Get Adobe Flash player

31 டிசம்பர் 2017 திருக்குடும்ப விழா
வாசகங்களை விளங்குபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, மதுரை

 

I. தொடக்கநூல் 15:1-6, 21:1-3

II. எபிரேயர் 11:8, 11-12, 17-19

III. லூக்கா 2:22-40

 

விண்மீன்களை எண்ணிப்பார்!

 இன்று ஆண்டின் இறுதி நாள். இன்னும் சில மணித்துளிகளில் 2017ஆம் ஆண்டு நம் கைகளில் இருந்து விடைபெறுகிறது. ஆண்டின் இறுதி நாளை இயேசு-மரி-வளன் திருக்குடும்பத்திடம் ஒப்படைக்கும் முகமாய் அமைந்திருக்கிறது இந்த ஆண்டின் திருக்குடும்ப பெருவிழா.

 

 

'ஃபேமிலி' என்பதன் மூல வார்த்தையை பற்றி ஆராய்ந்தால், 'ஃபேமிலி' என்ற வார்த்தை 'ஃபாமுலுஸ்' என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது. 'ஃபாமுலுஸ்' என்றால் 'ஆண் அடிமை' அல்லது 'பணியாளன்' என்பது பொருள். அடிமைகள் காலங்காலமாக நிரந்தரமாக ஒரே வீட்டில் அடுத்தடுத்த தலைமுறைக்கு பணிசெய்திருந்திருக்கிறார்கள். காலப்போக்கில் அடிமைகளின் இருப்பிடத்தை, அடிமைகளோடு வாழ்பவர்களைக் குறிப்பிடும் 'வீட்டார்' என்று தொடங்கி 'குடும்பம்' மலர்ந்துள்ளது.

 

'நீ எதற்கு - யாருக்கு பணி செய்கிறாயோ அதற்கு - அவருக்கு நீ நெருக்கம்' என்பது பழமொழி. ஆக, நாம் எங்கே பணி ஆற்றுகின்றோமோ அங்கே நெருக்கம் பிறக்கின்றது. நாம் அதிகமாகப் பணியாற்றும் நபர்கள் இணைந்ததே குடும்பம்.

 

இன்று குடும்பம் என்பதன் பொருள் மிக வேகமாக மாறிக்கொண்டே வருகிறது. 'கணவன்-மனைவி-பிள்ளை' என்பதுதான் குடும்பம் என்ற வரையறை மறைந்து, 'ஒரு பெற்றோர் குடும்பம்,' 'தனி நபர் குடும்பம்,' 'வலைதளக் குடும்பம்' என குடும்பங்கள் நிறைய பரிமாணங்களை எடுத்துவருகின்றன. இந்தப் பின்புலத்தில் நாம் இன்று கொண்டாடும் திருக்குடும்பத்தை எப்படி புரிந்துகொள்வது?

 

இன்றைய முதல் (தொநூ 15:1-6, 21:1-3), இரண்டாம் (எபி 11:8, 11-12, 17-19), மற்றும் மூன்றாம் (லூக் 2:22-40) வாசகங்களை வாசிக்கும்போது குடும்பம் என்பது ஒரு குட்டி வட்டத்தில் தொடங்கி அகலமாக வளர்வதைப் பார்க்கிறோம்.

 

முதல் வாசகத்தில் 'ஆபிர(க)hம் - சாரா' என்று இரண்டு பேர் இருக்கின்றனர்.

இரண்டாம் வாசகத்தில் 'ஆபிரகாம் - சாரா - ஈசாக்கு' என மூன்று பேர் இருக்கின்றனர்.

மூன்றாம் வாசகத்தில் 'யோசேப்பு - மரியாள் - இயேசு - சிமியோன் - அன்னா' என ஐந்து பேர் இருக்கின்றனர்.

 

முதல் குடும்பம் 'உடல்' சார்ந்தது.

இரண்டாவது குடும்பம் 'நம்பிக்கை' சார்ந்தது.

மூன்றாவது குடும்பம் 'அர்ப்பணம்' சார்ந்தது.

 

அ. உடல் சார்ந்த குடும்பம்

 

தன் உடலின் முதுமை காரணமாகவும், தன் மனைவியின் இயலாமை காரணமாகவும் தனக்கு குழந்தைப் பேறு இருப்பது எட்டாக்கனி என நினைக்கின்ற ஆபிரகாம், 'நீர் எனக்கு குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப்போகிறான்' என்று விரக்தியிலும், ஏமாற்றத்திலும் இறைவனை நோக்கிப் புலம்புகின்றார். ஆனால், ஆண்டவர் காட்டிய விண்மீன்களைக் கண்ட ஆபிரகாம் கடவுள்மேல் நம்பிக்கை கொள்கிறார்.

 

உடல் சார்ந்த குடும்பத்தில் உடல் பற்றிய சிந்தனையே அதிகம் இருக்கும் - ஒருவர் என்ன நிறம்? அவரின் உடல் எடை எவ்வளவு? உயரம் எவ்வளவு? வடிவம் எப்படி? அழகு எப்படி? ஆண் என்றால் வன்மை கொண்டவரா? பெண் என்றால் மென்மை கொண்டவரா? அவரின் திறமைகள் என்ன? வேலை என்ன? சம்பளம் என்ன? சொத்து என்ன? - இப்படி உடல் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கி இருக்கும்.

 

இந்த சிந்தனைகள் தேவையில்லை என்பது இல்லை. மாறாக, இந்த சிந்தனைகளில் நாம் தேங்கிவிடக்கூடாது என்பதுதான் நாம் அறிந்துகொள்ள வேண்டியது.

 

ஒரு மகனுக்காக ஏங்குகிறார். எண்ண முடியாத விண்மீன்களாய் மகன்களை, மகள்களை வாக்களிக்கின்றார் இறைவன். ஆக, எண்ணுகின்ற ஒன்றிலிருந்து எண்ண முடியாத ஒன்றிற்கு ஆபிரகாமை அழைத்துச் செல்கின்றார் இறைவன்.

 

ஆ. நம்பிக்கை சார்ந்த குடும்பம்

 

ஆபிரகாம் - சாரா - ஈசாக்கு குடும்பம் மூன்று நிலைகளில் நம்பிக்கை கொண்டிருந்ததாக இன்றைய வாசகத்தில் பதிவு செய்கின்றார் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் ஆசிரியர்: (1) தாம் எங்கே போக வேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார், (2) வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்த போதிலும் அவர் தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றார், (3) ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கை பலியிடத் துணிந்தது.

 

இவ்வாறாக, இவர்கள் குடும்பத்தில் 'நம்பிக்கை' மையமாக இருக்கிறது. இந்த நம்பிக்கையின் மேன்மை என்னவென்றால் இந்த நம்பிக்கை ஆபிரகாம்-சாரா-ஈசாக்கு குடும்பத்திற்கு மட்டுமல்ல, மாறாக, ஒட்டுமொத்த இஸ்ரயேல் மக்களுக்கும் நன்மையை அள்ளித் தருவதாக இருக்கிறது.

 

ஆக, ஆபிரகாமின் சிறிய குடும்பத்திற்குள் இஸ்ரயேல் பெரிய குடும்பம் நுழைகிறது.

 

இ. அர்ப்பணம் சார்ந்த குடும்பம்

 

மோசேயின் திருச்சட்டப்படி குழந்தை பெற்ற தாய்க்கான தூய்மைச்சடங்கை நிறைவேற்ற யோசேப்பு-மரியாள்-இயேசு குடும்பம் எருசலேமிற்கு வருகிறது. இவர்களின் இவ்வருகையின் நோக்கம் இரண்டு: (1) மரியாளுக்கு தூய்மைச் சடங்கு, (2) ஆண்குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்தல். 

 

இந்நிகழ்வு ஒரு குடும்ப நிகழ்வாக இருந்தாலும், இந்நிகழ்வு சிமியோன் மற்றும் அன்னா ஆகியோரை இவர்கள் பக்கம் இழுக்கிறது. சிமியோனும், அன்னாவும் குழந்தையைக் கையில் ஏந்தி, நாசசேரத்துக் குழந்தையை இந்த நானிலத்தின் குழந்தையாக அறிமுகம் செய்கின்றனர்.

 

குழந்தை அர்ப்பணம் செய்யப்பட்டவுடன் அந்தக் குழந்தை அகில உலக குழந்தையாக மாறுகிறது. இந்தக் குழந்தை 'ஒளியாக இருக்கும்' என உலகிற்கு அறிமுகம் செய்கின்றார் சிமியோன். 

 

அர்ப்பணம் குடும்பத்தை நோக்கி மற்றவர்களை இழுக்கிறது.

 

ஆக, 'உடல்,' 'நம்பிக்கை,' 'அர்ப்பணம்' என குடும்பம் வளர வேண்டும்.

 

அல்லது எந்தக் குடும்பம் வளர்கிறது என்ற சொல்கிறோம்?

 

'உடல்' சார்ந்த குடும்பம் நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட குடும்பம். 'நம்பிக்கை' சார்ந்த குடும்பம் நம் திருச்சபைக் குடும்பம். 'அர்ப்பணம்' சார்ந்த குடும்பம் நம் உலகக் குடும்பம். ஒன்றில் தொடங்கும் பயணம் அடுத்ததை நோக்கி நகர வேண்டும். 

 

இன்று நம் குடும்பங்கள் என்று பொதுவாக சிந்திக்காமல், நாம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட குடும்பமாக எண்ணிப் பார்ப்போம்.

 

நான் என் வாழ்வில் என் 'உடல்' தரும் அடையாளத்தைக் கடந்து, என் 'நம்பிக்கையை' அடைய முடிகிறதா? அதிலிருந்து கடந்து என் 'அர்ப்பணத்தை' அடைய முடிகிறதா?

 

இன்று குடும்பங்களும், நம் தனிப்பட்ட வாழ்வும் பெரும்பாலான நேரங்களில் 'உடல் சார்ந்த' ஒன்றாக இருப்பதுதான் வருத்ததற்குரியது. ஆபிரகாமின் குடும்பமும், நாசரேத்து இயேசுவின் குடும்பமும் இதைக் கடந்து நின்றது.

 

நம்மாலும் நிற்க முடிந்தால் நாமும் விண்மீன்களாய் ஒளிரலாம்!

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org