Get Adobe Flash player

தூய மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா 15 08 2017

பார் போற்றும் பரமனை பாவக்கறையில்லாமல் ஈந்த மரியன்னையின் விண்ணேற்புப் பெருநாளில், பாரதம் சுதந்திரம் பெற்ற நாளை நினைந்து, நன்றி கூற வந்துள்ள உங்கள் அனைவரையும் இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு அன்போடு வாழ்த்தி வரவேற்கின்றோம்.

            நாட்டுப்பற்றினால் நாட்டின் விடுதலைக்காக, தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகச் செம்மல்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தி, நாட்டின் மீது பற்றுக் கொள்ளாமல், நல்லதொரு குடிமக்களாக வாழாமல் இருந்த தருணங்களுக்காக மனம் வருந்தி, இறைவனிடத்தில் மன்னிப்பு வேண்டுவோம்.

            இன்றைய வாசகங்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் அன்னையான தூய கன்னிமரியைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன.

            அன்னை ஓர் ஆலயம் என்று சொல்கிறோம். நமது திருவிவிலிய மரபுப்படி திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகம்  6:19 இல் “உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில்..”  என்று கூறியுள்ளபடி நாம் அனைவருமே தூய ஆவி தங்கும் ஆலயமாக இருக்கின்றோம்.  அன்னை மரியாள் தனது உடலை தூய ஆவி தங்கும் கோவிலாக மாற்றியதாலே கன்னிமை குன்றாமல் இறைமகனை ஈன்றெடுத்தாள். நாம் நமது உடலை எந்த விதத்தில் இறைவன் தங்கி வாழும் ஆலயமாக மாற்றியுள்ளோம். சிந்திப்போம் இன்றையத் திருப்பலியில்.

            கன்னிமையில் தூய ஆவியால் இறைமகனைக் கருத்தாங்கினாள் அன்னை மரியா. ஈன்றெடுத்த மகனை உலக மக்களின் பாவங்களுக்காகத் தகனப் பலியாக்கி, இறைத் திட்டத்திற்குப் பணிந்து வாழ்ந்தார். உலகினர் அனைவருக்கும் அன்னையாக மாறினார். முதிர்வயதில் கருவுற்றிருந்த உறவினளைத் தேடிச் சென்று உதவினார். விருந்து உண்ண மண விழா சென்றவர் வீட்டாரின் தேவை அறிந்து மகனிடம் எடுத்துக் கூறி, அதை நிறைவேற்றி விழாநாயகியாக மாறினார்.  அன்று மட்டுமல்ல இன்றைய விழாநாயகியும் நம் அன்னை தான். இன்றும் தன் மகனிடத்தில் நம் ஒவ்வொருவருக்காகப் பரிந்து பேசுகின்றார்.

            இன்றைய நாளில் நம் நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் உயிர் ஈந்த தியாக உள்ளங்களை நினைத்துப் பார்ப்போம். இறைவனுக்கு நன்றி சொல்லுவோம்.

            பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தை நாம் எந்த விதத்தில் பேணிக் காக்கின்றோம்? சுயநலமில்லாமல் பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தை நமது சுயநலத்திற்காக மட்டும் தான் பயன்படுத்துகின்றோமா? நாட்டினை ஆளும் ஆட்சியாளர்களை குறை கூறுவதில் எப்பயனும் இல்லையே. நம் நாட்டிற்கு நாம் என்ன செய்தோம் என்றே சிந்திப்போம்.

            உறவினள் எலிசபெத்துக்கு ஓடிச் சென்று உதவிய மரியைப் போன்று, நம்மிடையே வாழும் ஏழை எளியவர்களை  நேசிப்போம்; அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுப்போம். நம் வழியைச் செம்மைப்படுத்துவோம்; நல்லதொரு குடிமக்களாக, நம் நாட்டை காக்க நாம் முயற்சி எடுப்போம்; நாட்டினை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org