Get Adobe Flash player

தன்னார்வலர்கள் வாழ்க!

நன்றி :திருச்சபை செய்திகள்  தொகுப்பு IIபிரதி  122 – 08 - 12 - 2017
Thannalarvalargal

இலவச வாகன சேவை 515’ ஆலங்குடி கணேசன் - RV

தமிழகத்தின் சிவகங்கை பகுதியில், வளர்ந்து வந்த நெல் பயிர்கள், தக்க நேரத்தில், போதுமான மழையின்றி கருகி விட்டன. காலம்கடந்து இப்போது பெய்துள்ள மழையால், அந்தப் பகுதி விவசாயப் பெருமக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். அதேநேரம், ஒக்கி புயலின் கடும் பாதிப்புக்களால் குமரி மாவட்ட மக்கள் பெருந்துயரில் மூழ்கியுள்ளனர். இந்தப் புயலால் கடலில் மாயமான மீனவர்களை இந்திய கடலோர காவல்படை 11 கப்பல்கள் மூலம் தேடி வருகின்றது. கூடுதல் ஹெலிகாப்டர்களும் தேடும் பணியில் ஈடுபட உள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.


அன்பு இதயங்களே, ஒக்கிப் புயல் பற்றிய அரசின் நடவடிக்கைகள் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளவேளையில், பேரிடர்கள், பேரழிவுகள், பெரும் தாக்குதல்கள் போன்றவை இடம்பெறும் சமயங்களில், உடனடியாக களப்பணிகளில் இறங்குவது தன்னார்வலர்களே.  உரோமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்ற முக்கியமான நிகழ்வுகளிலும், இன்னும், ஆலயப் பணிகள், மனிதாபிமானப் பணிகள் போன்றவைகளிலும், இன்முகத்துடன் பணியாற்றும் பல தன்னார்வலர்களைக் காண முடிகின்றது பெருந்துயர்கள் நேரிடும் நேரங்களில் மட்டுமல்லாமல், ஏனைய நாள்களிலும், இல்லாதவர்கள், இயலாதவர்களுக்கு, பல நல்ல உள்ளங்கள் ஆற்றிவரும் கைம்மாறு கருதாத சேவைகளை அறியும்போது, அவர்களை இருகரம் குவித்து வாழ்த்துவதற்கு நெஞ்சம் துடிக்கின்றது.   

‘அவசர மருத்துவ சேவை 108’ பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால், ‘இலவச வாகன சேவை 515’ என்பது பற்றி, நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை. புதுக்கோட்டையிலிருந்து ஏறக்குறைய 21 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆலங்குடி என்ற ஊரில், கணேசன் என்பவரே, கடந்த 46 ஆண்டுகளாக, இந்த மகத்தான, ‘515 வாகன’ சேவையைச் செய்துகொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் இவர் ஒரு சாதாரண ஓட்டு வீட்டில்தான் குடியிருக்கிறார். எழுபது வயதைக் கடந்துவிட்ட கணேசன் அவர்களின் இச்சேவை பற்றிச் சொல்லும் ஊர் மக்கள்,  “இவரு நேரம் காலமெல்லாம் பார்க்க மாட்டாரு. உதவினு யார் கேட்டாலும், காரை எடுத்துக்கிட்டுக் கிளம்பிடுவாரு. அக்கம்பக்கத்துல இருக்குற புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை ஊருங்க மட்டும் இல்லை... சமயத்துல வெளிமாநிலங்களுக்குக்கூட அவரோட கார் பறக்கும். `கையில் காசு இல்லை’னு சொன்னா, `எனக்குப் பணம் முக்கியம் இல்லை’ம்பாரு. அவர்கிட்ட இருக்குற பணத்தைச் செலவு செஞ்சு உதவி செய்வாரு 515.  இவர் குடும்பத்துக்கு `ரேஷன் கடை அரிசியும் பருப்பும் இருந்தால் போதும். இவரோட நல்ல எண்ணத்துக்கு ஏராளமான பரிசுகள், ஏகப்பட்ட பட்டங்கள், சான்றிதழ்கள் கிடைச்சிருக்கு. கணேசன் அவர்களை, `515’ என்றுதான் ஊர் மக்கள் அழைக்கிறார்கள். தன் வாழ்வு பற்றி இவ்வாறு சொல்கிறார் கணேசன்.

ஆலங்குடிதான் எனக்குச் சொந்த ஊர். அப்பா ஒரு மாட்டுத் தரகர். என் சிறிய வயதிலேயே அப்பாவும், அம்மாவும் இறந்துவிட்டார்கள். பிறகு, நானாக ஏதேதோ வேலை பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினேன். எனக்கு என் மனைவி தெய்வானைதான் எல்லாமே. எங்களுக்கு ஐந்து பெண் குழந்தைகள். எல்லாருக்கும் திருமணமாகிவிட்டது. 1968ம் வருடம், ஒருநாள் சாலையில் நடந்து போய்க்கொண்டு இருந்தேன். ஒருவர், தன்னுடைய நிறைமாத கர்ப்பிணி மனைவியை ஒரு தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு போய்க்கொண்டிருந்தார். என் மனது உடைந்துவிட்டது. வீட்டுக்கு வந்து, என் மனைவியிடம் விடயத்தைச் சொன்னேன். `இந்த மாதிரி இருக்கிறவர்களுக்கு உதவுவதற்கு ஏதாவது பண்ணவேண்டும் என்று, என் ஆதங்கத்தையும் சொன்னேன். இதை உங்களால் எப்படிச் செய்ய முடியும் என்று மனைவி கேட்டார்கள். முடியும் என்று சொல்லி,  நான் வைத்திருந்த பழைய இரும்புக் கடையை விற்றேன். 17,500 ரூபாய் கிடைத்தது. அந்தப் பணத்தில், ஒரு பழைய அம்பாசிடர் காரை வாங்கினேன். அந்த கார் எண் TNZ-515. இந்த எண்ணையே, எனது சேவைக்குப் பெயர் வைத்தேன். உதவி என்று கேட்கிறவர்களுக்கு, நேரம் காலம் பார்க்காமல், காரை எடுத்துக்கொண்டு போய் என்னாலே ஆனதைச் செய்கிறேன்.

கணேசன் அவர்கள், காருக்கு டீசல் போடுவது, பழுது பார்ப்பது போன்ற அனைத்துச் செலவுகளையும் அவரே பார்த்துக்கொள்கிறார். கார் சேவை இல்லாத நேரத்தில், பழைய இரும்பு, தகரம் போன்ற பொருள்களை வாங்கி விற்கும் கடை நடத்துகிறார். இதுவரை 19 அம்பாசிடர் கார்களை வாங்கியிருக்கிறார் கணேசன். ஒரு கார் பழுதாகிவிட்டால், அடுத்து, பழைய காரையே வாங்குகிறார். அத்தனைக்கும் `515’தான் பெயர். இவர், இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளை பிரசவத்துக்கு ஏற்றிச் சென்றிருக்கிறார், விபத்துக்கு ஆளான நான்காயிரத்துக்கும் மேற்பட்டோரைச் சுமந்து சென்றிருக்கின்றார். அது மட்டுமல்ல, பணம் இல்லாமல், சடலத்தை ஊருக்குக் கொண்டு போகமுடியாமல் தவிப்பவர்களுக்கும் இவர் இலவசமாக உதவுகிறார். எப்போதுமே வாகன ஓட்டுனர் இவர்தான். இப்படி இவரின் வாகனம், இதுவரை 5,400 சடலங்களை பல ஊர்களுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது என்று, தி இந்து நாளிதழில் சொல்லப்பட்டிருந்தது.  

இவ்வாறு பிரதிபலன் பாராது, தானாக முன்வந்து உலகெங்கும் பணியாற்றும் நல் உள்ளங்களைப் பாராட்டி ஊக்குவிப்பதற்காக, ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 05ம் நாளன்று, ஐக்கிய நாடுகள் நிறுவனம், உலக தன்னார்வலர்கள் நாளைச் சிறப்பிக்கின்றது. “தன்னார்வலர்கள், முதன்முதலாக இங்கும் எங்கும் செயல்படுகிறார்கள்” என்ற தலைப்பில், இந்த உலக நாளை, இச்செவ்வாயன்று சிறப்பிக்கின்றது ஐ.நா. நிறுவனம். ஐ.நா.வின் தன்னார்வலர்கள் திட்டத்தின்கீழ், ஒவ்வோர் ஆண்டும் 6,500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், உலகில் சவால்நிறைந்த சூழல்களில் பணியாற்றி வருகின்றனர். அதோடு, ஐ.நா.வின் 12 ஆயிரம் வலைத்தள தன்னார்வலர்கள், இருபதாயிரத்திற்கு மேற்பட்ட திட்டங்களை, வலைத்தளங்கள் வழியாக முடித்துக் கொடுக்கின்றனர். மும்பையில் அண்மையில், 17 வயது மாணவர் ஒருவர் செய்து இருக்கும் ஒரு நற்செயலைப் பாராட்டதவர்களே இல்லை. மும்பை “சாதே’ நகரில் ஒதுக்குபுறமாக உள்ள ஒரு சேரிப் பகுதியில் வாழும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டுமெனில் சேரிப் பகுதியை ஒட்டியுள்ள ஐம்பது அடி நீள சாக்கடையைக் கடந்துதான் செல்ல வேண்டியிருந்தது. இதனை சாதே நகரில் அடுக்கு மாடியில் வாழ்கின்ற, 17 வயது இஷான் பல்பாலே என்கிற இளைஞர், தினமும் பார்த்திருக்கிறார். இதைத் தனது பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும், சமூக அமைப்பினர்களிடமும் முறையிட்டு இருக்கிறார். உள்ளூர் நகராட்சியிடமும் இந்த விடயம் சென்று இருக்கிறது. ஆனால் அவர்கள் தப்பித்தவறிக்கூட அந்த சேரிப் பக்கம் சென்று பார்க்கவே இல்லை. வெறுத்துப்போன இஷான், தனது சேமிப்புப்பணம், நண்பர்களிடம் கடன் என, பெரும் பணம் திரட்டி, சேரிக் குழந்தைகள் சாக்கடையைக் கடக்க 50 அடி நீளம், 5 அடி அகலத்தில், முழுக்க முழுக்க மரக்கட்டைகளைக் கொண்டே, எட்டே நாட்களில் ஒரு பாலத்தையே கட்டிவிட்டார். அடிப்படையில் இவர் ஒரு சிவில் பொறியாளர் மாணவர். தற்போது பள்ளிக் குழந்தைகள் மட்டுமின்றி, சேரிப்பகுதிகளில் குடியிருக்கும் 15,000 மக்களுக்கும், இந்தப் பாலம்தான் சாக்கடையைக் கடக்க உதவி செய்கிறது. அடுத்து, சேரிக் குழந்தைகளுக்குக் கழிவறை கட்டும் பணியில் இருக்கின்றாராம் 17 வயது நிரம்பிய இஷான்.

சிறைக் கைதிகள் மறுவாழ்வு பெற, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த, பீஸ் - அனிக் கப்பாய் தம்பதியர் (Peace-Anik Khapai), கலை நயமிக்க பொருட்களைத் தயாரித்து, சந்தைப்படுத்தி வருகின்றனர் என்று, தினமலரில் ஒரு செய்தி இருந்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக ஊட்டியில் வாழ்ந்துவரும் இத்தம்பதியர், வீடுகளில் வீணாகி, வீசியெறியப்படும் பொருட்களை, கலைநயமிக்க அலங்கார கைவினைப் பொருட்களாக உருமாற்றும் தொழிலை துவக்கினர். சிறைத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், மைசூரு மற்றும் கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளைச் சந்தித்து, பழைய பிளாஸ்டிக், கண்ணாடி, துணிகள், இரப்பர் டயர்கள் போன்ற பொருட்களை, அவர்களிடம் கொடுத்து, பல்வேறு கைவினைப் பொருட்களைத் தயாரிக்கப் பயிற்சி வழங்குகின்றனர். காகிதங்கள் மூலம், டம்ளர் தாங்கிகள் தயாரிக்கப்படுகின்றன. கைதிகளால் தயாரிக்கப்படும் இப்பொருட்களுக்கு வர்ணம் தீட்டி, அதை மெருகேற்றி, முழுவடிவம் கொடுக்கும் பணியை, அவர்களின் குடும்பத்தினரை வைத்துச் செய்கின்றனர். இந்தக் குடும்பத்தினர் இப்பணியை செய்ய, தங்கள் வீட்டின் ஓர் அறையையும் ஒதுக்கி கொடுத்துள்ளனர். இக்கைவினைப் பொருட்கள், ஐந்து ரூபாயில் இருந்து, மூவாயிரம் ரூபாய் வரை, சந்தையில் விற்கப்படுகிறது. கிடைக்கும் வருமானத்தில், கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குரிய பங்கை இவர்கள் பிரித்து கொடுத்து விடுகின்றனர். இத்தகைய பணியை, இந்த மணிப்பூர் தம்பதியர், கடந்த ஆறு ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர்.

தண்டனை காலம் முடிந்து வெளியே வரும் கைதிகள், புதிய நம்பிக்கையுடன் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு உதவுவதோடு, வீணாகி வீசியெறியப்படும் பொருட்களால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதும் தவிர்க்கப்படுகிறது'' என்று சொல்லியுள்ளனர் பீஸ் - அனிக் தம்பதியர். உலக தன்னார்வலர்கள் நாளில், நாமும், கைம்மாறு கருதாத சிறு சிறு பணிகளை ஆற்றலாமே. வாழ்வில் சாதிப்பதற்கு, நற்பண்புகளே சந்தர்ப்பம் தருகின்றன. தயக்கத்தில்தான் வெற்றிகள் தள்ளிப்போடப்படுகின்றன. எனவே துணிச்சலுடன் நற்பண்புகளில் வளர்வோம்.


AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org