Get Adobe Flash player

இறை மன்னிப்பைப் பெறும் புனித தவக்காலம்!

நன்றி : http://www.thinakaran.lk/2010/02/18/_art.asp?fn=r1002182

 

கிறிஸ்தவர்களுக்கு தவக்காலம் மிகவும் முக்கியமான ஒரு காலம். சாம்பல் புதன் தொடங்கி உயிர்ப்பு பெருநாள் வரை இந்த தவக்காலம் அமைகிறது.

கிறிஸ்தவர்கள் தாங்கள் வாழும் வாழ்க்கையை அலசி ஆராய்ந்து பார்த்து, அவ்வாழ்வில் உள்ள குறைகளை, தீமைகளை, பாவங்களை எல்லாம் எண்ணி, மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு வேண்டும் ஒரு புனிதமான காலம் இது. இவ்வாறாக வாழ்வை அலசி ஆராய்ந்து பார்க்க செபமும், தவமும் உதவி புரிகின்றன.

தவம்- இது எல்லா மதத்தினருக்கும் பொதுவானது. இந்து சமயத்தில் விரதம் இருப்பார்கள். இஸ்லாமியர்கள் ரமழான் நோன்பு இருப்பார்கள், பெளத்தர்களும் ‘போயா’ என்றழைக்கப்படும் பெளர்ணமி நாட்களில் உண்ணாநோன்பு இருந்து வழிபடுவார்கள். உணவைக் குறைத்து உடலை வருத்தும்போதுதான் ஒருவன் தன்னிலை உணர்வு பெறுகிறான்.

அதுபோலவே இத்தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் தாம் வாழும் வாழ்க்கையை உணர்ந்து அறிந்திட உண்ணாநோன்பு இருக்கிறார்கள். மத சட்டங்களின்படி குழந்தைப் பருவம் தாண்டியவர்கள், முதுமை மற்றும் நோயினால் வருந்தாதவர்கள் வருடத்திற்கு இரண்டு நாட்கள், அதாவது சாம்பல் புதன் மற்றும் பெரிய வெள்ளிக்கிழமை அன்று கட்டாயம் உண்ணாநோன்பு இருக்க வேண்டும்.

ஆனாலும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், இன்னும் சிலர் இத்தகவக்காலத்தின் நாற்பது நாட்களும் உண்ணாநோன்பு இருப்பார்கள்.

கடவுளோடு மனிதனை இணைப்பது செபம் கடவுளை மட்டுமே நினைத்து, கடவுளே கதி என்ற நிலையில் தனது துன்பம், நோய், வருத்தம் எல்லாவற்றையும் அழுகையோடு கடவுள் முன் முறையிடுவது ஒரு வகையான செபம். துன்பம் சூழ்ந்த நிலையில் எல்லா மனிதருக்கும் இயல்பாக எழக்கூடிய ஒரு நிலைதான் இவ்வகையான செபம். இன்பமோ, துன்பமோ, மகிழ்ச்சியோ, அழுகையோ எல்லா மனநிலையிலும், எல்லா சூழ்நிலைகளிலும் கடவுளை நினைத்து தியானிப்பது வேறு வகையான செபம்.

செபம் செய்கிறபோது வாழ்வின் ஓட்டத்தில் அலைபாயும் மனதை ஒரு முகப்படுத்தி, தனது வாழ்க்வை நினைத்து, அதையே கடவுள் முன் பலியாக, படையலாக படைத்து அருள்வரம் பெறுகிறோம். அந்த அருள் வரம் மனிதனை மனிதனாக வாழச் செய்யும். ஏன் மனிதரை தெய்வமாகவே மாற்றும் அதைத்தான் முக்திநிலை என்பர்.

மனித வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்களை, பிரச்சினைகளை எதிர்கொள்ள அந்த அருள்வரம் உதவுகிறது. பிரச்சினை,துன்பங்களிலிருந்து விடுபட்டு மகிழவும், நிறைவுதரும் வாழ்க்வை வாழவே எல்லா சமயத்தவரும் விரும்புகின்றனர். அத்தகையவாழ்வை எதிர்நோக்கியே கடவுளை நினைக்கின்றனர். புனித தலங்களுக்கு பாதயாத்திரை செல்கின்றனர்.

இந்த அருள் வரத்தை செபம் மற்றும் தவத்தின் மூலமாக மட்டுமல்ல, பகிர்வின் நிறைவும் நமக்கு கிடைக்கிறது. நாம் பகிர்வது பணமோ, உணவோ, வேறெதும் பொருளோ என்றாலும், உண்மையில் பகிரப்படுவது மகிழ்வும் நிறைவும்தான். ‘பெறுவதில் அல்ல கொடுப்பதில்தான் உண்மையான மகிழ்வு உள்ளது’ என்று இயேசு கூறுகிறார்.

மனித வாழ்வுக்கு தேவையான அருள்வரங்களை கடவுளிடமிருந்து நிறைவாகப் பெற செபம், தவம் அவசியம் கடவுள் தன்மையோடு விளங்கிய இயேசு கிறிஸ்து, மனிதராக அவதரித்து, மனிதர்களால் தவறாக தீர்ப்பிடப்பட்டு, கொடூரமான சிலுவைச் சாவின் மூலம்தான் இயேசு தீமையின் மீதும், பாவத்தின் மீதும் வெற்றி கொண்டார்.

மூன்றாம் நாள் உயிர்பெற்று எழுந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. அந்த பாடுகளைப் பற்றி தியானித்து செபம், தவம் மற்றும் இந்த தகவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் செபத்தில் தியானிக்கும் இயேசுவின் பாடுகள், மரணம் இவற்றை அடையாளப்படுத்துவது சிலுவை. கிறிஸ்தவர்களுக்கு ஒரு முக்கியான சின்னம், பாவ வாழ்வில் மீட்பின் சின்னம் அது. ஆகவே தான் எல்லா கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இச்சிலுவை முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

இயேசுவின் வாழ்வு சிலுவை மரணத்தோடு முற்றுப் பெறவில்லை. இயேசு உயிர்; பெற்று எழுந்ததால்தான் இன்றும் கிறிஸ்தவ மதம் வாழ்கிறது. அந்த உயிர்ப்பையும் எடுத்துக்காட்டும் விதத்தில் வித்தியாசமான சிலுவையை வடிவமைத்து மக்களின் பக்தியை தூண்டும் வண்ணம், ஆலயங்களில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. (ஸ)

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org