Get Adobe Flash player

ராணி மேரி  - அருள்பணி - உயிர் கொடுத்த உத்தமி
நன்றி : oneindia/thatstamil

Rani Mary 01



ராணி மரியா, கடந்த 1995-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் அருகே 50 முறை கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட கன்னியாஸ்திரி. கத்தோலிக்கர்களின் தலைமையான வாடிக்கன் திருச்சபை, அவரை முக்தி பெற்றவராக அறிவித்துள்ளது. அதற்கான அற்புதங்களை  மறைவுக்குப் பிறகு அவர் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள அச்சபை, வரும் நவம்பர் 11-ம் தேதி இதை முறையாக அறிவிக்கவுள்ளது. ராணி மரியா செய்த அற்புதங்களை விட, அவரது குடும்பத்தினர் செய்த காரியம் சர்வ நிச்சயமாக அற்புதமானது. 

 

ராணி மரியா, கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள 'புல்லுவழி'  கிராமத்தைச் சேர்ந்தவர். கடவுளின் சேவையில் ஈடுபட வேண்டும் என்கிற விருப்பத்தைச் சிறுவயது முதல் கொண்ட அவர், படிப்பை முடித்து கன்னியாஸ்திரி ஆனார். 'பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை'யின் சார்பில் சேவை செய்வதற்காக, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே அனுப்பப்பட்டார். இந்தூரிலிருந்து ஒரு மணி நேரப்பயணத்தில் இருக்கும் ஊரான உதய்நகரில் அவரின்  மடம் இருந்தது. மலைப்பகுதியான அங்கு பழங்குடியினரும், ஒடுக்கப்பட்ட மக்களும் வாழ்கின்றனர். அங்கு இன்னமும் நிலப்பிரபுக்கள் ஆளுமைதான் நடைபெற்றுவருகிறது. பழங்குடியினர் தங்களின் பணத்தேவைகளுக்கு நிலச்சுவான்தார்களையே நம்பி இருந்தனர்.

இந்நிலையில்தான், அவர்களுக்குச் சமூக சேவை செய்யச்சென்ற ராணி மரியா வங்கிகளிலும், அரசு நிறுவனங்களிலும் சிறிய அளவிலான தொகைகளைக் கடனாகப் பெறலாம் என்று தெரிவித்தார். தொடர்ந்து அதுபற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தி, கந்து வட்டி போன்றவற்றில் சிக்கியிருந்த பழங்குடியின மக்களை மீட்கத் தொடங்கினார். இது அந்தப் பகுதியில் காலகாலமாக வட்டித்தொழிலில் ஈடுபட்டிருந்த நிலச்சுவான்தார்களுக்குக் கடும் கோபமூட்டியது. 

1995-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி உதய்நகரிலிருந்து இந்தூரை நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார் ராணி மரியா.  காட்டுப்பகுதியில் சென்றபோது மூன்று பேர் ஓட்டுநரை மிரட்டி பேருந்தை நிறுத்த வைத்தனர். பஸ் நிறுத்தப்பட்டதும் வண்டியின் முன்னால் தேங்காய் உடைத்த அவர்கள், மீண்டும் வண்டியில் ஏறினர். அந்த மூவரில் ஒருவரான சமாந்தார் சிங், ராணி மரியாவிடம் தேங்காய் பிரசாதத்தை எடுத்துக்கொள்ளச் சொல்கிறார். அவர் புன்சிரிப்புடன் மறுத்துவிட்டு, “என்ன சமாந்தார், இன்று மகிழ்ச்சியாக இருக்கிறாய் போலிருக்கிறது" என்று கேட்டுள்ளார். "இதோ... இதனால்தான் மகிழ்ச்சி" என்றவாறே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாகக் குத்தினார். பஸ்ஸில் இருந்த யாருமே உதவ முன்வரவில்லை. உயிரைக்காப்பாற்ற பேருந்திலிருந்து  இறங்கி ஓடினார் மரியா ராணி. பேருந்தின் ஓட்டுநர் பயத்தில் வண்டியை எடுத்து நிற்காமல் போய்விட்டார். சமாந்தார் சிங், ராணி மரியாவை விரட்டிச் சென்று தொடர்ந்து தாக்குதல் நடத்தினார். ரத்தவெள்ளத்தில் அப்படியே சரிந்தார் மரியா. சமாந்தார் சிங் தன் நண்பர்கள் ஜீவன் சிங், தர்மேந்திராவுடன் காட்டுக்குள் தப்பிவிட்டார். 

அடுத்த நாள் மரியாவின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தம் 40 ஆழமான கத்திக்குத்துகளும், பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வலுவான கீறல்களும் இருந்தன. இவ்வளவு வன்மம் ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி எழுந்தது. 1994-ம் ஆண்டு ராணி மரியா, கந்து வட்டிக்கு எதிரான விழிப்பு உணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டார். பாதிக்கப்பட்ட நிலச்சுவான்தார்கள் பழங்குடிகளை மீண்டும் வட்டிக்கு வாங்கும்படி மிரட்டியுள்ளனர். அதில் ஏற்பட்ட கலவரத்தில் நிலச்சுவான்தார்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இந்தப் பிரச்னையில் கைதுசெய்யப்பட்ட பழங்குடியினருக்குச் சட்ட ரீதியாக ராணி மரியா உதவினார். அப்படிப் பாதிக்கப்பட்ட நிலச்சுவான்தார்களில் ஒருவர்தான் ஜீவன் சிங்.  அவரின் தூண்டுதலின் பேரில்தான் சமாந்தார் சிங் இந்தக் கொலையைச் செய்துள்ளார்.

ஊரே நல்லவர் என்று சொன்ன கன்னியாஸ்திரியைக் கொன்றதால், சமாந்தார் சிங் குடும்பமும் அவரைச் சிறைக்கு வந்து பார்ப்பதில்லை. ஜீவனும், தர்மேந்திராவும் எந்த உதவியும் செய்யவில்லை. விடுதலை கிடைத்தால் ஓர் அப்பாவியைக் கொலை செய்யத் தூண்டியவர்களைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வது என்கிற முடிவில் இருந்துள்ளார் சமாந்தார் சிங். 

சமாந்தார் சிங் சிறைக்குச் சென்று ஏழு வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் 2002-ம் ஆண்டு ஜூலை மாதம் அவரைப் பார்க்க பார்வையாளர்கள் வந்திருப்பதாகச் சொல்லப்பட்டது. யார் அந்த பார்வையாளர்கள்? என சமாந்தார் கேட்க, ‛ராணி மரியாவின் குடும்பத்தினர்’ என பதில்  சொல்லப்பட்டது. வார்டன்கள் வற்புறுத்திய பிறகு அவர்களைச் சந்திக்க வந்தார். அங்கு ஆறு கன்னியாஸ்திரிகள் அமர்ந்திருந்தனர். அன்று ரக்‌ஷா பந்தன் தினம் என்பதால் சமாந்தாரின் கைகளில் ராக்கிக் கயிறை கட்டினர். அந்த ஆறு பேரில் ஒருவரான செல்மி பால் வேறு யாருமல்ல சமாந்தார் சிங்கினால் கொல்லப்பட்ட ராணி மரியாவின் தங்கைதான். இதைக் கேள்விப்பட்டதும் சமாந்தார் சிங் உடம்பெல்லாம் நடுங்கியது. "மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். என்னை மன்னியுங்கள். செய்த தவற்றை நினைத்து தினமும் வருந்துகிறேன்" என்று உருக்கமாகச் சொல்லியுள்ளார்.

“என்றைக்கு உங்களின் தவற்றை நீங்கள் உணர்ந்தீர்களோ, அன்றே உங்களை நாங்கள் மன்னித்துவிட்டோம். அதை உங்களிடம் சொல்லத்தான் வந்துள்ளோம். நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர்" என்று செல்மி தெரிவித்தார். அன்று இரவுதான் பல ஆண்டுகளுக்குப் பிறகு நிம்மதியாக உறங்கியதாக சமாந்தார் சிங் பின்னர் குறிப்பிட்டார். 

முக்தி பெற்றவராக அறிவிக்கப்பட்டிருக்கும் ராணி மரியா கொல்லப்பட்ட இடத்தில் அவரின் நினைவிடம் உள்ளது. ஒவ்வொரு வாரமும் அங்கு மலர் தூவி, மெழுகுவத்தி ஏற்றி வழிபட்டு வருகிறார் சமாந்தார் சிங். தன் மகளைக் கொலை செய்தவரை, ராணி மரியாவின் குடும்பம் மன்னித்ததுதான் உச்சபட்ச கருணை.

 

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org