Get Adobe Flash player

வாழ்வு தரும் உணவு இயேசு!

அருட்பணி மரிய அந்தோணி ராஜ்

நன்றி :அருள்வாக்கு இணையதளம்

ஆகஸ்டு 12 பொதுக்காலம் பத்தொன்பதாம் ஞாயிறு -

எல்லா நாடுகளின்மீதும் போர்தொடுத்து அவற்றை தன்னுடைய அதிகாரத்திற்குள் வைக்கத் துடித்தவர் மாவீரர் அலெக்ஸ்சாண்டர். அவருடைய காலத்தில் வாழ்ந்த தத்துவ மேதைதான் டயோஜீனஸ் என்பவர். மாவீரர் அலெக்ஸ்சாண்டருக்கு டயோஜீனஸ் மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. 


ஒரு சமயம் மாவீரர் அலெக்ஸ்சாண்டர் டயோஜீனசின்  ஏழ்மை நிலையைக் கண்டு, அவருக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தார். எனவே அவர் தன்னுடைய படைவீரர்களை அனுப்பி டயோஜீனசை தனது அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு வருமாறு கேட்டுகொண்டார். மாமன்னர் அனுப்பிய படைவீரர்களைப் பார்த்த டயோஜீனஸ், “மன்னரை எல்லாம் என்னால் பார்க்க முடியாது, வேண்டுமானால் மன்னர் வந்து என்னைப் பார்க்கட்டும்” என்று சொல்லி அனுப்பிவிட்டார். படைவீரர்கள் வந்து, நிகழ்ந்தவற்றை எல்லாம் மன்னரிடம் சொல்ல, அவர் தொடக் கத்தில் சினமுற்றாலும் மிகப்பெரிய ஞானியை நாம்தான் பார்க்கவேண்டும் என முடிவுசெய்துகொண்டு டயோஜீனசைப் பார்க்கப் புறப்பட்டார். 

அலெக்ஸ்சாண்டர் டயோஜீனசைப் பார்க்கச் சென்றிருந்த நேரம், அவர் மரத்தடியில் உட்கார்ந்து ஏதோ யோசித்துக்கொண்டிருந்தார். அவர்  அருகே சென்ற அலெக்ஸ்சாண்டர், “ஐயா உங்களுடைய இந்த ஏழ்மை நிலையைக் கண்டு எனது மனம் பதைபதைத்துப் போனது. அதனால் உங்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று இங்கு ஓடி வந்தேன், உங்களுக்கு என்ன வேண்டுமானாலும்  கேளுங்கள். நான் அதைத் தருகின்றேன்” என்றார். சிறுது நேரம் அமைதியாக இருந்த டயோஜீனஸ், “எது வேண்டுமானாலும் உன்னால் தரமுடியுமா?, எங்கே எனக்கு சாகாவரம் – நிலைவாழ்வு – தா” என்றார். “சாகாவரமா, அதை எப்படி என்னால் தரமுடியும்?” என்று கேட்டார். மாமன்னர். அதற்கு டயோஜீனஸ் மிகவும் பொறுமையாகப் பதில் சொன்னார், “எல்லா நாடுகளையும் தன்னுடைய அதிகாரத்திற்குள் வைத்திருக்கும் ஓர் அரசனால் சாகாவரம் தரமுடியவில்லையா?, அப்படி யானால், எல்லா நாடுகளின்மீதும் போர்தொடுத்து, அவற்றை உன்னுடைய அதிகாரத்திற்குள் வைத்திருந்து என்ன பயன்?” என்று கேட்டார். அலெக்ஸ்சாண்டரால் ஒன்றும் பேச முடியவில்லை. 

எல்லா நாடுகளையும் தன்னுடைய அதிகாரத்திற்குள் கொண்டிருந்த மாவீரர் அலெக்ஸ்சாண்டரால் கூட சாகா வரத்தைத் தர முடியவில்லை. ஆனால், ஆண்டவர் இயேசுவால் சாகவரத்தை – நிலைவாழ்வைத் – தரமுடியும். இயேசு தரும் வாழ்வு எத்தகையது, அதனைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்யவேண்டும் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம். 

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே” என்கிறார். இயேசுவின் வார்த்தைகளை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?. இயேசுவை உண்பதால் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியுமா? என்பது நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. 

முதல் வாசகத்தில் எலியா இறைவாக்கினர் ஒரே ஒரு அப்பத்தை மட்டும் சாப்பிட்டு, நாற்பது நாட்கள் நடந்து ஓரேபு மலையை அடையும் வலிமை பெறுகின்றார். ஒரு சாதாரண அப்பத்தைச் சாப்பிட்ட எலியா நாற்பது நாட்கள் நடப்பதற்கான வலிமையைப் பெறுகின்றார் என்றால், இயேசுவின் உடலை – விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவை – உட்கொள்கின்ற ஒருவர் வாழ்வினை, அதுவும் நிலைவாழ்வினைப் பெறமாட்டாரா? என்பதுதான் நம்முடைய கேள்வியாக இருக்கின்றார். இயேசு கூறுவார், “ஆடுகள் வாழ்வு பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு இந்த மண்ணுலகிற்கு வந்தேன்” என்று (யோவான் 10:10), நாம் நிறைவாழ்வு பெற இந்த மண்ணுலகிற்கு வந்த இயேசுவால், நமக்கு நிலைவாழ்வைத் தரமுடியாதா என்பதுதான் நம்முடைய கேள்வியாக இருக்கின்றது. 

போர்ச்சுகல் நாட்டில் உள்ள பலசர் என்னும் ஊரில் பிறந்தவர் அலெக்ஸ்சாந்திரியா டா கோஸ்டா என்பவர். அவருக்கு 14 வயது நடந்து கொண்டிருந்தபோது, ஒருசில முரடர்கள் அவருடைய வீட்டுக்குள் புகுந்து, மேல் மாடியில் இருந்த அவரை, பலவந்தமாக பாலியில் வன்கொடுமைக்கு உட்படுத்த நினைத்தார்கள். ஆனால் அலெக்ஸ்சாந்திரியாவோ அந்த முரடர்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள  அங்குமிங்கும் ஓடினார். ஆனால், எதிர்பாராத விதமாக அவருடைய கால் வழுக்கவே, மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து, கால் இரண்டும் ஊனமாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால் அவருடைய வாழ்க்கையே நிர்மூலமானது, ஆனாலும் அவர் தன்னுடைய வேதனைகளை ஆண்டவரிடம் ஒப்படைத்து, விசுவாசக்தில் இன்னும் வேரூன்றி நின்றார். 

அலெக்ஸ்சாந்திரியா தன்னுடைய கடைசி பதிமூன்று ஆண்டுகளில் நற்கருணையை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தார். அவர் இவ்வாறு நற்கருணையை மட்டுமே உண்டு வாழ்ந்து வருகின்ற செய்தி திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதருடைய செவிகளை எட்டியது. உடனே அவர் அது உண்மைதானா? என சோதித்துப் பார்க்க விரும்பினார். எனவே, அவர் ஒரு மருத்துவக் குழுவினை அலெக்ஸ்சாந்திரியாவிடம் அனுப்பி வைத்தார். அக்குழு அவரை ஒரு தனியறையில் வைத்து, ஒருநாளைக்கு ஒரு நற்கருணையை என்ற விதத்தில் கொடுத்து, அவரைக் கவனித்து வந்தது. ஏறக்குறைய நாற்பது நாட்கள் கழித்து, மருத்துவக் குழு அலெக்ஸ்சாந்திரியாவை சோதித்துப் பார்த்தது. ஆச்சரியம் என்னவென்றால், அவருடைய எடை குறையவும் இல்லாமல், கூடவும் இல்லாமல் அப்படியே இருந்தது. இதைக் கண்டு அந்த மருத்துவக் குழு ஆச்சரியப்பட்டுப் போய் நின்றது. அது மட்டுமல்லாமல், நற்கருணை – இயேசுவின் திருவுடல் – உண்மையிலே வாழ்வளிக்கும் உணவு என்னும் உண்மையை உலகிற்கு எடுத்துரைத்தது. 

ஆம், இயேசுவின் உடல் வாழ்வளிக்கும் உணவு, அவ்வுணவை உட்கொள்ளும் ஒவ்வொருவரும் வாழ்வினைப் பெற்றுக்கொள்வது என்பது உறுதி. 

இங்கு நாம் இன்னொரு உண்மையையும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய தேவை இருக்கின்றது. அது என்னவென்றால், நற்கருணையை, ஆண்டவரின் திருவுடலை உட்கொள்கின்ற யாவரும் வாழ்வினைப் பெற்றுக்கொள்வார்கள் என்றால், அதனை முதலில் உட்கொண்ட யூதாஸ் இஸ்காரியோத்து தூக்குப் போட்டுக்கொண்டு இறந்து போனானே, அது ஏன்?. இதற்கான பதிலை நாம் தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் வாசிக்கின்றோம், “எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது கிண்ணத்தில் பருகினால், அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகின்றார், அவர் தம்மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக்கொள்கின்றார். இதனால்தானே, உங்களில் பலர் வலுவற்றோராயும், உடல் நலமற்றோராயும் இருக்கின்றனர்; மற்றும் பலர் இறந்துவிட்டனர்” ( 11: 27,29,30) என்கிறார் அவர். அப்படியானால், வாழ்வளிக்கும் உணவினை தகுதியற்ற நிலையில் உட்கொள்ளும்போது வாழ்வினை இழக்கின்றோம் என்பதுதான் உண்மையாக இருக்கின்றது. யூதாஸ் தகுதியற்ற நிலையில் ஆண்டவரின் திருவுடலை உட்கொண்டான். அதனால்தான் கொடிய சாவுக்கு உள்ளானான். நாம் தகுதியான உள்ளத்தோடுதான் ஆண்டவரின் திருவுடலை உட்கொள்கின்றோமா? என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. 

ஆண்டவரின் திருவுடலை தகுதியான முறையில் உட்கொள்வதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பது நம்முடைய ஆழமான சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தியில் அண்டவர் இயேசு, “என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்” என்று கூறுவார். ஆம், நாம் இயேசுவின் உடலைத் தகுதியான முறையில் உட்கொள்ள அவர்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும், அவர் நற்கருணையில் உடலோடும் ஆன்மாவோடும் பிரசன்னமாக இருக்கின்றார் என்று நாம் நம்பவேண்டும். அதுதான் நாம் நற்கருணையை உண்டு, வாழ்வு பெறுவதற்கான முதமையான தகுதியாக இருக்கின்றது. 

ஒருமுறை தன்னுடைய பங்கில் இருந்த மறைக்கல்வி மாணவர்களிடம், பங்குத்தந்தை, “நற்கருணையில் ஆண்டவர் இயேசு எப்படி இருக்கின்றார்?” என்றொரு கேள்வியைக் கேட்டார். அதற்கு ஒரு மாணவன் எழுந்து, “சுவாமி! நற்கருணையில் ஆண்டவர் இயேசு நல்லாத்தான் இருக்கின்றார்” என்று சொல்லிவிட்டு அமர்ந்துகொண்டான். பங்குத்தந்தையால் அவன் சொன்னதை மறுக்க முடியவில்லை. சிறுவன் தெரிந்து சொன்னானோ தெரியாமல் சொன்னானோ தெரியவில்லை. ஆனால், நற்கருணையில் இயேசு நன்றாக, நன்மையின் ஊற்றாக, உடலோடும் ஆன்மாவாகவும் பிரசன்னமாக இருக்கின்றார். அதனை நாம் நம்பி உட்கொள்கின்றபோதுதான் வாழ்வைப் பெறுகின்றோம். 

அடுத்ததாக ஆண்டவர் இயேசு உடலோடும் ஆன்மாவோடும் நற்கருணையில் பிரசன்னமாக இருக்கின்றார் என்பதை பெயருக்கு நம்பிவிட்டால் போதுமா? நம்பியதை வாழ்வாக்க வேண்டாமா? என்னும் கேள்வி எழுகின்றது. ‘நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால் பயனற்றது” என்பார் தூய யாக்கோபு (யாக் 2:20). ஆகையால், நற்கருணையில் ஆண்டவர் இயேசு பிரசன்னமாக இருக்கின்றார் என்பதை நம்பும் நாம், நம்முடைய நம்பிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும், நம்பிக்கையை வாழ்வாழ்க்கவேண்டும், அதுதான் நாம் நற்கருணையை உட்கொள்வதற்கான தகுதியாக இருக்கின்றது. 

நம்பிக்கை கொண்டோர் எத்தகைய வாழ்க்கை வாழவேண்டும் என்பதை தூய பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுகின்றார், “தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள். ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களை மன்னித்தது போல, நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்; அன்பு கொண்டு வாழுங்கள்”. நாம் பரிவும் அன்பும், மன்னிக்கும் மனப்பான்பையும் கொண்டு வாழும்போது நற்கருணையை உட்கொண்டு வாழ்வுபெற நாம் முழுமையான தகுதி பெறுகின்றோம்.  எனவே, வாழ்வாளிகும் உணவாகிய நற்கருணையை நம்பிக்கையோடு உட்கொள்வோம், இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையை வாழ்வாக்குவோம், அதன்வழியாக நிலைவாழ்வைக் கொடையாகப் பெறுவோம். (அருள்வாக்கு இணையதளம்)

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org