Get Adobe Flash player

26 பிப்ரவரி 2017: ஆண்டின் பொதுக்காலம் 8ஆம் ஞாயிறு
வாசகங்களுக்கு விளக்கங்கள்
அருளுபவர் : அருட்பணி இயேசு கருணாநிதி

I. எசாயா 49:14-15

II. 1 கொரி 4:1-5

III. மத் 6:24-34

கவலைப்படுவதால்...

செல்வத்தைக் குறிக்கும் ஆங்கில மற்றும் கிரேக்க வார்த்தை 'மேமன்'. இதன் வேர்ச்சொல் 'மன்' என்ற அரமேய வார்த்தை. இந்த வார்த்தைக்கு, 'நான் நம்பும் கைத்தடி' என்பது பொருள். அதாவது, என் வாழ்வைத் தாங்கும் கைத்தடியாக நான் எதையெல்லாம் கருதுகிறேனோ, அதுதான் என் செல்வம். 'இந்தக் கைத்தடி வேண்டாம். ஏனெனில் நான் உன்னையே தாங்கிக் கொள்கிறேன்' என்கிறார் கடவுள்.'செல்வமா? கடவுளா?' 'கைத்தடியா? கட்டின்மையா?'

 

இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடுமுன் சில வினாக்களை எழுப்புவோம்:

அ. 'நீங்கள் இரு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாது' என்று சொல்லும் இயேசு, அந்த இரு தலைவர்களாக, 'செல்வத்தையும் கடவுளையும்' முன்வைக்கின்றார். இவர்கள் இருவரும் இரு தலைவர்கள் என்றால், இவர்கள் இருவரும் சமமானவர்களா?

ஆ. 'பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை' என்கிறது திருக்குறள். பொருளையும், அருளையும் ஒன்றாக வைத்துப் பார்த்த நம் தமிழ் மரபில், 'அறம், பொருள், இன்பம்' என முப்பால் பருகிய நாம், செல்வத்திற்கும், கடவுளுக்கும் இடையேயான கோட்டை எப்படி வரைவது?

இ. 112 அடிக்கு வைக்கின்ற சிவன் சிலையோ, ஒரு இலட்சம் பேர் அமர்ந்து பேசுகின்ற குணமளிக்கும் கூட்டமோ, ஏன் அன்றாடம் வைக்கும் திருப்பலியும்கூட நமக்கு உணவு தருவதில்லை. நம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில்லை. 'பசித்த வயிறு உள்ளவனுக்கு பக்தி வராது' என்பது நம் முதுமொழி. முதலில் பசி தீர்ந்தால்தான் அறிவியல், கலை, ஓவியம், அரசியல், ஆன்மீகம் என மனிதனுக்கு நேரம் இருக்கும். தொடக்கத்தில் வேட்டை சமுதாயத்தில் இருந்த மனிதனின் நாள் முழுவதும் வேட்டையாடுவதிலும், இரவு முழுவதும் தூங்குவதிலும் கழிந்தது. காலப்போக்கில் அவன் சேமிக்கத் தொடங்கியபோது, மற்றவர்களின் உழைப்பை சுரண்டத் தொடங்கியபோதுதான் அவனுக்கென்று நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில்தான் அவன் குகை ஓவியங்கள் வரைந்தான், கடவுள் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான். ஆக, அடிப்படை கவலைகள் தீர்ந்தால்தான் கடவுள்மேல் நம்பிக்கை பிறக்கும்.

112 அடி சிவன் சிலையைத் திறந்து வைக்க வரும் பாரதப் பிரதமர் அவர்கள் அதே கோவை பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திப்பாரா? 104 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பிய சாதனையில் மிதக்கும் அவர், நம் நாட்டில் எல்லாருக்கும் குடிக்கத் தண்ணீர் என்பதை உறுதி செய்வாரா? 'உண்ண உணவும், குடிக்க தண்ணீரும் இல்லாதபோது' சிவன் சிலையை 112 அடி கட்டினால் என்ன? ஆயிரம் அடி கட்டினால் என்ன? 104 செயற்கைக்கோள்களை விட்டால் என்ன? ஆயிரம் விட்டால் என்ன?ள

காலை எழுந்தவுடன் காய்ச்சலாய் கிடக்கும் குழந்தைக்கு மருத்துவம், கணவனுக்கு சாப்பாடு, தனக்கு சாப்பாடு, பஸ் பயணம், நெருக்கடி, டென்ஷன் என ஓடிக்கொண்டிருக்கும் சராசரி குடும்பத் தலைவியிடம் போய், 'வானத்துப் பறவைகளைப் பார், வயல்வெளி மலர்களைப் பார்' என்று சொன்னால் கண்டிப்பாக கையில் இருக்கும் கரண்டியைக் கொண்டு அடித்துவிடுவார். 

இன்று பார்ப்பதற்கு வானத்துப் பறவைகளும் இல்லை. வயல்வெளி மலர்களும் இல்லை. அது வேற விடயம். 

4. இயேசு காலத்துக் கவலைகள் லிஸ்ட் மிகவும் சிறியதாக இருக்கிறது. அந்தக் கால மனிதர்களுக்கு மூன்றே கவலைகள்தாம்: 'எதை உண்பது, எதைக் குடிப்பது, எதை உடுப்பது?' ஆனால் இன்று நமக்கு நிறைய கவலைகள். என்ன பேசுவது? யாரிடம் பேசுவது? எந்த நெட்வொர்க்கில் பேசுவது? எந்த ஃபோன் வாங்குவது? எந்த டிவி வாங்குவது? எங்கே சென்று படிப்பது? என்ன வேலை செய்வது? எல்லாம் நல்லா நடந்தாலும் நமக்கு மேலிருக்கும் அரசியல் தலைவர்கள் நம்மை குழப்பி விடுகின்றனர். அரசியலும், பொருளாதாரமும் நம்மை இன்னும் அதிக கவலைப்பட வைக்கின்றது.

இப்படி இருக்க, இயேசுவின் 'கவலைப்படாதீர்கள்' போதனையை நாம் எப்படி புரிந்து கொள்வது?

நிற்க.

காலங்காலமாக மனிதர்கள் கடவுளின் இடத்தில் செல்வத்தை மட்டுமல்ல, பெயர், புகழ், பதவி, பாராட்டு, ஆகியவற்றையும், அத்தோடு சேர்த்து கவலை, கண்ணீர் ஆகியவற்றையும் வைத்திருக்கின்றனர். இயேசுவின் போதனை இதுதான்: 'நீ பிளவுபட்ட மனத்தோடு இருக்கக்கூடாது!' செல்வம் பின்னால் போக வேண்டாம் என சொல்லவில்லை. செல்வம் பின்னால் போகிறாயா. அத்தோடு மட்டும் போ. அதை விட்டுவிட்டு, 'கடவுளும் வேண்டும் கொஞ்சம்' என்று சஞ்சலப்படாதே என்கிறார். ஆக, கடவுள் பின்னால் சென்றாலும், செல்வம் பின்னால் சென்றாலும் முழு உள்ளத்தோடு - அதாவது, பிளவுபடா உள்ளத்தோடு - செல்வது அவசியம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசாயா 49:14-15) 'எருசலேம் மீட்கப்படுதல்' என்ற பின்புலத்தில் இறைவாக்கு உரைக்கும் எசாயா, கடவுள் மறந்துவிட்டாரா? அல்லது மறக்கவில்லையா? என்ற பிளவுபட்ட நிலையை சரி செய்கின்றார். 'மறத்தல்' என்பது விவிலியத்தில் மிக முக்கியமான வார்த்தை. 

காலையில் பால் வாங்கப் போகும்போது காசை மறந்து வைத்துவிட்டுச் செல்வதுபோலவோ, அல்லது விடிய விடிய படித்துவிட்டு விடிந்தவுடன் எழுதும் தேர்வில் விடையை மறைந்துவிடுவது அன்று. எபிரேயத்தில் 'மறத்தல்' என்பது 'புறக்கணித்தல்'. நாம் எதைப் புறக்கணிக்கிறோமோ அதைத்தானே மறந்துவிடுகிறோம். இஸ்ரயேல் மக்கள் கடவுளை மறந்தனர். அவர்களும், அவர்களின் ஆட்சியாளர்களும் வேற்று தெய்வங்களுக்குப் பணிவிடை செய்தனர். ஆகவே, கடவுளும் அவர்களை மறந்துவிட்டார். பாபிலோனிய நாடுகடத்தலுக்கு அவர்களை விட்டுவிட்டார். இருந்தாலும், கடவுளின் மற்றொரு தன்மை - அவரின் தாய்மை - அவரின் தண்டித்தலை விட மேலோங்கி நிற்கிறது. 

'நான் உன்னை மறக்கவில்லை' இரண்டு உருவகங்கள் வழியாக சொல்கிறார் கடவுள்:

'பால்குடிக்கும் தன் மகவை தாய் மறப்பாளோ?'

'கருத்தாங்கியவள் தன் பிள்ளையை குனிந்து பார்க்காமல் இருப்பாளோ?'

இரண்டு உருவகங்களும் ஒன்றிற்கொன்று தொடர்புடையவை. நேரத்தின் அடிப்படையில் பார்த்தால் இரண்டாவது உருவகம்தான் முதலில் வர வேண்டும். கருவுற்றவள் தன் வயிற்றைப் பார்த்துக்கொண்டே இருப்பார். குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப அவளின் வயிற்றிலும் மாற்றம் ஏற்படும். அந்த வயிற்றின் வளர்ச்சி கண்டு அவள் தன் நடை, வேகம், உணவு, உடை என அனைத்திலும் மாறிக்கொண்டே இருப்பாள். மேலும், 'குனிந்து பார்த்தல்' என்பது இரக்கம் காட்டுதலையும் குறிக்கும். மேலிருக்கும் ஒருவர் கீழிருக்கும் மற்றவர் மேல் காட்டும் அன்புதான் இரக்கம். வயிற்றில் இருக்கும் குழந்தை வலிமையற்றது. எந்த விதத்திலும் அது தன்னைக் காத்துக்கொள்ள முடியாது. அனைத்திற்கும் தன் தாயை மட்டுமே அது சார்ந்து இருக்கும். அப்படிப்பட்ட வலுவற்ற ஒன்றை தன் இரக்கத்தால் தாங்குகின்றார் தாய். இஸ்ரயேல் மக்களும் பாபிலோன் என்னும் வயிற்றில் சிறைப்பட்டுக்கிடந்தாலும் அவர்களைக் குனிந்து பார்க்கின்றவராக இருக்கின்றார் யாவே இறைவன்.

'பால்குடிக்கும் மகவு' மற்றொரு வலுவின்மை. தன்னால் வீறிட்டுக் கத்தி அழும் அளவிற்கு அதன் தொண்டையும் நாக்கும் வளர்ச்சி பெறுவதில்லை. அதன் மெல்லிய சத்தத்தையும் கேட்டு ஓடிவருவபவள் தாய். பாபிலோனியாவில் இருந்து இஸ்ரயேல் மக்கள் எழுப்பும் மெல்லிய சத்தமும் இறைவனின் காதுகளை எட்டுகிறது.

(இப்படி இரக்கமே வடிவான தாயின் பெயரைத்தான் நாம் அரசியலில் உள்ள குற்றவாளிகளுக்குச் சூடி அலங்காரம் செய்கின்றோம் என்பது தலைக்குனிவு).

மேற்காணும் இரண்டு தாய்மார்களும் கூட தன் குழந்தையை மறந்துவிடலாம். ஆனால் 'நான் உன்னை மறக்கமாட்டேன்' என்கிறார் ஆண்டவராகிய இறைவன். தொடர்ந்து, 'இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன்' என்றும் சொல்கின்றார்.

இஸ்ரயேல் மக்களின் உள்ளம் பிளவுபட்டு நின்றது. அவர்கள் அனுபவித்த கஷ்டமும், சிறைவாசமும், வேற்று நாட்டு வாழ்வும் அவர்களை இந்த நிலைக்குக் கொண்டு சென்றது. ஆனால், கடவுள் பிளவுபடா உள்ளம் கொண்டவர். 

இன்றைய இரண்டாம் வாசகத்தில் கொரிந்து நகர திருச்சபையில் நிலவிய பிளவுகளைக் கடிந்து கொள்ளும் பவுல், இதற்கான அதிகாரம் தனக்கு கடவுளிடமிருந்தே வருகிறது என்கிறார். மற்றவர்களும், தானும் தனக்குத் தரும் தீர்ப்பு தேவையில்லை எனவும், இறைவன் ஒருவரே தீர்ப்பிடுபவர் எனவும் சொல்கிறார் பவுல். மற்றவர்களின் தீர்ப்பை மனதில் கொண்டால் பவுல் அவர்கள் சார்பாக நடந்து கொள்ளவும், ஆள்பார்த்து செயல்படவும் வாய்ப்புக்கள் உண்டு. தனக்குத் தானே தீர்ப்பிட்டுக் கொண்டால் அது சில நேரங்களில் குற்றவுணர்வில் போய் முடியலாம். ஆக, தீர்ப்பை கடவுளுக்கு விட்டுவிடுகின்றார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது:

அ. கடவுளா? செல்வமா? (6:24)

ஆ. கவலை வேண்டாம் (6:25-34)

அ. கடவுளா? செல்வமா?

'எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது' என்பது இயேசு அறுதியிட்டு முன்வைக்கும் வாக்கியமாக இருக்கிறது. இயேசுவின் சமகாலத்தில் நிலவிய தலைவர்-அடிமை பின்புலத்தில்தான் இயேசு இந்த வாக்கியத்தைச் சொல்கின்றார். ஒரு அடிமை இரண்டு தலைவர்களுக்கு பணிவிடை செய்வதால் வரும் கஷ்டத்தை இயேசு நேரில் கண்டிருக்கும் அல்லது கேட்டிருக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவரை 'வெறுத்து,' மற்றவரை 'அன்பு செய்வார்,' என்றும், ஒருவரைச் 'சார்ந்து கொண்டு,' மற்றவரைப் 'புறக்கணிப்பார்' என்றும் இரண்டு இணைவு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் இயேசு. இங்கே 'வெறுப்பது,' 'அன்பு செய்வது,' 'சார்ந்திருப்பது,' 'புறக்கணிப்பது' என்பவை வெறும் உணர்வுகள் அல்ல. மாறாக, அவை செயல்கள். எப்படிப்பட்ட செயல்கள். ஒருவரைத் தேர்ந்து கொள்வதன், மற்றவரை தேர்ந்து கொள்ளாததன் செயல்கள். ஆக, கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்வது என்பது, எதை நாம் தேர்ந்து கொள்கிறோம் என்பதைக் குறிக்கிறது.

இயேசுவின் சீடர்கள் பிளவுபட்ட உள்ளம் கொண்டிருத்தல் கூடாது என்பதுதான் மலைப்பொழிவின் சாராம்சமாக இருக்கிறது. ஆக, இறைவனைத் தேர்ந்து கொண்டு செல்வத்தைப் புறக்கணிக்க வேண்டும். அல்லது செல்வத்தைத் தேர்ந்துகொண்டு இறைவனைப் புறக்கணிக்க வேண்டும். 50-50 என்ற மனநிலை அறவே தவிர்க்கப்பட வேண்டும்.

இது எப்படி சாத்தியம்? சாத்தியம் என்றாலும் எல்லா நேரத்திலும் சாத்தியமா?

இதை வெகு எளிதாக சொல்லிவிடலாம். ஆனால் வாழ்வியல் சூழலில் இதன் பொருளை வரையறுப்பது கடினமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டாக, இயேசுவின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்ளும் திருச்சபை மற்றும் அதன் தலைவர்கள் மற்றும் அதன் கண்காணிப்பாளர்கள் மேல் காலங்காலமாக வைக்கப்படும் குற்றச்சாட்டு அவர்களின் செல்வம் பற்றியதே. செல்வங்களைக் கொண்டு இவர்கள் பணி செய்கிறார்களா அல்லது பணி செய்வதால் செல்வம் சேர்க்கிறார்களா என்ற கேள்வி இன்னும் தொடர்கிறது. எம். ஆர். ராதா ஸ்டைலில் இதற்கு ஒரே விடைதான்: 'அதைப்பற்றி எல்லாம் நாம் பேசக்கூடாது.'

ஆ. கவலை வேண்டாம்

'ஆகவே,' என்ற வார்த்தை இதற்கு முன் இயேசு சொன்னதையும், இனி சொல்ல வருவதையும் இணைக்கிறது. இந்த வார்த்தைக்குப் பின் வரும் பகுதி இயேசு முன்னால் சொன்னதன் விளக்கமாக இருக்கிறது. 

'எதை உண்பது, குடிப்பது, உடுப்பது' என்ற கவலை வேண்டாம் என்றும், 'நாளைய தினம் பற்றிய கவலையே வேண்டாம்' என்றும் சொல்கின்றார் இயேசு. நாம் செல்வத்தை அடையவும், வைத்திருக்கவும், சேமிக்கவும் காரணம் மேற்காணும் கவலைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காகவே. நாம் உண்ண உணவும், குடிக்க தண்ணீரும், உடுக்க உடையும் தருவது நம் செல்வம். மேலும், 'நாளைய தினம்' பற்றிய கவலைகளுக்கு வடிகாலாய் இருப்பதும் நம் செல்வம். ஆக, மேற்காணும் கவலைகளிலிருந்து உங்களையே விடுவித்துக்கொள்ளுங்கள் என இயேசு சொல்வதன் பொருள், 'செல்வத்தை தேர்ந்துகொள்ளாதீர்கள்' என்பதுதான். செல்வத்தைவிட கடவுளின் பராமரிப்பு மிகப்பெரியது.

சீடர்கள் என்றும் கடவுளின் பராமரிப்பை நம்பி இருக்க வேண்டும் என்பதே இப்போதனையின் உட்பொருள்.

'கவலை கொள்ளாதீர்கள்' என்று இயேசு பயன்படுத்தும் சொல்லின் பொருள், 'எந்நேரமும் அது பற்றியே எண்ணிக்கொண்டிராதீர்கள்' என்பதுதான்.

கவலை என்பது ஒரு ராக்கிங் நாற்காலி போல. அதில் அமர்ந்து நாம் ஆடிக்கொண்டே இருக்கலாம். ஆனால், அது நம்மை எங்கும் கொண்டுசெல்வதில்லை. அதே இடத்தில்தான் நாம் இருப்போம். கவலைப்படும்போதும் இதுவே நடக்கிறது. நம் மூளை அதைப்பற்றி சிந்திக்கிறது. ஆனால், நாம் இருந்த இடத்திலேயே தான் இருக்கிறோம். கவலை நம்மை அடுத்த நிலைக்கு உந்தித் தள்ளாமல் ஒரு தேக்கநிலையை உருவாக்கிவிடுகிறது. கவலைகள் நம் மனதில் பிளவை ஏற்படுத்திவிடுகின்றன. 'இப்படி இருக்குமா?' 'அப்படி இருக்குமா?' என்று நம்மை அலைக்கழிக்கின்றன.

இதற்கு மாற்றாக எதை மனதில் இருத்த வேண்டும்? 'அவரது ஆட்சியையும் அதற்கு ஏற்புடையவற்றையும்' நாடுதல் வேண்டும்.

இன்றைய இறைவாக்குப் பகுதி வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

1. பிளவுபடா உள்ளம்

நாம் செய்யும் எதற்கும் 100 சதவிகித அர்ப்பணம் அவசியம். பொருள் ஈட்டுவது என்றாலும், கடவுளைத் தேடுவது என்றாலும் முழு அர்ப்பணம் அவசியம். இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்களில் இறைவனின் பராமரிப்பின்மேல் அசைக்க முடியாது நம்பிக்கை அவசியம். நம்பிக்கை குன்றிய நிலை என்பது பிளவுபட்ட நிலை. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது என்றாலும், அடுப்பறையில் காய்கறி வெட்டுவது என்றாலும் 100 சதவிகித அர்ப்பணம் அவசியம்.

2. நீங்கள் மேலானவர்கள்

'அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!' என்று சீடர்களுக்கு அவர்களையே அடையாளம் காட்டுகின்றார் இயேசு. ஆக, மேலானவர்களின் தேடல் மேலானவற்றை நோக்கியதாக இருக்க வேண்டும். நாம் வளர வளர நம் தேவை மேல்நோக்கி வளர்கின்றது. அதாவது, பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது புதிய பேனா வாங்குவது பெரிய தேவையாக இருக்கிறது. வளர்ந்தபின் புதிய கார் வாங்குவது பெரிய தேவையாக இருக்கிறது. மேலானவை பற்றி சிந்திக்கின்ற வேளையில் மேலானவை பற்றி கவலைப்பட வேண்டும். சின்னஞ்சிறியவற்றிற்கெல்லாம் நேரத்தை செலவழிக்கக் கூடாது.

3. உங்கள் விண்ணகத்தந்தை

தன் தந்தையை சீடர்களின் தந்தை என பகிர்ந்து உரிமை கொடுக்கின்றார் இயேசு. 'பிற இனத்தவரே இவற்றைத் தேடுவர்;' என்கிறார். ஆக, என் தந்தை என் தேவைகளைப் பார்த்துக்கொள்வார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வெறும் ஓர் உணர்வாக மட்டும் இல்லாமல், அடித்தள அனுபவமாக அது அமைய வேண்டும்.

4. கவலைக்கு வழி கிடைக்கும்

கவலையை சரி செய்ய சிறந்த மருந்து தள்ளிப்போடுவது. 'வாழ்க்கையில் நிறைய கவலைகள் இருக்கின்றன!' என புலம்பிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனிடம் இரண்டு பெட்டிகளைத் தருகிறது தேவதை. ஒரு பெட்டியில் 'நன்றி' என்றும், மற்றொன்று 'கவலை' என்றும் பெயரிடப்பட்டிருந்தது. 'தினமும் நல்லது நடந்தால் அதை எழுதி நன்றி பெட்டியில் போடு,' 'கவலை தருவது இருந்தால் அதை எழுதி கவலை பெட்டியில் போடு,' 'ஒவ்வொரு வார இறுதியிலும் அதைத் திறந்து நன்றி சொல் அல்லது கவலைப்படு' எனச் சொல்லி மறைகிறது தேவதை. இளைஞனும் எழுதிப் போட்டுக்கொண்டே வருகிறான். வார இறுதியில் திறக்கும்போது ஆச்சர்யம். நன்றிப் பெட்டி நிறைந்து வழிகிறது. கவலைப் பெட்டியில் ஒன்றும் இல்லை. ஏனெனில் அந்தப் பெட்டிக்கு அடிப்பகுதி இல்லை. 

'நாளைய கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும்' என்கிறார் இயேசு. இயேசுவின் இந்த வாக்குறுதி நமக்கு வாழ்க்கை பற்றிய நேர்முக பார்வையைத் தருகிறது.

5. தொல்லையே போதும்!

வாழ்க்கை தொல்லை இல்லாமல் இருக்கும் என இயேசு சொல்லவில்லை. மாறாக, 'அன்றன்றுள்ள தொல்லை அன்றைக்குப் போதும்' என்கிறார் இயேசு. ஆக, நம் இறைவேண்டல் கூட 'தொல்லை இல்லாத நிலை வேண்டும்' என்று இருக்கக் கூடாது. மாறாக, வருகிற தொல்லைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கேட்பதாக இருக்க வேண்டும்.

இறுதியாக, பிளவுபடா உள்ளம் ஒன்றே நாம் கேட்கும் வரமாகட்டும்!

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org