Get Adobe Flash player

மறை உரை : இயேசுவுக்காக உயிரைத் தரத் தயாரா?
அருள்பணி மரிய அந்தோணிராஜ்
(அருள்வாக்கு இணையதளம் )
பொதுக்காலம் இருபத்து மூன்றாம் ஞாயிறு  I சாலமோனின் ஞானம் 9: 13-18 II  பிலமோன் 9b-10, 12-17 III  லூக்கா 14: 25-33 -

 

நிகழ்வு - கிறிஸ்தவம் வேகமாகப் பரவிவந்த தொடக்கக் காலக்கட்டம் அது. அந்தக் காலக்கட்டத்தில் இயேசுவின்மீது ஆழமான அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த இயேசுவின் சீடர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு கிராமத்தில் விவசாயம் செய்துவந்தார். இறைவனின் அருள் அவர்க்கு அபரிமிதமாக இருந்ததால் அவர் தொட்டதெல்லாம் பொன்னானது. ஆம், அவர் நிலம் அமோக விளைச்சலைத் தந்தது. அதில் தனக் கென்று கொஞ்சம் எடுத்துக்கொண்டு மிச்சத்தை வரியவர்கட்குப் பகிர்ந்து கொடுத்தார். மட்டுமல்லாமல் தன்னுடைய இல்லத்திற்கு வந்த எல்லாரையும் அன்போடு வரவேற்று, நல்லமுறையில் உபசரித்து வந்தார். மொத்தத்தில் அவர் இயேசுவின் உண்மையான சீடராக வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையில் அவரைக் குறித்துக் கேள்விப்பட்ட உரோமை அரசாங்கம் அவரைப் பிடித்துக் கொல்வதற்குப் படைவீரர்கள் சிலரை அனுப்பிவைத்தது. அவர்களும் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், இயேசுவின் சீடர் இருந்த கிராமத்தை நோக்கி வந்தார்கள். அவர்கள் அந்த கிராமத்திற்குள் வந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. அதனால் படைவீரர்களில் ஒருவர், ‘இனிமேலும் இயேசுவின் சீடரைத் தேடித் போய்க் கொண்டிருக்க முடியாது. அதனால் இந்த  இரவில் ஏதாவதோர் இடத்தில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் வந்த வேலையை முடிப்போம்’ என்றார். அவர் சொன்னதற்கு எல்லாரும் சம்மதம் தெரிவிக்கவே, இரவில் தங்குவதற்கான இடத்தைத் தேடி அலைந்தார்கள்.  அப்பொழுது எதிரில் ஒரு பெரியவர் வந்தார். அவரிடம் அவர்கள், இரவில் தங்குவதற்கான இடத்தைக் கேட்டபோது, அவர் அவர்களிடம், “இங்கு ஒரு மனிதர் இருக்கின்றார். அவர் தன்னுடைய வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களை அன்போடு வரவேற்று  உபசரிப்பார். அவரிடம் போய்க் கேளுங்கள். நிச்சயம் அவர் இரவில் தங்குவதற்கான இடத்தைத் தருவார்” என்று சொல்லிவிட்டு அவருடைய வீடு இருந்த திசையைச் சுட்டிக் காட்டினார். படைவீரர்கள் பெரியவர்க்கு நன்றிசொல்லிவிட்டு, அவர் சுட்டிக்காட்டிய வீட்டை நோக்கி நடந்துசென்றார்கள்.  அந்த வீட்டை அடைந்ததும் அங்கிருந்தவர் அவர்களை முகமலர்ச்சியோடு வரவேற்றார். பின்னர் அவர்கள், “இரவில் இங்கு தங்கிகொள்ளட்டுமா?” என்று கேட்டபோது, “தாராளமாகத் தங்கிக்கொள்ளுங்கள்” என்றார். பின்னர் அவர் அவர்களிடம், “தாங்கள் இங்கு  வந்ததன் நோக்கம் என்னவோ?” என்று கேட்டபோது, அவர்கள் தாங்கள் வந்த நோக்கத்தைச் சொன்னார்கள். அவர் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்ட இயேசுவின் சீடர் தன்னை யார் என்று அப்பொழுது வெளிக்காட்டிக் கொள்ளாமல், “உங்களைப் பார்க்க மிகவும் களைப்பாக இருப்பது போல் தெரிகின்றது. முதலில் சாப்பிட்டு ஓய்வெடுங்கள். காலையில் எல்லாவற்றையும் பேசிக்கொள்ளலாம்” என்றார். பின்னர் அவர் அவர்கட்கு சுவையான உணவு தயாரித்துக் கொடுக்க அவர்கள் சாப்பிட்டு ஓய்வெடுக்கத் தொடங்கினார்கள். 

அவர்கள் ஓய்வெடுக்கத் தொடங்கியதும். அவர் தன்னுடைய தோட்டத்தின் பக்கம்  சென்று, ஒரு கல்லறைக்குழி வெட்டிவிட்டு, வீட்டிற்கு வந்து தூங்கத் தொடங்கினார். அவர்க்குத் தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் பொழுது புலர்ந்ததும் படைவீரர்களிடம் அவர், “நீங்கள் தேடிவந்த ஆள் நான்தான்” என்றார். அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு அவர்கள் அதிர்ந்துபோனார்கள். “உங்களைப் போன்ற நல்ல மனிதரையா நாங்கள் கொல்வது. மாட்டோம்” என்று பின்வாங்கினார்கள். அப்பொழுது அவர் அவர்களிடம், “இத்தனை நாட்கட்கும் நான் இந்த மறைசாட்சிப் பட்டத்திற் காகத்தான் காத்திருந்தேன். அதனால் என்னைத் தயவுசெய்து வெட்டிக்கொல்லுங்கள்” என்றார். அவர்கட்குக் கண்ணீர் தாரைதாராய் வந்தது. இருந்தாலும் வந்த நோக்கத்தை நிறைவேற்றவேண்டும் என்று, படைவீரர்களில் ஒருவர் அவரை வெட்டிக் கொலைசெய்தார். அதன்பிறகு இயேசுவின் சீடர்க்குத் தெரிந்தவர்கள் வந்து, அவர் அவர்க்காக வெட்டிய கல்லறைக்குழியில் அடக்கம் செய்தார்கள்.  இயேசுவின் சீடர். அவர்க்காக எதையும் இழக்கத் தயாராகவேண்டும் என்ற செய்தியை எடுத்துச்சொல்லும் இந்த நிகழ்வு நமது கவனத்திற்கு உரியது. பொதுக் காலத்தின் இருபத்து மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், இயேசுவின் சீடராக இருப்பதற்கு ஒருவர் என்ன செய்யவேண்டும் என்ற செய்தியைத் தாங்கிவருகின்றது. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம். 

இயேசுவின் சீடர் எல்லாரையும் விட இயேசுவுக்கு முதன்மையான இடம் தரவேண்டும்  - இயேசு எருசலேமை நோக்கிச் சென்று கொண்டிருக் கையில் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து செல்கின்றார்கள். இயேசுவுக்கு நன்றாக தெரியும், தன்னைப் பின்தொடர்ந்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தன்னுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பதற்காக அல்ல. மாறாக, தான் அளிக்கும் உணவிற் காகத்தான் தன்னைப் பின்தொடர்ந்து வருகிறார்கள் என்று (யோவா 6: 26). அதனால்தான் அவர் அவர்களைப் பார்த்து,  என்னைப் பின்பற்றி வருகின்றவர் தன் உறவுகளையும் ஏன், தன் உயிரையும் மேலாகக் கருதினால் அவர் என் சீடராக இருக்க முடியாது என்கின்றார். அப்படியானால், இயேசுவின் சீடராக இருக்க விரும்புகின்றவர் எல்லாவற்றையும் விட, இயேசுவுக்குத் தன்னுடைய முதன்மையான இடம் தந்து வாழவேண்டும். 

இயேசுவின் சீடர் சிலுவையைத் சுமக்கத் தயாராக இருக்கவேண்டும் - இயேசுவின் சீடர், மற்ற எல்லாரையும் விட, ஏன், தன் உயிரையும்விட இயேசுவுக்கு முன்னுரிமை தந்து வாழ்வது சீடத்துவ வாழ்வில் முதல்நிலை என்றால், சிலுவையைச் சுமப்பது சீடத்துவ வாழ்வின் இரண்டாவது நிலை. இங்கு இயேசு குறிப்பிடுகின்ற ‘சிலுவை’ என்பதை அவர்க்காவும் அவருடைய விழுமியங்கட்காகவும் நாம் படக்கூடிய அவமானங்கள், வேதனைகள், துன்பங்கள், என்று எடுத்துக்கொள்ளலாம்.   இயேசுவைப் பின்பற்ற விரும்பும் பலரும், ‘இயேசுவைப் பின்பற்றினால் துன்பமே இல்லாத இன்பமான வாழ்க்கை வாழலாம்’ என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள் (லூக் 9:57-58). இது ஒரு தவறான எண்ணம். இயேசுவைப் பின்பற்றினால் நிச்சயம் துன்பம் வரும், அவமானம் வரும், உயிரையே இழக்கக்கூடிய நிலை வரும். இதற்கெல்லம் எவர் ஒருவர் தயாராக இருக்கின்றாரோ அவர் மட்டுமே இயேசுவின் சீடராக இருக்கமுடியும். 

இயேசுவின் சீடர் எல்லாவற்றையும் இயேசுவுக்காக இழக்கத் தயாராகவேண்டும் - இன்றைய நற்செய்தியில் இறுதியில் இயேசு கூறுகின்றார், “உங்களுள் தம் உடைமைகளையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்கமுடியாது.” ஆம், இயேசுவின் சீடர் தன்னிடம் இருக்கக்கூடிய எல்லாவற்றையும் இயேசுவுக்காக இழக்கத் தயாராகவேண்டும். அதற்குக் காரணம் எவரும் இரு தலைவர்கட்குப் பணிவிடை செய்ய முடியாது (மத் 6: 24) என்பதால்தான்.. ஒருவர் தன்னிடம் இருக்கின்ற பணம், பொருள், வசதி வாய்ப்புகள் இவற்றின்மீதும் பற்று வைத்துகொண்டு, இயேசுவின் மீதும் பற்று வைத்துக்கொண்டிருந்தால் அவர் யார்க்கும் உண்மையாக இருக்க முடியாது என்பதால்தான் இயேசு, தம் உடைமை களை விட்டுவிடாத எவரும் என்னுடைய சீடராக இருக்க முடியாது என்கின்றார். 

ஒவ்வொன்றும் ஒரு விலையிருக்கின்றது. அதுபோன்றுதான் இயேசுவின் சீடராக இருப்பதற்கும் ஒரு விலை இருக்கின்றது. அந்த விலையை அல்லது அதற்கான வெகுமதியை நாம் கொடுக்காவிட்டால் நிச்சயமாக இயேசுவின் சீடராக இருக்கமுடியாது. எத்தனையோ புனிதர்களும் மறைசாட்சிகளும் இறையடியார்களும் இயேசுவின் சீடராக இருப்பதற்கான விலையை, தங்களுடைய உயிரை, உடலை, உடைமையைக்க் கொடுத்தார்கள். நாமும் அதுபோன்று நம்முடைய உயிரை, உடைமையை, உடலைக் கொடுத்தோம் எனில், இயேசுவின் உண்மையான சீடராக இருப்போம் என்பது உறுதி. 

சிந்தனை - இயேசுவின் சீடரராக இருப்பது என்பது, அவரிடம் கற்பதும் அவரைப் பின்தொடர்வதும் ஆகும். ஆனால், அதற்காக நாம் கொடுக்கும் விலையோ மிகவும் உயர்ந்ததாக இருக்கும்’ என்பார் பில்லி கிரஹாம் என்ற மறைப்போதகர். ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் சீடத்துவத்தின் மகத்துவத்தை உணர்ந்து இயேசுவுக்காக எதையும் இழக்கத் தயாராவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். https://www.arulvakku.com/components/calendar/single.php?id=6816

சிந்திக்க : நமக்கு பொண்ணு பொறந்திருக்கு!  -அன்னை மரியாள் பிறப்பு அருள்பணி இயேசு கருணாநிதி (அருள்வாக்கு இணைய தளம்)
'நமக்கு பொண்ணு பொறந்திருக்கு!' - இந்த வார்த்தைகளுடன்தான் மரியாளின் பிறந்தநாள் விடிந்திருக்கும் நாசரேத் மக்களுக்கு. 
விவிலியம் 'ஆண்களின்' நூலாக மட்டுமே இருந்ததால் என்னவோ, ஆண்களின் பிறப்பை மட்டுமே அது பதிவு செய்கிறது. விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ள பிறப்பு கதையாடல்களை மூன்று தலைப்புக்களின்கீழ் பிரிக்கலாம்:
அ. அற்புதமான பிறப்பு, ஆ. அசாதாரணமான பிறப்பு, மற்றும் இ. சாதாரண பிறப்பு, ஆனால் அற்புதமான மீட்பு 

அ. அற்புதமான பிறப்பு: ஈசாக்கு (தொநூ 21:1-8), இம்மானுவேல் என்னும் எசேக்கியா (எசா 7:14), சிம்சோன் (நீத 13), சாமுவேல் (1 சாமு 1:19-23), திருமுழுக்கு யோவான் (லூக் 1:5-25, 57-66) மற்றும் இயேசு (லூக் 1:26-38, 2:1-7) ஆகியோரின் பிறப்பு கதையாடல்கள் 'கன்னி அல்லது கருவுற இயலாதவர் கருவுறுதல்' என்னும் 'மாதிரிக் காட்சி' (type-scene) இலக்கியப் பண்பைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த இலக்கியப் பண்பின் படி முதலில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு வயது, மலட்டுத்தன்மை அல்லது கன்னிமை தடையாக இருக்கும் (ஆனால் எசேக்கியாவின் பிறப்பில் ஆகாசின் 'உள்ளத்தின் மலட்டுத்தன்மையான' நம்பிக்கையின்மை தடையாக இருக்கிறது). இரண்டவதாக, 'தடை நீங்கும்' என்ற வாக்குறுதி கிடைக்கும். மூன்றாவதாக, கருவுறுதலும், கதாநாயகனின் பிறப்பும் நடக்கும். 

ஆ. அசாதாரணமான பிறப்பு: ஏசா மற்றும் யாக்கோபு (தொநூ 25:19-26), யோசேப்பு (தொநூ 30:22-24), பெரேட்சு மற்றும் செராகு (தொநூ 39:27-30), ஓபேது (ரூத் 4:13-17) ஆகியோரின் பிறப்பு கதையாடல்கள் மேற்காணும் இலக்கிய பண்பைப் பெற்றிராவிட்டாலும், இவர்களின் பிறப்பு ஒரு அசாதரண முறையில்தான் நடந்தேறுகிறது. 

இ. சாதாரண பிறப்பு, ஆனால் அற்புதமான மீட்பு: மோசேயின் பிறப்பு (விப 2:1-10) மிக சாதாரணமாக இருந்தாலும், அவர் எகிப்தின் பாரவோனின் கைகளிலிருந்து காப்பாற்றுப்படுதல் ஒரு அற்புதம் போல நடந்தேறுகிறது. இதில் விந்தை என்னவென்றால் பாரவோனின் வாளிலிருந்து மோசேயைத் தப்புவிக்கும் கடவுள் பாரவோனின் மகளின் மடியில் அவரை வளரச் செய்கின்றார். 

மரியாளின் பிறப்பு நிகழ்வு அல்லது கதையாடல் விவிலியத்தில் பதிவு செய்யப்படவில்லையென்றாலும், தொடக்கக் கிறித்தவர்களின் யாக்கோபின் முன்நற்செய்தி அல்லது முதல்நற்செய்தி (Protoevangelium of James) என்ற ஏற்றுக்கொள்ளப்படாத அல்லது ஐயத்துக்கிடமான நற்செய்தியிலும் (பிரிவு 5, எண் 2), இசுலாமியர்களின் திருக்குரானிலும் (3:33-36) பதிவு செய்யப்பட்டுள்ளது. 

யாக்கோபின் முன்நற்செய்தியின்படி யோவாக்கீம்-அன்னா தம்பதியினர் தங்கள் முதிர்ந்த வயதில் மரியாளைப் பெற்றெடுக்கின்றனர். வானதூதர் ஒருவர் அன்னாவுக்கு மரியாளின் பிறப்பை முன்னறிவிக்க, அன்னாவும் தன் முதிர்வயதில் மரியாளைப் பெற்றெடுக்கின்றார். யோவாக்கீமுக்கும் இரண்டு தூதர்கள் வழியாக அன்னா கருவுற்றிருப்பதும், அதற்காக மாசற்ற பத்து இளம் ஆடுகளை அவர் காணிக்கையாகக் கொண்டு வர வேண்டும் என்பதும் தெரிவிக்கப்படுகிறது. 'மாசுமறுவற்ற ஆடுகளைக் காணிக்கையாக்குதல்' மரியாளின் மாசற்ற அமல உற்பவத்திற்கு உருவகமாக இருக்கிறது என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். 

திருக்குரானின்படி இம்ரான்-அன்னா தம்பதியினருக்கு மர்யாம் (மரியாள்) பிறக்கின்றார். மர்யாம் பிறந்தவுடன் தன் குழந்தைக்காக கடவுளுக்கு நன்றி செலுத்தும் அன்னா, அந்தக் குழந்தையின்மேல் சாத்தானின் நிழலே படாமல் இறைவன் காத்தருள வேண்டும் என்று மன்றாடுகின்றார். 

மரியாளின் பிறப்பு மேலே நாம் கண்ட மூன்று விவிலியப் பண்புகளையுமே கொண்டிருக்கிறது. பெற்றோர்களின் வயது தடையாக இருக்க, அந்தத் தடையைத் தகர்த்து, இறைவனின் வாக்குறுதியின் கனியாகப் பிறக்கின்றார் மரியாள். மற்றொரு பக்கம், மரியாளின் பிறப்பு சாதாரணமாகத் தெரிந்தாலும், அவர் அற்புதமான முறையில் பாவத்தின் நிழல் படாமல் பாதுகாக்கப்படுகின்றார். 

இந்தப் பெண் குழந்தையின் பிறப்பு நமக்குச் சொல்வது என்ன?  ஷேக்ஸ்பியர் தன் 'பன்னிரண்டாம் இரவு' (பகுதி 2, காட்சி 5) நாடகத்தில் மூன்று வகையான பிறப்பை அல்லது மனிதர்களைப் பற்றிச் சொல்கின்றார்:  'சிலர் பிறக்கும்போதே மேன்மையானவர்களாய்ப் பிறக்கின்றனர், சிலரின் மேல் மேன்மை திணிக்கப்படுகிறது, சிலர் மேன்மையை தாங்களாகவே அடைகின்றனர்!' 

சிம்சோன், சாமுவேல் போன்றோர் பிறக்கும்போதே மேன்மையானவர்களாய்ப் பிறக்கின்றனர். மோசே, எசேக்கியா, திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசுவின் மேல் மேன்மை திணிக்கப்படுகிறது. மரியாள் தானாகவே மேன்மையை அடைகின்றார். 

இதை அப்படியே சதுரங்க ஆட்டத்தின் உருவகமாக சொல்ல வேண்டுமென்றால், மேன்மையாகவே பிறப்பவர்கள் சதுரங்க ஆட்டத்தின் யானை, குதிரை, மந்திரி, இராணி போன்றவர்கள். இவர்கள் கட்டத்தின் எங்கும் தாங்களாகவே பாதையை அமைத்துக் கொண்டு செல்லலாம். மேன்மை தங்கள்மேல் திணிக்கப்படுபவர்கள் சதுரங்கத்தில் இராஜா போன்றவர்கள். இப்படி ஒரு கட்டம், அப்படி ஒரு கட்டம் என்றுதான் இவர்களால் நகர முடியும். ஆனால், இவர்கள் இல்லையென்றால் ஆட்டம் முடிந்துவிடும். மேன்மையை தாங்களாகவே அடைபவர்கள் சிப்பாய்கள் போன்றவர்கள். ஒவ்வொரு கட்டமாகத்தான் இவர்கள் முன்னேறிச் செல்ல முடியும். ஆனால், இப்படி முன்னேறும் அவர்கள் கட்டத்தின் அடுத்த முனையைத் தொட்டுவிட்டார்கள் என்றால் இவர்களைப்போல பலசாலிகள் சதுரங்க ஆட்டத்தில் வேறு யாரும் இல்லை. 

தன் பிறப்பு, வளர்ப்பு, திருமணம், தாய்மை, இயேசுவோடு உடனிருப்பு, திருத்தூதர்களுக்குத் துணை என்று ஒவ்வொரு கட்டமாக நகர்ந்த மரியாள், விண்ணிற்கும், மண்ணிற்கும் அரசியாய் இன்று மேன்மையடைந்து நிற்கின்றார். 

நம் பிறப்பு ஒரு வரலாற்று விபத்து அல்ல. 'நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம்திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றவதற்கு முன்பே கடவுள் தம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்' (எபே 1:4). மரியாளைத் தெரிந்து கொண்ட கடவுள் நம்மையும் தெரிந்து கொண்டுள்ளார். நம் அழைப்பு நிலையில் நாம் நம் பிறப்பின் மேன்மையை அடைதலே நம் பிறப்பின் நோக்கம்.  நம் மேன்மையைக் காணும் கடவுள் நம்மைக் கரங்களில் ஏந்தியவாறு சொல்வார்: 'நமக்கு பையன் பொறந்திருக்கு!'
'நமக்கு பொண்ணு பொறந்திருக்கு!'

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org