முதல் வாசகம்
தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 22: 19-23
உன்னை உன் பதவியிலிருந்து இறக்கி விடுவேன்; உன் நிலையிலிருந்து கவிழ்த்து விடுவேன். அந்நாளில் இல்க்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து, உன் அங்கியை அவனுக்கு உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன்.
எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதா குடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான். அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன். அவன் திறப்பான்; எவனும் பூட்ட மாட்டான். அவன் பூட்டுவான்; எவனும் திறக்க மாட்டான். உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்; அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
முதல் வாசகம்
பிற இன மக்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 56: 1,6-7
ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைப்பிடியுங்கள்; நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும்.
ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்புகூர்வதற்கும், அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொண்டு ஓய்வு நாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, தம் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப் பலிகளும் என் பீடத்தின்மேல் ஏற்றுக் கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய `இறைமன்றாட்டின் வீடு' என அழைக்கப்படும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
ஆகஸ்டு 15
தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா
முதல் வாசகம்
பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 11: 19ய; 12: 1-6,10யb
விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடுந்துயருடன் கதறினார்.
வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்பு மயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன. அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப்போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண், பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்றுகொண்டிருந்தது. எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது. அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: ``இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன.''
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
திருப்பயணம் குறித்த விபரங்கள்
ஆக.08,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மாதம் 13ம் தேதி தொடங்கும் தென் கொரியாவுக்கான திருப்பயணம் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.
இம்மாதம் 13 முதல் 18 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் தென் கொரியாவுக்கான திருப்பயணம், அவரின் மூன்றாவது வெளிநாட்டுத் திருப்பயணமாகவும், இந்த ஆசிய நாட்டுக்கு ஒரு திருத்தந்தை மேற்கொள்ளும் மூன்றாவது திருப்பயணமாகவும் அமைகின்றது.
1984 மற்றும் 1989ம் ஆண்டுகளில், தென் கொரியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் தென் கொரியாவில் ஐந்து நாள்கள் தங்கி 6வது ஆசிய இளையோர் மாநாட்டில் கலந்து கொள்வார்.
அதோடு, தென் கொரியாவுக்கு கிறிஸ்தவ விசுவாசத்தை முதலில் கொண்டுவந்த அந்நாட்டின் பெருமளவான மறைசாட்சிகளையும் இத்திருப்பயணத்தின்போது அருளாளர் நிலைக்கு உயர்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், 1953ம் ஆண்டில் முடிவடைந்த கொரியச் சண்டையில் இரண்டாகப் பிரிந்த இரு கொரிய நாடுகளுக்கு இடையே அமைதி மற்றும் ஒப்புரவை ஊக்குவிக்கும் முக்கிய நோக்கத்தையும் இத்திருப்பயணம் கொண்டுள்ளது.
திருத்தந்தையின் தென் கொரியத் திருப்பயணம் குறித்த விபரங்களை பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்டார் திருப்பீட செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி.
இம்மாதம் 13ம் தேதி உரோம் நேரம் மாலை 4 மணிக்குப் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 11 மணி 30 நிமிடங்கள் விமானப்பயணம் செய்து 14ம் தேதி உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு, செயோல் நகரைச் சென்றடைவார். இந்த 5 நாள் திருப்பயணத் திட்டங்களை நிறைவுசெய்து 18ம் தேதி மாலை 5.45 மணிக்கு உரோம் வந்து சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
புனிதரும் மனிதரே : அருள்பணியாளர்களின் வாழ்வால் ஈர்க்கப்பட்டவர்
1790ம் ஆண்டில் பிரான்சில் புரட்சி வெடித்த போது அதிகாரிகள் ஆலயங்களைத் தகர்த்தனர், அருள்பணியாளர்களைக் கொலை செய்தனர். இந்த ப்ரெஞ்ச் புரட்சி சமயத்தில் திருப்பலியில் கலந்துகொள்வது சட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும், இரகசியமாக நடக்கும் திருப்பலிகளில் கலந்து கொள்வதற்காக ஜான் மரிய வியான்னி என்பவர் வெகு தூரம் பயணம் செய்தார். இவர் தனது 13வது வயதில் முதன்முதலாக திருநற்கருணை வாங்கினார். அந்தத் திருப்பலிகூட, அந்த அறையின் வெளிச்சம் வெளியே தெரியாதபடிக்கு, கதவு சன்னல்களை மூடிக்கொண்டு நிகழ்த்தப்பட்டது. ஏனெனில் தலைமறைவாக வாழ்ந்த அருள்பணியாளர்கள் திருவருள்சாதனங்களை இவ்வாறுதான் நிறைவேற்றினர். மிகவும் ஆபத்தான நிலையிலும் அருள்பணியாளர்கள் துணிச்சலுடன் மறைப்பணியாற்றியது இளைஞர் வியான்னியை மிகவும் கவர்ந்தது. 1802ம் ஆண்டில் பிரான்சில் கத்தோலிக்கத் திருஅவை மீண்டும் தன் பணியைச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது. குருத்துவ வாழ்வைத் தேர்ந்துகொள்ள விரும்பிய வியான்னி, படிப்பில் கவனம் செலுத்தினார். ப்ரெஞ்ச் புரட்சியால் இடையில் இவரது படிப்பு தடைபட்டதால் இலத்தீன் படிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டார். ஆயினும் குருத்துவ வாழ்வுமீது வியான்னி கொண்டிருந்த ஆர்வத்தைக் கண்ட அருள்பணி பல்லே அவர்கள் இவருக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்தார். பிரான்சின் பேரரசராகத் தன்னை அறிவித்துக்கொண்ட நெப்போலியன், இஸ்பெயினை எதிர்த்துப் போரிடுவதற்கு, நாட்டின் இளைஞர்களைக் கட்டாயமாகப் படையில் சேர்த்தார். இதனால் 1809ம் ஆண்டில் வியான்னி படையில் சேர்ந்தார். இதற்கு இரு நாள்கள் கழித்து உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வியான்னி. குணமாகிய பின்னர் Roanne படைப்பிரிவுக்கு அனுப்பப்பட்டபோது ஒருநாள் ஆலயத்தில் செபம் செய்யச் சென்றார். அங்கிருந்த விசுவாசிகள் கூட்டத்தில் கலந்து தப்பினார். பின்னர் Claudine Fayot என்ற கைம்பெண்ணிடம் தஞ்சம் புகுந்தார். தனது பெயரையும் ஜெரோம் என மாற்றிக்கொண்டார். படைவீரர்கள் இவரைத் தேடிவந்தபோது பாறையின் இடுக்கில் மறைந்திருந்து தப்பினார் வியான்னி. படையிலிருந்து தப்பியவர்களுக்கு 1810ம் ஆண்டில் பொது மன்னிப்பை அறிவித்தார் பேரரசர். அதன் பின்னர் வியான்னி பள்ளிக்குச் சென்றார். 1815ம் ஆண்டில் குருவானார். 230 பேரே வாழ்ந்த ஆர்ஸ் நகருக்கு இவரைப் பங்குக் குருவாக அனுப்பினார் ஆயர். தனது தூய வாழ்வால் அனைத்து மக்களும் போற்றும் வகையில் வாழ்ந்த அருள்பணி ஜான் மரிய வியான்னி அவர்கள், மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்குப் பாதுகாவலர். இவர் 1859ம் ஆண்டு ஆகஸ்ட் 4 தேதி தனது 73வது வயதில் இறந்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி