தூய செபமாலை அன்னை

(Feast of Our Lady of the Rosary)
ND Rosaire

திருவிழா நாள்: அக்டோபர் 7

தூய செபமாலை அன்னை (Our Lady of the Rosary) என்ற பெயர், கத்தோலிக்க திருச்சபையின் பக்தி முயற்சிகளில் ஒன்றாகிய செபமாலையின் தாய் என்ற அடிப்படையில் அன்னை மரியாளுக்கு வழங்கப்படுகின்ற பெயராகும்.

செபமாலை அன்னையின் திருவிழா அக்டோபர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது.திருமரபு:

கி.பி. 13ம் நூற்றாண்டில், ஆல்பிஜென்சிய பேதகம் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தில் தளர்ச்சியை உருவாக்கும் விதத்தில் தவறான கருத்துகளை மக்களிடையே பரப்பி வந்தது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க உதவுமாறு, புனித தோமினிக் மரியன்னையிடம் வேண்டுதல் செய்தார். அதன் விளைவாக கி.பி. 1208ம் ஆண்டு முரே என்ற இடத்தில் புனித தோமினிக் எதிரே தோன்றிய அன்னை மரியாள், "இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை தியானித்தவாறே, மங்கள வார்த்தை செபங்களை செபிக்கும் செபமாலை பக்திமுயற்சியை மக்களிடையே பரப்பினால் ஆல்பிஜென்சிய பேதகம் மறைந்துவிடும்" என்று கூறி மறைந்தார். அதன்படி, புனித தோமினிக் செபமாலை பக்தியை கிறிஸ்தவர்களிடையே பரப்பியதால், மக்களிடையே பரவியிருந்த விசுவாசத்திற்கு எதிரான தவறான கருத்துகள் அனைத்தும் மறைந்தன.

வரலாறு:

கி.பி. 1571ல் துருக்கியருக்கு எதிரான லெப்பன்டோ கடற்போரில் கிறிஸ்தவர்கள் வெற்றி பெற்றதன் நினைவாக, திருத்தந்தை “5ம் பயஸ்” (Pope St. Pius V), “வெற்றியின் அன்னை” (Our Lady of Victory) விழாவை ஏற்படுத்தினார். அந்த வெற்றி, அன்னை மரியாளின் உதவியை வேண்டி, வத்திக்கான் புனித பேதுரு பேராலய சதுக்கத்தில் கூடிய கிறிஸ்தவர்கள் செபித்த தொடர் செபமாலையின் விளைவாக கிடத்ததாக நம்பப்படுகிறது.

கி.பி. 1573ல், திருத்தந்தை “13ம் கிரகோரி” (Pope Gregory XIII) இவ்விழாவின் பெயரை திருச்செபமாலையின் விழா” ("Feast of the Holy Rosary") என்று மாற்றினார். இந்த விழாவை உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அனைவரும் அக்டோபர் முதல் ஞாயிறு அன்று கொண்டாடும் வகையில், கி.பி. 1716ம் ஆண்டு திருத்தந்தை 12ம் கிளமென்ட் இதை ரோமன் பொது நாள்காட்டியில் இணைத்தார்.

கி.பி. 1913ல் போர்ச்சுக்கல்லின் பாத்திமா நகரில் காட்சி அளித்த அன்னை மரியாள், தம்மை "செபமாலை அன்னை" என்று அறிமுகம் செய்து கொண்டார். அதே ஆண்டில் திருத்தந்தை 10ம் பயஸ் (Pope Pius X), ஞாயிறு திருவழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் இந்த விழாவை அக்டோபர் 7ம் தேதிக்கு மாற்றினார்.

கி.பி. 1960ம் ஆண்டில், திருத்தந்தை 23ம் ஜான் (Pope John XXIII), இந்த விழாவின் பெயரை செபமாலை அன்னை விழா” (Feast of Our Lady of the Rosary) என்று மாற்றினார்.

பாதுகாவல் :

செபமாலை அன்னை, உலகெங்கிலுமுள்ள பல்வேறு இடங்களுக்கு பாதுகாவலியாக விளங்குகின்றார். ஸ்பெயின் நாட்டிலுள்ள மலாகா” (The diocese of Malaga) எனும் மறைமாவட்டம், செப்டம்பர் மாதம், 8ம் நாள் தமது பாதுகாவலியின் நினைவுத் திருநாளை கொண்டாடுகின்றது. மெலில்லாமற்றும் ட்ரூஜில்லோ” (Melilla and Trujillo) ஆகிய ஸ்பேனிஷ் நகரங்கள், “வெற்றியின் அன்னையை” (Our Lady of Victories) தமது பாதுகாவலியாக நினைவுத் திருநாள் கொண்டாடுகின்றனர். மரியா டெல் ரொஸாரியோ” (María del Rosario) எனும் பெயர், ஒரு பொதுவான பெண் பாலின ஸ்பேனிஷ் பெயராகும். ரொஸாரியோ” (Rosario) எனும் பெயர், இத்தாலி நாட்டில் ஆண்களுக்கு வைக்கப்படும் முதல் பெயராகும்.

அற்புதம் :

இரண்டாம் உலகப் போர் முடிவில் கி.பி. 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 6ம் தேதி, சின்னப் பையன் என்ற அணு குண்டை ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா நகரில் அமெரிக்கா வீசியது. அதன் விளைவாக சுமார் ஒரு இலட்சம் மக்கள் உயிரிழந்தனர். ஆனால் அப்போது அந்நகரின் மையத்தில், குண்டு வீசப்பட்ட இடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த விண்ணேற்பு அன்னை ஆலயமும், அதனோடு இணைந்திருந்த இயேசு சபை இல்லமும் மட்டும் கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து தப்பின. அந்த இல்லத்தில் இருந்த இயேசு சபை குருக்கள் அனைவரும் எந்த காயமும் இன்றி உயிர் பிழைத்தனர். உயிர் தப்பிய குருக்கள், "பாத்திமா அன்னையின் செய்தியின்படி வாழ்ந்ததால்தான் நாங்கள் உயிர் பிழைத்தோம் என்று நம்புகிறோம்; தினமும் செபமாலை செபிக்கும் வழக்கமே எங்களைக் காப்பாற்றி இருக்கிறது" என்று செபமாலை அன்னைக்கு சான்று பகர்ந்தனர்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org