பொதுக்காலம் பதினான்காம் ஞாயிறு

(I         எசாயா 66: 10-14;  II            கலாத்தியர் 6: 14-18;           III            லூக்கா 10: 1-12, 17-20)

இயேசுவின் தூதுவர்களாய்...

மறையுரை : மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

நிகழ்வு

 பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஸ்காட்லாந்தில் உள்ள பெல்ஹெல்வி (Belhelvie) என்ற ஊரில் ஜார்ஜ் ஸ்டாட் (George Stott 1835 -1889) என்றோர் ஆசிரியர் இருந்தார். அவர்க்கு ஒரு கால் கிடையாது. இளம்பிள்ளை வாதத்தால்தான் அவர் தன் காலை இழந்திருந்தார். ஆனாலும், அவர் துடிப்புமிக்க ஓர் ஆசிரியராய்ப் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் சீனாவில் மறைபரப்புப் பணியைச் செய்துவந்த ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் என்பர் என்பவர் ஜார்ஜ் ஸ்டாட் வழக்கமாகச் செல்லும் ஆலயத்திற்கு வந்து, “யாராரெல்லாம் சீனாவில் ஆண்டவரின் நற்செய்தியை அறிவிக்க ஆர்வமாய் இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவர் இவ்வாறு கேட்டதற்கு ஆலயத்தில் இருந்த யாரும் தங்களுடைய விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை. பின்வரிசையில் உட்கார்ந்திருந்த ஜார்ஜ் ஸ்டாட் மட்டும், “நான் ஆர்வமாய் இருக்கின்றேன்” என்று தன்னுடைய கையை உயர்த்தினார். அதற்கு  ஹட்சன் டெய்லர் அவரிடம், “உங்கட்குத்தான் ஓர் கால் இல்லையே! நீங்கள் எப்படி சீனாவிற்கு வந்து நற்செய்தியை அறிவிக்க முடியும்?” என்று கேட்பதற்கு, அவர், “இரண்டு கால்கள் நன்றாக உள்ளவர்கள் சீனாவிற்கு வந்து நற்செய்தி அறிவிக்க விருப்பம் தெரிவிக்காததால், ஒற்றைக் காலுள்ள நான் விருப்பம் தெரிவித்தேன்” என்றார்.இதைக்கேட்டு ஹட்சன் டெய்லர் மிகவும் மகிழ்ந்துபோய் அவரைக் கட்டித்தழுவி முத்தமிட்டார். பின்னர் அவர் ஜார்ஜ் ஸ்டாட்டிற்கு செயற்கைக் காலினைப் பொருத்தி, சீனாவில் நற்செய்தியை அறிவிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். 1865 ஆம் ஆண்டு சீனாவிற்குச் சென்ற ஜார்ஜ் ஸ்டாட் ஏறக்குறைய இருபத்தி ஆறு ஆண்டுகள் ஆண்டவரின் நற்செய்தியை மிகுந்த உத்வேகத்தோடு அறிவித்து, பலரும் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்குக் காரணமாக இருந்தார்.  இன்றைக்கு சீனாவில் கிறிஸ்துவம் இந்தளவுக்கு வேரூன்றி இருக்கின்றதென்றால், அதற்கு இவர் ஆற்றிய பணிதான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.தனக்கு ஒரு காலை இல்லை என்பதைக்கூட ஒரு குறையாகக் கருதாமல், ஆண்டவரின்நற்செய்தியை மிகுந்த வல்லமையோடு அறிவித்த ஜார்ஜ் ஸ்டாட் நமது கவனத்திற்கு உரியவர். இவரைப் போன்று நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரின் நற்செய்தியை எல்லா மக்கட்கும் எடுத்துரைவேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை எடுத்துச் சொல்கின்றது. எனவே, நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.நற்செய்தியானது எல்லா மக்கட்கும் அறிவிக்கப்படவேண்டும்

 

          லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு எழுபத்தி இரண்டு அல்லது எழுபது சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புவதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த நிகழ்விற்கும் இயேசு பன்னிரு திருத்தூதர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்ற நிகழ்விற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். இயேசு பன்னிரு திருத்தூதர்களை பணித்தளங்கட்கு அனுப்புகின்ற நிகழ்வில், அவர் அவர்களைக் கலிலேயாப் பகுதிக்கு அனுப்பி வைக்கின்றார் (மத் 10;  லூக் 9: 1-11). ஆனால், இயேசு எழுபத்தி இரண்டு சீடர்களை அனுப்புகின்ற நிகழ்வில் அவர்களை யூதேயப் பகுதிக்கு அனுப்பி வைக்கின்றார். முன்னவர்களோ திருத்தூதர்கள், பின்னவர்களோ சீடர்கள்.இயேசு எழுபத்தி இரண்டு சீடர்களை அனுப்புகின்ற நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே இடம்பெறுகின்றது. இதன்மூலம் நற்செய்தியாளர் நமக்குச் சொல்லவருகின்ற செய்தி, இயேசுவின் நற்செய்தி எல்லா நாட்டு மக்கட்கும் அறிவிக்கப்படவேண்டும் என்பதாகும். இதை எப்படிப் புரிந்துகொள்வது என்றால், தொடக்க நூல் பத்தாம் அதிகாரத்தில் எழுபது நாடுகள் குறிப்பிடப்படுகின்றன. (அக்காலத்தில் எழுபது நாடுகள்தான் இருந்திருக்கும் போல). இயேசு, அந்த எழுபது நாடுகட்கும் தன் சீடர்களை அனுப்புவதைக் குறிக்கின்ற விதமாக எழுபது அல்லது எழுபத்தி இரண்டு சீடர்களை அனுப்புகின்றார். இவ்வாறு அவர் எல்லா மக்களும் தன்னுடைய நற்செய்தியை அறிந்துகொள்ளச் செய்கின்றார்.நற்செய்திப் பணி ஆண்டவரை நம்பிச் செய்யப்படவேண்டும்இயேசு தன்னுடைய நற்செய்தியானது எல்லா மக்கட்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார் என்று மேலே பார்த்தோம். இப்பொழுது தன்னுடைய நற்செய்தியை அறிவிக்கக்கூடியவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார் என்று இப்பொழுது பார்ப்போம்.இயேசு எழுபத்தி இரண்டு பேரை அனுப்புகின்றபோது, தான் போகவிருந்த இடங்கட்கு தனக்கு முன்பாக, தன் சார்பாக அனுப்புவதாக நற்செய்தியாளர் பதிவுசெய்கின்றார். அப்படியானால், இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கின்ற ஒவ்வொருவரும் அவருடைய நற்செய்தியை அறிவிக்கவேண்டுமே ஒழிய, தன்னுடைய நற்செய்தியை அறிவிக்கக்கூடாது. அடுத்ததாக, பயணத்திற்கு பணப்பையோ, வேறு பையோ மிதியடிகளோ எதுவும் எடுத்துச் செல்லவேண்டும் என்று கூறுகின்றார். இதற்குக் காரணம், நற்செய்திப் பணி என்பது ஆண்டவருடைய பணி, ஆண்டவரை நம்பிச் செய்யப்படும் பணி. அப்படிப்பட்ட பணியை பணத்தையோ, பொருளையோ நம்பிச் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் இயேசு அவ்வாறு சொல்கின்றார். மேலும், இயேசு குறிப்பிடுவது போல, ‘வேலையாள் கூலிக்கு உரிமையுடைவர்’ (லூக் 10:17). அப்படியிருக்கும்போது, யாராரெல்லாம் நற்செய்தியைக் கேட்கின்றார்களோ அவர்களெல்லாம் நற்செய்தியை அறிவிக்கின்றவர்கட்கு உணவும் உடையும் உறைவிடமும் தருவது அவர்களுடைய கடமையாகும்.இயேசு தன்னுடைய சீடர்களிடம், வழியில் எவர்க்கும் வணக்கம் செலுத்தவேண்டாம் என்று குறிப்பிடுகின்றார். அதற்குக் காரணம், அறுவடை அதிகமாக இருக்க, வேலையாட்களோ மிகவும் குறைவாக இருக்கின்றார்கள். இப்படி இருக்கும்போது எல்லார்க்கும் வணக்கம் தெரிவித்துக்கொண்டிருந்தால், நற்செய்திப் பணியைச் செய்து முடிக்கமுடியாது என்பதற்காக அப்படிக் கூறுகின்றார். ஆகையால், விரைவாக அதுவும் ஆண்டவரை நம்பிச் செய்யப்படவேண்டிய நற்செய்திப் பணியை அவரை நம்பிச் செய்வது மிகவும் நல்லதாகும்.நற்செய்திப்பணி செய்ய ஆண்டவர் ஆற்றலைத் தருகின்றார்எல்லா மக்களையும் சென்றடைய வேண்டிய நற்செய்திப் பணி எத்துணை முக்கியமானது என்பதைச் சிந்தித்துப் பார்த்த நாம், நற்செய்திப் பணியைச் செய்வோர்க்கு இறைவன் தருகின்ற பாதுகாப்பையும் வல்லைமையும் நாம் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகவும்.நற்செய்திப் பணியைச் செய்கின்றபோது ஓநாய்கள் போன்று பகைவர்களிடமிருந்து எதிர்ப்பும் இன்னலும் இடையூறும் வரலாம். இத்தகைய தருணங்களில் இறைவன் நம்மைக் கைவிட்டு விடமாட்டார் என்பதை இறைவார்த்தை மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது. திருத்தூதர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்றபோது, பேய்களை ஒட்டவும் பிணிகளைப் போக்கவும் இயேசு அதிகாரமும் வல்லமையும் கொடுத்தார் என்று லூக் 9:1 ல் வாசிக்கின்றோம். அத்தகைய வல்லமையையும் அதிகாரத்தையும் உடனிருப்பையும் சீடர்கட்கும் தந்தார் என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். அதனால்தான் சீடர்கள் பணித்தளங்கட்குச் சென்று, திரும்புகின்றபோது, “உம் பெயரைச் சொன்னால் பேய்கள்கூட அடிபணிகின்றன” என்கின்றார்கள்.ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரும் அவருடைய நற்செய்தியை அறிவிப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை என்பதை உணர்ந்து, அவர்தரும் ஆற்றலையும் வல்லமையும் பாதுகாப்பையும் உணர்ந்து அவருடைய பணியைச் செய்வோம்.சிந்தனை

 

          ‘நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்’ (எரே 1: 18,20)  என்று இறைவாக்கினர் எரேமியாவைப் பார்த்து ஆண்டவர் கூறுவார். இதே வார்த்தைகளைத் தான் நம் ஒவ்வொருவரையும் பார்த்து ஆண்டவர் கூறுகின்றார். ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் அவருடைய நற்செய்திப் பணியை மனவுறுதியோடு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.