Get Adobe Flash player

இன்றைய சிந்தனை
நன்றி ; www.tamilcatholicnews.com

''சிமியோன் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்'' (லூக்கா 2:25)

இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நிகழ்ச்சியை விவரிக்கின்ற லூக்கா சிமியோன் என்னும் நேர்மையாளர் பற்றியும் அன்னா என்னும் திருப்பணியாளர் (லூக் 2:37) பற்றியும் உயர்வாகக் குறிப்பிடுகிறார். இவ்விருவரும் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து வாழ்ந்தவர்கள்; கடவுளை மையமாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள்.


இயேசு கோவிலுக்கு வந்ததும் இவர்கள் கடவுளின் திட்டம் இயேசுவில் நிறைவேறுவதைக் கண்டுகொள்கிறார்கள். பழைய ஏற்பாட்டு நேர்மையாளர்கள் வரிசையில் உயர்வாக எண்ணப்படுகின்ற சிமியோன், அன்னா ஆகிய இருவரும் யூத சமய அருள்நெறிக்குச் சீரிய எடுத்துக்காட்டுகளாகச் சித்தரிக்கப்படுகின்றனர். கடவுளின் வழி யாதெனக் கண்டு அதைக் கவனமாகக் கடைப்பிடிப்போர் அவருடைய அன்பிலும் அருளிலும் நிலைத்திருப்பார்கள். கடவுளிடத்தில் முழு நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.
சிமியோன் நேர்மையாளராக இருந்தார் என்பது அவருடைய வாழ்க்கை முறையில் துலங்கியது. கடவுள் தம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேறும் என சிமியோன் உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கையின் காரணமாக அவர் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார். கடவுள் வாக்களித்த மீட்பு இயேசுவின் வழியாக நிறைவேறப் போகின்றது என்னும் உண்மை சிமியோனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. நம் வாழ்க்கையில் கடவுளின் வாக்குறுதிகள் நிறைவேறுவதை நாம் ஒவ்வொரு நாளும் காணலாம். கடவுளின் அன்புக் கரம் நம்மை வழிநடத்துவதை நாம் உணரலாம். நேர்மையான மன நிலையோடு கடவுளை அணுகுவோருக்கு அவருடைய ஆவி வாக்களிக்கப்படுகிறது. அந்த உறுதி நமக்கு இருப்பதால் நாமும் இறைப்பற்றுக் கொண்டு, இறைவழியில் தொடர்ந்து வழி நடக்க முன்வர வேண்டும்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org