Get Adobe Flash player

ஞாயிறு மறை உரை :
ஆண்டவரைத் தேடுங்கள், வாழ்வடைவீர்கள்
அருட்பணி மரிய அந்தோணி ராஜ்
(அக்டோபர் 15) பொதுக்காலம் இருபத்தி எட்டாம் ஞாயிறு
நன்றி / அருள்வாக்கு இணையதளம்

மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த அந்த இரயிலில் டிக்கெட் பரிசோதகர் திடிரென வந்து, ஒவ்வொருவரிடமும் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்துவிட்டுப் போய்க் கொண்டிருந்தார். அப்போது ஒரு மூலையில் பழைய கோட் ஒன்று கிடந்தது. அவர் அதை எடுத்து, உள்ளே கையைவிட்டு யாருடையது துலாவிப் பார்த்தபோது அதில் முகவரி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அதில் நிறையப் பணமும் ஒரு இயேசுவின் படமும் இருந்தன. 


உடனே அவர், “இந்தக் கோட் யாருடையது?, இங்கே இது கவனிப்பாரற்றுக் கிடக்கிறது” என்று கேட்டார். அதற்கு கூட்டத்திலிருந்த ஒரு வயதான பெரியவர், “அந்த கோட் என்னுடையதுதான், நான்தான் தவறுதலாக விட்டு விட்டேன்” என்றார். “இது உம்முடைய கோட்தான் என்பதுதற்கு என்ன சாட்சி?” என்று பதில் கேள்வி கேட்டார் டிக்கெட் பரிசோதகர். அதற்கு அந்த பெரியவர், “அந்த கோட்டில் ஒரு மணிப்பர்ஸ் இருக்கும், அதில் கொஞ்சம் பணமும் ஒரு இயேசுவின் படமும் இருக்கும்” என்றார். டிக்கெட் பரிசோதகரோ அவரிடம், “எல்லாரும் பர்சில் தங்களுடைய புகைப்படத்தைத் தானே வைப்பார்கள், நீர் மட்டும் எதற்கு இயேசுவின் படத்தை வைத்தீர்?” என்று கேட்டார். அதற்கு பெரியவரோ அது ஒரு பெரிய கதை ஒன்று என்று தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த அனுபவத்தைச் சொல்லத் தொடங்கினார்.

“நான் சிறுவனாக இருந்தபோது வந்த ஒரு பிறந்த நாளின்போது, என்னுடைய தந்தை இந்த 
ணிபர்சை பரிசாகக் கொடுத்தார். எனவே நான் அந்த மணிபர்சில் என்னுடைய தந்தையின் புகைப்படத்தை வைத்தேன். அப்போதெல்லாம் தந்தை எனக்கு நிறையப் பணம்தருவார், நான் அவருடைய புகைப்படத்தைப் பார்த்து ஒவ்வொருநாளும் ரசிப்பேன். அதன்பிறகு நான் இளைஞனாக ஆனபோது, என்னுடைய தோற்றத்தைக் கண்டு ரசித்து, தந்தையின் புகைப்படத்தை எடுத்துவிட்டு என்னுடைய புகைப்படத்தை வைத்து ரசித்தேன். பின்னர் ஒரு பெண்ணை காதலிக்கத் தொடங்கினேன். அந்தப் பெண் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். எனவே நான் அவளுடைய புகைப்படத்தை அதில் வைத்தேன். ஒருசில ஆண்டுகள் கழித்து, நான் காதலித்த பெண்ணுக்கும், எனக்கும் இடையே திருமணம் நடந்து ஒரு குழந்தை பிறந்தது. எனவே அந்த குழந்தையின் புகைப்படத்தை அதில் வைத்தேன், அக்குழந்தையை அதிகமாக அன்பு செய்தேன். அதோடு நிறைய நேரம் செலவிட்டேன். ஆனால் அவனோ பெரியவனாக வளர்ந்துவிட்ட பிறகு என்னைக் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையில் என்னுடைய் தந்தையும் இறந்துபோனார். என் மனைவியும் நோயில் விழுந்து இறந்து போனாள். இதனால் என் மகன் ஒருவன்தான் உலகம் என்று வாழ்ந்துவந்தேன். ஆனால் அவனும் கைவிட்டதால், தனித்த மரமானேன்” என்று சொல்லி தன்னுடைய கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த்துணிகளைத் துடைத்தார்.

சிறிது இடைவேளைக்குப் பிறகு மீண்டும்தொடர்ந்தார். “இப்படி எல்லாரையும் இழந்து தவித்த நேரத்தில்தான், ஒருநாள் தற்செயலாக என்னைவந்து சந்தித்த ஒரு புதியவர் ஒரு இயேசுவின் படத்தைக் கொடுத்துவிட்டு, ‘தேவைப்பட்டால் இந்த படத்தில் இருக்கும் இயேசுவை நோக்கி ஜெபியுங்கள்’  என்றார். நாமும் ஜெபித்தேன். அப்பொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த இயேசுவை மட்டும் முன்னாலே நான் கண்டு கொண்டிருந்தால், இவ்வளவு துன்பங்களையும் நான் அனுபவித்திருக்க மாட்டேனே
என சொல்லி வருந்தேன். அதன்பிறகு இயேசுதான் எனக்கு எல்லாம் என்று வாழத் தொடங்கிவிட்டேன்” என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் அவருடைய கோட்டையும் அதிலிருந்த பணத்தையும் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

ஆண்டவர் இயேசுவைத் தேடிச்செல்வோர் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டுகொள்வர் என்ற உண்மையை இந்த நிகழ்வு நமக்கு எடுத்து கூறுகின்றது. பொதுக்காலம் இருபத்தி எட்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக் கேட்ட வாசகங்கள் தரும் சிந்தனை ‘ஆண்டவரை தேடுங்கள், வாழ்வடைவீர்கள்’ என்பதாகும். எனவே நாம் அதனைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து விண்ணரசை திருமண விருந்திற்கு ஒப்பிடுகின்றார். அதில் அரசர் பெரிய விருந்தொன்றை ஏற்பாடு செய்துவிட்டு, ஏற்கனவே அழைப்புப் பெற்றவர்களை தன்னுடைய பணியாளர்களைக் கொண்டு அழைத்து வரச் சொல்கிறார்கள். ஆனால் அழைப்புப் பெற்றவர்களோ ஒவ்வொரு சாக்குப் போக்குச் சொல்லி,  வரமறுக்கிறார்கள். இதனால் சினம்கொண்ட அரசர் வழியோரங்களிலும், சாலையோரங் களிலும்  இருந்தவர்களை அழைத்துவரச் சொல்லி, அவர்களுக்கு விருந்துபடைக்கின்றார். இங்கே இறைவன் தரும் அல்லது அரசன் தரும் விருந்துக்கு வராமல், தங்களுடைய சொந்த வேலைகளுக்குச் சென்ற மனிதர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது. இறைவனின் அழைப்பு அரிதானது, அது எல்லாருக்கும் கிடைக்காத ஒன்று. அப்படிப்பட்ட அழைப்பு கிடைத்திருந்தபோதும் அதைப் பயன்படுத்தத் தெரியாமல் இருந்த மனிதர்களின் நிலைதான் வேதனை அளிப்பதாக இருக்கின்றது.

அரசனது அழைப்பை ஏற்று வராமல் இருந்த அம்மனிதர்கள் சொல்லும் சாக்குப்போக்குதான் நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. ஒருவன் சொல்கிறான், ‘நான் வயலுக்குப் போய்விட்டு வருகிறேன்’ என்று. வயல் என்பதை நாம் உணவோடு அல்லது உணவைத் தேடி அலையும் மனிதர் களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். நிறைய மனிதர்கள் ‘எண்சாண் உடம்புக்கு வயிரே பிரதானம்’ என்பதுபோல் உணவு ஒன்றுதான் வாழ்க்கை என்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மேலும் உணவிற்காக எதையும் செய்யக்கூடிய மனிதர்கள் இருக்கிறார்கள். பழைய ஏற்பாட்டில் ஒரு பழத்திற்காக ஆண்டவரது கட்டளையை மீறிய ஆதிப் பெற்றோர்களைக் குறித்துப் படிக்கின்றோம். அதேபோன்று ‘ஒரு கலயம் கஞ்சிக்காக’ தன்னுடைய தலைப்பேறு உரிமையை யாக்கோபுவிடம் விட்டுக்கொடுத்த ஏசாவைக் குறித்துப் படிக்கின்றோம். இவர்களைப் போன்று எத்தனையோ மனிதர்கள் உணவிற்கு அடிமையாக ஆண்டவரின் அழைப்பை மறந்துபோய் நிற்கிறார்கள். இவர்களின் நிலை பரிதாபத்திற்கு உரியதாகும்.

நற்செய்தியில் இயேசு கூறுவார், “உணவைவிட உயிரும், உடையை விட உடலும் உயர்ந்தவை அல்லவா?” என்று (மத் 6: 25). ஆகவே உணவிற் காக கடவுள் தரும் உன்னத அழைப்பைத் தவறவிடாமல் இருப்போம்.

இரண்டாவதாக அழைப்புப் பெற்ற மனிதர்களுள் ஒருவர் சொல்லும் சாக்குப் போக்கு, “நான் கடைக்குச் செல்கிறேன்’ என்பதாகும். கடையை நாம் பணத்தை மட்டும் தேடிச் செல்லும் ஒரு நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். நிறைய மனிதர்கள் பணத்தைத் தேடுகிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு, இரவு பகல் என்று உழைக்கிறார்கள். பணம் மட்டும்தான் நிம்மதியைத் தரும் என்று வாழ்கிறார்கள். இறுதியில் அந்த பணத்தினாலேயே அழிந்துபோகிறார்கள். நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய அறிவற்ற செல்வந்தன் உவமை இதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு (லூக் 12). அம்மனிதன் நிலம் நன்றாக விளைந்துவிட்டது என்று மேலும் சொல்லி மேலும் மேலும் அறைகளைக் கட்டுகிறான். இறுதியாக அவன் சம்பாதித்த செல்வங்களை, உடமைகளைப் பயன்படுத்த முடியாமலே அழித்து போகிறான். ஆகவே ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவை – இறைவனை – நாடுவதைவிட்டு, அழிந்துபோகும் செல்வத்தைத் தேடும் போக்கினை விட்டுவிடுவோம்.

மூன்றாவதாக அழைப்புப் பெற்ற மனிதர் சொல்லும் சாக்குப்போக்கு, ‘நான் ஐந்து ஏர் மாடுகளை வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன்” என்பதாகும் (இந்த வசனம் இன்றைய நற்செய்தியில் இடம்பெறவில்லை, மாறாக இதன் ஒத்தமை நற்செய்தியான லூக்கா நற்செய்தி யில் இடம்பெறுகின்றது (லூக்கா 14:19). ஐந்து ஏர்மாடுகள் என்பதை ஐம்புலன்கள் என்று பொருள்படுத்திக்கொள்ளலாம். நிறைய மனிதர்கள் மெய்(உடல்), வாய், கண், மூக்கு, செவி இவைகள் தரக்கூடிய இன்பங்களுக்கு அடிமையாகி, இறைவனை, அவர் தரும் அழைப்பை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இயேசுகூறுவார், “உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்ததால் அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது...” என்று (மத் 5: 19-20).  ஆகவே வாழ்க்கையில் புலனடக்கம் தேவையான ஒன்றாக இருக்கின்றது. நாம் ஐம்புலன்களுக்கு அடிமையாகாமல், அனைத்து நன்மைகளையும் தரும் ஆண்டவனைத் தேடும் மக்களாக வாழ்வோம்.

இறுதியாக அழைப்புப் பெற்ற மனிதன் சொல்லக்கூடிய சாக்குப்போக்கு, “எனக்கு இப்போதுதான் திருமணம் ஆயிற்று; ஆகையால் என்னால் வரமுடியாது” என்பதாகும். இதனை நாம் ஆண்டவனுகுக் முக்கியத்துவம் தராமல், மனித உறவுகளுக்கு, அவை தரும் அற்ப சுகங்களுக்கு முக்கியத்துவம் தரும் நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

இயேசுவின் சீடராக இருக்கவிரும்புகிறவர் எல்லாவற்றையும் விட்டுவிடவேண்டும், மேலும் எல்லாரையும்விட இறைவனுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். அப்போதுதான் அவர் இயேசுவின் உண்மைச் சீடராக இருக்கமுடியும். பெரும்பாலான நேரங்களில் மனித உறவுகளுக்கு முக்கியத் துவம் தந்துவிட்டு கடவுளை  மறந்துபோய்விடுகின்றோம். நற்செய்தியில் இயேசு, “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது” என்று கூறுவார். ஆகவே, நாம் மனித உறவுகளையும் கடந்து இறைவனுக்கு முக்கியத்துவம் தந்து வாழ்வோம்.

ஏனென்றால், இறைவன் தரும் விருந்தானது,  இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் படிப்பது போன்று சுவைமிக்கது. அவ்விருந்தில் கலந்துகொள்வோரின் துன்பங்கள், துயரங்கள், கண்ணீர் கவலைகள் அத்தனையும் போக்கப்படும். ஆகவே, இத்தகைய இறைவனின் விருந்தில் நாம் கலந்துகொள்ள முயற்சி எடுக்காமல், பணத்திற்கும், பொருளுக்கும், உடல் ஆசைகளுக்கும் அடிமையாகி வாழக்கூடிய நிலை பரிதாபத்திற்கு உரியது. ஆதலால்,   இறைவனுக்கு, அவர் தரும் அழைப்பிற்கு முக்கியத்துவம் தந்து வாழ்வோம். நிச்சயமாக இறைவன் நம்முடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்வார் (இரண்டாம் வாசகம்), முடிவில்லா இன்பத்தை, மகிழ்வை பரிசாகத் தந்து நம்மைக் காத்திடுவார்.  “ஆண்டவரைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்” (ஆமோஸ் 5:4).

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org