Get Adobe Flash player

தமக்குச் சேர வேண்டிய பழங்கள்!
8 அக்டோபர் 2017 ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

வாசகங்களின் விளக்கங்கள்

                         அளிப்பவர் : அருள்பணி இயேசு கருணாநிதி


Vine yard 01
கடந்த மூன்று வாரங்களாக திராட்;சைத் தோட்டத்தை மையமாக வைத்தே இருக்கின்றன ஞாயிறு நற்செய்தி வாசகங்கள். மத்தேயு 20 மற்றும் 21ஆம் பிரிவுகளில் நாம் மூன்று திராட்சைத் தோட்ட எடுத்துக்காட்டுக்களைப் பார்க்கிறோம்:

 

அ. திராட்சைத் தோட்டத்தில் பணியாளர்கள் (மத் 20:1-16)

ஆ. திராட்சைத் தோட்டத்திற்கு சென்ற, செல்லாத மகன்கள் (மத் 21:28-32)

இ. திராட்சைத் தோட்டத்தின் கொடிய குத்தகைக்காரர்கள் (மத் 21:33-43)

 

இவற்றில் முதல் எடுத்துக்காட்டு இயேசு எருசலேம் நகருக்கு நுழையுமுன்னும், அது அனைத்து சீடர்களுக்கும் சொல்லப்படுவதாகவும் (மத் 19:28), இரண்டாவது மற்றும் மூன்றாவது எடுத்துக்காட்டுக்கள் இயேசு எருசலேம் நகருக்குள் நுழைந்தபின்னும், தலைமைக்குருக்களையும் மூப்பர்களையும் நோக்கியும் (மத் 21:23) சொல்லப்படுவதாக இருக்கிறது.

 

திராட்சைத் தோட்டம் என்பது யூதர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஓர் உருவகம். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இன்றைய முதல் வாசகம் (காண். எசா 5:1-7). எருசேலம் நகரம் விரைவில் அனுபவிக்கவிருக்கின்ற அடிமைத்தனம் பற்றி இறைவாக்குரைக்கின்ற எசாயா இறைவாக்கினர் திராட்சைத் தோட்ட உருவகத்தைக் கையாளுகின்றார். இஸ்ரயேல் மக்களை அழகான திராட்சைத் தோட்டத்திற்கு ஒப்பிட்டு, திராட்சைத் தோட்டம் நற்கனிகள் கொடுப்பதற்குப் பதிலாக காட்டுப் பழங்களைக் கொடுத்ததற்காக, வேலிகளைப் பிடுங்கி எறிந்து, சுற்றுச்சுவர்களை தகர்த்தெறிந்து அதை தீக்கிரையாக்கவும், மிதியுண்டு போகவும் செய்தவர் இறைவன். மேலும், இது என்றென்றைக்கும் தலைதூக்கா வண்ணம் செய்வதாகவும் இறைவன் எச்சரிக்கின்றார். பாபிலோனிய அடிமைத்தனத்தின்போது யூதா நாடு அழிகின்றது. எருசலேம் தீக்கிரையாகி எதிரிகளால் மிதிபடுகின்றது. 

 

இன்றைய முதல் வாசகத்தில் மையமாக இருக்கின்ற ஒரு வரி: 'எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் இடையே நீதி வழங்குங்கள்!'

 

இது ஒரு நீதிமன்ற வழக்காடல். யாவே இறைவன் தான் ஒரு கூண்டில் ஏறி நின்று, தனக்கு எதிரே உள்ள கூண்டில் எருசலேமை நிறுத்தி, 'நீதி வழங்குங்கள்!' என அழைப்பு விடுக்கின்றார். நீதியை வழங்க வேண்டியவர்கள் இதை வாசிக்கின்ற வாசகர்கள். அதாவது ஒவ்வொருவரும் தன்னையே சுயஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

 

திராட்சை வர வேண்டிய இடத்தில் காட்டு மரம் ஏன் வந்தது?

 

மா வைத்த இடத்தில் அரளி எப்படி வந்தது?

 

மாமரம் மாமரத்தின் இயல்பைக் கொண்டிருந்தால், தேவையான நீரை சரியாக பருகியிருந்தால், தேவையான வெளிச்சத்தில் இருந்தால், பூச்சிகள் எல்லாம் அரிக்காமல் இருந்தால் மாங்கனி கொடுக்கும். என்னதான் நீர் இல்லை என்றாலும், வெளிச்சம் இல்லை என்றாலும், பூச்சி அரித்தாலும் மாங்கனியின் நிறமும், அளவும், சுவையும் தான் குறையுமே தவிர அது ஒருபோதும் அரளி ஆவதில்லை. எப்போது அரளி ஆகும் என்றால் மா இயல்பு மறைந்து விதையில் அரளி இயல்பு வரும்போது.

 

ஆக, இஸ்ரயேல் மக்களின் உள்ளத்தின் ஆழத்தில் ஆண்டவராகிய கடவுள் விதைத்த 'திராட்சை இயல்பு' மறைந்து 'காட்டுப் பழ இயல்பு' வந்தது. இது ஒரே இரவில் நடக்கின்ற ஒன்றா? இது எப்படி கொஞ்சம் கொஞ்சமாக வந்தது? எதற்காக தங்கள் இயல்பு மாற்றத்தை அவர்கள் அனுமதித்தார்கள்?

 

திராட்சையின் இயல்பு காட்டுப் பழ இயல்பாக மாறியதைக் கண்டிக்கின்ற இறைவன், 'நான் உனக்குக் கொடுத்ததை நீ எனக்குத் திருப்பிக்கொடு!' எனக் கணக்குக் கேட்கின்றார்.

 

ஆக, அவருக்குரியதை அப்படியே அவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதே நீதி.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தை (மத் 21:23-43) எடுத்துக்கொள்வோம். திராட்சைத் தோட்டம் ஒப்பந்த அடிப்படையில் சில பணியாளர்களிடம் தரப்படுகிறது. தோட்டத்தின் விளைச்சலைப் பெற்று வருமாறு தலைவர் முதலில் பணியாளர்களை அனுப்புகின்றார். அவர்களில் சிலரை தோட்டத் தொழிலாளர்கள் கல்லால் எறிகின்றனர், சிலரை கொல்கின்றனர், சிலரை விரட்டி அனுப்புகின்றனர். இரண்டாவதாக, முன்பைவிட அதிக பணியாளர்கள் அனுப்பப்படுகின்றனர். அவர்களுக்கும் அதே கதிதான். இறுதியாக, தலைவரின் ஒரே மகன். தலைவரின் எதிர்பார்ப்பு ஒரு மாதிரி இருக்க, நடப்பது என்னவோ வேறு மாதிரி இருக்கிறது. 'இவனே சொத்துக்குரியவன். இவனைக் கொன்றால் தோட்டம் நம்முடையது!' என அவர்கள் சொல்லிக் கொண்டே அந்த மகன் மீது பாய்ந்து கொல்கிறார்கள்.

 

இந்த இடத்தில் வாசகருக்கு உச்ச கட்ட கோபம் வருகின்றது. மகன் சின்னஞ்சிறுவனாகத் தான் இருந்திருக்க வேண்டும். தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் திராட்சைத் தோட்டம் எடுத்தால் அது விளைந்தவுடன் முதல் வேலையாக தலைவனுக்குரிய பங்கைத் தர வேண்டும் என்பது இணைச்சட்ட நூலின் பரிந்துரை. அவர்களின் முதல் தவறு, 'தலைவனுக்குச் சேர வேண்டியதைத் தனக்கென வைத்துக்கொண்டது!' - இதை பேராசை, ஊழல், பதுக்குதல் என அழைக்கலாம். இரண்டாவதாக, வன்முறை. யார்மேல்? தலைவனின் பணியாளர்கள் மேல். மூன்றாவதாக, கொலை. யாரை? ஒரே மகனை. இப்படிப்பட்ட தொழிலாளர்கள் பற்றி தலைவனுக்குத் தெரியவில்லையா? தெரிந்திருந்தும் அவர்களிடம் தோட்டத்தை ஏன் ஒப்படைத்தார்? தொழிலாளர்களுக்கு தலைவன் மேல் அப்படி என்ன கோபம்? அப்படிக் கோபம் இருந்தால் அதை தலைவன் மேல் காட்டியிருக்கலாமே? ஏன் மற்றவர்கள் மேல் காட்ட வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு உவமையில் பதில் இல்லை.

 

இந்த உவமையை இயேசுவே சொன்னார் என்றால் அது தன் இறப்பை முன்குறிப்பதாக இருக்கிறது. இல்லை, இது நற்செய்தியாளரின் கற்பனை என்போமாகில் இயேசுவின் படுகொலையை அவர்கள் உருவகமாக எழுதி, 'புதிய ஒப்பந்தப் பணியாளர்கள்' என்ற புதிய கிறித்தவர்களுக்கு ஆறுதல், நம்பிக்கை, புத்துணர்ச்சி தரவதற்காக எழுதப்பட்டது. இந்த இரண்டு எண்ண ஓட்டங்களிலும், தந்தை என்பது வானகத் தந்தையையும், தந்தையின் பணியாளர்கள் என்பவர்கள் இறைவாக்கினர்களையும், மகன் என்பவர் இயேசுவையும், தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் பரிசேயர்கள், மறைநூல் வல்லுநர்கள், தலைமைக்குருக்கள் எனவும் உருவகம் செய்து கொள்ளலாம். புதிய ஒப்பந்தப் பணியாளர்கள்தாம் புறவினத்தார்கள். புறக்கணிக்கப்பட்ட கற்களாக இருந்த இவர்கள் மூலைக்கற்களாகின்றனர். 

 

திராட்சைத் தோட்டத் தொழிலாளர்கள் செய்த தவறு என்ன?

 

தலைவருக்குச் சேர வேண்டிய பங்கை அவர்கள் கொடுக்க மறுத்ததுதான்.

 

மறுத்ததோடல்லாம் அந்தப் பங்கு தங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் நிலக்கிழாரின் பணியாளர்கள் மற்றும் மகனையும் அழிக்கின்றார்கள். 

 

'எதெல்லாம் கொடுக்கப்படுகிறதோ அதெல்லாம் இறுதியில் திரும்ப பெறப்படும்' என்பதுதான் வாழ்க்கை நியதி. திராட்சைத் தோட்டம் நம்மிடம் கொடுக்கப்படுகிறது என்றால் அதைக் கொடுத்தவர் வந்து, 'என்னுடையது' என்று கேட்கும்போது கொடுத்துவிட வேண்டியதே சால்பு. அதுவே நீதியும்கூட. நீதி என்றால் என்ன? ஒருவருக்கு உரியதை அப்படியே அவருக்குக் கொடுப்பது. இந்தக் கொடுப்பதில் குளறுபடிகள் வரும்போதுதான், 'அநீதி நடந்துவிட்டது' என நாம் அழுகின்றோம். 

 

இவ்வாறாக, இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் 'நீதி' என்றால் என்ன என்பதை எடுத்தியம்புவதோடு கடவுளுக்குரியதை கடவுளுக்குரியதாக அப்படியே திருப்பிக் கொடுக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றன. அப்படி கொடுக்க தவறுபவர்கள் எல்லாம் தோட்டத்திற்குள் வேலைவெட்டி இல்லாமல் நின்றுகொண்டிருப்பவர்கள்.

 

இந்த மனநிலையை எப்படி பெறுவது என்ற சொல்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (காண். பிலி 4:6-9).

 

பிலிப்பியருக்கு எழுதும் தன் கடிதத்தின் அறிவுரைப்பகுதியை நிறைவு செய்கின்ற தூய பவுல் 'அறிவெல்லாம் கடந்த இறை அமைதி உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்' என எழுதுகின்றார். அறிவைக் கடந்த அமைதி - இதுதான் அந்த திராட்சைத் தோட்ட தொழிலாளர்களிடம் இல்லை. அவர்கள் தங்கள் அறிவு நிலையிலிருந்து மட்டுமே சிந்தித்தார்களே தவிர அமைதி அல்லது உள்ளத்து மனநிலையிலிருந்து சிந்திக்கவில்லை. அறிவு பல நேரங்களில் அங்கலாய்த்துக்கொண்டும், அலைந்துகொண்டும், ஆரவாரம் செய்துகொண்டும் பரபரப்பாக இருக்கின்றது. அறிவைக் கடந்த அமைதிதான் நீதிக்கு வழிவகுக்கும். அப்படிப்பட்ட நீதியான வாழ்வு, 'உண்மையானவை, கண்ணியமானவை, நேர்மையானவை, தூய்மையானவை, விரும்பத்தக்கவை, பாராட்டுதற்கு உரியவை, நற்பண்புடையவை, போற்றுதற்குரியவை' என வெளிப்படும்.

 

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் பாடங்கள் எவை?

 

1. இயல்பு மாற்றம் தவிர்

உன் இயல்பு திராட்சை என்றால் அதே இயல்பைக் கொண்டிரு. ஏன் உன் இயல்பைச் சிதைத்து காட்டுப் பழமாக மாற அனுமதிக்கிறாய்? இயல்பு மாறியதால் இஸ்ரயேல் தீக்கிரையாகிறது. காட்டுப் பழங்களை வைத்து என்ன செய்ய முடியும்? தீயிலிட்டுத்தான்அவற்றை அழிக்க வேண்டும்.

 

2. இறை அமைதி கொள்

இன்று மார்த்தா போன்ற பரபரப்பான நம் வாழ்க்கைச் சூழலை எண்ணிப்பார்ப்போம். விளம்பரங்களில், சமூக வலை தளங்களில் எது தென்பட்டாலும் வாங்கிவிட நினைக்கின்றோம். வெளியிலிருந்து பொருள்களை நாம் உள்ளிழுத்துக்கொள்ளக் காரணம் நம் உள்ளுக்குள் இருக்கும் வெறுமையே. அந்த வெறுமையை நாம் இவற்றைக் கொண்டு நிரப்பிக்கொள்வதற்குப் பதிலாக, அந்த வெறுமையிலும், வெற்றிடத்திலும் நிறைவைக் கண்டுகொள்வதே அமைதி மனநிலை.

 

3. நாம் யார்?

நற்செய்தி வாசகத்தில் வரும் நான்கு கதைமாந்தர்களில் நான் யார்? மற்றவர்களை அப்படியே நம்பும் 'தாராளமான' தந்தையா? தாங்கள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் தொடர்ந்து தங்கள் வேலையைச் செய்த தந்தையின் பணியாளர்களா? தந்தையின் ஒரே மகனா? அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்களா? இந்த நால்வருமே நம்மில் எங்கோ ஒளிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நான்காம் மனநிலை தான் நம்மிடம் இருக்கக் கூடாத மனநிலை.

 

4. கோபம் தவிர்

திராட்சைத் தோட்ட குத்தகைக்காரர்கள் ஏன் நிலக்கிழார்மேல் கோபமாக இருந்தார்கள்? அந்தக் கோபத்தை அவர்மேல் காட்டுவதற்குப் பதிலாக ஏன் அவரின் பணியாளர்கள்மேலும், மகன்மேலும் காட்டினார்கள்? அவர்கள் உள்ளத்தில் ஏன் இவ்வளவு வன்மம்? வன்முறை வன்முறையைப் பெற்றெடுக்கும். அடுத்தவர் செய்யும் தவறுக்காக நாம் நமக்கே கொடுத்துக்கொள்ளும் தண்டனைதான் கோபம். கோபம் தவிர்த்தால் மட்டுமே இருக்கின்ற கொஞ்ச நாளும் இனிமையாக திராட்சைத் தோட்டத்தில் வேலைசெய்ய முடியும்.

 

5. அவருக்குரியதைத் திருப்பிக்கொடு

நம்மிடம் எதிர்பார்க்கப்படும் செயல் நம்மிடம் இல்லாதபோது வாய்ப்பு நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும். கதையின் இறுதியில் திராட்சைத் தோட்டம் மற்ற தொழிலாளர்களின் கையில் கொடுக்கப்படுகிறது. வன்முறையில் இறங்கிய தொழிலாளர்களும் அழிக்கப்படுகின்றனர். நம் வாழ்வில் நாம் அதற்கேற்ற கனிகள் கொடாதபோது வாழ்வு நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு விடுகிறது. இது உவமையின் பொருள் மட்டுமல்ல. டார்வினின் உயிரியல் பரிணாமக் கோட்பாடும் இதுதான். நாம் பயன்படுத்தாத, பயன் தராத எதுவும் காலப்போக்கில் அழிந்துவிடும்.

 

இறுதியாக,

 

திராட்சைத் தோட்டத்தின் ஒரு பகுதியாக நாமும் நின்று என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். சில நேரங்களில் இப்படி வன்முறையாக நடந்துகொண்டு 'எனக்குரியதும் எனக்கு, உனக்குரியதும் எனக்கு' என்று வாழ்பவர்களைத்தான் வெற்றியாளர்கள் என உலகம் கொண்டாடுகிறது.

 

நாம் தோற்றாலும் அவருக்குரியதை அவருக்கே கொடுப்போம். அதுவே நீதி!

 


AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org