Get Adobe Flash player

21 ஜனவரி 2018 ஆண்டின் பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
வழங்குபவர் : அருள் பணி இயேசு கருணாநிதி, மதுரை

 

I. யோனா 3:1-5,10

II. 1 கொரிந்தியர் 7:29-31

III. மாற்கு 1:14-20

 போகிற போக்கு

 நம் தமிழ் மரபில் நாம் சந்திக்கும் யாரையும், 'நீங்க நல்லா இருக்கீங்களா?' எனக் கேட்கிறோம். விவிலிய எபிரேய மரபில் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போது, 'நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?' என்று கேட்பார்கள் (காண். தொநூ 16:18, நீத 19:17). இக்கேள்வியின் பின்புலம் இரண்டு: (அ) எபிரேயர்கள் அல்லது இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் குடியிருந்தனர்.


வீடுகள் மிகவும் தூரமாக இருந்தாலும், ஒருவர் மற்றவரோடு உள்ள தொடர்பு மிகக் குறைவாக இருந்ததாலும், ஒருவரின் வருகையையும், செல்கையையும் கேட்கும்போது அவரின் தொடக்கம் மற்றும் முடிவை அறிந்து கொண்டனர். வருகின்ற நபர் தங்களுக்கு ஆபத்து எதுவும் தராதவர் என்பதை இவ்வாறு உறுதி செய்துகொண்டனர். (ஆ) இவர்கள் தங்கள் வாழ்வை ஒரு பயணமாககே கருதினர். ஒவ்வொரு பயணத்திற்கும் இந்த இரண்டு கேள்விகளும் அவசியம். இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை தெரியாதவர் சும்மா உழன்றுகொண்டே இருப்பர். ஆக, வாழ்வின் எந்த நிலையிலும் இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை அவசியம் என்பதை இவர்கள் உறுதியாக நம்பினர். 

 

இன்றைய இறைவாக்கு வழிபாட்டு சிந்தனைக்கு, 'போகிற போக்கு' என்று தலைப்பிட்டுக்கொள்வோம். 'போக்கு' என்றால் 'போகுதல்' அல்லது 'செல்லுதல்.' 'போகுதல்' என்பது ஒரு வழியை உள்ளடக்கியிருக்கிறது. இந்த வழிக்கு தொடக்கம் ஒன்று உண்டு, இலக்கு ஒன்று உண்டு. இந்த இரண்டும் தெளிவாக இருக்கும்போது போதல் எளிதாகிறது.

 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். யோனா 3:15,10) நினிவே மக்கள் 'போகிற போக்கை' இறைவாக்கினர் யோனா மாற்றிப் போடுகின்றார்.

 

இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 7:29-31) வாழ்வின் இயலாமை பற்றிப் பேசுகின்ற தூய பவுலடியார் நாம் 'போகிற போக்கு' நிலையானது அல்ல என்றும், அது மிக வேகமாக மாறக்கூடியது என்றும் அறிவுறுத்துகின்றார்.

 

நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 1:14-20), 'காலம் நிறைவேறிவிட்டது' என்று தன் பணிவாழ்வைத் தொடங்கும் இயேசு, அனைத்து மக்களின் 'போகிற போக்கை' மனமாற்றத்தின் வழியாகவும், முதற்சீடர்களின் 'போகிற போக்கை' சீடத்துவ அழைப்பின் வழியாகவும் மாற்றிப் போடுகின்றார்.

 

'போகிற போக்கை' ஒவ்வொரு வாசகத்திற்கும் சென்று சற்று விரிவாகப் பார்ப்போம்:

 

முதல் வாசகம்: 'யோனாவின் போக்கும், நினிவேயின் போக்கும்'

 

இறைவாக்கினர் யோனாவின் பணி பயணத்தில்தான் தொடங்குகிறது. ஆண்டவர் அவருக்கு அருளும் முதல் வாக்கே, 'நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய்' என்றுதான் இருக்கிறது. ஆனால் யோனா தன் போக்கில் பயணம் செய்ய முற்படுகின்றார். ஆண்டவர் வடக்கு நோக்கி இவரை அனுப்ப, அதற்கு எதிர்திசையில் தெற்கு நோக்கி பயணம் தொடங்குகின்றார் யோனா. விளைவு கடல் கொந்தளிப்பு. கொந்தளிப்பின் இறுதியில் கடலின் மீனின் வாய்க்குள் விழ, இரண்டாம் முறையாக மீண்டும் அழைப்பு பெற நினிவேக்கு வருகின்றார் யோனா. 'நினிவே ஒரு மாபெரும் நகர். அதை கடக்க மூன்று நாள்கள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்தபின்' என பதிவு செய்கிறார் ஆசிரியர். வேண்டா வெறுப்பாக நினிவேக்குச் செல்கின்ற யோனா, மூன்று நாள் கடக்க வேண்டிய நகரின் தூரத்தை ஒரே நாளில் கடக்கின்றார். அப்படி என்றால் இவர் நடந்திருக்க மாட்டார். ஓடியிருப்பார். வேண்டா வெறுப்பாக, ஓட்டமும் நடையுமாக இறைவாக்குரைத்து முடிக்கின்றார் யோனா. மேலும், மனமாற்றம் பற்றி அவர் போதிக்கவில்லை என்றாலும், நினிவே மக்கள் யோனாவின் செய்தியை மனமாற்றத்திற்கான அழைப்பாக ஏற்று உடனடியாக செயல்படத் தொடங்குகின்றனர். 'இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்' என்ற மொட்டையான செய்தியை 'போகிற போக்கில்' சொல்லிவிடுகின்றார் யோனா. ஆனால், 'போகிற போக்கில்' சொல்லப்பட்ட செய்திதானே என போகிற போக்கில் அதை விட்டுவிடாமல், தாங்கள் போகின்ற போக்கை மாற்ற முடிவு செய்கின்றனர். அந்த மாற்றத்தை உடனே செயல்படுத்துகின்றனர். ஆண்டவரும் அவர்கள் தங்கள் தீய வழியை மாற்றிக்கொண்டதால் தம் மனத்தை மாற்றிக் கொள்கின்றார்.

 

இரண்டாம் வாசகம்: 'வெளி நோக்கும் போக்கிலிருந்து உள் நோக்கும் போக்கு'

 

திருமண வாழ்வு பற்றி கொரிந்து நகர திருச்சபைக்கு அறிவுறுத்துகின்ற பவுல் தொடர்ந்து, 'மணமாகாதவர்களும் கைம்பெண்களும் கொண்டிருக்க வேண்டிய வாழ்க்கை முறை' பற்றிப் பேசுகின்றார். பவுல் இந்தக் கடிதத்தை எழுதும் காலத்தில் (கி.பி. 60 - 100) 'பருசியா' என்று சொல்லப்படும் 'இரண்டாம் வருகை' அல்லது 'உலக இறுதி' மிக அருகில் இருப்பதாக மக்கள் நம்பினர். இந்தப் பின்புலத்தில் திருமணம் முடித்தலும், பெண் கொள்தலும், கொடுத்தலும், திருமண உரிமையால் வரும் மகிழ்ச்சியும், பிரிவால் வரும் அழுகையும் என எல்லாம் மாறிப்போகும் அல்லது அழிந்து போகும் என எண்ணுகின்ற பவுல், 'இனியுள்ள காலம் குறுகியதே' என்று தொடங்கி, 'இப்போது இருப்பதுபோல நெடுநாள் இராது' என நிறைவு செய்கிறார்.

 

குறுகிய காலம்தான் எல்லாம் இருக்கிறது என்றால் நாம் தேவையற்றவைகளை விடுத்துவிட்டு, தேவையானவற்றை மட்டும் பற்றிக்கொள்ள வேண்டும் என்பது பவுலின் அழைப்பாக இருக்கிறது. நாம் நம் வீட்டில் இருக்கும் போது பெரிய வீடு, இடம், தோட்டம் என எல்லாவற்றையும் பயன்படுத்துகிறோம். நம்முடைய ஒருநாள் வாழ்விற்கு மேசை, நாற்காலி, கைகழுவும் இடம், கட்டில், டிவி என நிறைய பயன்படுத்துகிறோம். ஆனால், ஒருநாள் பயணமாக நாம் அமெரிக்க ஐக்கிய நாடுகள் செல்ல விமானம் ஏறும்போது இவை எல்லாவற்றையும் விமானத்தின் ஒற்றை நாற்காலியில் அமர்வதன் வழியாக முடித்துக்கொள்கிறோம். ஆக, நம் வாழ்விற்கு ஒற்றை நாற்காலி இருந்தால் போதுமானதுதான். ஒருநாள் விமானத்தில் இந்த ஒற்றை இருக்கையோடு வாழும் நமக்கு ஓராண்டு முழுவதும் வாழ்வது சாத்தியமில்லையா? ஆக, நம் வாழ்வின் மகிழ்ச்சி என்பது நாம் நிறைய கொண்டிருப்பதிலும், நிறைய அனுபவத்திலும் இல்லை. மாறாக, அது நம் ஒவ்வொருவருக்கும் உள்ளே பொதிந்து இருக்கிறது. ஆக, வெளி நோக்கி நாம் செல்லும் போக்கை உள்நோக்கி திருப்ப வேண்டும் என்பது இரண்டாம் வாசகத்தின் பாடம்.

 

நற்செய்தி வாசகம்: 'இயேசுவின் போக்கும், சீடர்களின் போக்கும்'

 

மாற்கு நற்செய்தியாளரின் இயேசுவின் பணி வாழ்வு தொடக்கத்தைப் பதிவு செய்யும்போது, 'யோவான் கைதுசெய்யப்பட்ட பின்' என்று தொடங்குகின்றார். ஆக, 'யோவானுக்கு திரை விழுந்து' 'இயேசுவுக்கு திரை விலகுகிறது.' இதுதான் 'காலம் நிறைவேறிவிட்டது' என்பதன் பொருள். 'யோவானின் காலம் நிறைவேறிவிட்டது,' 'மீட்பற்ற நிலையின் காலம் நிறைவேறிவிட்டது,' 'இனி தொடர்வது எல்லாம் புதிய காலமே' என 'இறையாட்சியின் வருகையை அறிவிக்கின்றார்' இயேசு. இந்த இறையாட்சியை அறிந்து கொள்வது என்பது 'மனம் மாறி நற்செய்தியாகிய இயேசுவை நம்புவதில்' அடங்கியிருக்கிறது. இயேசுவின் போக்கு தன் வாழ்வின் கூட்டு நிலையிலிருந்து வெளியேறி பணி வாழ்வுக்குள் நுழைவதாக இருக்கிறது.

 

போகிற போக்கில் நற்செய்தி அறிவித்த யோனா போல அல்லாமல், தம் சீடர்களின் 'போக்கை மாற்றுகின்றார்' இயேசு. இயேசுவுக்கும், யோனாவுக்கும் இன்னும் சில வித்தியாசங்களும் உள்ளன. தம்மிடம் அறிகுறி கேட்பவர்களுக்கு யோனாவின் அறிகுறியை வழங்கும் இயேசு, 'இங்கிருப்பவர் யோனாவைவிட பெரியவர் அல்லவா!' (மத் 12:41) என முழங்குகின்றார். யோனா நகரத்தில் தன் பணியைச் செய்தார். இயேசுவோ கிராமத்தில் செய்தார். யோனாவின் பயணம் மையம் நோக்கி இருந்து. இயேசுவின் பயணமோ விளிம்பி நோக்கி இருந்தது. யோனா ஓட்டமும் நடையுமாக பணி செய்கிறார். இயேசு ஆற அமர பணி செய்கிறார்.யோனா வேண்டா வெறுப்பாகச் செய்கிறார். இயேசு மக்கள் மேல் கொண்ட பரிவினால் செய்கிறார்.இவ்வாறாக, அவர் 'யோனாவைவிட பெரியவராக' இருக்கின்றார். 

 

இயேசு திருத்தூதர்களை அழைக்கும் நிகழ்வு மாற்கு 3:14-15ல் இருந்தாலும், முதற்சீடர்களை அழைக்கும் நிகழ்வை நாம் மாற்கு 1:14-20ல் வாசிக்கின்றோம். சீமோன் - அந்திரேயா, யாக்கோபு - யோவான் என்னும் இரண்டு ஜோடி சகோதரர்களை அழைக்கின்றார் இயேசு. நான் இந்த நிகழ்வை ஓர் உருவகமாக பார்க்கிறேன். எப்படி?

 

கடல் என்பது இவ்வுலகில் உள்ள எல்லாரையும் குறிக்கிறது. இவ்வுலகில் உள்ள எல்லாருமே நாம் கடலோரமாய் தான் நின்றுகொண்டிருக்கிறோம். இந்த நின்றுகொண்டிருத்தலில் ஒருவகையான காத்திருத்தலும், எதிர்நோக்கும் இருக்கிறது. இவ்வாறு, காத்திருக்கும் நாம் நம் வாழ்வு என்னும் கடலில் நம் பணிகள், பயணங்கள், படிப்பு, உறவுநிலைகள் வழியாக 'கடலில் வலை வீசிக்கொண்டிருக்கிறோம்.' அதாவது, நம் அன்றாட அலுவல் ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறோம். பிறந்த குழந்தைக்கும்கூட ஏதோ ஒரு அலுவல் அல்லது ஒரு கவலை இந்த உலகில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படி நம் வேலையில் மும்முரமாக இருக்கும் நம்மை நோக்கி கடவுளின் அழைப்பு வருகிறது. ஆக, அந்த அழைப்பு வரும் கணப்பொழுதில் நாம் சட்டென முடிவு எடுக்க வேண்டும். அந்த முடிவிற்காக நாம் பெரிய விலையைக் கொடுக்க வேண்டும். நம் வலைகளை விட்டுவிட வேண்டும். கடலை நோக்கி நம் முதுகைத் திருப்ப வேண்டும். இனி கடல் நம்மிடமிருந்து விடைபெற வேண்டும். பாதி கடல், பாதி கடவுள் என்று நம்மால் பயணம் செய்ய முடியாது. சீமோன் - அந்திரேயா போல வலைகள் என்னும் வேலைகளை விட வேண்டும். யாக்கோபு - அந்திரேயா போல நம் அப்பாவை, உறவுகளை, கூலியாள்களோடு விட வேண்டும். கூலியாள் என்பவர் நம் ஆடம்பரம். நம் வேலையை நாம் செய்வதற்குப் பதிலாக நமக்கு நம் வேலையை செய்யும், நம் அதிகாரத்திற்கு தூபம் போடுபவர்கள்தான் கூலியாள்கள். கூலியாள்களை விட்டுவிடுவது என்பது நம் அதிகாரத்தையே விட்டுக்கொடுப்பது. அப்பாவை விடுவது என்பது எல்லா உறவுகளையும் விடுவது. ஆக, வேலை, உறவு, அதிகாரம் என்ற மூன்றை நோக்கிய நம் போக்கை மாற்றிப்போடுகிறது இயேசுவின் அழைப்பு.

 

இவ்வாறாக, இன்றைய நம் போக்கு (வழி) என்ன? நாம் போகிற போக்கு சரிதானா? என்பதை மறுஆய்வு செய்ய நமக்கு அழைப்பு விடுக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

 

இவ்வாறாக, நாம் நம் போக்கை மாற்றுவதால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் எவை?

 

முதல் வாசகத்தில், தங்கள் போக்கை மாற்றிய நினிவே மக்கள், தங்கள் ஓட்டத்தை நிறுத்தி சாம்பலில் அமர்ந்த நினிவே மக்கள் கடவுளின் தீர்ப்பு அல்லது தண்டனைக்குத் தப்பியவர்களாய் அவரது இரக்கத்தைப் பெறுகின்றனர். இரண்டாம் வாசகத்தில், தங்கள் போக்கை மாற்ற அறிவுறுத்தப்படும் கொரிந்து நகர மக்கள் நிலையான மகிழ்ச்சியாம் ஆண்டவருக்குப் பணிபுரிதலைக் கண்டுகொள்கின்றனர். நற்செய்தி வாசகத்தில், தங்களின் வேலை, அப்பா, வேலையாள்கள் ஆகியவற்றிலிருந்து தங்கள் போக்கை மாற்றும் முதற்சீடர்கள் நற்செய்தியாம் இயேசுவைப் பற்றிக்கொள்கின்றனர்.

 

இந்த மூன்று போக்கு மாற்றங்களுக்கும் இவர்கள் பெரிய விலையைக் கொடுக்க வேண்டும். அந்த விலை என்னவென்றால், 'ஒருமுறை விட்ட வழியில் அவர்கள் மீண்டும் செல்லக்கூடாது.' நினிவே மக்கள் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்புதல் கூடாது. கொரிந்து நகர மக்கள் இவ்வுலக வாழ்வின் கவலைகளில் தங்களை ஆழ்த்தக் கூடாது. முதற்சீடர்கள் தங்கள் வலைகளையும், அப்பாவையும், கூலியாள்களையும் நாடிச் செல்லக்கூடாது. (இந்த சோதனை சீடர்களுக்கு இயேசுவின் இறப்பிற்குப் பின் வருகிறது - காண். யோவா 21:3. ஆனால் இந்த சோதனையும் அவர்களின் கடவுளின் பிரசன்னம் வெளிப்படும் நிகழ்வாக மாறுகிறது).

 

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?

 

1. நாம் 'போகிற போக்கில்' வாழ்கிறோமா? அல்லது 'போக்கையே மாற்றி' வாழ்கிறோமா?

 

யோனாவிடம் ஓர் இனம்புரியாத கோபம் இருக்கிறது. தன்மேல், தன்னைச் சுற்றியிருப்பவர்கள்மேல், தன் கடவுள்மேல். இந்தக் கோபம் இருப்பதால் அவரால் வாழ்வை முழுமையாக வாழ முடியவில்லை. ஆனால், அதற்கு எதிர்மாறாக இயேசுவிடம் பரிவு மட்டுமே இருக்கிறது. கோபம் குடிகொள்ளும் யோனா தன்னை மையப்படுத்தியவராக இருக்கிறார். பரிவு குடிகொள்ளும் இயேசு பிறரை மையப்படுத்தியவராக இருக்கிறார். இன்று என் வாழ்வை முழுமையாக வாழ்வதற்கு தடையாக இருக்கும் காரணி எது? அது எங்கே இருக்கிறது?

 

2. 'எங்கள் சொல்லும் செயலும் உமக்கு உகந்தனவாக அமைய எங்களுக்கு வழிகாட்டும்'

 

இன்றைய சபை மன்றாட்டில் நாம் இப்படித்தான் செபிக்கின்றோம். நம் சொற்களும், செயல்களும் அவருக்கு உகந்தனவாக இருக்க அவர் தான் வழிகாட்ட வேண்டும். ஆக, நம் வாழ்வின் ஓட்டம் அவர் கைகளில் இருக்கிறது. இதுவே இன்றைய பதிலுரைப்பாடலில் திருப்பாடல் ஆசிரியரின் செபமாக இருக்கிறது: 'ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும். உம் வழிகளை எனக்கு கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்கு கற்பித்தருளும்' (திபா 25:4-5). ஆண்டவரின் வழிகளை நம்மால் கற்றுக்கொள்ள முடியுமென்றால் நாம் திறந்த உள்ளம் கொண்டிருக்கிறோமா?

 

3. 'பொருள்களை வாங்குவோர் அது இல்லாதவர் போலவும் இருக்கட்டும்'

 

இருந்தாலும் இல்லாதவர் போல, இல்லை என்றாலும் இருப்பவர் போல வாழ்வது என்றால் என்ன? இப்படி இருப்பதாக நடிப்பது அல்லது யூகிப்பது அல்ல. மாறாக, நாம் கொண்டிருக்கும் பொருள்கள் அல்லது நபர்கள் நம் வாழ்வைக் கூட்டுவதோ, குறைப்பதோ இல்லை என உணர்வது. பவுல் 'மனைவி உள்ளவர் மனைவி இல்லாதவர்போல' இருக்கட்டும் என்கிறார். பவுல் அளவிற்கு நம்மால் புரட்சிகரமாக எல்லாவற்றையும் ஒதுக்கிவைக்க முடியவில்லை என்றாலும், கொஞ்சம் கொஞ்சமாக பற்றுக்களை குறைத்துக்கொள்தல் நலம். இதைப் புரிந்துகொள்ளவே கடவுளின் தூண்டுதல் அவசியம் என நினைக்கிறேன். நம்ம வாழ்வையே நினைத்துப் பார்ப்போம். ஒவ்வொரு கால கட்டத்தில் நாம், 'இதுதான் உலகம்' என பிடித்துக்கொண்டிருந்தது, அடுத்த கட்டத்திற்குள் நுழையும்போது நம்மை அறியாமலேயே நம் கை நழுவிப் போய்விடுகிறது. வாழ்வின் போக்கிற்கு ஏற்ப நம் போக்கை அமைத்துக்கொள்வது.

 

இயேசு வருவார் என்று சீமோனும், பேதுருவும், யாக்கோபும், யோவானும் வழிமேல் விழி வைத்து ஓய்ந்திருக்கவில்லை. வலைகளை வீசிக்கொண்டும், படகுகளை பழுதுபார்த்துக்கொண்டும்தான் இருந்தனர். அதே வேளையில் இயேசு வந்தவுடன் தங்கள் உலகமாக அவர்கள் நினைத்த வலைகளையும், படகுகளையம், அப்பாவையும், கூலியாள்களையும் விட தயாராக இருந்தனர். ஆக, எல்லாவற்றிற்கும் 'ஆம்' என்று சொல்லும் தயார் மனநிலை இது. அவ்வாறே, யோனாவின் வருகையை நினிவே மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் வந்தவுடன் மனமாற்றத்திற்கு தாமதிக்கவில்லை. வாழ்க்கை சில நேரங்களில் எல்லாவற்றையும் settle செய்வதற்கு நமக்கு நேரம் கொடுப்பதில்லை. இருக்கும்போதே அப்படியே போட்டுவிட்டு அடுத்த நிலைக்குச் செல்ல அழைக்கிறது. இப்படி செல்வதற்கு கட்டின்மை வேண்டும்.

 

அவரின் வழி என் வழியாக, அவரின் போக்கே நான் போகிற போக்காக இருந்தால் எத்துணை நலம்!

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org