Get Adobe Flash player

மூன்று மனங்கள்

24.12.2017 திருவருகைக் கால 4 ஆம் ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
அளிப்பவர் : அருள் பணி கருணாநிதி மதுரை

 'நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்' என்பது முதுமொழி.

 ஆண்டவராகிய இறைவனுக்கு தான் ஓர் ஆலயம் கட்ட விரும்புகின்றார் தாவீது. ஆனால், அவரின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத இறைவன், தாமே தாவீதுக்கு ஆலயம் கட்டுவதாக வாக்களிக்கின்றார்.

 இன்றைய முதல் வாசகத்தின் நாயகன் தாவீது. இன்றைய நற்செய்தி வாசகத்தின் நாயகி மரியாள்.

இருவருக்கும் இன்றைய வாசகங்களில் பின்வரும் ஒற்றுமைகளைக் காண்கின்றோம்:

 

 அ. 'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்று நாத்தான் தாவீதிடம் சொல்கின்றார். 'ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்;' என்று கபிரியேல் மரியாளிடம் சொல்கின்றார்.

 

ஆ. 'நீ சென்ற இடமெல்லாம் உன்னோடு இருந்தேன்' என ஆண்டவர் தாவீதிடம் சொல்கின்றார். 'உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்' என்று கபிரியேல் மரியாளிடம் சொல்கின்றார்.

 

இ. 'உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்வேன்' - 'அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்.'

 

ஈ. 'உனது அரியணை என்றும் நிலைத்திருக்கும்' - 'அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது.'

 

ஆனால், தாவீதைக் காட்டிலும் மரியாள் பின்வரும் நிலைகளில் உயர்ந்திருக்கின்றார். எப்படி?

 

அ. தாவீது ஆண்டவரிடமோ அல்லது அவருடைய தூதரிடமோ நேரிடையாகப் பேசவில்லை. ஆனால், மரியாள் கபிரியேலிடம் பேசுகின்றார்.

 

ஆ. தாவீதின் பதிலுக்காக ஆண்டவர் காத்திருக்கவில்லை. ஆனால் மரியாளின் பதிலுக்காக தூதர் காத்திருக்கின்றார்.

இவற்றை வைத்துப் பார்க்கும்போது, இன்றைய முதல் வாசகத்தின் மையப்பொருளை இன்றைய நற்செய்தி வாசகம் தொட்டுத் தொடர்கிறது என்பது புலனாகிறது.

 

திருவருகைக்காலத்தின் இறுதி ஞாயிறுக்குள் நாம் வந்துவிட்டோம். கிறிஸ்து பிறப்பு பெருவிழா மிக அருகில் இருக்கிறது.

 

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

 

கேள்வியிலிருந்து சரணாகதிக்குக் கடந்து செல்வது. இன்றைய ஞாயிறை 'அமைதி' என்ற மெழுகுதிரி ஏற்றிக் கொண்டாடுகின்றோம். அமைதியை அடையை அல்லது நாம் இழந்த அமைதியை மீண்டும் கண்டுகொள்ள சிறந்த வழி 'சரணாகதி.'

 

மரியாளின் மனம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று நிலைகளில் புலப்படுகிறது:

 

அ. கலங்கும் மனம்

'அருள்நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்!' என்று கபிரியேல் தூதர் மரியாளிடம் சொன்னவுடன், 'மரியா கலங்கி ... ... இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக்கொண்டிருந்தார்' எனப் பதிவு செய்கின்றார் லூக்கா. இங்கே 'டியாடராஸோ' என்ற கிரேக்க வினைச்சொல்லைப் பயன்படுத்துகின்றார் லூக்கா. 'டியாடராஸோ' என்றால் 'அமைதியாக நிற்கின்ற ஒரு ஏரி அல்லது குட்டை அல்லது நீர்நிலை திடீரென்று பொங்குவதுபோல, கொந்தளிப்பதுபோல' என்பது பொருள். அமைதியான கிணற்றில் மேலிருந்து ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் போட்டால் எப்படி சத்தம்போட்டு கொந்தளிக்குமோ அப்படி இருக்கிறது மரியாளின் மனம். மரியாளுக்கு இந்தக் கலக்கம் வானதூதரைப் பார்த்ததால் வந்திருக்கலாம். அல்லது 'நான் அருள்நிறைந்தவளா?' 'ஆண்டவர் என்னுடன் இருக்கிறாரா?' என்ற ஏக்கத்தில் வந்திருக்கலாம். அல்லது 'ஆண்டவர் என்னுடன் இருக்கிறார் என்றால் எங்கள் வாழ்வில் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?' என்ற கேள்வியில் வந்திருக்கலாம். ஆனாலும் மரியாள் கலங்குகிறாள். மரியாளின் கலக்கம் அவளின் அமைதியைக் குலைத்திருக்கும். 

 

ஆ. கேள்வி கேட்கும் மனம்

ஒரு கல்லைத் தூக்கிப் போட்டு மரியாள் குழம்பி நிற்க, 'இதோ...கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்' என வரிசையாக கற்களை அள்ளி வீசுகிறார். கலங்கி நின்ற மரியாள் கொஞ்சம் குரல் எழுப்பி, 'இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே?' என்று கேட்கிறார். 'இது எப்படி? நானோ கணவனை - ஆணை அறியேனே?' என்று இருக்கிறது பழைய மொழிபெயர்ப்பு. இங்கே மரியாள் தன் உடல்சார்ந்த நிலையில் நின்று கேள்வி கேட்கின்றார். மனித உயிர் உருவாவதற்கு ஆண்-பெண் இணைதல் அவசியமே. அது இல்லாமல் இது எப்படி நிகழும்? என்று மரியாளின் கேள்வி ரொம்பவும் எதார்த்தமாக இருக்கிறது.

 

இ. சரணாகதி மனம்

வானதூதர் மரியாளின் கேள்விக்கு விடையளிப்பதுடன், இதே போன்ற அற்புத நிகழ்விற்குச் சான்றாக எலிசபெத்தைக் குறிப்பிடுகின்றார். ஆனால், கபிரியேல் சொன்ன ஒரே ஒரு வார்த்தை மரியாளை சரணடைய வைக்கிறது: 'கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை.' ஒருவேளை கபிரியேல் இதை முதலில் சொல்லியிருந்தால் மரியாள் உடனே சரணாகதி அடைந்திருப்பார். ஏனெனில் அவருக்கு மீட்பின் வரலாறு தெரியும். ஒன்றுமில்லாமையிலிருந்து அனைத்தையும் உருவாக்க இயன்ற கடவுளுக்கு எதுவும் இயலும் என்பது அவருக்குத் தெரியும். தங்கள் மூதாதையரின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கடவுளின் அருள்கரம் அப்படித்தான் அவர்களை வழிநடத்தி வந்தது என்பதும் அவருக்குத் தெரியும். 'நான் ஆண்டவரின் அடிமை' என்கிறார் மரியா. 

 

கலங்கிய மனம் கொண்டபோது கடவுளுக்கு மேலாக இருந்தார் மரியா.

கேள்வி கேட்கும் மனம் கொண்டபோது கடவுளுக்கு இணையாக இருந்தார் மரியா.

சரணாகதி மனம் கொண்டபோது கடவுளுக்கு கீழாக இருக்கிறார் மரியா.

 

அமைதிக்கான ஃபார்முலா இதுதான்: அடுத்தவருக்கு மேலாகவும், அடுத்தவருக்கு இணையாகவும் இருப்பது சில நேரங்களில் நம் உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தி நம் அமைதியைக் குலைத்துவிடலாம். ஆனால், அடுத்தவரை விட்டு கொஞ்சம் இறங்கி நின்றால் நாம் அடுத்தவரையும் வெற்றிகொண்வராகிவிடுவோம்.

 

'பணி செய்வதில் அல்லது பணிந்திருப்பதில் நிறைய மகிழ்ச்சி இருக்கிறது' என்பது ஆங்கிலப் பழமொழி. இந்த மகிழ்ச்சி எப்போது வருகிறது என்றால் நான் என் வாழ்வை அடுத்தவரிடம் ஒப்படைத்துவிடுவதால்தான்.

 

நம்ம வீட்டுல உள்ள வேலைக்காரனையும், நம்மையும் எடுத்துக்கொள்வோமே?

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை நம் மனம் நிறைய யோசித்துக்கொண்டும், படபடப்பாகவும், பதைபதைப்பாகவும் இருக்கும். ஏனெனில் நாம் ஒவ்வொரு நொடியும் முடிவுகள் எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். நாம் எடுக்கும் முடிவுகளின் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் நம்மை நிறைய பாதிக்கும். ஆனால் வேலைக்காரனுக்கு முடிவெடுக்கும் கவலை இல்லை. அதன் சாதகம் பாதகம் அவரை பாதிக்காது. அம்மா அல்லது ஐயா சொல்வதை செய்வதே அவருடைய வேலை. ஆக, இவர் முடிவெடுக்கும் பொறுப்பை நம்மிடம் அல்லது தலைவரிடம் விட்டுவிடுகின்றார். கவலை இன்றி இருக்கின்றார்.

 

மரியாளும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இதையேதான் செய்கின்றார். 'ஆண்டவரே. இது வரை என் வாழ்வின் முடிவுகளை நானே எடுத்தேன். இந்த முடிவுகள் எனக்கு கலக்கம் தந்தன. இந்த முடிவுகள் பல கேள்விகளை எழுப்பின. ஆனால், இப்போது முடிவுகளை நீயே எடு!' என தன்னையே 'பணிப்பெண்ணாக' இறைவனிடம் சரணாகதி ஆக்குகின்றார். பணிப்பெண் செய்ய வேண்டியதெல்லாம் தன் தலைவர் அல்லது தலைவியின் கையசைவைப் பார்த்துக்கொண்டிருப்பது மட்டுமே.

 

இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணும் தாவீது அரசன் தானே தலைவனாக இருக்க நினைத்து தான் விரும்பிதைச் செய்துவிட நினைக்கின்றார். ஆனால் ஆண்டவர் அவரின் ஒன்றுமில்லாமையை நினைவூட்டுகின்றார்: 'புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்' என்கிறார். அதாவது, 'நீ ஒன்றுமில்லாமல், உனக்கே பாதுகாப்பு மற்றும் உணவில்லாமல் இருந்தபோது நான் உனக்கு எல்லாமாய் இருந்தேன்.இன்னைக்கு கொஞ்சம் அதிகாரம் வந்தவுடன் எனக்கே கோயில் கட்டப் பார்க்கிறாயா? தொடர்ந்து நானே உனக்கு ஒரு வீடு கட்டுவேன்' என்கிறார் ஆண்டவராகிய கடவுள். 

 

தாவீதைப் பொறுத்தவரையில் அவரிடமும் மூன்று மனங்கள் இருப்பதைப் பார்க்கிறோம்:

 

முதல் மனம், இறுமாப்பு கொண்ட மனம். இந்த மனம் தன்னிடம் இருப்பவற்றைக் கணக்குப்போட்டு இறைவனிடம் இல்லாத ஒன்றைச் சுட்டிக் காட்டுகிறது. 'நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் தங்கியிருக்கிறது' என்று தன்னிடம் இருக்கின்ற அரண்மனையையும், ஆண்டவரிடம் இருக்கின்ற கூடாரத்தையும் ஒப்பிடுகிறது.

 

இரண்டாம் மனம், பழையதை மறக்கும் மனம். ஒரு நல்ல நிலைக்கு வந்தவுடன் தன் பழையதை மறந்துவிடுகின்றார் தாவீது. தன் திறமை அல்லது திடத்தால்தான் தனக்கு எல்லாம் வந்தது என்றும், தனக்கு கிடைப்பது எல்லாம் தனக்கு உரிமையானது என்றும் நினைக்கிறார் தாவீது. 

 

மூன்றாம் மனம், மௌன மனம். முதல் வாசகத்தின் இறுதியில் தாவீதின் எந்த வார்த்தைகளும் பதிவுசெய்யப்படவில்லை. ஆண்டவரின் வார்த்தைகளுக்கு மெய் மறந்து மௌனம் காக்கின்றார் தாவீது.

 

இவ்வாறாக,

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் தாவீது மற்றும் மரியாளிடம் விளங்கிய மனநிலைகளை நாம் பார்க்கின்றோம். இந்த மனநிலைகளில் இருவரிடமும் உள்ள மூன்றாம் மனநிலையே - மௌன மனம், சரணாகதி மனம் - ஒருவரை அமைதக்கு இட்டுச்செல்கின்றது.

 

வாழ்வின் பல விஷயங்கள் நமக்கு மறைபொருள்களாகவே உள்ளன. இந்த விஷயங்களுக்கு பொருள் தேடும்போதும், நாமே முயற்சிகள் எடுத்து உலகை மாற்ற நினைக்கும்போதும் நமக்கு விரக்தியும், சோர்வும், ஏமாற்றமுமே மிஞ்சுகின்றன.

 

'கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்ற வார்த்தைகள் நம் நம்பிக்கையின் அடிப்படை ஆனால், நம் மனம் சரணாகதி கொண்டிருந்தால் அமைதி நம்மிடம் இயல்பாகவே வந்துவிடும். இந்த சரணாகதி செயல்பாட்டுடன்கூடிய சரணாகதி. 'ஆண்டவரின் அடிமை' என்று சரணாகதி அடைதல் மட்டும் போதாது. 'உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' அல்லது 'அதை நான் நிறைவேற்றுகின்றேன்' என்ற செயல்திறன் அவசியம்.

 

'நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்' - இதுவே வாழ்வின் எதார்த்தம்.

ஆனால், தெய்வம் நினைப்பதையே நம் நினைவாக எடுத்துக்கொண்டால் வார்த்தை மனுவுருவாதல் சாத்தியமாகும்.

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org