Get Adobe Flash player

தீவனத்தொட்டியில் மெசியா - கிறித்துப் பிறப்பு விழா 25.12.2017
வாசகங்களின் விளக்கங்கள்
அளிப்பவர் : அருள்பணி இயேசு கருணாநிதி மதுரை.
crib 01

கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலிகளில் மூன்று வெவ்வேறான நற்செய்தி வாசகங்கள் வாசிக்கப்படுவதால்,

எல்லாவற்றிற்கும் பொதுவான லூக்கா 2:1-20 வாசகப் பகுதியை நமது சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

 கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் மையமாக இருப்பவர்கள் இடையர்கள். 'சீசர் அகுஸ்து, குரேனியு' என பேரரசர் பெயரையும், ஆளுநர் பெயரையும் பதிவு செய்கின்ற லூக்கா இடையர்கள் பெயரையோ, அவர்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடத்தின் பெயரையோ பதிவு செய்ய மெனக்கெடவில்லை. 'இடையர்களுக்கு பெயர் தேவையில்லை' என்றுதான் லூக்காவின் சமகாலத்து மக்கள் நினைத்தனர். இந்தப் பெயரில்லா பெரியவர்களுக்குத்தான், பெரியவராம் இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்படுகின்றது.

 

ஜோசப் ஃப்ளேவியஸ் என்ற வரலாற்று அறிஞர் இடையர்களைப் பற்றி மூன்று வார்த்தைகளைச் சொல்கின்றார்:

அ. இடையர்கள் அழுக்கானவர்கள். அவர்கள் ஆடுகளோடு தொடர்பில் இருப்பவர்கள். அவர்கள் காலணிகள் அணிவதில்லை. அவர்களின் கால்கள் புழுதியாய் இருக்கும். அவர்கள் ஆடுகளோடு ஆடுகளாக உறங்குபவர்கள். ஆடுகளின் கழிகளோடு உழல்பவர்கள்.

 

ஆ. இடையர்கள் பொய்யர்கள். அடுத்தவருடையதைத் தங்களுடையது என்றும், தங்களுடையதை அடுத்தவருடையது என்றும் சொல்பவர்கள். 

 

இ. இடையர்கள் திருடர்கள். தங்களின் ஆடுகளில் ஏதாவது ஒன்று தங்கள் கவனக்குறைவினால் காணாமல்போனால் அதை ஈடுகட்ட வேறு கிடைகளில் உள்ளவற்றைத் திருடிக்கொள்வர். அடுத்தவரின் விளைச்சல் நிலத்தில் ஆடுகளை மேய விடுவர். விளைச்சல் செய்து களங்களில் சேர்த்துவைத்திருப்பவற்றைத் திருடுபவர்கள். இவர்கள் ஊர் விட்டு ஊர் செல்வதால் எந்த ஊரில் யார் இருக்கிறார், யாரிடம் பணம் இருக்கிறது, யாரை கொள்ளையடிக்கலாம் என்று நோட்டமிட்டு திருடர்களுக்கு தகவல்கள் சொல்பவர்கள்.

 

இப்படிப்பட்ட இடையர்களுக்கு இயேசுவின் பிறப்பு செய்தி அறிவிக்கப்படுகிறது என்பதுதான் கிறிஸ்து பிறப்பு நிகழ்வின் பெரிய வியப்பு.

 

ஃப்ளேவியஸ் அவர்களின் மேற்காணும் மூன்று அடையாளங்களும் இங்கே புரட்டிப்போடப்படுகின்றன. எப்படி?

 

அ. அழுக்கில் இருப்பவர்களுக்கு தீவனத் தொட்டி தெரியும்

 

மாட்டுக் கொட்டகைக்குள் போயிருக்கிறீர்களா? மாட்டுக்கொட்டகையில் தீவனத் தொட்டி என்பது பெரிய கட்டிடக்கலையோடு கட்டப்பட்ட தொட்டி அல்ல. ஒரு பெரிய அறை இருக்கும். அறையின் தரை மண் அல்லது கல்லாக இருக்கும். மேலே கூரை வேயப்பட்டிருக்கும். தீவனம் போடுவதற்காக பலகை ஒன்றை சுவற்றிற்கு கொஞ்சம் தள்ளி அடித்திருப்பார்கள். அதே பலகையோடு சேர்த்துள்ள கம்பத்தில் அல்லது வளையத்தில் மாடுகள் கட்டப்பட்டிருக்கும். மாடுகள் நிற்கும் இடத்தை அடிக்கடி சுத்தம் செய்வார்கள். சாணம் அல்லது கழிவை உடனே அப்புறப்படுத்துவார்கள். ஆனால், அதிகம் தூய்மையாக்கப்படாத பகுதி எதுவென்றால் தீவனத்தொட்டிதான். தீவனத்தை மாடு சாப்பிட்டவுடன் அதே இடத்தில் மீண்டும் வைக்கோல் அல்லது புல்லை அடுக்குவார்கள். ஆக, பல ஆண்டுகளுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படும் பகுதியே தீவனத்தொட்டி. மேலும், தீவனத்தொட்டியை யாரும் எடுத்தேறிச் சென்று பார்க்க மாட்டார்கள். மாட்டு உரிமையாளர் காலையில் எழுந்தவுடன் கொட்டகையை திறந்து எட்டிப்பார்ப்பார். 'மாடு இருக்கிறதா!' என பார்த்துவிட்டு கதவுளை மூடி விடுவார். இப்படியாக அழுக்கான, யாரும் அண்டிச் சென்று பார்க்காத இடத்தில் குழந்தை வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இப்படி வைப்பது குழந்தைக்கு குளிருக்கு இதமாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இருந்திருக்கலாம்.

 

ஆ. பொய்யர்கள் உண்மைக்குச் சான்று பகர்கின்றனர்

 

பொய் அதிகம் சொல்பவர்கள் யாரையும், யார் சொல்வதையும் எளிதில் நம்ப மாட்டார்கள். தாங்கள் பொய் சொல்வதால் அடுத்தவர்கள் சொல்வதும் பொய் என நினைப்பார்கள். இப்படிப்பட்ட இடையர்கள் எப்படி வானதூதரின் செய்தியை நம்பினர்? - இது அடுத்த ஆச்சர்யம். 'அது சும்மா சத்தம்பா!' 'இது நம்ம கனவு' 'இது ஒரு காட்சி' 'இப்படித்தான் போன வருஷம் நடந்துச்சு' என்றெல்லாம் இவர்கள் நினைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனாலும், வானதூதர் சொன்னதை அப்படியே நம்புகிறார்கள். நம்புவது மட்டுமல்ல. 'நீங்க போங்க' என்று இவர்களுக்குச் சொல்லப்படவில்லை. வெறும் தகவல்தான் வானதூதர் கொடுக்கிறாரே தவிர. அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. வெறும் தகவலையே அழைப்பாக ஏற்று புறப்பட்டுச் செல்கின்றனர். சென்றது மட்டுமல்லாமல் தாங்கள் கேட்டதை குழந்தையின் பெற்றோரிடம் சொல்கின்றனர். கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே தங்கள் வீடு திரும்புகின்றனர்.

 

இ. திருடர்கள் மெசியாவைக் கண்டுகொள்கின்றனர்

 

திருடனுக்கு அரச கருவூலத்தை திறந்துவிட்டால் எப்படி இருக்கும்? இங்கே இன்னொரு ஆச்சர்யத்தைக் கவனித்தீர்களா? மெசியாவை தீவனத் தொட்டியில் முதலில் திருடர்களே காண்கின்றனர். சிலுவையில் இறுதியிலும் திருடர்களே (நல்ல கள்வன், கெட்ட கள்வன்) காண்கின்றனர். திருடச் செல்லுமுன் வீட்டை அடையாளம் காட்டி அனுப்புவார்கள். 'இந்தக் கலர் சட்டை போட்ட இந்த மனிதர் காசு வைத்திருக்கிறார்' என்று அடையாளம் சொல்லி அனுப்புவதுபோல, 'குழந்தையைத் துணிகளில் சுற்றி தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்' என அடையாளம் சொல்கிறார் வானதூதர்.

 

ஆக, கிறிஸ்து பிறப்பின் ஆச்சர்யம் என்னவென்றால் இயேசு ரொம்பவும் பாதுகாப்பற்ற சூழலில் பிறக்கிறார். முன்பின் தெரியாத இடையர்கள் - அழுக்கர்கள், திருடர்கள், பொய்யர்கள் - தங்களைத் தேடி வந்தபோது அந்த சின்ன இளவல் மரியாளும், தச்சர் யோசேப்பும் எப்படி எதிர்கொண்டிருப்பார்கள்? இவ்வாறாக, முன்பின் தெரியாத இடத்தில், முன்பின் தெரியாத நபர்கள் முன் நடந்தேறுகிறது கிறிஸ்து பிறப்பு.

 

கிறிஸ்து பிறப்பு இன்று எனக்கு மூன்று பாடங்களைக் கற்பிப்பதாக நான் எண்ணுகிறேன்:

 

1. ப்ரேகிங் தெ ரொட்டின் ('வழக்கத்தை உடைப்பது')

 

தன் பாப்பா பாட்டில் பாப்பாவுக்கு அறிவுரை சொல்கின்ற பாரதியார், 'காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு என்று வ(ப)ழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா' என்கிறார். நாம் குழந்தையாய் இருக்கும்போது நமக்கு சொல்லப்படுவது எல்லாம் 'பழக்கமும், வழக்கமும்'தான். 'பெரியவருக்கு எழுந்து நிற்றல்,' 'சாப்பிடும் முன் கைகளைக் கழுவுதல்,' 'வணக்கம் சொல்லுதல்' என நிறைய வழக்கங்களும், பழக்கங்களும் கற்கின்றோம். சில வழக்கங்களை நாமே ஏற்படுத்திக்கொள்கிறோம் - கறுப்பு சட்டை போடுவது, வெள்ளை நிறம் மட்டும் அணிவது, மீசை வைப்பது, தாடி வைப்பது என. சில மேலாண்மையியல் நிபுணர்களும் நாம் நிறையவற்றை வழக்கப்படுத்திக்கொள்ளும்போது நாம் நிறைய காரியங்களைச் செய்ய முடிகிறது என்கிறார்கள். ஆனால், வழக்கங்களை உடைப்பதில்தான் கிறிஸ்து பிறப்பின் முக்கியத்துவம் இருக்கிறது.

 

தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களுக்கு வழக்கம் காவல் காப்பதுதான். ஆனால், அந்த வழக்கத்தை உடைக்கின்றார் வானதூதர். அவர் உடைப்பதைவிட தாங்களே அதை உடைக்க முன்வருகின்றனர்: 'வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, 'வாருங்கள். நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கிற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்'' என்று சொல்லி விரைகிறார்கள்.

 

வழக்கமான காரியங்களைச் செய்வதால் நாம் மனித நிலையில் வேண்டுமானால் நிறைய வேலைகளை அல்லது இலக்குகளை அடையலாம். ஆனால் இறையனுபவம் தேவையெனில் 'ப்ரேகிங் தெ ரொட்டின்' மிக அவசியம். இதைத்தான் நாம் நல்ல சமாரியன் எடுத்துக்காட்டிலும் (காண். லூக் 10:25-35) பார்க்கிறோம். அடிபட்டுக் கிடந்தவனைக் கடந்து சென்ற குருவுக்கும், லேவிக்கும் தன் ரொட்டின் (வழக்கம்)தான் மிக முக்கியமாக தெரிந்தது. அவர்கள் தங்கள் வழக்கத்தை உடைக்க விரும்பவில்லை. ஆக, தங்கள் வழி செல்கின்றனர். ஆனால் சமாரியனோ தனக்கு ஒரு இலக்கும், ரொட்டினும் இருந்தாலும், அதை உடைக்கின்றார். வழக்கத்தை உடைக்கின்றார். ஆகையால்தான் அவரால் இரக்கம் காட்ட முடிகிறது. 

 

இன்று, என்னால் ரொட்டினை உடைக்க முடிகிறதா? கடிவாளமிட்ட குதிரை போல நான் என் வேலையில் ஓடிக்கொண்டே இருக்கிறேனா? 'இது இப்படித்தான் இருக்க வேண்டும். அது அப்படித்தான் இருக்க வேண்டும்' என என்னைப் பற்றியும், பிறரைப் பற்றியும் படிமங்களை வார்த்திருக்கிறேனா?

 

2. அழைப்பின்றி புறப்படுவது

 

நாம் பிறந்தபோது நமக்கு எந்த அழைப்பும் கொடுக்கப்படவில்லை. இறக்கும்போதும் எந்த அழைப்பும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், இந்த இரண்டிற்கும் நடுவில் நாம் அழைப்புக்காக காத்துக்கொண்டே இருக்கிறோம். 'திருமணத்திற்கு அழைக்கவில்லை,' 'விழாவிற்கு அழைக்கவில்லை,' 'அவர் என்னைக் கண்டுகொள்ளவில்லை,' 'நீ என்னைக் கூப்பிடவில்லை' என நிறைய ஃபார்மாலிட்டிகளை வைத்திருக்கிறோம். வானதூதர்கள் இடையர்களுக்கு எந்த அழைப்பும் கொடுக்கவில்லை. மரியாளும், யோசேப்பும், 'எங்களுக்கு ஒரு இளவரசன் பிறந்திருக்கிறான்' என யாருக்கும் அழைப்பு அட்டையோ, குறுஞ்செய்தியோ அனுப்பவில்லை. ஆனாலும் இடையர்கள் உடனே புறப்படுகின்றனர். தங்களுக்கு கிடைத்த தகவலையும் அழைப்பாக எடுத்துக்கொண்டு புறப்படுகின்றனர்.

 

வரலாற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தியவர்கள் எந்த அழைப்பிற்கும் காத்திருக்கவில்லை. 'ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களுக்காக வந்து போராடுங்கள்' என யாரும் காந்தியை அழைக்கவில்லை. 'கொல்கத்தாவின் சேரி மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள்' என யாரும் அன்னை தெரசாவை அழைக்கவில்லை. இவர்கள் தங்கள் கண்முன் நடக்கும் நிகழ்விற்கு ஏற்ற செயலைச் செய்கிறார்கள். அதுதான் இறையனுபவம். 

 

அதாவது, இயல்பான, எதார்த்தமான நிகழ்வுகளில் இயல்பாக, எதார்த்தமாக செயல்படுவது கிறிஸ்து பிறப்பின் இரண்டாம் அழைப்பு.

 

3. நம் வேலையை தொடர்ந்து செய்வது

 

'இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள்' என பதிவு செய்கின்றார் லூக்கா. மெசியாவைக் கண்டவர்கள் மெசியாவைப் பற்றிக்கொள்ளவில்லை. 'மெசியா பிறந்திருக்கிறார்' என மறைபரப்பு செய்யவில்லை. தங்கள் வேலையைப் பார்க்க புறப்பட்டுச் செல்கின்றார்கள். கடவுள் அதனதன் நேரத்தில் அதனதன் நிகழ்வை செயல்படுத்துவார். 'நீ உன் வேலையை பாரு. நடப்பது அதுபோல நடக்கும்' என்று வாழ்வை அதன் போக்கில் வாழ்கிறார்கள். 'நான் இறையனுபவம் பெற்றிருக்கிறேன். அதை உங்களுக்குத் தருகின்றேன்' என நிறைய போதகர்களும், குருக்களும் புறப்படுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில், இறையனுபவம் பெற்றவுடன் நான் என் வாழ்வை இயல்பாக வாழ்ந்தாலே போதும் என நினைக்கிறேன். 'நானே உலகின் மெசியா' என்று அடுத்தவரைக் காப்பாற்ற நான் புறப்படத் தேவையில்லை. ஆக, இன்று இறையனுபவம் கிடைத்தால், அதற்காக கடவுளைப் புகழ்ந்து பாடிவிட்டு என் வேலையைத் தொடர்ந்து செய்வதே சால்பு.

 

இறுதியாக,

 

கிறிஸ்து பிறப்பு என்பது வரலாற்று நிகழ்வு. உலக வரலாற்றில் மட்டுமல்ல. நம் ஒவ்வொருவரின் வரலாற்றிலும். நாம் வாழும் இந்தக் குறுகிய நாள்களில் கிறிஸ்துவாக பிறக்க கிறிஸ்து பிறப்பு பெருவிழா அழைப்பு விடுக்கிறது.

இன்றைய உலகில் நாமும் பாதுகாப்பற்ற சிறு குழந்தையாக இந்த உலகம் என்ற தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்டிருக்கிறோம். இந்த உலகம் தன் நுகர்வுக்கலாச்சாரம், வியாபாரம் என்னும் கரங்களால் நம்மைப் பிட்டு வாயில் போட்டுக்கொள்ள தயாராக இருக்கிறது. 'நம்மால் ஒன்றும் செய்ய முடியாது' என்ற பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் நாம், இந்த பெத்லகேம் குழந்தைபோல நம் கைகளை விரித்துக்கொடுப்போம்.

 

கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துக்களும், செபங்களும்!

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org