Get Adobe Flash player

*மரியாளின் அமல உற்பவப் பெருவிழா*

*மறையுரைச் சிந்தனை (டிசம்பர் 08)*
அருள்பணி மரியா அந்தோனிராசு, பாளையங்கோட்டை
marie 04

இன்று திருச்சபையானது மரியாளின் அமல உற்பவப் பெருவிழாக் கொண்டாடுகிறது. மரியாள் கருவில் உதிக்கும்போதே பாவக்கறையில்லாமல் பிறந்தார் என்பதே இவ்விழாவின் சாரம்சமாக இருக்கிறது. இவ்விழா கீழைத் திருச்சபையில் 7 ஆம் நூற்றாண்டிலிருந்தும், மேலைத் திருச்சபையில் 9ஆம் நூற்றாண்டிலிருந்தும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கான்டர்பரி என்பவர் ‘அமல உற்பவம்’ என்ற தலைப்பிலே ஒரு புத்தகத்தை எழுதினார். இப்புத்தகத்தில் அவர் ‘மரியாள் கருவில் தோன்றும்போது பாவக்கறையில்லாது – ஜென்மப் பாவமில்லாது – உதித்தார்’ என்று எழுதி இருந்தார். இதை எதிர்த்து இறையியலாளர்களின் இளவரசர் என்று அழைக்கப்படக்கூடிய தாமஸ் அக்குவினாஸ் ‘மரியாள் பாவக்கறையில்லாமல் தோன்றினாள் என்று சொன்னால் கடவுளது மீட்பின் பயன் மரியாளிடத்தில் செயல்படாது போய்விடுமே’ என்று விவாதம் செய்தார். ஆனால் அவருக்குப் பின்னர் வந்த யோவான் டன்ஸ் ஸ்காட்டுஸ் என்பவர், “கடவுளது மீட்பின் பலன் மரியாளுக்குதான் அதிகமாகத் தேவைப்படுகிறது” என்று சொல்லி இந்த விவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். அதன்பின்னர் இக்கோட்பாடு படிப்படியாக வளர்ந்துகொண்டே வந்தது.

1854 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் நாள் அன்று திருத்தந்தையாக இருந்த ஒன்பதாம் பத்திநாதர் இறை உந்துதலின் பேரில் ‘மரியாள் கருவிலே பாவக்கறையில்லாமல் உதித்தாள்’ என்று சொல்லி ‘அமல உற்பவியான மரியா’ என்ற கோட்பாட்டைப் பிரகடம் செய்தார். இதற்கு முத்தாய்ப்பாக 1858 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி லூர்து நகரிலே பெர்னதெத்து என்ற சிறுமிக்குக் காட்சி தந்த மரியா ‘நாமே அமல உற்பவம்’ என்று இக்கோட்பாட்டை உறுதி செய்தார். இவ்வாறு திருச்சபையிலே மரியாள் அமல உற்பவி’ என்ற விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்வேளையில் மரியாள் அமல உற்பவி என்று சொல்வதற்கு விவிலியச் சான்றுகள் இருக்கின்றதா என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வானதூதர் கபிரியேல் மரியாவுக்குத் தோன்றும்போது, “அருள் நிறைந்தவளே வாழ்க!” என்று தான் வாழ்த்துகிறார் (லூக் 1:29). மரியாள் இறைவனின் அருளை நிரம்பப் பெற்றுக்கிறாள் என்பதே இதன் அர்த்தமாக இருக்கிறது. மேலும் தமதிருத்துவத்தில் இரண்டாம் ஆளாக இருக்கக்கூடிய மகனாகிய இயேசு, எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் 4:15 ல் வாசிப்பதுபோல ‘பாவம் செய்யாதவர்’. எனவே பாவம் செய்யாத ஆண்டவர் இயேசு மனிதனாகப் பிறக்கவேண்டும் என்று சொன்னால் பாவமே அறியாத ஒரு பெண்ணின் வயிற்றில்தான் மகனாகப் பிறக்கவேண்டும். அதனால்தான் கடவுள் மரியாளை பாவக்கறை சிறிதும் இல்லாமல் தோன்றச் செய்தார்.

ஆக, “அமல உற்பவம்” என்பது மரியாள் பெற்ற பாக்கியம் என்று சொல்வதைவிடவும், தன் மகன் இயேசுவின் பொருட்டு கடவுள் மரியாளுக்குக் கொடுத்த பேறு என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும்.

இன்றைய முதல்வாசகத்தில் முதல் பெற்றோரான ஆதாமும், ஏவாளும் தங்களுடைய கீழ்படியாமையால் கடவுளால் உண்ணக்கூடாது என்று பணிக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டனர். அதனால் பாவத்தை வருவித்துக் கொண்டனர். ஆனால் மரியாளோ தன்னுடைய பாவக்கறையற்ற வாழ்வால் - கீழ்படிதனால் – தன்னுடைய மகன் இயேசுவின் வழியாக பாவத்தை வெற்றிகொள்கிறார்; பாவத்திற்கு காரணமாக இருந்த சாத்தானை தன்னுடைய காலால் நசுக்குகிறார். நாமும்கூட இன்றைய இரண்டாம் வாசகத்தில் கேட்பது போல ‘தூயோராக, மாசற்றவராக’ நடக்கும்போது பாவத்தை வெற்றி கொள்ளலாம் என்பதே இங்கே உணர்த்தப்படும் செய்தியாக இருக்கிறது.

மரியாள் தன்னுடைய மாசற்ற வாழ்வால் பாவத்தை வெற்றிகொண்டாள். நாமும் மாசற்ற வாழ்வு வாழ்ந்தோம் என்றால் நம்மாலும் பாவத்தை வெற்றிக்கொள்ள முடியும் என்பதை ஆழமாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஆனால் இன்றைக்கு நம்மால் தூய, மாசற்ற வாழ்க்கை வாழமுடிகிறதா? என்று நினைத்துப் பார்க்கும்போது அது மிகப்பெரிய கேள்விக்குறியாக் இருக்கிறது. சிந்தனையால், சொல்லால், செயலால் அன்றாடம் எத்தனையோ பாவங்களைச் செய்கிறோம்; கடவுளை விட்டுப் பிரிந்து வெகுதொலைவில் வாழ்கிறோம். இந்நிலை மாறவேண்டும். திருப்பாடல் 51:10 ல் வாசிப்பதுபோல “இறைவா தூயதோர் உள்ளத்தை என்னுள் படைத்தருளும்’ என்று தூய இறைவனைப் பார்த்து ஜெபிப்போம். தூயராய் நடப்போம்.

அடுத்ததாக மரியாளின் அமல உற்பவப் பெருவிழாக் கொண்டாடும் நாம் மரியாளின் மீது ஆழமான பக்திகொண்டு வாழே வேண்டும். “மாதாவின் பிள்ளை, அவலமாய் சாவதில்லை” என்பர். நாம் மரியாவின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வாழ்வோம்.

புனித அந்தோனியார் தன்னுடைய வாழ்வில் பல்வேறு சோதனைகளையும், இன்னல்களையும் சந்தித்து வந்தார். அப்படிப்பட்ட நேரங்களில் எல்லாம் அவர் மரியன்னை நோக்கி இவ்வாறு மன்றாடுவார், “என் அரசியே! என் தாயே! என்மேல் கவனமாய் இரும்” என்று. (My Queen, My Mother, Water over me). இதனால் அந்தோனியார் இறப்பதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பாக மரியன்னை அவருக்கு கட்சி தந்து, “உன் நேர்மைக்கும், என்மீது நீ கொண்டிருந்த அன்பிற்கும் விண்ணகத்தில் உனக்கொரு இடம் காத்திருக்கிறது” என்று சொல்லி மறைந்தார்.

மரியாள் மீது ஆழமான பக்திகொண்டு வாழும்பொது, இறைவன் தன் அன்னை வழியாக நமக்கு எல்லா ஆசியையும் தருவார் என்பதே இந்நிகழ்வானது நமக்கு எத்துரைக்கிறது. எனவே மரியாள் அமல உற்பவி என்ற விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் மரியாவைப் போன்று நாமும் தூயோராக, மாசற்றவராக வாழ்வோம். இறையருளை நிறைவாய் பெறுவோம்.

 

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org