Get Adobe Flash player

எல்லாம் தயாராய் உள்ளது! - ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
தருபவர் ; அருள்பணி இயேசு கருணாநிதி,  மதுரை

மேற்கத்திய நாடுகளில் உள்ள உணவகங்களுக்கு அல்லது நம் நகரங்களில் உள்ள நட்சத்திர அந்தஸ்து உணவகங்களுக்குள் செல்லும்போது, யாரும் உள்ளே இல்லை என்றாலும், நாம்தான் முதல் விருந்தினர்கள் என்றாலும், எல்லா மேசைகளிலும் நேர்த்தியாக விரிக்கப்பட்ட மேசைவிரிப்பு, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நாப்கின், ஸ்பூன், ஃபோக், கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி டம்ளர் ஆகிய அனைத்தும் நம்மிடம் ஏதோ பேசுவதுபோல இருக்கும். 'வா...என்னருகில் வா...இது எல்லாம் உனக்குத்தான்!' என்று தன்னையே விரித்துக்கொடுப்பது போல இருக்கும்.

 

 

கல்யாண வீடுகளுக்கோ, விஷேச நிகழ்வுகளுக்கோ செல்வது நமக்குப் பிடித்திருக்கிறது. ஏன்? ஒரு காரணம் என்னவென்றால், திருமண தம்பதியரை மேல்மாடியில் வாழ்த்திவிட்டு, அப்படியே கீழ்தளத்திற்குச் சென்றோமென்றால், 'வாங்க, வாங்க' என அழைக்க ஒருவர் நிற்பார். 'இந்தா வாப்பா...இங்க ஒரு இலையைப் போடு...உக்காருங்க மேடம்...டேய்...தண்ணி கொண்டு வா...சாதமா? குஸ்காவா? பிரியாணியா? ... முதல்ல ஸ்வீட் வைப்பா...சாம்பார்...ரசம்...மோர்...பாயாசம்...குளோப் ஜாமுன்...பீடா...கேக்...பழம்' என வரிசை நீண்டுகொண்டே போகும். சாப்பிட்டு முடித்தவுடன் அப்படியே கொஞ்சம் எட்டி பார்த்தால் தூரத்தில் கைகழுவும் இடம் தெரியும். ஆக, விருந்தில் நாம் செய்யும் அதிக பட்ச வேலை கைகழுவுவது மட்டும்தான். மற்ற எல்லா வேலைகளையும் மற்றவர்கள் நமக்காக செய்துவிடுகிறார்கள். நம்ம வீட்டுல மேலே உள்ள எல்லா அயிட்டங்களையும் சமைக்க வேண்டுமென்றால் எவ்வளவு நேரம் ஆகும்?

 

அ. விருந்தில் நமக்கு எல்லாம் தயார்நிலையில் இருக்கிறது.

ஆ. விருந்தில் நம்மை அழைக்க, ஏற்றுக்கொள்ள ஒருவர் காத்திருக்கிறார்.

இ. விருந்தில் பங்கேற்க நமக்கு உழைப்பேதும் தேவையில்லை. அது நமக்கு மற்றவர்கள் கொடுக்கும் முழுமையான பரிசு.

 

இந்தக் காரணங்களுக்காக விருந்தை நமக்குப் பிடிக்கிறது.

 

இப்படி தயார்நிலையில் உள்ள விருந்து பற்றித்தான் அல்லது விருந்துக்கான தயார்நிலை பற்றித்தான் இன்றைய இறைவாக்குவழிபாடு நம்மிடம் பேசுகிறது.

 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசாயா 25:6-10) எசாயா இறைவாக்கினர் மெசியாவின் விருந்து அல்லது சீயோன் மலையில் ஆண்டவர் படைக்கும் விருந்து பற்றி இறைவாக்குரைக்கின்றார். விருந்தின் பின்புலம் பாபிலோனிய அடிமைத்தனம். பசி, வறுமை, பட்டினி, நோய் என்று அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்த மக்களுக்கு பண்டம், பழரசம், பானம், இறைச்சி, திராட்சைரசம் என உணவு பரிமாறுகிறார் ஆண்டவராகிய கடவுள்.

 

விருந்தில் தயார்நிலையில் இருக்கும் பண்டங்கள் நான்கு:

அ. சுவைமிக்க பண்டம் - ரொட்டி

ஆ. பழரச பானம்

இ. கொழுப்பான இறைச்சி துண்டு

ஈ. வடிகட்டி பக்குவப்படுத்திய திராட்சை இரசம்

 

இந்த நான்கு உணவுப்பொருள்களையும் தயாரிக்க அதிக காலம் எடுக்கும். இந்த நான்கு பொருள்களும் அவசரத்தில் தயாரிக்கக்கூடியவை அல்ல. ஆக, இவற்றைத் தயாரிக்கின்ற காலம் முழுவதும் விருந்து அளிப்பவர், விருந்திற்கு வருபவரையும், விருந்தையும் நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆக, 'எங்களைக் கடவுள் மறந்துவிட்டார்' என்ற இஸ்ரயேல் மக்களின் புலம்பலை ஆண்டவராகிய கடவுள் மாற்றி, 'உங்களை நான் என்நேரமும் நினைவில் கொண்டுள்ளேன்' எனச் சொல்கின்றார். மேலும், இந்த உணவுப் பொருள்கள் டயட்டரி உணவுப்பொருள்கள் அல்லது பத்தியச் சாப்பாடு கிடையாது. மாறாக, இது விருந்து உணவு. இரசிக்கவும், ருசிக்கவும் பட வேண்டியவை.

 

இவைகள் உணவுப்பொருள்கள் என்றால், மற்றொரு பக்கம், ஆண்டவராகிய கடவுள்

அ. முகத்தை மூடியுள்ள முக்காட்டை அகற்றிவிடுவார் - துன்பத் துகிலைத் தூக்கி எறிவார்

ஆ. சாவை ஒழித்துவிடுவார் - கண்ணீரைத் துடைத்துவிடுவார் என்கிறார்.

 

வீட்டில் இறந்த அல்லது நோயுற்ற ஒருவரை வைத்துக்கொண்டு எவரும் விருந்துக்கு வருவதில்லை. அப்படி வந்தாலும் விருந்து எதிலும் அவர்களின் மனம் பதிவதில்லை. இப்படி தனது விருந்து அமைந்துவிடக்கூடாது என்பதற்காக ஆண்டவராகிய கடவுள் முகத்தை மூடியுள்ள துன்பத்தின் முக்காட்டை தூக்கி எறிகிறார். சாவை ஒழித்துவிடுகிறார். தங்கள் உள்ளத்தில் துக்கம் கொண்டாடுபவர்கள் தங்களின் வெளி அடையாளமாக முகத்தில் முக்காடிட்டுக் காட்டுவர். இப்படிப்பட்டவர்கள் இனி சோகமும், துன்பமும் கொண்டிருக்கத் தேவையில்லை என்று சொல்கின்றார் இறைவாக்கினர்.

 

இவ்வாறாக, இஸ்ரயேல் மக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பும்போது எல்லாம் தயார்நிலையில் உள்ளது என்கிறார் இறைவாக்கினர் எசாயா.

 

நாடு திரும்பியவர்களுக்கு ஆண்டவர் வைக்கும் விருந்திலிருந்து நாம் இன்றைய நற்செய்தி வாசகம் காட்டும் திருமண விருந்து எடுத்துக்காட்டிற்குள் செல்வோம் (காண். மத் 22:1-14).

விண்ணரசு பற்றிய மேலும் ஒரு எடுத்துக்காட்டைத் தருகின்றார் இயேசு: திருமண விருந்து. மத்தேயு நற்செய்தியில் நாம் வாசிக்கும் உவமைக்கும், லூக்கா நற்செய்தியில் வாசிக்கும் உவமைக்கும் (லூக்கா 14:15-24) நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இரண்டின் பின்புலங்களும் வேறு. இந்த உவமையை புரிந்து கொள்ள யூதர்களின் திருமண நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். முந்தின நாள் நிச்சயதார்த்தம் வைத்து அடுத்த நாள் காலையில் தாலி கட்டி, அவசர அவசரமாய் வந்திறங்கும் கேட்டரிங் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, 'சரி நல்லா இருங்க!' என்று வாழ்த்திவிட்டு ஓடும் நம்ம ஊர் திருமணம் போல அல்ல அது. திருமண நிகழ்வு ஏறக்குறைய ஆறுமாதங்கள் நடக்கக் கூடிய நிகழ்வு. பெற்றோர் பெண் பார்த்தல், பையனும், பெண்ணும் ஒருவருக்கொருவர் விருப்பம் தெரிவித்தில், நிச்சயதார்த்தம் என முதல் படலம் நடந்தேறும். பையன் தன் வீடு திரும்ப, பெண்ணும் அவள் வீடு திரும்புவாள். முதல் படலம் நடந்தேறினாலே திருமணம் நடந்து விட்டதாகத்தான் அர்த்தம். பையன் தன் வீட்டில் இருக்கும் போது தந்தை தன் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு விருந்தளிப்பது மரபு. நம் கதையின் மகன் இளவரசன். தடபுடலாக விருந்தை ஏற்பாடு செய்கின்றார் தந்தை. விருந்து தயாராகிவிட்டதும் 'எல்லாரும் வந்தாச்சா!' என்று பார்க்கின்றார். யாரையும் காணோம்! முதல் அவமானம்! 'என்ன ஆயிற்று' என்று பார்க்க ஆள் அனுப்புகிறார். அழைக்கப்பட்டவர்கள் வர முடியவில்லை என்று சொல்வதை விட, 'வர விருப்பம் இல்லை!' என்றே சொல்கிறார்கள். உவமையை வாசிக்கும் போதே அவர்கள் மேல் நமக்கு கோபம் வருகிறது. அரசன் கூப்பிடுகிறான். அங்கே போனால் நன்றாக இருக்குமே. அரசனை வைத்து நாளைப்பின்னே நாலு காரியம் சாதிக்கலமே. பாவம் பிழைக்கத் தெரியாதவர்கள். 

 

பின் அழைப்பு பொதுவாக்கப்படுகிறது. வருவோர், போவோர், நல்லவர், கெட்டவர் என அனைவரும் வருகின்றனர். மண்டபம் நிறைந்து விட்டது. விருந்து பரிமாறத் தயாராகி விட்டது. அரசன் வந்திருந்தோரைப் பார்க்க வருகிறான். 'திருமண ஆடை அணியாத ஒருவன்' அங்கே அமர்ந்திருப்பது அவரின் கண்களில் படுகிறது. 'வெளியே எறியுங்கள் இவனை!' - இது அரச கட்டளை. இந்த இடத்தில் அரசன் மேல் தான் நமக்குக் கோபம் வரகிறது! 'நீ கூப்பிட்டவங்க வரலை. சரி நாங்களாவது வந்தோமே என்று சும்மாயிருப்பதை விட்டு விட்டு, சட்டை ஏன் போடலை! வேட்டி ஏன் கட்டலை?' என்று கேட்டிருப்பார் அந்த திருமண ஆடை இல்லாதவர். இங்கே ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். 'திருமண ஆடை' என்பது திருமண விருந்திற்கு வரும் அனைவருக்கும் விருந்து வைப்பவர் கொடுக்கும் பரிசு. மண்டபத்திற்குள் நுழையும் போது அவர்களின் உடல் அளவிற்கேற்ப உடைகள் கொடுக்கப்படும். நம்ம ஊரில் திருமணம் முடிந்து, மொய் எழுதும் போது கொடுக்கும் 'தாம்பூலப் பை' போல என வைத்துக் கொள்ளலாம். அப்படிப் பரிசாகக் கொடுக்கப்பட்ட ஆடையைத் தான் அந்த நபர் அணிய மறுத்திருக்கிறார். எதற்காக மறுத்தார் என்பதற்கு உவமையில் பதில் இல்லை. 'அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும்' என அவசர அவசரமாக உவமை முடிகிறது. இந்த வார்த்தைகளை வைத்துத்தான் கொஞ்சப் பேர் நரகம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இயேசுவின் உவமையின் நோக்கம் நரகத்தைப் பற்றியதோ, உத்தரிக்கிற நிலையைப் பற்றியதோ அல்ல. சரியா?

 

இந்த உவமையை 'தயார்நிலை' என்ற வார்த்தையை வைத்து மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்:

 

அ. விருந்து தயாராக இருக்கிறது.

ஆ. அழைக்கப்பட்டவர்கள் தயார்நிலையில் இல்லை.

இ. வந்திருந்தவர்கள் தயார்நிலையில் இல்லை.

 

இதில் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் வேறு. வந்திருந்தவர்கள் வேறு. அழைக்கப்பட்டவர்கள் விருந்திற்குச் செல்ல தங்களையே தயாரிப்பதற்குப் பதிலாக என்ன காரணம் சொல்லி தப்பிக்கலாம் என்று காரணம் தேடுகின்றனர். மேலாண்மையியலில் இப்படிச் சொல்வார்கள்: 'வெற்றியாளர்கள் காரியங்களைச் செய்கிறார்கள். தோல்வியாளர்கள் காரியங்களைச் செய்யாமல் இருக்கக் காரணங்களைக் கண்டுபிடிக்கிறார்கள்.' நம்ம கதை மாந்தர்களில் (அ) ஒருவர் தம் வயலுக்குச் செல்கின்றார், (ஆ) வேறு ஒருவர் தம் கடைக்குச் செல்கிறார், (இ) மற்றவர்களோ அவர்களின் பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்துகின்றனர். என்ன கொடுமை இது?

 

அதாவது, தாங்கள் அரசர்கள் போல நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இருந்தும் அந்த வாய்ப்பைத் தட்டிவிடுகின்றனர் இவர்கள். அரசனைவிட வயல் பெரிதா? அல்லது அரசனைவிட கடை பெரிதா?

 

இவர்கள் சாக்குப் போக்குச் சொல்லி வர மறுத்ததால் அழைப்பு மற்றவர்களுக்குத் திறந்துவிடப்படுகிறது. விருந்திற்கு இப்போது அழைக்கப்படுபவர்கள் யாரென்றால் கண்களில் தட்டுப்படுவோர். இப்படி வந்தவர்கள் அனைவருக்கும் திருமண உடை தரப்படுகிறது. அதையும் அணியத் தயாராக இல்லாமல் இருக்கிறார் ஒருவர். அவர் விருந்திலிருந்து அகற்றப்படுகின்றார். ஆக, தயார்நிலைக்கான வாய்ப்பு இருந்தும் இவர் தட்டிக் கழிக்கின்றார்.

 

ஆக, இந்த இடத்தில் வாசகர்களாகிய நாம் இரண்டு கேள்விகள் கேட்க வேண்டி உள்ளது:

 

அ. கடவுளின் அழைப்பு எனக்கு வரும்போது அதை ஏற்க நான் தயார்நிலையில் இருக்கின்றேனா? அல்லது அந்த அழைப்பைத் தட்டிக் கழிக்கின்றேனா?

ஆ. அவர் என்னை அழைக்கும்போது அவரால் தெரிந்துகொள்ளப்பட நான் என்ன முயற்சிகள் செய்திருக்கிறேன்? என் ஆடையைக் கழற்ற நான் ஏன் மறுக்கிறேன்?

 

இவ்வாறாக இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் விருந்து பற்றி இருக்க, விருந்து மட்டுமே வாழ்க்கை இல்லை என வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தை இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 4:12-14, 19-20) விரித்துக்காட்டுகிறார் பவுல்: 'எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும். வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ, குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்' என மார்தட்டுகிறார் பவுல். இந்த பயிற்சி அல்லது தயார்நிலை வர பவுலுக்கு உந்துசக்தியாக இருப்பது கிறிஸ்துவே. ஆகையால்தான் அவர் தொடர்ந்து, 'எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு' என்கிறார்.

 

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு முன்வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் ஐந்து:

 

அ.முதன்மைப்படுத்துதல். 'மோரியுடன் செவ்வாய்க்கிழமைகள்' என்ற திரைப்படத்தில் ஒரு இடத்தில் மோரி கதாநாயகனைப் பார்த்து இப்படிச் சொல்வார்: 'நம் தோள்பட்டையில் ஒரு குருவி அமர்ந்திருப்பது போல நாம் நினைத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குருவியிடம் நாம் தினமும் ஒன்று கேட்க வேண்டும். என் அருமைக் குருவியே! இந்த நாள்தான் என் வாழ்வின் இறுதி நாளா? அப்படியென்றால் என் வாழ்வின் முக்கியமானவற்றை நான் இன்று செய்கிறேனா?' விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் கொடுக்கும் காரணங்கள் விநோதமாக இருக்கின்றன: ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன், வயல் வாங்கியிருக்கிறேன், புதிதாக திருமணம் ஆகியிருக்கிறது. கடைக்குப் போகிறேன். ஆகையால் வர முடியாது. அரசன் நினைத்தால் இந்த மூன்றையும் அழித்து விடலாம். நம் வாழ்வில் பல நேரங்களில் நாம் கண்ணீர்விடக் காரணம் என்ன? நாம் முதன்மைப்படுத்துதலில் தவறுவதுதான். அன்பு, ஆன்மீகம், கரிசணை, பகிர்வு, விழிப்பு நிலை - இவைதான் நம் வாழ்வில் என்றும் நம் உடன் இருப்பவை. இவைகளை விட்டுவிட்டு மற்றவைகளை நாம் தேடும்போது நாம் அரைத்தூக்கத்தில் இருப்பது போலத்தான் இருக்கிறோம். நம்மிடம் 'எப்படி இருக்கிறீர்கள்?' என்று யாராவது கேட்டால் உடனே பதில் சொல்கின்றோம். அதே நபர் நம்மிடம் 'ஏன் இருக்கிறீர்கள்?' என்று கேட்டால் நம் பதில் என்னவாக இருக்கும். பதிலுக்குப் பதில் நமக்குக் கோபம் தானே வரும்!

 

ஆ. எல்லாரும் வாருங்கள். தொடக்கத் திருச்சபையின் காலத்தில் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்த போது, நற்செய்தி புறவினத்தாருக்கு அறிவிக்கப்படுகிறது. யூதர்களே விருந்திற்கு வர மறுத்தவர்கள். புறவினத்தார்தான் மண்டபத்தில் இறுதியாக உணவருந்தியவர்கள். நற்செய்தி ஏற்றுக்கொள்ளப்படாதபோது அது மற்றவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. வாழ்வின் எதார்த்தமும் இதுதான். கடவுளின் அன்பையும், மற்றவர்களின் அன்பையும் நாம் ஏற்றுக்கொள்ளாதபோது அது மற்றவர்களுக்குத் திருப்பிவிடப்படுகின்றது. வாழ்வில் சிலவற்றை நாம் இழந்துவிட்டால் அதை நம்மால் திரும்பவும் பெற முடிவதேயில்லை. கண்ணீர் விட்டாலும், விழுந்து புரண்டாலும் சென்றது சென்றதுதான். ஆகையால் இருக்கும் போதே, இருக்கின்ற ஒன்றை, இருப்பது போல ஏற்றுக்கொண்டு அனுபவிக்கும் மனப்பக்குவம் அவசியம்.

 

இ. அழைக்கப்பட்டவர்களோ பலர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர். திருமண ஆடை என்பது இயேசு கொண்டு வந்த மீட்பு. திருமுழுக்கு வழியாக நாம் கிறித்தவர்களாக மாறினால் மட்டும் விருந்தில் பங்கேற்றுவிடலாம் என்று சொல்லி விட முடியாது. இறைவன் தரும் மீட்பு என்னும் ஆடையை நாம் அணிந்து கொள்ள வேண்டும். கடவுளின் பரிசாக வரும் அந்த ஆடையை நாம் மாசுபடாமல் வைத்திருப்பதும் அவசியம். அருட்பணியாளராக திருநிலைப்படுத்தப்படும் போது அருட்பணியாளருக்குத் திருவுடை அணிவிக்கும் சடங்கு நடைபெறும். அந்தச் சடங்கின் அர்த்தம் இந்த உவமையின் பின்புலத்தில் இன்னும் ஆழமான அர்த்தத்தைத் தருகின்றது. இறைவனின் விருந்தை, நற்கருணைப் பலியை, கொண்டாடும் போதெல்லாம் அருட்பணியாளர் இதை அணிகிறார். உடல் இதை அணிந்து கொண்டாலும், உள்ளம் அணியவில்லையென்றால், திருமண விருந்தில் நமக்கு இடமில்லை தானே! 'நண்பா! உன் ஆடை எங்கே?' என்று ஒருநாள் அவர் நம்மைக் கேட்டுவிட்டால்...! விருந்திற்கு வந்திருந்த நபருக்கு புதிய திருமண உடை கிடைத்திருந்தாலும் தனது பழைய உடையைக் கழற்றுவதற்கு அவர் மறுக்கிறார். 'பழையதே போதும்!' என தன்னிலேயே தேங்கிக்கொள்கிறார். இன்று நான் கழற்ற மறுக்கும் ஆடை எது?

 

ஈ. விருந்து வையுங்கள். இன்று நாம் நமக்குத் தெரியாத முன்பின் ஒருவரோடு அமர்ந்து ஏதாவது ஒன்று சாப்பிடுவோம். நான் ரோமில் படித்துக்கொண்டிருந்தபோது அங்கே மக்கள் காலையிலேயே காஃபிக் கடையில் கூட்டமாக அமர்ந்திருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டதுண்டு. காஃபிக் கடையில் தங்கள் நண்பரைக் கண்டுவிட்டால் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லி அப்படியே அமர்ந்து கதைபேசும் நபர்களை அங்கே காணலாம். அங்கே அப்படி நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தாலும் வழியில் செல்லும் பிச்சைக்காரர்கள், அல்பேனிய நாட்டுச் சிறார்கள், சிறுமியர் அனைவருக்கும் யாராவது ஒருவர் காஃபி வாங்கிக் கொடுப்பார். இன்று நான் அப்படி முன்பின் தெரியாத ஒருவரோடு உணவருந்தவோ, ஒரு கப் காஃபி குடிக்கவோ தயாரா?

 

உ. சமநிலை மனநிலை. பசி - நிறைவு, விருந்து - வெறுமை, நிறைவு - குறைவு, வறுமை - வளமை என எல்லாவற்றையும் ஒரே மனநிலையில் எடுத்துக்கொள்கின்றார் பவுல். இந்த மனநிலையைத்தான் நாம் புறநானூற்றில், 'மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' (எண். 192) வாசிக்கின்றோம். பெரியவரும் சிறியவரும், வல்லவரும் வறியவரும், இருப்பவரும் இல்லாதவரும் ஒன்றே என்ற சமநிலை. தன்னையும், தன் விருப்பு வெறுப்புக்களையும் வென்ற ஞானிதான் இந்த மனநிலை பெற முடியும். இந்த மனநிலையை பவுல் பெற்றதால் அவர் ஞானியே.

 

இறுதியாக, தயார்நிலையில் இருக்கும் விருந்தில் பங்குகொள்ள நமக்குத் தேவை தயார்நிலை.

 

தயார்நிலையில் விருந்து உள்ளது. ஆனால் நான் தயார்நிலையில் இருக்கின்றேனா? மேலும்,

 

வாழ்க்கை விருந்தாய்ச் சுவைக்காதபோது என் தயார்நிலை என்ன?

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org