Get Adobe Flash player

ஆண்டவரின் பேரன்பு

15.07.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
அருளிபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, திருச்சி

ஒரு நிகழ்வைக் கற்பனை செய்வோம். தீபாவளி நேரம். பேருந்துகள் மற்றும் இரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. மதுரையில் இருக்கும் எனக்கு அன்று காலையில் செய்தி வருகிறது. சென்னையில் இருக்கும் என் நண்பர் ஒருவர் ரொம்பவும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். நான் அவரைக் காண விழைந்து புறப்படுகிறேன். பேருந்துகளில் நெரிசல் அதிகம் இருப்பதால் வைகை எக்ஸ்பிரஸ் எடுத்து செல்லலாம் என நினைத்து இரயில் சந்திப்பு வருகிறேன். கரன்ட் டிக்கெட் எடுக்கும் இடத்திலும் நீண்ட கூட்டம். கூட்டத்தில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து டிக்கெட்டும் வாங்கிவிடுகிறேன்.


பிளாட்ஃபார்முக்கு வேகமாக செல்கிறேன். எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் என அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. கூட்டம் அதிகமாக இருப்பதால் எல்லாரையும், எல்லா டிக்கெட்டுகளையும் பரிசோதிக்கிறார்கள். அப்படி பரிசோதிப்பவரிடம் என் டிக்கெட்டையும், அடையாள அட்டையையும் காட்டியவுடன், அவர் ஒரு நொடி யோசித்துவிட்டு, 'சார், நீங்க தான் அவரா! வாங்க சார். உங்களுக்காக ஒருத்தர் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏசி புக் பண்ணியிருக்கார். லக்கேஜ் இவ்ளோதானா!' என்று தொடர்ந்தவர், 'தம்பி, வா, சாரோட லக்கேஜ் எடுத்துட்டுப் போ!' என்று போர்ட்டருக்குக் கட்டளையிடுகிறார். நான் ஒன்றும் புரியாமல் நிற்கிறேன். 'சார்! ரொம்ப ஆச்சர்யப்படாதீங்க! உங்க டிக்கெட், போர்ட்டர் கூலி, நீங்க சென்னையில் பயணம் செய்வதற்குக் கார் என அனைத்தையும் அவர் உங்களுக்காக புக்கிங் செய்துவிட்டார். பணமும் கொடுத்துவிட்டார்! நீங்க போய் உங்க சீட்ல உட்காருங்க!' என்கிறார்.

 

நான் என் இருக்கை நோக்கிச் செல்லும்போது என்னில் எழும் அந்த உணர்வைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 1:3-14) தருகின்றார் தூய பவுல். அதாவது, 'நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாக தேர்ந்தெடுத்தார் ... ... தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்துவைத்தார்' என்கிறார் பவுல். நம் நிலை என்ன என்றே தெரியாதபோது, நம் நிலை இப்படித்தான் இருக்கும் என்று கடவுள் நம்மை மேன்மைப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார் பவுல். இரயில் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே இரயிலில் பயணம் முன்பதிவு செய்துள்ளார் இறைவன். இது இறைவனின் பேரன்பையே காட்டுகிறது.

 

'ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்' என்று இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 85) திருப்பாடல் ஆசிரியர் வேண்டுகிறார். அதாவது, என்னை அன்பு செய்யும் ஒருவர் என் தேவை அறிந்து எனக்கு இரயிலில் முன்பதிவு செய்கிறார். இந்த செயல் அவரது அன்பின் வெளிப்பாடு என்றால், நான் இந்த உலகில் படைக்கப்பட்டதும், கடவுளால் வழிநடத்தப்படுவதும், அவரது மகனால் மீட்கப்படுவதும் கடவுளின் பேரன்பின் வெளிப்பாடு அன்றோ!

 

கடவுளின் பேரன்பு இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸின் வாழ்விலும், இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருத்தூதர்களின் வாழ்விலும் செயல்படுவதைப் பார்க்கிறோம். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் சாதாரண ஒரு நிலையிலிருந்து மனிதர்கள் அசாதாரண நிலைக்கு உயர்த்தப்பெறுகின்றனர்.

 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். ஆமோ 7:12-15) இறைவாக்கினர் ஆமோஸ் பெத்தேலின் குருவாக இருந்த அமட்சியாவின் எதிர்ப்பை சம்பாதிக்கின்றார். இறைவாக்கினர் பணி என்பது காசுக்கான அல்லது பதவிக்கான பணி என எண்ணிய அமட்சியாவுக்குப் பதிலடி கொடுக்கின்ற ஆமோஸ், 'நான் இறைவாக்கினனும் அல்ல. இறைவாக்கினனின் மகனும் அல்ல. ஓர் ஆடு மேய்ப்பவன். தோட்டக்காரன்' என்கிறார். அதாவது, தன் இறைவாக்குப் பணியால் தான் தன் ஆடுகளையும், தன் தோட்டத்தையுடம் இழந்தவன் என்றும், இறைவனின் அழைப்பினால்தான் தான் இறைவாக்குப் பணியை செய்வதாகவும் சொல்கின்றார். ஆக, என் அழைப்பும், என் அனுப்பப்படுதலும் என் சொந்த விருப்பு வெறுப்பினாலோ, என் மனத்தின் உள்ளாசைகளாலோ தோன்றியது அல்ல. மாறாக, என்னை அழைத்தவர் என்னைத் தேர்ந்தெடுத்து, ''என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று இறைவாக்கு உரை' என அனுப்பினார்' எனச் சொல்கின்றார். சாதாரண ஆடு, மாடு மேய்க்கும், தோட்டக்கார வேலையிலிருந்து இறைவாக்கினர் நிலைக்கு ஆமோஸை உயர்த்துகிறது ஆண்டவரின் பேரன்பு.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 6:7-13) இயேசு பன்னிருவரை தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்புகின்றார். இயேசுவின் சமகாலத்து ரபிக்கள் தங்களுக்கென சீடர்களை வைத்திருந்தாலும் அவர்களைத் தனியாக பணிக்கு அனுப்புவதில்லை. தங்கள் பெயரே எல்லா இடத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் தாங்களே பணிக்குச் செல்வர். அப்படி தங்கள் சீடர்களை அழைத்துச் சென்றாலும், அவர்களை வெறும் ஏவல் வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார். ஆனால், இயேசு பன்னிருவரை தனியாக அனுப்புவதன் வழியாக அவர்களை தன் உடன்பணியாளர்கள் ஆக்குகிறார். மேலும், ரபிக்கள் தாங்கள் பணிக்குச் செல்லும்போது, தங்களுக்குத் தேவையான உணவு, துணி, பணம் அனைத்தையும் தங்களுடன் எடுத்துச் செல்வர். ஒரே வீட்டில் தங்க மாட்டார்கள். போய்க்கொண்டே இருப்பார்கள். இதற்கெல்லாம் ஒரு மாற்றுக் கலாச்சாரத்தைத் தன் சீடர்களுக்கு இயேசு கற்றுக்கொடுக்கின்றார். 

 

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் செயல்களை மூன்று வினைச்சொற்களில் பதிவு செய்கின்றார் மாற்கு:

 

அ. அனுப்பத் தொடங்கினார்

ஆ. அதிகாரம் அளித்தார்

இ. கட்டளையிட்டார்

 

அ. 'அனுப்புதல்'. நாணயத்தின் ஒரு பக்கம் 'அழைத்தல்' என்றால், அதன் மறுபக்கம் 'அனுப்புதல்.' இறையழைத்தலின் மறுபக்கம் இறைப்பணி. எனக்கு இறையழைத்தல் இருக்கிறது என்றால், அது வெறுமனே நான் அமர்ந்து அதில் இன்புறுவதற்காக அல்ல. மாறாக, அனுப்பப்படுதலில்தான் அழைத்தல் நிறைவுபெறுகிறது. 'தம்மோடு இருக்க பன்னிருவரை தேர்ந்தெடுத்த இயேசு' (காண். மாற் 3:14) இப்போது அவர்களை இருவர் இருவராக அனுப்புகின்றார். ஆக, இதுவரை பயிற்சி பெற்றவர்கள் இப்போது பணிக்குச் செல்கிறார்கள். கல்லூரிக்கல்வி முடிந்து வேலை அல்லது வாழ்க்கைப்பணி தொடங்குகிறது இவர்களுக்கு.

 

ஆ. 'அதிகாரம் அளித்தார்'. 'தீய ஆவிகளின்மேல் அதிகாரம் அளிக்கின்றார்' இயேசு. இது இயேசு தீய ஆவிகளின்மேல் கொண்டிருந்த அதிகாரத்தையும் குறிக்கிறது. அதிகாரம் வைத்திருப்பவர் தானே அதை மற்றவர்களுக்கு அளிக்க முடியும். ஆக, அதிகாரம் என்பதன் பொருளை மாற்றுகிறார் இயேசு. அனுப்பப்படுபவர் கொண்டிருக்க வேண்டிய அதிகாரம் மக்கள்மேலோ, பணத்தின் மேலோ, இடத்தின் மேலோ அல்ல. மாறாக, தீய ஆவிகளின்மேல். ஆக, என் அதிகாரத்தைக் கண்டு தீய ஆவிகள் பயப்படலாமே தவிர, நான் பணிசெய்ய செல்லுமிடத்தில் உள்ளவர்கள் பயப்படக்கூடாது.

 

இ. 'கட்டளையிட்டார்'. என்ன கட்டளை? 'உணவு,' 'பை,' 'செப்புக்காசு' எடுத்துச் செல்ல வேண்டாம் என்னும் கட்டளை. 'உணவு' என்பது இவர்களின் 'உடல் தேவைகளையும்,' 'பை' என்பது இவர்களின் 'அன்புத் தேவைகளையும்,' 'செப்புக்காசு' என்பது இவர்களின் 'பாதுகாப்புத் தேவைகளையும்' குறிக்கிறது. அதாவது, சாதாரணமாக நாம் தேடும் உடல், அன்பு, மற்றும் பாதுகாப்புத் தேவைகள் நம்மை ஒரு இடம் அல்லது நபரோடு கட்டிவைத்துவிடுகின்றன. நாம் எதற்காக நம் வீட்டில் இருக்கிறோம்? உணவுக்காக, உறவுக்காக, பாதுகாப்புக்காக. ஆக, வீடு உணவையும், உறவையும், பாதுகாப்பையும் தந்தாலும், அது அதே நேரத்தில் என்னைக் கட்டியும் வைத்துவிடுகிறது. என் வீட்டைவிட்டு என்னால் வெளியே செல்ல என்னால் முடிவதில்லை. ஆனால், இயேசுவின் கட்டளை திருத்தூதர்களைக் கட்டின்மைக்கு அழைத்துச் செல்கிறது. ரோட்டில் ஒரு நாயை அழைத்துச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். நாய்க்குட்டியின் கழுத்தில் பெல்ட் போட்டு, சங்கிலியின் மறுபக்கத்தை நாம் பிடித்திருந்தாலும், நாம் நாய்க்குட்டியைப் பிடித்திருப்பதுபோல, நாய்க்குட்டியும் நம்மைப் பிடித்துக்கொள்கிறது. நம்மை விட்டு அது எப்படி ஓட முடியாதோ, அதுபோலவே அதைவிட்டும் நான் ஓட முடியாது. 

 

இந்த மூன்று சொல்லாடல்கள் - 'அனுப்புதல்,' 'அதிகாரம் அளித்தல்,' 'கட்டளையிடுதல்' - இயேசு தன் திருத்தூதர்களை சாதாரண நிலையிலிருந்து அசாதாரண நிலைக்கு உயர்த்துகிறார். இது இயேசுவின் பேரன்பிற்குச் சான்றாகத் திகழ்கிறது. இப்படி உயர்த்தப்பட்டவர்கள் தங்கள் வேலைகளைச் சரியாகச் செய்துமுடிக்கின்றனர் எனவும் மாற்கு பதிவு செய்கின்றார்.

 

இவ்வாறாக, ஆண்டவரின் பேரன்பு,

முதல் வாசகத்தில், ஆமோஸை 'ஆடுமேய்ப்பவர்' நிலையிலிருந்து 'இறைவாக்கினர்' நிலைக்கும்,

இரண்டாம் வாசத்தில், நம்பிக்கையாளரை 'ஒன்றுமில்லாதவர்' நிலையிலிருந்து 'கடவுளின் மகன்-மகள்' நிலைக்கும்,

மூன்றாம் வாசகத்தில், திருத்தூதர்களை 'உடல்-உறவு-பாதுகாப்பு தேவை கட்டுகள்' நிலையிலிருந்து 'கட்டின்மை' நிலைக்கும் அழைத்துச் செல்கிறது.

 

இந்த அழைப்பு அல்லது உயர்த்துதல் மற்றொன்றையும் நமக்குச் சொல்கிறது. முழுக்க, முழுக்க இது இறைவனின் அருள்செயலே அன்றி, இதில் மனித முயற்சிக்கும், மனித அறிவுக்கும், மனித ஆற்றலுக்கும் பங்கில்லை. இது ஒருபோதும் உயர்த்தப்படுபவரின் தெரிவு அன்று. மாறாக, உயர்த்தப்படுபவர்மேல் கடவுளே வலிந்து திணிக்கும் ஒரு நிலை.

 

கடவுளின் பேரன்பிற்கு நாம் தகுதியாக்கிக்கொள்ளத் தேவையில்லை. மாறாக, அவரே அதைக் கொடையாகக் கொடுக்கின்றார். 

 

அதே வேளையில் கடவுள் காட்டும் பேரன்பை நாம் நம் வாழ்வில் அனுபவிக்க அதற்கேற்ற சூழலை உருவாக்கவேண்டும். இச்சூழலை உருவாக்குவது எப்படி?

 

1. வேர்களும், விழுதுகளும்

 

ஆமோஸின் இறைவாக்குப் பணி என்னும் விழுது அமட்சியா என்ற பெத்தேல் அருள்தலக் குருவால் கேள்விக்குட்படுத்தப்படும்போது, ஆமோஸ் ஆடுமேய்க்கும் பணியாகிய தன் வேரை மனத்தில் கொள்கின்றார். விழுது பரப்புவதற்கு, இறைவாக்கு பணி செய்வதற்கு ஆண்டவர்தாம் அனுப்பினார் என்றாலும், இந்த அனுப்புதல் ஆமோசுக்குத் தெரியுமே தவிர, அமட்சியாவுக்குத் தெரியாது. இவ்வாறாக, நாம் அனுப்பப்படும் நிலையை மற்றவர்கள் தங்கள் அறியாமையால் உதறித் தள்ளும்போது நாம் நம் வேர்களைப் பற்றிக்கொள்ள வேண்டும். நம் வேர்களை நாம் நினைத்துப் பார்க்கும் போது நம் இயலாமை நமக்குப் புரியத் தொடங்குகிறது. அதே நேரத்தில் நம் வேர்கள் நம்மைப் பின் நோக்கி இழுக்காவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆமோஸ் அதைச் சரியாகச் செய்கிறார். 'நீ இறைவாக்குரைக்க வேண்டாம்' என்று அமட்சியா சொன்னவுடன், அவர் உடனடியாகத் தன் ஆடுமேய்க்கும் பணிக்குத் திரும்பிவிடவில்லை. கடவுளின் பேரன்பு தன்னை ஆட்கொண்டு தன்னை உயர்த்தியது. தான் கடந்து வந்த நிலை கண்முன் நின்றாலும், கடந்து வந்த பழைய நிலைக்கே திரும்பத் தேவையில்லை. தொடர்ந்து அவர் இறைவாக்குப்பணியைச் செய்கின்றார். ஆக, கடவுளின் பேரன்பை உணர்ந்த ஒருவர் தன் வேர்களை மறக்கவும், அதே வேளையில் தன் கடந்த காலம் நோக்கி பின்செல்லவும் கூடாது.

 

2. புள்ளிகளை இணைத்தல்

 

நாம் ஒரு புள்ளியில் பிறந்து மறு புள்ளியில் இறக்கின்றோம். ஒரு நாளில் பிறந்து இன்னொரு நாளில் இறக்கின்றோம். நாம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு வாழ்கின்றோம். பிறக்கும்போது ஒரு ஊர், வளரும்போது இன்னொரு ஊர், பணி செய்ய இன்னொரு ஊர், இறக்கும்போது இன்னொரு ஊர் என நம் வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இடமும், ஒவ்வொரு மனிதரிடமும் நாம் நகரும்போது நாம் ஒவ்வொரு புள்ளியை விட்டுக்கொண்டே செல்கின்றோம். கொஞ்ச நேரம் உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் அந்தப் புள்ளிகள் மிக அழகாக இணைவதை நம்மால் பார்க்க முடியும். நமக்கு நடந்தது எதுவும் விபத்தில்லை. எல்லாமே ஏதோ ஒரு திட்டத்தில்தான் நடந்திருக்கிறது என்றும் தோன்றும். இதுதான் நம் வாழ்க்கை நிலை. இந்த நிலையை அப்படியே இன்னும் கொஞ்சம் உயர்த்துகிறார் தூய பவுல். நம் பிறப்பை உலகின் தொடக்கம் என்ற புள்ளியோடு இணைக்கின்றார். ஆக, உலகின் தொடக்கத்திலேயே நம் வாழ்க்கைப் புள்ளியும் தொடங்கி தொடர்கிறது. படைப்பு என்ற தாயோடு உள்ள தொப்புள்கொடி நம்மில் நீண்டுகொண்டே இருக்கிறது. அந்த தொப்புள்கொடிதான் நம் வாழ்வின் இலக்கோடு நம்மை இணைக்கின்றது. நம் வாழ்வில் இறைவன் வைத்திருக்கும் நோக்கம் என்னவென்றால், 'நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் அவர் திருமுன் விளங்குவது, அவரின் பிள்ளைகளாக இருப்பது'. அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு கடிகாரம் அதை வடிவமைத்தவரின் திறமையைக் காட்டுகிறது. அதுபோல, நாம் வாழ்கின்ற நல்ல வாழ்க்கை நம்மை உருவாக்கிய இறைவனுக்குப் புகழ்சேர்க்கிறது. ஆக, இத்தகைய புகழுக்குரிய வாழ்வை வாழ்வது நம் கடமையாக இருக்கிறது. இவ்வாறாக, கடவுளின் பேரன்பு நமக்குக் கொடையாக வந்தாலும், அதற்கேற்ற வாழ்வை வாழ்வது நம் கடமையாகவும், நம்மேல் சுமத்தப்பட்ட பொறுப்பாகவும் இருக்கிறது. கொடை என்ற புள்ளியை, நம் பொறுப்புணர்வு என்ற புள்ளியோடு இணைக்கும்போது நாம் இறைவனோடு இன்னும் நெருக்கமாகின்றோம்.

 

3. தங்குங்கள், உதறுங்கள்

 

'அழைக்கப்பட்ட' திருத்தூதர்கள் இயேசுவால் 'அனுப்பப்படுகின்றனர்,' 'அதிகாரம் கொடுக்கப்படுகின்றனர்,' மற்றும் 'உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றனர்'. இவ்வாறாக, அவர்களின் இந்த முன்னேற்றம் அவர்கள் விருப்பத்தால் நிகழ்வது அல்ல. மாறாக, அது அவர்கள் மேல் திணிக்கப்படுகிறது. அவர்களின் விருப்பு வெறுப்பு இங்கே கருத்தில் கொள்ளப்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் இயேசுவின் அழைப்புக்கு 'ஆம்' சொன்ன அந்த நிமிடமே தங்கள் விருப்பங்களை இயேசுவிடம் ஒப்படைத்துவிடுகின்றனர். இயேசுவின் அன்பு தங்களை ஆட்கொள்ள விட்டுவிடுகின்றனர். இப்படி ஆட்கொள்ளப்பட்டவர்களுக்கு இயேசு இரண்டு வார்த்தைகளில் அறிவுறுத்துகின்றார்: 'ஏற்றுக்கொண்டால் தங்குங்கள்,' 'ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் உதறுங்கள்.' இந்த இரண்டையும் மாற்றிப் போட்டால் எப்படி இருக்கும்? நம்மை ஏற்றுக்கொள்கிறவரை நாம் உதறவும், நம்மை ஏற்றுக்கொள்ளாதவரிடம் நாம் தங்கவும் செய்தால் வாழ்க்கை ரொம்பவும் கலவரமாகிவிடும். மற்றவரோடு தங்குவதற்கு நிறைய பொறுமையும், தாராள உள்ளமும் தேவை. மற்றவரிடமிருந்து விலகிச் செல்வதற்கு நிறைய துணிச்சலும், மனத்திடமும் தேவை. இந்த இரண்டு செயல்களின் ஊற்றாக அல்லது அளவுகோலாக ஒருவர் வைத்துக்கொள்ள வேண்டியது இறைவனின் பேரன்பு.

 

இறுதியாக,

 

நம் வாழ்வை ஒரு நொடியில் புரட்டிப்போடும், பறக்க வைக்கும் இறைவனின் பேரன்பிற்கு நன்றிகூறும் இந்நாளில், அவர் விடுக்கும் அழைப்பு ஒவ்வொருவரையும் நோக்கி வருகிறது. அந்தப் பேரன்பே நம்மை ஆட்கொண்டுள்ளதால் அவர் அனுப்பும்போது அவரின் பேரன்பு நம் வழியாக யாவரையும் ஆட்கொண்டால், நாம் எல்லாரும் தூயோராய், மாசற்றோராய், அவரின் பிள்ளைகளாய் அவர்முன் இருப்போம்.

 

அவர் அன்பு நம்மை ஆட்கொண்டால் அன்றாடம் வளர்ச்சியே, வெற்றியே, மகிழ்ச்சியே!

 

'ஆண்டவரே, உமது பேரன்பை உங்களுக்குக் காட்டியருளும்!'


 

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org