Get Adobe Flash player
6 ஜனவரி 2019 ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா
ஞாயிறு வாசகங்களின்  விளக்கங்கள்
தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, திருச்சி.
 
 
I. எசாயா 60:1-6  II. எபேசியர் 3:2-3, 5-6  III. மத்தேயு 2:1-12
 
இரண்டாம் முறை விண்மீன்
 
'நம் அனைவருக்கும் இரண்டு வாழ்க்கை உண்டு. இரண்டாம் வாழ்க்கை எப்போது தொடங்குகிறது என்றால், 'இருப்பது ஒரு வாழ்க்கைதான்' என்ற புரிதல் வரும்போது' என்பது டுவிட்டர் வாக்கு. 'வாழ்வில் இரண்டாம் வாய்ப்பு வருவதில்லை' என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், வாழ்வில் இரண்டாம் வாய்ப்புக்கள் வரவே செய்கின்றன. எப்படி?
 
சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய, 'எ கிறிஸ்மஸ் கேரல்' (ஒரு கிறிஸ்துபிறப்பு பாடல்) பிரபலமான நாவல். அந்த நாவலின் கதாநாயகன் எபநேசர் ஸ்க்ரூகே கிறிஸ்துமசுக்கு முந்திய மாலை தன் அலுவலகத்தில் அமர்ந்திருப்பார். இங்கிலாந்தின் குளிரின் நடுக்கத்தில் அவருடைய அலுவலக கிளார்க் கூனிக்குறுகி அமர்ந்திருப்பார். ஏனெனில், எபரேசர் தன் அலுவலகத்தை வெதுவெதுப்பாக்க பணத்தைச் செலவிட மாட்டார். எபநேசரின் உறவினர் ஒருவர் அவரை கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு வருமாறு அழைப்பார். அந்த நேரத்தில் இன்னும் இருவர் கிறிஸ்துமஸ் நன்கொடை கேட்டு வருவார்கள். 'கிறிஸ்துமஸ் ... ஒரு ஹம்பக்!' என்று விரட்டி விடுவார். இரவில் தன் வீடு திரும்பிய அவருக்கு இறந்து போன தன் பிஸினஸ் பார்ட்னர் ஜேக்கப் மார்லியின் ஆவி காட்சிதரும். மார்லி தன்னுடைய பழைய தன்னலமான வாழ்விற்குத் தண்டனையாக பெரிய சங்கிலியைக் கட்டி அவர் இழுத்துக்கொண்டு செல்வதுபோல காட்சியில் இருக்கும். 'இந்த தண்டனையிலிருந்து நீ தப்பித்துக்கொள்' என மார்லியின் ஆவி எபநேசரை எச்சரிக்கும். 'இன்னும் சில இரவுகளில் மூன்று ஆவிகள் உனக்குத் தோன்றும்' என்றும் சொல்வார் மார்லி. அப்படியே தூங்கிப்போவார் எபநேசர். 'நேற்றைய கிறிஸ்துமஸ்' என்ற முதல் ஆவி வந்து எபநேசரை அவருடைய குழந்தைப் பருவத்திற்கு அழைத்துப்போய்க் காட்டும். தன் குழந்தைப் பருவ, இளமைப்பருவ நிகழ்வுகளை நினைத்து மகிழ்வார் எபநேசர். 'இன்றைய கிறிஸ்துமஸ்' என்ற இரண்டாம் ஆவி எபநேசரை லண்டன் தெருக்கள் வழியாக அழைத்துச் செல்லும். அந்த நேரத்தில் தன் மேலாடைக்குள் 'அறியாமை,' 'தேவை' என்று இரண்டு குழந்தைகள் ஒளிந்திருப்பதைக் காண்பார் எபநேசர். 'நாளைய கிறிஸ்துமஸ்' என்ற மூன்றாம் ஆவி இறந்துபோன ஒருவர் படும் துன்பத்தைக் காட்டும். அந்த இறந்துபோன நபரின் கல்லறையில் 'எபநேசர்' என எழுதியிருக்க, நம் கதாநாயகர் உடனே, தன் தவற்றை உணர்ந்து, 'என் 'அறியாமை,' மற்றும் என் 'தேவை' இவற்றுக்காக நான் வருந்துகிறேன்' என்று சொல்லி, வருவோர் போவோர், தேவையில் இருப்போர் அனைவருக்கும் தன் பணத்தைக் கொடுத்துவிட்டு, தன் உறவினரின் கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு மகிழ்வுடன் செல்வார். இதுபோல அவர் தொடர்ந்து கருணை, தாராள உள்ளம், அன்பு, பரிவு கொண்டவராக விளங்குவதாக நாவல் முடிவுறும்.
 
எபநேசர் ஸ்க்ரூகேயைப் பொறுத்தவரையில் தான் கண்ட காட்சி அவருடைய இரண்டாம் வாழ்க்கையின் தொடக்கமாக இருக்கிறது. இவரைப் போலவே, புனித பவுல், அண்ணல் அம்பேத்கர், மகாத்மா காந்தி, அன்னை தெரசா என்று எல்லாருமே தங்கள் வாழ்வில் இறையனுபவம் பெற்றவுடன் தங்களின் இரண்டாம் வாழ்க்கையை புதிய பொலிவுடன் மாற்றி எல்லாருக்கும் எல்லாம் என ஆகின்றனர்.
 
இன்றைய நாளில் 'இரண்டாம் கிறிஸ்துமஸ்' என்று கிராமங்களில் சொல்லப்படுகின்ற 'ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவைக்' கொண்டாடுகிறோம். கீழைத்திருச்சபைகள் இன்றைய நாளைத்தான் கிறிஸ்து பிறப்பு நாளாகக் கொண்டாடுகின்றனர்.
 
'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று ஏரோதிடம் வருகின்ற கீழ்த்திசை ஞானியர், 'முன்பு எழுந்த விண்மீன் மீண்டும் தோன்றுவதை - இரண்டாம் முறை தோன்றுவதை - கண்டுகொள்கின்றனர்.' ஆக, இவர்கள் முதல் முறை பார்த்த விண்மீன் இவர்களை ஏரோதின் அரண்மனைக்குத்தான் அழைத்துச் சென்றது. இரண்டாம் முறை பார்த்த விண்மீன்தான் இவர்களை பெத்லகேமிற்கு அழைத்துச் செல்கிறது. இவ்வாறாக, வாழ்வின் ஆச்சர்யங்கள் இரண்டாம் முறைகளிலும் சாத்தியம் என்பதை உணர்த்துகின்றன இன்றைய வாசகங்கள்.
 
இன்றைய முதல் வாசகம் (காண். எசா 60:1-6) எசாயா இறைவாக்கினர் நூலின் மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் திரும்பி வர அனுமதி பெற்ற காலகட்டத்தில் எழுதப்பட்டது இப்பகுதி. இன்றைய வாசகப் பகுதியில், 'எழு! உலகிற்கு ஒளி வீசு!' என்று எருசலேமைத் தூண்டி எழுப்புகிறார் எசாயா. ஏனெனில், 'உன் ஒளி தோன்றியுள்ளது,' 'ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.' ஒளியும் மாட்சியும் ஆண்டவரின் காணக்கூடிய வெளிப்பாடுகள் (காண். எசே 1:4, விப 24:15-17). இவ்வாறாக, இருளடைந்து பாழடைந்து கேட்பாரற்றுக் கிடந்த நகரம் கடவுள் இரண்டாம் முறை வந்ததால் ஒளிர்கிறது. இவர்கள் அடிமைகளாக்கப்படும் முன் இருந்த ஒளி அடிமைத்தனத்தால் இருண்டு போனது. இரண்டாம் முறை இப்போது நகரம் ஒளிருமாறு மக்களைக் கவ்வியிருந்த இருளை அகற்றுகிறார் கடவுள். கடவுள் இரண்டாம் முறை வந்ததை ஒரு பெரிய ஒருங்கிணைவாக முன்வைக்கிறார் எசாயா: (அ) பிற இனத்தார் எருசலேம் நோக்கி வருவர், (ஆ) நாடுகடத்தப்பட்ட, இழுத்துச் செல்லப்பட்ட புதல்வர், புதல்வியர் தோளில் தூக்கிவரப்படுவர், (இ) கடலின் திரள் செல்வம், சொத்துக்கள், ஒட்டகத்தின் பெருந்திரள் எருசலேம் வரும், (உ) 'பொன்' (அரசனுக்கு), 'நறுமணப்பொருள்' (கடவுளுக்கு) ஏந்தி வருவர் மக்கள். இவ்வாறாக, கடவுளே அரசனாகவும் இருப்பார் என்பது குறிக்கப்படுகிறது. இக்கடவுள் எருசலேமிற்கு மட்டும் கடவுள் அல்ல. மாறாக, அனைத்து நாடுகளுக்கும் கடவுளாகவும் அரசனாகவும் இருப்பார்.
 
ஆக, எருசலேம் புத்துயிர் பெற்றதை அகில உலக புத்துயிர்ப்புக்குமான இரண்டாம் வாய்ப்பாகப் பார்க்கிறார் எசாயா. நாடுகடத்தப்பட்ட எருசலேம் மக்கள் தங்கள் நாடு திரும்புகின்றனர். அவர்களின் வருகை அனைத்துலக நாடுகளையும் சேர்த்துக் கொண்டு வருவதாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் பெற்ற இரண்டாம் ஒளி அவர்களுக்கு மட்டுமல்லாமல், உலக மக்களுக்கும் வெளிச்சமாகவும், மாட்சியாகவும் இருக்கிறது.
 
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 3:2-3, 5-6), 'நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்னும் மறைபொருள்' தூய ஆவி வழியாகத் தனக்கும், திருத்தூதருக்கும், இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாக முன்வைக்கின்றார். யூதராக இருந்தால்தான் ஒருவர் கிறிஸ்தவராகவும், கிறிஸ்தவ சபையின் உறுப்பினராகவும் இருக்க முடியும் என்ற புரிதலில் இருந்த எபேசு நகரத் திருச்சபைக்கு, யூதரல்லாத புறவினத்தாரும் நம்பிக்கையின் வழியாக மறைபொருளில் பங்கெற்க முடியும் என அறிவுறுத்துகின்றார். பவுலின் இந்த வார்த்தைகள் இன்று நமக்கு மிகச் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், அன்றைய காலகட்டத்தில் இது ஒரு பெரிய மறுமலர்ச்சியை உண்டாக்கியது. ஏனெனில், பவுலின் இதே உறுதிப்பாட்டால்தான் இன்று நீங்களும், நானும் கிறிஸ்தவராக இருக்கிறோம்.
 
ஆக, பிற இனத்தாருக்கு நம்பிக்கையின் வழியாக வழங்கப்படும் இரண்டாம் வாய்ப்பாக இருக்கிறது கிறிஸ்துவின் மறையுடலாகிய திருச்சபை.
 
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 2:1-2) 'ஞானிகள் வருகை' பற்றிப் பேசுகின்றது. நமக்கு மிகவும் தெரிந்த வாசகப் பகுதிதான். இவர்கள் ஏன் வர வேண்டும்? இவர்கள் இறையியல் தேவையையும், இலக்கியத் தேவையையும் நிறைவு செய்ய வருகின்றனர். 'இயேசுவை புதிய மோசே' என்ற இறையியலாக்கம் செய்ய விரும்புகிறார் மத்தேயு. ஆக, பாலன் இயேசுவை எகிப்திற்கு அனுப்பினால்தான் அவரை அங்கிருந்து அழைத்து வர முடியும். இப்போது திருக்குடும்பம் இருப்பது பெத்லகேமில். பெத்லகேமில் நடக்கும் இலக்கிய நிகழ்வு எகிப்துக்கு நகர்ந்தால்தான் இறையியல் சாத்தியமாகும். எனவே, குழந்தையை எகிப்திற்கு அனுப்ப வேண்டியதன் இறையியல் மற்றும் இலக்கியத் தேவையை நிறைவு செய்ய வருகின்றனர் 'ஞானிகள்.'
 
இவர்கள் யார்? இவர்கள் 'ஞானியரோ,' 'அரசர்களோ' அல்லர். இவர்களை பிரிவினை சபை விவிலியம் 'சாஸ்திரிகள்' என சரியாக மொழிபெயர்க்கிறது. இவர்கள் வானியல் பண்டிதர்கள். நட்சத்திரங்களையும், அவற்றின் நகர்வுகளையும், பறவைகள் மற்றும் விலங்குக் கூட்டங்களின் இடம் பெயர்தலையும் வைத்த வருங்காலத்தைக் கணிக்கத் தெரிந்தவர்கள். அவ்வளவுதான்! ஏனெனில், இவர்கள் அரசர்களாக இருந்திருந்தால், 'நீங்கள் போய்ப் பாருங்கள்' என்று ஏரோது அரசன் இவர்களை அனுப்பியிருக்க மாட்டான். 'நீங்கள் இங்கே தங்கி இளைப்பாறுங்கள். நான் காவலாளிகளை அனுப்பி விசாரிக்கிறேன்' என்று இவர்களை அரண்மனையில் அமர்;த்தியிருப்பான். மேலும், இவர்கள் மூன்று பேர் அல்லர். இவர்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருள்களை வைத்து நாம் 'மூன்று நபர்கள்' வந்ததாகச் சொல்கிறோம். மேலும், இவர்கள் 'ஞானியர்' என அழைக்கப்படுகின்றனர். ஆனால், 'யூதர்களின் அரசனாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று யூதர்களின் அரசன் ஏரோதிடம் போய்க் கேட்பது ஞானம் அன்று. ஏரோது தன் அரியணையைத் தக்க வைக்க தன் குடும்பம் முழுவதின் இரத்தத்தையும் குடித்தவன். இத்தகைய அரசனிடம் போய் மற்றொரு அரசனைப் பற்றி விசாரிப்பது 'கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிவதற்குச் சமமாக' இருந்திருக்கும். ஆனாலும், நம் நிகழ்வின்படி அவர்கள் அரண்மனைக்குத்தான் செல்கிறார்கள். ஏனெனில், இத்தகையோரின் சேவை அரசர்கள் எதிர்காலத்தைக் கணிப்பதற்கு அவர்களுக்கு உதவியாக இருந்தது. ஆகவேதான், இவர்கள் அரசனிடம் செல்கிறார்கள். மேலும், இவர்கள் எதையும் மூடி மறைக்காத, அதே நேரத்தில், துணிச்சல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
 
'அவரது விண்மீன் எழக் கண்டோம்' - இதுதான் அவர்கள் பெற்றிருந்த அடையாளம்.
 
ஏரோது தன் குள்ளநரித்தனத்தால், 'நீங்கள் சென்று குழந்தையைக் குறித்து திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று குழந்தையை வணங்குவேன்' என்று சொல்லி அவர்களை அனுப்பிவைக்கின்றான்.
 
அந்த நேரத்தில்தான் இரண்டாம் முறை அந்த விண்மீன் தோன்றுகின்றது. அரண்மனையின் உயரமான சுவர்கள் அதை மறைத்ததா? அல்லது ஏரோதின்முன் இவர்கள் மண்டியிட்டதால் விண்மீன் இவர்களுக்கு மறைவாயிருந்ததா? - தெரியவில்லை நமக்கு. ஆனால், 'அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள்.' மத்தேயு முதல் முறையாக அவர்களின் மகிழ்ச்சி என்ற உணர்வைப் பதிவு செய்கின்றார். வீட்டிற்குள் செல்லும் அவர்கள் குழந்தைக்கு தங்கம் (அரச நிலையின் அடையாளம்), தூபம் (இறை நிலையின் அடையாளம்), வெள்ளைப் போளம் (மனித நிலையின் அடையாளம்) பரிசளிக்கின்றனர். கனவில் எச்சரிக்கப்பட்டு வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்புகிறார்கள்.
 
இந்நிகழ்வில் இவர்கள் ஏரோதின் அரண்மனைக்கு வந்தது ஒருமுறைதான். வந்த வழி ஒருமுறைதான். இயேசுவைக் கண்டதும் ஒருமுறைதான். திரும்பும் வழியும் ஒருமுறைதான். ஆனால், விண்மீனைக் கண்டது மட்டும்தான் இரண்டுமுறை. அதுவும் இரண்டாம் முறை அவர்கள் கண்ட விண்மீன் அவர்களின் பாதையை முழுவதுமாக மாற்றிப் போடுகின்றது.
 
இவ்வாறாக, முதல் வாசகத்தில் எருசலேம் இரண்டாம் முறை ஒளி பெற்று, கடவுளின் மாட்சியால் துலங்குகிறது. இரண்டாம் வாசகத்தில் புற இனத்தார் நம்பிக்கையின் வழி இரண்டாம் வாழ்வைப் பெறுகின்றனர். நற்செய்தி வாசகத்தில் இரண்டாம் முறை கண்ட விண்மீன் சாஸ்திரிகளுக்கு யூதர்களின் அரசனை அடையாளம் காட்டுகிறது.
 
வாழ்வின் இனிமைகள் இரண்டாம் முறையிலும் சாத்தியம் என்கிறது இன்றைய வழிபாடு. ஞானம் என்பது முதல் முறை எழுந்து நிற்பது அல்ல. மாறாக, முதல் முறை விழுந்து இரண்டாம் முறை எழுந்து நிற்பது.
 
இன்றைய நம் உலகம் முதல் முறைகளையே பெரிதும் கொண்டாடுகிறது. முதல் முறையில் வெல்லாதவர்களைத் தேவையற்றவர்கள் என முத்திரை குத்திவிடுகிறது. புனித அகுஸ்தினரின் வாழ்வை எடுத்துக்கொள்வோம். தன் மனமாற்றத்திற்கு முன் அவருடைய முதல் வாழ்வு அமைதியில்லாமல் இருக்கிறது. ஆனால், அதை அவர் விரக்தியாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டாம் வாழ்விற்குள் அடியெடுத்து வைக்கின்றார். மிகப்பெரிய இறையியலாராக மாறுகின்றார். மானிக்கேய சிந்தனையால் முதல் வாழ்வைக் கழித்த அவர், இறைவனில் தன் இரண்டாம் வாழ்வைக் கழிக்கிறார்.
 
2019ஆம் ஆண்டு தொடங்கி சில நாள்கள் கடந்திருக்கின்றன. 'இனி குடிக்க மாட்டேன்,' 'இனி கோபப் பட மாட்டேன்,' 'இனி உடல்நலம் கவனிப்பேன்,' 'இனி வாக்கிங் போவேன்,' 'இனி என் நேரம் வீணாக்க மாட்டேன்' என்று கடந்த ஆண்டு வாக்குறுதிகள் எடுத்து, நிறைவேற்ற முடியாமல் போயிருப்போம். அல்லது எடுத்த ஆறு நாள்களுக்குள் மீறியிருப்போம். ஆனால், அதற்காக நம்மை நாமே சபித்து குற்ற உணர்வு கொள்ள வேண்டாம். மீண்டும் ஒருமுறை வாழப் பழகுவோம். வாழ்வில் எல்லாமே ஒருமுறைதான் இந்த உலகம் பல இனியவர்களையும், இனியவைகளையும் இழந்திருக்கும்.
 
'தொடங்கியது எல்லாம் இனியதாக முடியும். அப்படி இனியதாக இல்லை என்றால் அது இன்னும் முடியவில்லை' என்பார் ஆஸ்கார் வைல்ட். எருசலேம் மக்களின் பயணம் பாபிலோனியாவின் அடிமை இருளில் முடியவில்லை. புறவினத்தாரின் பயணம் தங்கள் பாவ வாழ்க்கையோடு முடியவில்லை. சாஸ்திரிகளின் பயணம் ஏரோதின் அரண்மனையோடு முடியவில்லை. இரண்டாம் முறை ஒளி வந்தது. இரண்டாம் முறை வாழ்க்கை வந்தது. இரண்டாம் முறை விண்மீன் வந்தது.
 
இரண்டாம் முறை வரும் விண்மீனைக் காண மூன்று படிகள் அவசியம்: (அ) இதுதான் விண்மீன் எனத் தெரிய வேண்டும், (ஆ) பழைய விண்மீனோடு அதைப் பொருத்திப் பார்க்க வேண்டும், (இ) 'இதுவே அது' என்று முடிவு எடுத்து பயணம் தொடர வேண்டும்.
 
நாம் சந்தித்த பாபிலோனியாவும், ஏரோதுகளும் போதும். கொஞ்சம் அண்ணாந்து பார்ப்போம். வாழ்க்கை மீண்டும் விண்மீனாக ஒளிரும். ஏனெனில், முதல் முறை பார்த்ததும், பார்த்ததை மறந்ததும் நம் தவறாக, சந்தர்ப்ப சூழலாக இருக்கலாம். ஆனால், இரண்டாம் முறை பார்ப்பதும், விண்மீனைத் தொடர்வதும் நம் தெரிவாக இருக்க வேண்டும். தெரிவு பிறக்க தெளிவு பிறக்கும்.
 
அந்தத் தெளிவில் பெத்லகேம் குழந்தை நம்மில் ஒளிரும். ஏனெனில், முதல் மட்டுமல்ல. இரண்டாவதும் வெற்றியே!
 
திருக்காட்சிப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org