Get Adobe Flash player

வளன் வாழ்வின் ஏழு மகிழ்ச்சிகள்

அருள்பணி இயேசு கருணாநிதி
St Joseph

 

நாளை தூய வளனாரின் திருநாளைக் கொண்டாடுகிறோம். 

 (மார்ச் 19ல் இவரை 'அன்னை மரியாளின் துணைவர்' எனக் கொண்டாடும் நாம், மே 1ல் 'தொழிலாளர்களின் பாதுகாவலர்' எனவும் கொண்டாடுகிறோம்)

 சித்தரிக்கப்படும் எல்லாப் படங்களிலும், சுரூபங்களிலும் மரியாளைவிட வயது அதிகமானவராகவும், கைகளில் மரஉளி அல்லது குழந்தை இயேசுவை சுமந்தவராகவே இருக்கிறார். இவரின் வாழ்விலும் இன்ப, துன்பங்கள் இருந்திருக்கும்தானே. அந்தத் தேடலின் பின்னணியில் நான் கற்றவைகளைக் கொஞ்சம் மசாலா சேர்த்து பதிவாக்குகிறேன் இன்று.

 

 

வளன் வாழ்வின் ஏழு மகிழ்ச்சிகள் இவை:

 

1. மனுவுருவாதல் என்னும் மறைபொருள்

 

அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால் தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார். (மத்தேயு 1:20-21)

 

'ஆயிரக்கணக்கான வருடங்களாய் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்!' என்றுதான் ஒவ்வொரு யூதரும் மெசியாவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். தாவீதின் அரியணை என்றென்றும் நிலைபெறும் என்று அனைவரும் எதிர்நோக்கியிருந்த காலம் இது. மெசியாவின் வருகை மிக அண்மையில் உள்ளது என அன்றாடம் தெருவில் யாராவது சொல்லிக் கொண்டு திரிவதும், 'நான்தான் மெசியா' என்று சிலர் தங்களுக்குப் பின் சீடர்களைக் கூட்டிக் கொண்டு அலைவதும் அன்றாட வாடிக்கையாக இருந்தது. இப்படிப்பட்ட நேரத்தில் தான் தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் மரியாளின் வழியாக மெசியா வரப்போகிறார் என்ற செய்தி யோசேப்புக்குத் தரப்படுகின்றது. தான் கூடிவாழுமுன்னே தன் துணைவி கருவுற்றிருப்பது தனக்கு நெருடலாக இருந்தாலும், தன் மனைவியைக் காட்டிக் கொடுக்காத நீதிமானாக நிற்கின்றார் யோசேப்பு. நெருடல், பயம், கலக்கம், வருத்தம் என்று குழம்பியிருந்த யோசேப்புக்கு மகிழ்வின் செய்தி தரப்படுகிறது. தன் வழிமரபில் பிறக்கும் இயேசுதான் இந்த உலகை மீட்க வந்த மெசியா என்பது அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது.

 

2. தேடி வந்த இடையர்கள்

 

வானதூதர்கள் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். (லூக்கா 2:16)

 

யோசேப்பு சிறுவயது முதல் எருசலேம் ஆலயத்தில் வளர்ந்தவர் என்பதும், அவர் வைத்திருந்த கைத்தடி ஒன்றுதான் லீலி மலர்களால் பூத்துக் குலுங்கியது என்பதும் மரபுவழிச் செய்தி. தான், தன் உலகம், தன் வாழ்க்கை என்று ஓய்ந்திருந்த யோசேப்பைத் தேடி இடையர்கள் வருகின்றனர். இயேசு பிறப்பின் செய்தி மாட, மாளிகைகளில் சொல்லப்படவில்லையா, இவர் அரசன் இல்லையா? ஏன் இந்த இடையர்களுக்கு, ஏன் இந்த ஏழையருக்கு இறைவனின் மீட்புச் செய்தி முதலில் அறிவிக்கப்படவேண்டும் என்ற குழப்பம் எதுவும் இல்லாமல், இறைவனின் எளிய பிறப்பையும், அவரைத் தேடி வந்த எளியவரையும் ஏற்றுக்கொள்கின்றார் யோசேப்பு. இன்று நாம் பெரிய நபர், பெரிய வீடு, பெரிய ஊர், பெரிய பொருள் என்று பெரியவற்றைத் தேடிச் செல்லவே விழைகின்றோம். ஆனால், நம்மிடமிருக்கும் பெரியதொன்றை விட மற்றொன்று பெரியதொன்றாகிவிட்டால் நம் மகிழ்ச்சி கலைந்து விடுகிறது. நம் இறைவன் சின்னஞ்சிறியவைகளின் இறைவன். சின்னஞ்சிறியவர்களையும், சின்னஞ்சிறியவைகளையும் நாம் தேடும்போது நம்மை மகிழ்ச்சி அரவணைத்துக் கொள்கிறது.

 

3. 'இயேசு' என்னும் பெயர்

 

குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அவருக்கு இயேசு என்று பெயரிட்டார்கள். (லூக்கா 2:21)

 

இயேசுவின் பெயர் எபிரேய அல்லது அரமேய மொழியில் 'யோசுவா'. 'யோசுவா' என்றால் 'மீட்பர்' என்பது பொருள். இந்தப் பெயர் ஒவ்வொரு யூதரின் சிந்தனையிலும் பழைய ஏற்பாட்டு யோசுவாவைத்தான் படம்பிடித்துக் காட்டியிருக்கும். மோசேயின் தலைமையில் இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த இறைவன், யோசுவாவின் தலைமையில் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் அவர்களை நடத்திச் செல்கின்றார். பழைய ஏற்பாட்டு யோசுவா புதிய நாட்டிற்குள் மக்களை அழைத்துச் சென்றது போல, புதிய ஏற்பாட்டு யோசுவாவும் மக்களை நிறைவாழ்விற்கு அழைத்துச் செல்வார் என்று எண்ணி மகிழ்கின்றார் யோசேப்பு. இன்று நமக்கும் பெயர்கள் இருக்கின்றன. ஒருபக்கம், நாம் பிறந்தபோது அல்லது திருமுழுக்கு பெற்றபோது நம் பெற்றோர் இட்ட பெயர்கள். மற்றொரு பக்கம், நம் நண்பர்கள் நம்மை அடையாளப்படுத்தி அழைக்கும் பெயர்கள். இன்னும் நாம் செய்யும் பணிகளை வைத்து நமக்குத் தரப்படும் பெயர்கள். இந்தப் பெயர்கள் நமக்கு வெறும் அடையாளங்கள் மட்டுமல்ல. அவை நமக்கு நாம் சார்ந்திருக்கவேண்டிய அறநெறியையும் கற்பிக்கின்றன என்பதை உணர்ந்து நம் பெயருக்கேற்ற வாழ்வை வாழ நம்மை அழைக்கிறது யோசேப்பின் மூன்றாம் மகிழ்ச்சி.

 

4. என் கண்கள் கண்டுகொண்டன

 

ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி. இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை. (லூக்கா 2:30-32)

 

இயேசுவைத் தன் குழந்தைககளில் ஏந்தும் சிமியோன் தான் எதிர்பார்த்த மீட்பு வந்துவிட்டதாக உளம் மகிழ்கின்றார். சிமியோனின் வார்த்தைகளில் ஒட்டுமொத்த மனுக்குலத்தின் மகிழ்வையும் கண்டுகொள்கின்றார் யோசேப்பு. மீட்பு என்றால் என்ன? கடவுளுக்கும், மனிதருக்கும், யூதருக்கும், புறவினத்தாருக்கும், பகலுக்கும், இருளுக்கும் என இருக்கின்ற அனைத்து வேறுபாடுகளும் களையப்படுவதே மீட்பு. கடவுள் மனுவுரு ஏற்ற நிகழ்வின் வழியாக கடவுள் தன்மை மனுக்குலத்தைப் பற்றிக்கொண்டது. இயேசுவில் நமக்கு மீட்பு வந்து விட்டது என மகிழும் யோசேப்பு நம் மீட்புக்கேற்ற செயல்களை நாம் செய்ய நம்மை அழைக்கின்றார்.

 

5. தீமையின் அழிவு

 

ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 'நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்' என்றார். (மத்தேயு 2:19-20)

 

கடவுளின் வல்லமையை மற்றவர்கள் சொல்லக் கேட்டிருக்கும் வளன், கடவுளின் வலுவின்மையை முதன்முதலாக அனுபவிக்கின்றார். ஒரு குழந்தையின் வடிவில் தன் கைகளில் தழுவும் கடவுள் தன்மை, எதிர்த்து நிற்கும் ஒரு மனித அரசனைக் கூட எதிர்க்க முடியாமல் வலுவிழந்து கிடக்கிறது. இது வளனுக்கு ஒரு பெரிய மறைபொருள். அந்த இடத்தில் நாம் இருந்தால் என்ன செய்திருப்போம்? 'என்ன கடவுளப்பா நீ?' என்று கேள்வி கேட்டிருப்போம். இன்று நாம் எல்லாமே உடனடியாகப் பெற விரும்புகின்றோம். உடனடி ரசம், உடனடி சாம்பார், உடனடி சாம்பிராணி, உடனடி நூடுல்ஸ் என வளர்ந்து, உடனடி ஃபோன், உடனடி மெசஜ், உடனடி காதல், உடனடி திருமணம், உடனடி அர்ப்பணம் என எல்லாவற்றையும் உடனடியாகவே விரும்புகின்றோம். ஆனால், வாழ்வின் மகிழ்ச்சி பெரும்பாலான நேரங்களில் இந்த உடனடிகளில் இருப்பதில்லை. பொறுமையும், சகிப்புத்தன்மையுமே மகிழ்ச்சி எனக் கற்பிக்கிறார் வளன்.

 

 

6. நல்லதொரு குடும்பம்

 

யோசேப்பு நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ''நசரேயன்' என அழைக்கப்படுவார்' என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது. (மத்தேயு 2:23)

 

மரியாளுக்குத் துணைவர், இயேசுவுக்குத் தந்தை என்று இரண்டு பொறுப்புகள் இப்போது வளனுக்கு. நம் குடும்பங்களுக்கு மாதிரியாக இருக்கிறது வளன் தலைமையேற்ற நாசரேத்தூர் திருக்குடும்பம். 'நான், எனது, எனக்கு' என மனித மனங்கள் குறுகி வருகின்ற இந்த நாட்களில் வளன் நமக்கு ஒரு நல்ல பாடம். குடும்பமும், கூட்டு வாழ்வும் எப்போதும் மலர்ப்படுக்கையாகவே இருப்பதில்லை. அடுத்தவரின் பிரசன்னம் சில நேரங்களில் முட்களாகக் குத்தவே செய்யும். ஆனால், அடுத்தவரின் உடனிருப்பே நமக்கு உற்சாகமும், உத்வேகமும் தருகின்றது. நாம் தனிப்பட்ட மரங்களாக நிற்கப் படைக்கப்பட்டவர்கள் அல்லர். ஒருவர் மற்றவரின் செயலுக்கு எதிர்வினையாக மட்டுமே நம் செயல்கள் இருப்பதற்குப் பதிலாக, அடுத்தவரின் நலம் பேணும் செயலாக அமைந்தால் வளன் சுவைத்த மகிழ்வை நாமும் சுவைக்கலாம்.

 

7. காணாமற்போயிருந்தார்! கிடைத்துவிட்டார்!

 

மூன்று நாட்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார். (லூக்கா 2:46)

 

இயேசு தன்னுடன் இல்லாத மூன்று நாட்கள் வளன் எப்படி இருந்திருப்பார்? தன் கையில் கிடைத்த புதையல் தவறிவிட்டதாகவும், தன் முத்து தொலைந்து விட்டதாகவும் நினைத்து அங்கலாய்த்திருப்பார். இந்தத் தவிப்பில் இயேசுவைக் கண்டதும், மறைநூல் அறிஞர்கள் நடுவில் வெளிப்பட்ட அவரின் ஞானத்தைக் கண்டதும், 'தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்' (குறள் 67) என்று மனமெல்லாம் மத்தாய்ப்பு வெடித்திருக்கும். இறைவனின் பிரசன்னம் நம்மிடம் இல்லாதபோது நாம் எப்படி உணர்கிறோம்? அந்த இடத்தில் மற்றவர்களையோ, மற்றவைகளையோ வைத்து நிறைவு காண விழைகின்றோமோ? எனக் கேட்கிறது வளனின் ஏழாம் மகிழ்ச்சி.

 

வளனின் மகிழ்ச்சி நம் மகிழ்ச்சியாகட்டும்!

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org