Get Adobe Flash player

உள்ளத்தைத் திருத்தவே நாற்பது நாள் தவக்காலம்!
ரா வளன்

நன்றி  : விகடன்
lent 03

சகலவித ஆனந்தத்தையும் அன்றாடம் அனுபவித்து வாழும் மனிதன், தான் வாழும் காலத்தில் ஆன்மாவையும் கவனித்துக்கொள்ளக் கற்றுத் தரும் புனித நாட்களாக அமைகிறது, கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் நாற்பது நாள் தவக்காலம் .

"மனிதனே, நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய். மறவாதே!" என்கிறது கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள். இந்த நாற்பது நாள் தவக்காலம், அன்பு செலுத்துதல், பிறருக்கு உதவி செய்தல், கீழ்ப்படிதல் போன்ற நல்ல பழக்கங்களையும் பழகிக்கொள்ள, அனைத்துக் கிறிஸ்துவ மக்களுக்கும் வழிகளை வகுத்துக்கொடுக்கின்றது.

 

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததைக் கொண்டாடும் 'ஈஸ்டர் பண்டிகை'யின் போது, உலகமெங்கும் உள்ள கிறிஸ்துவ மக்கள் தங்களது குற்றங்குறைகளை மறந்து, மனம் திருந்தி, மனதளவில் புது மனிதராக உயிர்த்தெழ வேண்டும் என்பது ஐதீகம். இதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் தவக்காலம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி, 'சாம்பல் புதனு'டன் தவக்காலம் தொடங்குகிறது. இந்தத் தவக்காலத்தின் சிறப்புகள் மற்றும் கிறிஸ்தவ மக்கள் அனுசரிக்கவேண்டிய பண்பு நலன்கள் குறித்து, நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் தந்தை தஞ்சை டோமி.

தந்தை தஞ்சை டோமி "தவக்காலம் துவங்கும் முதல்நாளில், தேவாலயங்களில் கூடியிருக்கிற பக்தர்களின் நெற்றியில், பங்கு தந்தையர்கள் சாம்பல் பூசி நற்செய்தி அறிவிக்கும் நிகழ்ச்சியே 'தவக்காலம்' தொடங்கியதற்கான அடையாளமாகக் கருதப்படுகின்றது. அன்று முதல் அடுத்துவரும் நாற்பது நாட்களுக்கு, கிறிஸ்துவ மக்கள் தங்கள் இல்லங்களில் எந்த ஒரு சுபகாரியங்களும் நடத்தாமல், மாமிச உணவுகளை உண்ணாமலும் தவ வாழ்வை மேற்கொள்கின்றனர்.

இந்தத் தவக்காலம் உடலை வருத்திக்கொள்வதற்காக அல்ல. உள்ளத்தைத் திருத்திக்கொள்ளவே அனுசரிக்கப்படுகிறது. இவ்வுலகின் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் அளவற்ற அன்பையும் இரக்கத்தையும் பெறவும், மனிதர்களின் தவறுகளை அவர் மன்னித்து இறைவாஞ்சையைத் தியானிக்கவும், இறைவன் தரும் அருட்காலம் இது.

* இந்த நாட்களில், ஜெபம், தவம் ஆகியவற்றின் மூலம் நம்மையே நாம் தயார்படுத்திக்கொள்ள காலம் கனிந்து நிற்பதை நாம் உணரவேண்டும்.

* இதுவரை விரோதியாகப் பார்க்கப்பட்டவர்கள் எல்லாம், இன்றைய நாள் முதல் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த முற்படவேண்டும்.

* பிறர் உதவி என்று கேட்டால், எந்தக் காரணமும் சொல்லி, நகராமல் உடனே செய்து முடிக்க வேண்டும்.

* நாமாக முன்வந்து உணவு தானம் உள்ளிட்ட பல்வேறு பொருள் உதவிகளையும் செய்ய வேண்டும்.

* கிறிஸ்துவுக்குள் உண்மையுள்ள பிரியமுள்ளவராக இருக்க நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தவக்காலத்தில் நோன்பு இருக்கும் பழக்கம் ஆதித் திருச்சபை மரபிலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. கி.பி. 313-ல் தவக்காலம் ஒரு வரைமுறைக்கு வந்ததாக விவிலியம் கூறுகிறது. இந்த நாற்பது என்ற எண், விவலியத்தில் ஆன்மிகப் பொருள் மிகுந்த எண்ணாகக் கருதப்படுகிறது.

நோவா காலத்துப் பெருவெள்ளம் நாற்பது பகலும், நாற்பது இரவும் நீடித்தது. சீனாய் மலையில் பத்துக் கட்டளை பெறும் முன் மோசே நாற்பது பகல், நாற்பது இரவு உண்ணாமல் கடவுளுடன் இருந்தார். ஒரேப் மலையில், கடவுளுடன் நாற்பது பகல், நாற்பது இரவுகள் எலியா நடந்துள்ளார்.

இயேசு கிறிஸ்துகூட, தன் பொதுவாழ்வில் தனது பணியைத் தொடங்கும் முன், பாலைவனத்தில் நாற்பது பகலும், இரவும் நோன்பிருந்து பிரார்த்தனை செய்தார். இப்படியான விவிலிய வார்த்தைகள் மற்றும் திருச்சபை மரபுப் பின்னணிகள் நமது நாற்பது நாட்கள் தவக்கால நோன்பைப் பொருள் உள்ளதாக்குகின்றன.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org