உள்ளத்தைத் திருத்தவே நாற்பது நாள் தவக்காலம்!
ரா.அருள் வளன் அரசு
நன்றி : விகடன்
Jesus 04

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததைக் கொண்டாடும் 'ஈஸ்டர் பண்டிகை'யின் போது, உலகமெங்கும் உள்ள கிறிஸ்துவ மக்கள் தங்களது குற்றங்குறைகளை மறந்து, மனம் திருந்தி, மனதளவில் புது மனிதராக உயிர்த்தெழ வேண்டும் என்பது ஐதீகம். இதன்  அடிப்படையிலேயே ஆண்டுதோறும் தவக்காலம் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி, 'சாம்பல் புதனு'டன் தவக்காலம் தொடங்குகிறது. இந்தத் தவக்காலத்தின் சிறப்புகள் மற்றும் கிறிஸ்தவ மக்கள் அனுசரிக்கவேண்டிய பண்பு நலன்கள் குறித்து, நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் தந்தை தஞ்சை டோமி.

தந்தை தஞ்சை டோமி  "தவக்காலம் துவங்கும் முதல்நாளில், தேவாலயங்களில் கூடியிருக்கிற பக்தர்களின் நெற்றியில், பங்கு தந்தையர்கள் சாம்பல் பூசி நற்செய்தி அறிவிக்கும் நிகழ்ச்சியே 'தவக்காலம்' தொடங்கியதற்கான அடையாளமாகக் கருதப்படுகின்றது. அன்று முதல் அடுத்துவரும் நாற்பது நாட்களுக்கு, கிறிஸ்துவ மக்கள் தங்கள் இல்லங்களில் எந்த ஒரு சுபகாரியங்களும் நடத்தாமல், மாமிச உணவுகளை உண்ணாமலும் தவ வாழ்வை மேற்கொள்கின்றனர்.

இந்தத் தவக்காலம் உடலை வருத்திக்கொள்வதற்காக அல்ல. உள்ளத்தைத் திருத்திக்கொள்ளவே அனுசரிக்கப்படுகிறது. இவ்வுலகின் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் அளவற்ற அன்பையும் இரக்கத்தையும் பெறவும், மனிதர்களின் தவறுகளை அவர் மன்னித்து  இறைவாஞ்சையைத் தியானிக்கவும், இறைவன் தரும் அருட்காலம் இது.

* இந்த நாட்களில், ஜெபம், தவம் ஆகியவற்றின் மூலம் நம்மையே நாம் தயார்படுத்திக்கொள்ள காலம் கனிந்து நிற்பதை நாம் உணரவேண்டும்.

* இதுவரை விரோதியாகப் பார்க்கப்பட்டவர்கள் எல்லாம், இன்றைய நாள் முதல் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த முற்படவேண்டும்.

* பிறர் உதவி என்று கேட்டால், எந்தக் காரணமும் சொல்லி, நகராமல் உடனே செய்து முடிக்க வேண்டும்.

* நாமாக முன்வந்து உணவு தானம் உள்ளிட்ட பல்வேறு பொருள் உதவிகளையும் செய்ய வேண்டும்.

* கிறிஸ்துவுக்குள் உண்மையுள்ள பிரியமுள்ளவராக இருக்க  நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தவக்காலத்தில் நோன்பு இருக்கும் பழக்கம் ஆதித் திருச்சபை மரபிலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. கி.பி. 313-ல் தவக்காலம் ஒரு வரைமுறைக்கு வந்ததாக விவிலியம் கூறுகிறது. இந்த நாற்பது என்ற எண், விவலியத்தில் ஆன்மிகப் பொருள் மிகுந்த எண்ணாகக் கருதப்படுகிறது.

நோவா காலத்துப் பெருவெள்ளம் நாற்பது பகலும், நாற்பது இரவும் நீடித்தது. சீனாய் மலையில் பத்துக் கட்டளை பெறும் முன் மோசே நாற்பது பகல், நாற்பது இரவு உண்ணாமல் கடவுளுடன் இருந்தார். ஒரேப் மலையில், கடவுளுடன் நாற்பது பகல்,  நாற்பது இரவுகள் எலியா நடந்துள்ளார்.

இயேசு கிறிஸ்துகூட, தன் பொதுவாழ்வில்  தனது பணியைத் தொடங்கும் முன், பாலைவனத்தில் நாற்பது பகலும், இரவும் நோன்பிருந்து பிரார்த்தனை செய்தார். இப்படியான விவிலிய வார்த்தைகள் மற்றும் திருச்சபை மரபுப் பின்னணிகள் நமது நாற்பது நாட்கள் தவக்கால நோன்பைப் பொருள் உள்ளதாக்குகின்றன.

இயேசு

இந்த நாட்களில் பிறருக்கு நாம் செய்யும்  அன்பான செயல்களைச் செய்கிறபோது, வலக்கை செய்வதை, இடக்கை அறியாவண்ணம் செய்யவேண்டுமென இயேசு கிறிஸ்து வலியுறுத்துகிறார். இந்த தவக்காலத்தில் நமது பாவங்களுக்குப் பரிகாரம் தேடி, அருள் வாழ்வில் சிறந்து, வாழ்வைப் புதுப்பிக்க, சிலுவைப் பாதையும், நற்கருணை முன் அமர்ந்து செய்யும் தியானமும் உதவி புரிகின்றன. இவற்றுடன் இந்த நாற்பது நாட்களும் தேவாலயங்களில் பெறப்படும் காணிக்கைகள் அனைத்தும் பசி மற்றும் பட்டினியால் வாடும் ஏழைகளுக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்படும்.

தவக்காலத்தில் வரும் ஆறு வெள்ளிக்கிழமைகளிலும், அனைத்து தேவாலயங்களிலும் இயேசு கிறிஸ்துவின் திருச்சிலுவைப் பயணங்களை நினைவுகூரும் 'சிலுவைப் பாதை' பவனியும், அதைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் அரங்கேறும். பெரும்பாலான கிறிஸ்தவர்கள், இந்த நாற்பது நாளும் விரதமிருந்து, இயேசுவின் சிலுவைப் பாடுகளை ஏற்று, அதன்படி நடப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுவரை  உண்மையான கிறிஸ்தவர்களாக வாழத் தவறிவிட்டவர்கள்,  நல்வாழ்வுக்கு மாற, இறை நம்பிக்கையில் ஆட்பட முயல வேண்டும்.

மனித மாண்பை மதித்தல், மனித நேயத்தில் வளர்தல், நீதிக்காக உழைத்தல், ஏழைகளுடன் பகிர்தல், பகைவருடன் ஒப்புரவாகுதல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.  

இயேசுவின் சிலுவைப் பாடுகள், இறப்பு, உயிர்ப்புடன் இணைந்து தியானித்து மனந்திரும்ப வேண்டும். இனியாவது நம் இறை நம்பிக்கையைப் புதுப்பித்து உடல், மனம், ஆன்ம நலத்துடன் வாழ முற்பட வேண்டும். மேன்மைமிக்க வாழ்வை வாழப் பழக வேண்டும். வாழ்வுக்கு அர்த்தம் தர வேண்டும்!"