Get Adobe Flash player

மறை உரை :

ஆர்ப்பரியுங்கள், ஆரவாரம் செய்யுங்கள், அகமகிழ்ந்து அக்களியுங்கள்!

அருள்வாக்கு இணையதளத்திலிருந்து)

அருள்பணி பணி மரிய அந்தோணிராஜ் டிசம்பர் 16  -  திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு

ஒரு சமயம் மிகச்சிறந்த மருத்துவரும் உளவியலாளருமான ஜான் அபர்நதியை (John Aparnathy) வந்து சந்தித்த நோயாளி ஒருவர், “ஐயா, என்னுடைய வாழ்க்கையில் ஏராளமான கஷ்டங்கள், நிம்மதி இல்லாத நிலை. அதனால் என்னுடைய வாழ்க்கையில் நிம்மதி பிறக்க ஏதாவது வழி காட்டுங்கள்” என்றார்.


ஜான் அபர்நதி அவர் சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட பிறகு அவரிடத்தில் சொன்னார், “இப்போது உங்களுக்குத் தேவைப்படுவது ஒன்றே ஒன்றுதான். அது வேறொன்றுமில்லை மகிழ்ச்சி – சந்தோசம். இந்த மகிழ்ச்சி உங்களுக்குக் கிடைக்கவேண்டும் என்றால், ஊருக்கு வெளியே நடைபெறுகின்ற சர்க்கஸிக்குச் செல்லுங்கள், அங்கே கிரிமால்டி என்ற கோமாளி வருவார். சர்க்கஸில் அவர் செய்கின்ற சேட்டைகளையும் கூத்துகளையும் மட்டும் பாருங்கள். அப்புறம் உங்களிடம் இருக்கின்ற கஷ்டம், கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்” என்றார்.  மருத்துவர் சொன்னதை எல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அந்த நோயாளி கடைசியில் சொன்னார், “நீங்கள் சொல்கின்ற கிரிமால்டியே நான்தான்.” இதைக் கேட்ட மருத்துவருக்கு ஏதோ போல் ஆகிவிட்டது.

ஊருக்கே மிகழ்ச்சியைத் தந்த சர்க்கஸ் கோமாளியான கிரிமால்டியே மகிழ்ச்சியாக இல்லை என்பது கசப்பான உண்மை. மகிழ்ச்சி – சந்தோசம் – நிம்மதி – இதைத்தான் உலகத்தில் இருக்கின்ற எல்லா மனிதர்களும் தேடிக்கொண்டிருக்கின்றார். இதில் வேடிக்கை என்னவென்றால், யாருமே இந்த மகிழ்ச்சியை சுவைக்கவில்லை, அதை முழுமையாக அனுபவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் இறைவனுக்கு நமக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருவதாக வாக்களிக்கின்றார். எனவே, இறைவன் தருவதாக வாக்குறுதி தருகின்ற மகிழ்ச்சி எத்தகையது, அத்தகைய மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்வது என்பதை இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தையின் ஒளியில் சிந்தித்துப் பார்ப்போம்.

திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறான இந்த ஞாயிறை திருச்சபை மகிழ்ச்சியின் ஞாயிராகக் கொண்டாடப் பணிக்கின்றது. இந்த நாளில் நாம் வாசிக்கக்கேட்ட வாசகங்கள் அனைத்தும் ‘மகிழ்ச்சி, அக்களிப்பு’ போன்ற வார்த்தை களைத்தான் தாங்கி வருகின்றன. எனவே, இறைவன் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருகின்றார் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், “மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி” என்று வாசிக்கின் றோம். இறைவாக்கினர் செப்பனியா கூறுகின்ற வார்த்தைகளின் பொருளை நாம் உணர்ந்துகொள்ள வேண்டுமென்றால், இது எழுதப்பட்ட காலச் சூழலை நாம் அறிந்துகொண்டோமென்றால் அது இன்னும் அர்த்தத்தைத் தரும் என்று தோன்றுகின்றது.

கி.மு. 588 ஆம் ஆண்டு வாக்கில் அசீரியர்கள் எருசலேமின் மீது படையெடுத்து வந்து, அதைத் தரைமட்டமாக்கி, அங்கிருந்த மக்கள் அனைவரும் நாடு கடத்திச் சென்றார்கள். எனவே, யூதர்கள் வேற்றொரு நாட்டில் அடிமைகளாக வாழ்ந்துவந்தார்கள். இத்தகைய சூழ்நிலையில் அவர்கள் யாவே கடவுள் தங்களை மறந்து போய்விட்டார் என்று புலம்பினார்கள். அப்போதுதான் இறைவாக்கினர் செப்பனியா அவர்களிடம், “ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்திவிட்டார்; இஸ்ரயேலின் ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய். ஆதலால் உன் முழு இதயத்தோடு அக்களி” என்கின்றார். இஸ்ரயேல் மக்கள் கடவுள் தங்களைக் கைவிடவில்லை; அவர் தங்களோடுதான் இருக்கின்றார் என்ற உண்மையை உணர்ந்ததும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அடைகின்றார்கள்.

இஸ்ரயேல் மக்களுக்கு அளித்த அதே வார்த்தைகளைத்தான் இறைவன் இன்றைக்கு நமக்கும் தருகின்றார். ஆகவே, நாம் இறைவன் நம்மோடு இருக்கின்றார், நம்முடைய பாவங்கள், குற்றங்கள் அனைத்தையும் மன்னித்துவிட்டார் என்ற நம்பிக்கையில் நாம் மகிழ்ச்சி கொள்வோம்.

இறைவன் நம்மோடு இருப்பதை உணர்கின்ற போது நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என முதல் வாசகம் எடுத்துரைக்கின்ற அதே வேளையில், உண்மையான மகிழ்ச்சியை அடைய நாம் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை இன்றைய இரண்டாம் வாசகமும் நற்செய்தி வாசகமும் எடுத்துரைக்கின்றது. எனவே, நாம் அதனையும் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல், “சகோதர சகோதரிகளே, ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூருகின்றேன் மகிழுங்கள்” என்று கூறுகின்றார். ஆண்டவரோடு இணைந்து மகிழுங்கள் என்று சொல்கிற தூய பவுலடியார், ஆண்டவரோடு இணைந்திருக்கின்ற போது மகிழ்ச்சியானது கிடைக்கும் என்று சொல்லாமல் சொல்கின்றார்.

பவுலடியாரின் இவ்வார்த்தைகளை “என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய முடியாது” என்ற இயேசுவின் வார்த்தைகளோடு இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் இன்னும் பொருள் நிறைந்ததாக இருக்கும் என்று தோன்றுகின்றது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து உண்மையான திராட்சைக் கொடியைக் குறித்துப் பேசும்போது, கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது” என்பார். அப்படியானால் இயேசுவோடு – இறைவனோடு நாம் இணைந்திருக்கின்றபோதுதான் நம்மால் கனிதர முடியும், மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பது உறுதியாகின்றது.

இஸ்ரயேல் மக்கள் உண்மையான யாவே இறைவனின் வார்த்தையைக் கேட்டு, அவரோடு இணைந்திருந்தபோது அவர்கள் மகிழ்ந்திருந்தார்கள். எப்போது அவர்கள் உண்மைக் கடவுளை மறந்துவிட்டு, போலி தெய்வங்களை வழிபடத் தொடங்கினார் களோ அப்போதே அவர்கள் மகிழ்ச்சியை இழந்தார்கள். அந்நியர்களால் நாடு கடத்தப்பட்டு மகிழ்ச்சியை இழந்தார்கள். ஆகவே, நாம் எப்போதெல்லாம் இறைவனைவிட்டுப் பிரிந்து வாழ்கின்றோமோ அப்போதெல்லாம் மகிழ்ச்சியை இழந்து நிற்கின்றோம். மாறாக, அவரோடு இணைந்திருக்கும்போது, அவர் வழியில் நடக்கும்போது நாம் நிறைவான மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.

இறைவனின் பிரசன்னம் நம் நடுவே இருக்கின்றபோது அதனால் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கின்றது; இறைவனோடு இணைந்திருப்பதால் மகிழ்ச்சி கிடைக்கின்றது என்று சிந்தித்துப் பார்த்த நாம், உண்மையான மகிழ்ச்சி கிடைக்க நற்செய்தி வாசகம் நமக்கு என்ன சொல்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம். நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்கு கொடுத்துக்கொண்டிருக்கும்போது அவரிடம் வந்த மக்கள், “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கின்றார்கள். அவர்கள் கேட்கின்ற கேள்வியை ‘உண்மையான மகிழ்ச்சியைப் பெற நாங்கள் என்ன செய்யவேண்டும்?’ என்ற விதத்திலும் புரிந்துகொள்ளலாம். மக்கள் இவ்வாறு கேட்டதற்கு திருமுழுக்கு யோவான் அவர்களிடம், “இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்” என்கின்றார். திருமுழுக்கு யோவான் வரிதண்டுவோருக்கும் படைவீரர்களுக்கும் அவர்களுக்கு உகந்த அறிவுரையினைக் கூறுகின்றார். திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளிலிருந்து அறிந்துகொள்ளவேண்டிய செய்தி இதுதான்: நாம் நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழும்போது உண்மையான மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்வோம் என்பதாகும்.

நகரில் இருந்த பிரபல மனநல ஆலோசகரிடம் ஒருநாள் பணக்காரப் பெண்மணி ஒருவர் வந்தார். அவர் அவரிடம், “என்னுடைய குடும்பம் மிகவும் வசதியான குடும்பம். எனக்குக் கிடைத்ததோ மிக ஆடம்பரமான வாழ்க்கை. ஆனால் எல்லாம் இருந்தும் என்னுடைய வாழ்க்கையில் நிம்மதி மட்டும் இல்லை”. என்றார். அந்த பணக்காரப் பெண்மணி சொன்னதை யெல்லாம் மிகப் பொறுமையாகக் கேட்டுவிட்டு அவர் தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்த்துவந்த பணிப்பெண்ணை அழைத்து, அவளுடைய கதையை அந்த பணக்காரப் பெண்மணியிடம் சொல்லச் சொன்னார்.

தன்னுடைய தலைவர் (Boss) கேட்டுக்கொண்டதற்கு இணங்க பணிப்பெண் பணக்காரப் பெண்மணியிடம் தன்னுடைய கதையைச் சொல்லத் தொடங்கினான். “என்னுடைய குடும்பம் ஒன்றும் அவ்வளவு வசதியான குடும்பம் இல்லை. ஆனால், எனக்கு அன்பான கணவனும் ஒரே ஒரு மகனும் வாய்க்கப்பட்டர்கள். இவர்களால் வாழ்க்கை மிகவும் சந்தோசமாகப் போய்க் கொண்டிருந்தபோது. இப்படிப்பட்ட சமயத்தில் திடிரென்று ஒருநாள் என்னுடைய கணவர் நோயில் விழுந்து படுத்த படுக்கை யாகி அப்படியே இறந்துபோனார். இந்த துன்பத்திலிருந்து நான் மீள்வதற்குள் என்னுடைய ஒரு பையனும் விபத்தில் சிக்கி உயிரிழந்தான். அப்போது நான் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. எல்லாம் முடிந்துபோய்விட்டது என்றுதான் வாழ்ந்துகொண்டிருந்தேன்.

இதற்கிடையில் ஒருநாள் நான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். ஒரு குட்டிப்பூனை என்னை பின்தொடர்ந்து வந்து, என்னுடைய வீட்டுக்குள் நுழைந்தது. அதனுடைய கண்களில் பசி தெரிந்தது. உடனே நான் கொஞ்சம் பாலை எடுத்து அதற்கு குடிக்கக்கொடுத்தேன். அப்போதிலிருந்து அது என்னை மிக வாஞ்சையோடு சுற்றிச் சுற்றி வந்தது. அப்போது நான் ஓர் உண்மையை உணர்ந்தேன். சாதாரண உயிரினத்தின்மீது நாம் அன்புகாட்ட, அது பதிலன்பு காட்டு கின்றதே, அப்படியானால் மனிதர்கள்மீது நாம் அன்பு காட்டினால், அவர்கள் நம்மீது எத்துணை அன்பு காட்டுவார்கள்? என்று சிந்தித்துப் பார்த்தேன்.. உடனே நான் கடைக்குச் சென்று கொஞ்சம் அரிசி, பருப்பு, காய்கறிகள், துணிமணிகள் இவற்றை யெல்லாம் வாங்கிக்கொண்டு அருகிலிருந்த குடிசைப்பகுதிக்குச் சென்று, அவற்றை அங்கிருந்த மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்தேன். அந்நேரத்தில் அவர்கள் வாஞ்சையோடு பழகியவிதம் என்னை பிரமிக்க வைத்தது. அது மட்டுமல்லாமல் என்னுடைய கவலைகள் எல்லாம் மெல்ல மறையத் தொடங்கியது. அன்றைக்குத் தொடங்கிய அந்த நல்ல காரியத்தை இன்றைக்கும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றேன். அதனால் நான் ஒருபோதும் தனியாக இருப்பது போன்று உணர்வதில்லை.

பணிப்பெண் எல்லாவற்றையும் சொல்லி முடிக்கும் முன்னமே அந்த பணக்காரப் பெண்மணிக்கு தன் வாழ்வில் இருக்கும் நிம்மதியற்ற சூழ்நிலை மாறி மகிழ்ச்சி பிறப்பதற்கான வழி தெரிந்தது. உடனே அவர் மனநல ஆலோசகருக்கும் அந்தப் பணிப்பெண்ணுக்கும்ம் நன்றி சொல்லிவிட்டு, தன்னிடம் இருந்த செல்வத்தை, பொருட்களை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுக்கப் புறப்பட்டார்.

ஆம், நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுத்து வாழ்கின்றபோதுதான் உண்மையான மகிழ்ச்சி நம்முடைய உள்ளத்தில் பிறக்கின்றது என்று சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், நம்முடைய வாழ்வில் உண்மையான மகிழ்ச்சி பிறக்க இருப்பதை பிறரோடு பகிர்ந்து வாழ்வோம், இறைவனோடு இணைத்திருப்போம், மட்டுமல்லாமல் இறைவன் நம்மோடு இருப்பதை உணர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
(அருள்வாக்கு இணையதளத்திலிருந்து)

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org