Get Adobe Flash player

அன்னையின் அமல உற்பவம்
நன்றி : புனித திரு இதய குருமடம் கும்பகோணம்

 
அழகின் முழுமையெனவும், ஆறுதலின் தாயெனவும், நம்பிக்கையின் நாயகியெனவும், நலன்களின் ஊற்று எனவும், நம்பினோரின் ஆதரவெனவும், அகிலமனைத்தின் அரசியெனவும், அன்னையர்க்கெல்லாம் அன்னையெனவும், மகிழச்செய்த ஆச்சரியக்கனியெனவும் பலராலும், பலவாறாக, பரவலாக விந்தையோடு விவரிக்கப்படும் மரியாள், அன்பிறைவனின் திருமகனைத் தாங்கித் தரணிக்களிப்பதற்காக இத்தரணியின் தன்னிகரில்லாத் தாரகையாக, பாவமெனும் தாகம் சூழாப் பரமனின் தூரிகையாக, பக்குவமாய், அதிமுக்கியமாய் அவனிக்களிக்கப்பட்ட அருமையான படைப்பு.

இவளது மேன்மை இவளது இறைத்தாய்மையிலிருந்தாலும், இத்தாய்மைக்காக இறைவனாலேயே சிறப்பான விதத்தில் காக்கப்பட்டதால், மாந்தரனைவரும் அடையவேண்டிய இலக்கான மங்களத்தின் நிறைவான மாசற்ற அமலத்துவத்தில்தான் பரிமளிக்கிறது என்றால் இக்கூற்று மிகையல்ல.
மரியாள் அமலியாக அவதரித்தவள். இவள் அமல உற்பவி. ஆதிப்பெற்றோரின் வீழ்ச்சிக்கு முன்பிருந்த தூய நிலையிலேயே இவ்வவனியில் அருமையாக அவதரித்தவள். இத்தகு பெருமையால் மரியாள் இறைவனால் அலங்கரிக்கப்பட்டிருந்தபோதும், இந்த ‘அமலி’ என்னும் அங்கீகாரம் வரலாற்றில் அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடவில்லை. வரலாற்றை நோக்கும்போது, நூற்றாண்டுகளையல்ல, ஆயிரமாண்டுகளைக் கடந்து, அறிவு, நம்பிக்கை, விசுவாசம், போராட்டம், பகிர்வுகளைக்கடந்து பலமான எதிர்பார்ப்புகள் மற்றும் மக்களின் ஏக்கங்களுக்கிடையேதான் மறைக்கோட்பாடாக முழங்கப்பட்டிருக்கின்றது. இந்த மறைக்கோட்பாடு கடந்து வந்த வரலாறு மற்றும் பாரம்பரியப்பயணம் அதி நீளமானது. இதனை ஆழமாக நோக்குமுன், மரியாள், “அமலி” என்று அழைக்கப்படுமளவிற்கு அவளை உயர்த்திய, மக்களுக்கு உணர்த்திய சில விவிலிய மற்றும் விசுவாசக்கலவைகளையும் அவற்றின் பயணங்களையும் அவற்றின் பொருளையும் புரிந்துகொள்ள விழைவது நன்மை பயக்கும்.
ஆதாம் ஏவாள் பாவம் செய்தபோது, கடவுளின் அருட்கொடைகள் மனிதனுக்கு தடைப்பட்டன. ஊற நிலை பாதிக்கப்பட்டது. தந்தை கடவுள் மனிதனோடு கொண்டுள்ள் உறவைச் சரிசெய்ய, புதுப்பிக்கக் கன்னிமரியாளைக் கருவியாகவும், பாலமாகவும், பயன்படுத்தினார்.
இறைவனின் மீட்புத்திட்டத்தின் தொடக்கத்திலேயே மரியா தோன்றுகிறார். “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும், அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன்தலையைக் காயப்படுத்தும்” (தொநூ 3:15). பெண்ணின் வித்துக்கும் அலகையின் வித்துக்கும் இடையே நடைபெறும் மாபெரும் தொடர் போரில் பெண்ணின் வித்து நிச்சயமாக வெற்றி அடையும். இதுதான் தவறிய மனிதனுக்கு இறைவன் வழங்கிய முதல் நற்செய்தியாகும்.
திருமுழுக்கு வழியாக ஒருவருடைய சென்மப்பாவம் நீக்கப்படுகிறது. ஆனால் மரியாவைச்செனமப்பாவம் தீண்டாதபடி இறைவன் பாதுகாத்தார். மீட்பரின் தாய் மரியர் பாவத்தின் ஆட்சிக்கு ஒரு நொடியும் உட்பட்டிருப்பது, ‘மீட்பரின் தாய்’ என்னும் அவருடைய தனிச்சிறப்பான அழைத்தலுக்கு ஏற்புடையது அல்ல. எனவே அவரை ‘அருள் மிகப்பெற்றவராக’ (லூக் 1:28) அதாவது, சென்ம பாவக்கறையின்றி இறைவன் படைத்தார்.
இதனைத்தான் வானதூதர் கன்னி மரியாளிடம்
அருள் நிறைந்தவளே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார், பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்
என வாழ்த்தொலியாக லூக்கா 1:28இல் என்று வாழ்த்துகிறார். மரியா அன்றும் இன்றும் என்றும் “அருள் மிகப்பொற்றவர்”.
தூய பவுல்,
நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத்தேர்ந்தெடுத்தார்
(எபே. 1:4) என்கிறார். உலகம் உருவாகும் முன்பே ஒவ்வொரு கிறித்தவரையும் இறைவன் கிறிஸ்து வழியாகத் தேர்ந்துகொண்டது உண்மை என்றால், இவ்வுண்மை மீட்பரின் தாய் மரியாவுக்கு இன்னும் எவ்வளவோ அதிகமாகப்பொருந்தும்!
மரியா மீட்பரின் தாய் என்றாலும் அவரும் இயேசுவின் இறப்பாலும் உயிர்ப்பாலும் மீட்கப்பட்டார். மரியாவுக்கு இயேசு கொண்டுவந்த மீட்பை இறைவன் முன்னரே வழங்கிவிட்டார். இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களை முன்னிட்டே மரியா அமல உற்பவியாகப்பிறந்தார். இரண்டாவது வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல், “தம் மகனின் பேறு பலன்களை முன்னிட்டு அவர் உன்னத முறையில் மீட்கப்பெற்று, நெருங்கிய, பிரிக்கமுடியாத முறையில் அவரோடு இணைக்கப்பெற்றிருக்கிறார்… ஆயினும் அதே நேரத்தில் ஆதாமின் வழித்தோன்றலாகவும் இருப்பதால் மீட்கப்பெறவேண்டிய மக்கள் அனைவருள் அவரும் ஒருவராகின்றார்”. (திருச்சபை எண்.53). திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் “மீட்பரின் தாய்” என்னும் தமது மறைத் தூது மடலில் மரியா ‘அருள் நிறைந்தவர்’ என்பதற்கு ஆழமான விளக்கம் தருகிறார் (மீட்பரின் தாய், எண்கள் 8-11).
மரியாவைப்பொருத்தமட்டில், சென்மப் பாவக்கறை அவரைத் தீண்டாதபடி அவர் கருவான முதல் நொடியிலிருந்தே இறைவன் அவரைப் பாதுகாத்தார். நம்மைப்பொருத்தமட்டில் சென்மப்பாவம் நம்மைத் தீண்டிய பிறகு அதே இறைவன் அப்பாவத்தின் காயத்தைத் திருமுழுக்கு வழியாகக் குணப்படுத்திப்பாதுகாக்கின்றார்.
ஒரு மருத்துவர் ஒருவரை இரண்டு வழிகளில் நோயினின்று காப்பாற்ற முடியும். ஓன்று. அவரை நோய் தாக்காமலே தடுப்பு ஊசி போட்டு நோயினின்று காப்பாற்றமுடியும். இரண்டு ,நோய் தாக்கிய பிறகு அந்நோய்க்குத்தக்க மருந்தைக் கொடுத்து அவரைக் குணப்படுத்த முடியும்.
இவ்வாறு மரியாவின் அமல உற்பவத்தை விசுவாசக்கோட்பாடாகத் திருத்தந்தை 9ம் பத்திநாதர் பிரகடனம் செய்த நான்கு ஆண்டுகளுக்குப்பின் லூர்து கெபியில் தோன்றிய மரியா, “நாமே அமல உற்பவம்” என்று தமது பெயரை வெளிப்படுத்pயது குறிப்பிடத்தக்கது.
புனித பொனவெந்தூர் கூறுகின்றார், “இறைவன் விரும்பி இருந்தால் இப்போதிருக்கும் விண்ணகத்தையும் மண்ணகத்தையும் விட மேலான விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்திருக்க முடியும். ஆனால் மரியன்னையை விட மேலான ஒரு தாயை அவரால் படைத்திருக்கமுடியாது.
மரியாவின் அமல உற்பவத்திற்கு ஓர் இறையியல் வல்லுநர் கூறியுள்ள இரத்தினச் சுருக்கமான காரணம்:
இறைவன் அதைச்செய்ய முடிந்தது: அது ஏற்புடையதாக இருந்தது: எனவே அவர் அதைச் செய்தார்

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org