Get Adobe Flash player

மறையுரைச் சிந்தனை - நன்மை செய்வதில் கருத்தாய் இருப்போம்

தருபவர் : அருள்பணி மரியா அந்தோணிராஜ், மதுரை
Albert Sweitzer

ஆல்பர்ட் ஸ்வெய்ட்சர், 1952 ஆம் ஆண்டு ஆப்ரிக்கா கண்டத்திலே மருத்துவப் பணியும், சேவையும் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டவர். அவருடைய சிறுவயதிலே நடைபெற்ற ஒரு நிகழ்வு.

ஒருநாள் அவர் சாலையிலே அடிபட்டு, நோய்வாய்ப்பட்டுக் கிடந்த நாய்க்குட்டி ஒன்றை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார். அதைப் பார்த்த அவருடைய தாயார் அவரிடம், “அன்பு மகனே ஆல்பர்ட்! உனக்கு இந்த நாய்க்குட்டி வேண்டாம், இது கொடிய நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இதனை வெளியே கொண்டுபோய் விட்டுவிடு” என்று கெஞ்சிக் கேட்டாள். அதற்கு ஆல்பர்ட் ஸ்வெட்சரோ, “அம்மா இந்த நாய்க்குட்டியை வெளியே போய்விட்டுவிட்டால், இதற்கு ஏதாவது ஆகிவிடும். நானே இதனை பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன். அப்பாவுக்கும், உனக்கும் எந்தவிதத்திலும் சொந்தரவு தரமாட்டேன்” என்று வேண்டி நின்றான்.

மகனின் கெஞ்சுதலைக் பார்த்த தாய், அவனை நாய்க்குட்டியை வளர்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டாள்.

இது நடந்து ஒரு மாதத்திற்கும் மேல் இருக்கும். ஒருநாள் மகன் தன்னுடைய தாயை தனது அறைக்கு அழைத்தான். அவளும் ஆர்வமாய் அவனுடைய அறைக்குச் சென்றாள். அங்கே அவள் கண்ட காட்சி அவளை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. ஒரு மாதத்திற்கு முன்பாக ஆல்பர்ட் ஸ்வெட்சர் சாலையில் அடிபட்டுக் கிடந்ததாக எடுத்து வந்த நாய்க்குட்டியானது இப்போது கொழுகொழுவென்று பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.

அப்போது அவன் தன்னுடைய தாயிடம், “அம்மா! இந்த நாய்க்குட்டியை இனிமேல் நமது வீட்டில் வைத்துக் கொள்ளலாமா?” என்று உருகிநின்றான். அதற்கு அவனுடைய தாய் மறுப்பேதும் சொல்லாமல் வைத்துக்கொள்” என்று சொன்னதும் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

உயிர்கள் மீதும், மனிதர்கள்மீது இப்படி சிறுவயது முதலே இரக்கமும், கரிசனையும் கொண்டு வாழ்ந்தனால்தான் ஆல்பர்ட் ஸ்வெய்ட்சாரால் ஆப்ரிக்கா கண்டத்தில் பணிசெய்தபோது எல்லா மக்களுக்கும், உயிரினங்களுக்கும் சிறப்பானதொரு பணியைச் செய்ய முடிந்தது.

நம் வாழ்வு முழுவதும் நம்மாலான நன்மைகளை, உதவிகளை மக்களுக்குச் செய்யவேண்டும் என்பதை ஆல்பர்ட் ஸ்வெட்சரின் வாழ்க்கை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்திலே ஆண்டவர் இயேசு ஓய்வுநாள் ஒன்றில் நீர்க்கோவை நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதரைக் குணப்படுத்துகின்றார். இங்கே இயேசு அது ஓய்வுநாள் என்றெல்லாம் பாராமல், நோயால் கஷ்டப்படும் ஒரு மனிதனின் நோய் நீங்கவேண்டும் என்ற மனநிலையில் அவரைக் குணப்படுத்துகின்றார். அதாவது சட்டம் இரண்டாம் பட்சம்தான், மனிதனே முன்னுரிமை பெறக்கூடியவன் என்று சொல்லி பரிசெயர்களின் எதிர்ப்பையும் தாண்டி அவனுக்கு நலமாளிக்கிறார்.

கலாத்தியருக்கு எழுதப்பட்ட திருமடல் 6:9 ல் வாசிக்கின்றோம், “நன்மை செய்வதில் மனந்தளராதிருங்கள்” என்று. ஆம், இயேசு தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நன்மை செய்வதில் கருத்தாய் இருந்தார். ஏழைகள், பாவிகள், நோயினால் வாடியவர்கள் என்று எல்லா மக்களுக்கும் அவர் நன்மை செய்தார். அதனைத் தான் திபா 10:38 ல் இயேசு தூயஆவியால் நிரப்பட்டு எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் என்று படிக்கின்றோம். ஆகையால் இயேசுவிடம் விளங்கிய இத்தகைய மனநிலை நமதாக வேண்டும்.

ஆனால் மனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தையும் செய்யும்போதும் நல்ல நேரம் பார்த்து பார்த்துப் செய்கிறோம். இப்படிச் நடக்கின்ற எல்லாக் காரியங்களும் இறுதி வரைக்கும் நல்லபடியாக நடக்கின்றனவா என்றால் அது கேள்விக்குறியே. அதனால்தான் இயேசு பரிசேயர் மற்றும் திருச்சட்ட அறிஞர்களிடம், “ஓய்வுநாள் என்பதற்காக கிணற்றில் விழுந்த மாட்டையா, பிள்ளையையே தூக்காது இருப்பீர்களோ” என்று கடிந்துகொள்கிறார்.

எனவே நாம் எத்தகைய சூழலில் நன்மை செய்வதில் மட்டும் கருத்தாய் இருப்போம். அதன் வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org