Get Adobe Flash player

விவிலியத்தேடல்
நன்றி : வத்திக்கான் வானொலி

நாம் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் எதுவும் தென்படாத நிலை. ஏறத்தாழ இரவு முழுவதும் சீடர்கள் தங்கள் படகை ஒட்டிச் சென்றாலும், அவர்களால் வெகு தூரம் செல்ல இயலவில்லை. அவர்கள் கடலில் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தூரமே பயணித்தனர் (யோவான் 6:19) என்று கூறப்பட்டுள்ளது.


வாழ்க்கைப் பிரச்சனைகளில் முன்னேற்றம் எதுவும் தெரியாதபோது, நம் அச்சம் கூடுதலாகும், விரக்தியும் கூடும். பல வேளைகளில், போராட்டங்கள் தொடரும்போது, நாம் எழுப்பும் வேண்டுதல்களுக்கு பதில் ஏதும் கிடைக்காததுபோல் நாம் உணர்ந்திருக்கிறோம், அல்லவா? நம் வேண்டுதல்களுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள பின்வரும் கதை உதவும்.

உறங்கிக் கொண்டிருந்த அந்த இளைஞனின் அறை ஒளி வெள்ளத்தில் நிறைந்தது. கண் விழித்த அவன் முன் கடவுள் நின்றார். "மகனே, உனக்கு ஒரு தனிப்பட்ட பணியைத் தருகிறேன். உன் வீட்டுக்கு முன் உள்ள பாறையை முழு வல்லமையோடு நீ தள்ள வேண்டும்" என்று சொன்னபின், கடவுள் மறைந்துபோனார்.

அடுத்தநாள் காலை, அந்த இளைஞன் தன் வீட்டுக்கு முன் இருந்தப் பாறையை, தன் முழு வல்லமையோடு தள்ளினான். அது கொஞ்சமும் அசையவில்லை. பல மணி நேர போராட்டத்திற்குப் பின், அடுத்த நாள் தொடரலாம் என்று விட்டுவிட்டான்.

அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று ஒருமாதமாக இந்த முயற்சியைத் தொடர்ந்தான் அந்த இளைஞன். பாறை இருந்த இடத்தை விட்டு நகர மறுத்தது.

"கடவுளே, ஒரு பயனுமற்ற இந்தப் பணியை ஏன் எனக்குக் கொடுத்தீர்?" என்று இளைஞன் முறையிட்டான். "மகனே, உன் கரங்கள், உன் தோள், உன் கால்கள்... உன் உடல் முழுவதையும் ஒரு முறை பார். உன் கேள்விக்கு பதில் கிடைக்கும்" என்றார் கடவுள்.

இளைஞன் தன்னையே ஒரு முறை பார்த்தான். அவன் உடல் முழுவதும், ஒவ்வொரு அங்கமும் வலுவடைந்து, முறுக்கேறி, ஏறக்குறைய அந்த பாறையைப் போல் உறுதியாக இருந்தது.

"பாறையைத் தள்ளுவது மட்டுமே உனக்குக் கொடுக்கப்பட்ட பணி. அதை அசைக்கவோ, இடம் பெயர்க்கவோ நான் சொல்லவில்லை. பாறையை இடம் பெயர்ப்பதை விட, அந்தப் பாறையைப் போல் நீ உறுதி பெறவேண்டும் என்பதற்காகவே நான் உனக்கு இந்தப் பணியைக் கொடுத்தேன்." என்றார் கடவுள்.

தள்ளுதல் என்று பொருள்படும் PUSH என்ற ஆங்கில வார்த்தையில் நான்கு எழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் ஒரு வார்த்தையின் முதல் எழுத்தாக எண்ணிப் பார்க்கும்போது, PUSH என்ற வார்த்தையை Pray Until Something Happens என்ற 4 சொற்களாக விரிவாக்கலாம். அதாவது, ஏதாவதொன்று நடக்கும் வரை செபம் செய்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org