முன்னாள் பேராயர் மேதகு S.  மைக்கல் அகுஸ்தீன்
அவர்களின் பள்ளிப் பணி பற்றி
அவருடைய முன்னாள் மாணவரின் அனுபவப் பகிர்வு.

மனம் எங்கும் மழை மேகங்கள். இனம் புரியாத் துன்பப் புலம்பல்கள்.! இருக்காதா பின்னே! எங்கள் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய புதுவை-கடலூர் முன்னாள் பேராயர் மைக்கல் அகஸ்டின் ஆண்டகை அவர்கள்  மறைவு  நேரத்தில், அவரைப் பற்றிய நினைவலைகள் நெஞ்சில் தளும்பிக்கொன்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

 

1961 இல் இளங் குருவாய்ப் பட்டம் பெற்றவர் புதுவை பேத்தி செமினேர் உயர் நிலைப் பள்ளியில் துணை முதல்வர் பொறுப்பை ஏற்கிறார். நாங்கள் பள்ளி இறுதி ஆண்டு மாணவர்கள். பருவ வயதில் கால் பதித்திருக்கும் விடலைகள். புதிய குரு எங்கள் மனங்களில் பதியம் போடுகிறார். அருள் ஓளி வீசும் அகம் ; இளமை ததும்பும் இனிய முகம் ; அதில் சுருள் சுருளாய் சிறு தாடி! தள தள பருவம் ஒரு முறை பார்த்தவரை மறுமுறையும் பார்க்கத் தூண்டும் உருவம். எங்களைக் கவர்ந்தது அவர் உருவம் மட்டும் அல்ல எங்களோடு அவர் பழகிய விதமும் கூடத்தான். நாங்கள் எல்லாரும் தொமினிக் சாவியோவாக இல்லாவிட்டாலும் அவர் எங்களுக்கு தொன்போச்கொவாகவே திகழ்ந்தார். அன்று முதல் இன்று வரை எங்கள் நெஞ்சில் நீங்காமல் கொலு இருக்கும் அருட் தந்தை எஸ். பீட்டர் அப்போது பள்ளியின் முதல்வர். இன்றைக்கும் நாங்கள் கடை பிடிக்கும் நீதி, நேர்மை, நெறி தவறாமை, காலம் தவறாமை, நல்லொழுக்கம்... போன்றவற்றை எங்களுக்கு ஊட்டி வளர்த்த செவிலித்தாய் அவரே! அடிப்பது ஒரு கரம் என்றால் அணைப்பது இருகரமாய் அன்பு காட்டியவர். கன்னத்தைப் பதம் பார்க்கும் கையும் கரத்தில் ஒளிந்திருக்கும் பிரம்பும் கனல் தெறிக்கும் கண்களும் எங்களைக் கட்டுப்படுத்திய காலம். தடித்த ஓர் மகனை ஈண்டடிக்கும் தந்தை அவர் ; தவறு கண்ட இடத்து தட்டிக்கேட்டுக் கண்டிப்பார் ; அவர் பேச்சை மீறிப் போனால் தண்டிப்பார். இந்தச் சூழலில் இளங்குரு அருட் தந்தை மைக்கல் அகஸ்டின் கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவாய், மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றாய் எங்களிடையே வருகிறார் ; பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து அன்பு அரவணைப்பு தருகிறார்! தடுக்கி விழும் குழந்தை தாயிடம் ஓடுவது போல, சிறு துன்பம் என்றாலும் அருட் தந்தை மைக்கல் அகஸ்டினைத் தேடி ஓடுவது எங்கள் வழக்கம். அடிபட்ட காயத்துக்கு மருந்திடுவது போல அன்பாகப் பேசுவார் ; எங்கள் குறைகளைக் காது கொடுத்துக் கேட்பார் ; தேவையான அறிவுரை, ஆலோசனைகளைத் தருவார். இதனால் நாங்கள் அவர் பால் ஈர்க்கப்பட்டதில் எந்த வியப்பும் இல்லை.

துணை முதல்வர் எங்கள் வகுப்புக்கு மறைக்கல்வி போதிக்க வந்தது நாங்கள் பெற்ற பேறே! அதிர்ந்து பேசி அறியாத அவர் ஒருநாளும் எங்கள் மீது அடக்கு முறையைக் கையாண்டதே இல்லை. அவர் வகுப்பில் எங்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. கேள்விகள் கேட்பதற்குத் தூண்டுவார், அது எப்படிப்பட்ட கேள்வியாக இருந்தாலும் சரி, குறும்பு கொப்பளிக்கும் வினாவாக அமைந்தாலும் சரி... பொறுமையாகப் பதில் அளிப்பார். அவரிடம் ஏகப்பட்ட உரிமைகளை எடுத்துக் கொண்டு நாங்கள் செய்யும் குறும்புகளை ரசித்தவாறே அருமையாகச் சமாளிப்பார்.இவருடைய இந்தப் பண்புகளை அப்படியே கடை பிடித்தேன், நான் பேராசிரியராகப் பணியாற்றிய போது. விளைவு, அன்று போலவே இன்றும் இங்கே பிரான்சில் வாழும் என் முன்னாள் மாணவர்கள் அதே அன்போடும் மதிப்போடும் என்னிடம் பழகுகிறார்கள். இந்தப் பெருமை எல்லாம் பேராயர் மைக்கல் அகஸ்டின் அவர்களையே சாரும்.

மறைக் கல்வியில், திருமறை நூலில், திருச்சபை வரலாற்றில் ...நாங்கள் விடுத்த வினாக்கள் பல. அவற்றுள் என் நினைவில் பசுமையாக உள்ள ஒன்று : " ஆதாம் ஏவாளுக்கு இரண்டே குழந்தைகள். அவர்களும் ஆண்கள். பின் மனித இனம் பெருகியது எப்படி?" . அருட் தந்தை அவர்கள் என்ன பதில் கொடுத்தார் என்பது நினைவில் இல்லை ; ஆனால் கேள்வியைச செவி மடுத்துக் கோபப் படவில்லை ; பொறுமையாக விளக்கம் கூறினார் என்பது மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது.

மறைக்கல்வியோடு வேறு பலவற்றையும் கற்பித்தவர் அவர். அவரிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டது ஏராளம். மறைக் கல்வி வகுப்பு பகல் 12 மணிக்கு முடியும். அந்தச் சமயம் அஸ்தகால (செபம் சொல்ல, பெரிய கோவில்) மணி அடிக்கும். "ஆண்டவருடைய சம்மனசு மரியாளிடம் விசேஷம் சொன்னது...." என்று தொடங்கும் அந்தச் செபத்தில், வார்த்தையானது மனு உருவானது." என்று நாங்கள் சொன்னதைக் கேட்ட அவர் எங்களைத் திருத்தினார் : "வார்த்தையானவர் மனு உருவானார்" என்று உயர் திணையில் சொல்லுவதே முறை என அவர் விளக்கிய பிறகு அப்படியே கூறத் தொடங்கினோம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் தமிழ் ஒலிப்பு ஒவ்வொரு வகையாக இருப்பது இயல்புதான். அதுபோலத்தான் புதுச்சேரி மக்களின் தமிழ் ஒலிப்பும்

இதனை எங்களுக்கு முதன் முதலாகச் சுட்டிக்காட்டியவர் அருட்தந்தை மைக்கல் அகஸ்டின் அவர்கள்தாம்.   புதுச்சேரி மக்களின் ழகர ஒலிப்பு பெருமளவு சரியாகவே இருந்தாலும் அதில் பிரஞ்சு ழகரம் இழையோடுவதை உணரலாம். அதுபோலவே அவர் சுட்டிக்காட்டிய இன்னொரு குறைபாடு : லகர, ளகர வேறுபாடு இல்லாமல் அவற்றை ஒலிப்பது. ஆம், அவர்கள் வந்தார்கள் என்பதில் உள்ள ளகர மெய்யை, நாக்கை வளைத்து அழுத்தமாக உச்சரிக்காமல் லகரம் போலவே அதாவது அவர்கல் வந்தார்கல் என்று ஒலிப்பது புதுவை மக்களின் வழக்கம். அப்படி அன்று அவர் சுட்டிக்காட்டித் திருத்தியதால், இன்று பலராலும் பெரிதும் பாராட்டப்படும் என் ஒலிப்பில் இந்தக் குறைபாடு தலை காட்டுவது இல்லை. அந்தப் பெருமையும் எங்கள் பேராயருக்கே!

பெங்களூரு இராயப்பர் பெரிய குருமடத்துக்குப் பேராசிரியராக அவர் செல்ல வேண்டி வந்தது. நெருக்கமாகப் பழகிய அவரைப் பிரிய நேர்கிறதே என உருக்கமாய் வருத்தப்பட்டோம். வாழ்க்கைக்குப் பிரிவு அவசியம் என்பதை எடுத்துச் சொல்லி எங்களைத் தேற்றினார் அவர். அவருக்குப் பிரிவு உபசாரம் தர ஏற்பாடு செய்யப் பட்டது. அப்போது திடீர் என எங்கள் வகுப்பு அறையில் நுழைந்த பள்ளி முதல்வர் அருட்தந்தை பீட்டர் அடிகளார், என்னைப் பார்த்து, '" நீ தான் நம்ம சின்ன சாமியாருக்குப் பிரிவு உபசார உரை அளிக்கப் போகிறாய். தயாராக இரு " என்று சொல்லிவிட்டு வெளியேறினார். நான் திகைத்துப் போய்விட்டேன்! நானா? என்ன பேசுவது? எப்படிப் பேசுவது? ... புரியவில்லை! என்னெனவோ எழுதிக் கட்டுரையைத் தயார் செய்தேன். நண்பர்களிடம் படித்துக் காண்பித்தேன். சில திருத்தங்கள் செய்தார்கள். பின், என் மூத்த தமக்கை அறச் செல்வி கர்மேலா அக்காவிடம் படித்துக் காட்ட அவர்கள் அதனைச் செப்பனிட்டுத் தந்தார்கள். அந்த நாளும் வந்தது. எனக்குப் பெரும் படபடப்பு தந்தது. பெத்திச் செமினேரியின் மிகப் பெரிய மன்றமான எஸ்காந்து மன்றம். ஆசிரியர்களும் மாணவர்களுமாய் நிரம்பி வழிந்தது. தலைமை : பேராயர் பேரருட் பெருந்தகை அம்புரோஸ் ஆண்டகை அவர்கள். நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. எனக்கோ தலை சுற்றல். "டேய், உன்னைக் கூப்பிடறாங்க..." பக்கத்தில் இருந்த என் நண்பன் என்னை இடிக்கிறான். கால்கள் துவள் மேடையில் ஏறுகிறேன். கைகள் நடுக்கத்தை மறைக்க மேசையைப் பற்றிக்கொண்டேன் கையும் காலும் படபடத்தாலும் நிறுத்தி நிதானமாக் என் கன்னிப் பேச்சை முடித்து, "பிரிவு துன்பம்தான் என்றாலும் குருக்களை உருவாக்கும் திருப்பணிக்கு அது கருவாக் அமையும் என்பதால் மகிழ்ச்சியோடு விடை தருகிறோம் என்று கூறிப் பலத்த கைதட்டலுக்கு இடையில் இறங்கி வந்து அமர்ந்தேன். நண்பன் கைகொடுத்துப் பாராட்டினான். தம் நன்றி உரையில் அருட் தந்தை மைக்கல் அகஸ்டின் மறக்காமல் என்னைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். இறுதி உரை நிகழ்த்திய பேராயரும் என்னைப் பாராட்டத் தவறவில்லை.அதற்குப் பிறகு ஆயிரம் கூட்டங்கள் ; ஆயிரம் மேடைகள்... ஆனாலும் என்னை முதன் முதலாக மேடை ஏற்றிய பீட்டர் அடிகளாரும் என் கன்னிப் பேச்சை உன்னிப்பாகக் கேட்டுப் பாராட்டிய மைக்கல் அகஸ்டின் அடிகளாரும் என் நெஞ்சில் கல்வெட்டாகப் பதிந்துவிட்டார்கள்.

பேராசிரியராகப் பெங்களூருவில் பணியாற்றிய பின் ஆராய்ச்சிப் படிப்புக்காகப் பிரான்சு சென்று முனைவர் பட்டம் பெற்றுத் திரும்பிய பிறகு சென்னை-மயிலை துணை ஆயர் பதவி ஏற்றார். இதற்கு இடையில் நான் வெளிநாடு சென்றுவிட்டேன். பிறகு வேலூர் ஆயராகத் திருநிலைபடுத்தப்பட்ட செய்தி கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தேன். அதுவரை அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. புதுவை-கடலூர்ப் பேராயராகப் பதவி ஏற்ற பிறகு, அவர் பாரீஸ் மாநகர் வரும்போதெல்லாம் அவரைச் சந்தித்து ஆசீர் பெறுவது வழக்கம். அவரோடு சேர்ந்து புனித குழந்தை தெரசம்மாள் நகரான லிசியே, புனித பெர்னதேத் வாழ்ந்து மறைந்த நகரான நெவெர்...போன்ற ஊர்களுக்குத் திருப்பயணங்கள் போனது உண்டு. அப்போதெல்லாம் ஆயிரம் பேர் சூழ்ந்து இருந்தாலும் என் மீது அவர் காட்டிய பேரன்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை. இப்படி இன்னும் எவ்வளவோ கூறலாம். ஆனால் இறுதியாக, நெஞ்சை நெகிழ வைத்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் சொல்ல விழைகிறேன்.

2003 - ஆம் ஆண்டு கடுமையாக நோய்வயப்பட்ட என் தமக்கை அறச் செல்வி கர்மேலா அக்கா மருத்துவம் பார்த்துக்கொள்ள பிரான்சு வந்து எங்களுடன் தங்கி இருந்தார்கள். இறைவன் திருச்சித்தம் என் தமக்கையைத் தன்னிடம் அழைத்துக்கொண்டது. கேள்விப்பட்ட பேராயர் உடனடியாக என்னுடன் தொடர்புகொண்டார். அக்காவின் உடல் புதுவைக்கு வரும் நாள் அடக்க நேரம் ஆகியவற்றைக் கேட்டு அறிந்து அடக்கத் திருபலியைத் தாமே தலைமை ஏற்று நடத்தித் தருவதாகக் கூறிய போது நெஞ்சம் நெகிழ்ந்துவிட்டேன். சொன்னபடியே, செய்தார். அக்காவின் அடக்க தினம். திரு இருதய ஆண்டவர் கோவில் கொள்ளாத கூட்டம். அத்திருப்பலியில் மறையுரையின் போது, அக்காவைப் பற்றிச சிறப்பாகச் சொல்லி அவர்கள் சேவைகளை நன்கு விளக்கி அவர் சூட்டிய புகழாரம் மறக்க முடியாதது. அச்சமயம் அவர் குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சி நானே அறியாதது. அக்கா பிரான்சுக்குப் புறப்படுமுன், பேராயரைச் சந்திக்கப் பேராயர் இல்லம் சென்றிருக்கிறார்கள். அச்சமயம் அங்கே தங்கி இருந்த பெரும் பேரருட் பெருந்தகை கீழை நாட்டுப் பேரொளி லூர்துசாமி கர்தினால் ஆண்டகை அவர்களையும் பேராயரையும் சந்தித்துத் தனக்காக வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டு பெரிய கோவில் புதிப்பிக்கும் திருப்பணிக்கு என ஒரு கவரைக் கொடுத்தார்களாம். அப்போதைக்கு அதனை வாங்கிக்கொண்ட பேராயர் இருநாள் கழித்துக் கவரை திறந்தபோது திகைத்துப் போனாராம். அவரே எதிர்பாராத் அளவுக்குப் பெருந்தொகைக்கான காசோலை அதில் இருந்ததாம். வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாது இருக்கட்டும் என்று நமதாண்டவர் சொன்ன சொல்லை எடுத்துக்காட்டிப் பேராயர் என் அக்காவைப் புகழ்ந்தபோது என் நெஞ்சு விம்மியது. இது பற்றி அக்கா என்னிடம் ஒரு மூச்சும் விடவில்லை. வந்த வரை இலாபம் என வாங்கி வைத்துக்கொள்ளாமல் எந்த அளவுக்கு நன்றி உணர்ச்சியோடு   தம் அலுவல்களை ஒத்தி வைத்துஅக்காவின் அடக்கத்துக்குத் தலைமை தாங்கி இருக்கிறார் பேராயர் என நினைத்து உருகிப் போனேன். அதன் பின் அவரைத் தனிமையில் சந்தித்து நன்றி கூறினேன். வெகு அன்பாக என்னோடும் என் துணைவியோடும் உரையாடி ஆறுதல் அவர் சொன்னது என் நெஞ்சில் இன்னும் நிழலாடிகொண்டிருக்கிறது.

மண்ணில் இருந்து மறைந்தாலும் விண்ணில் உறைந்தாலும் பேராயர் அவர்களின் அன்பும் பண்பும் என் நெஞ்சில் மணைம் வீசிக்கொண்டேஇருக்கும்!

 

-          பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பாரீஸ்.