ஏக பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்
என்பதன் அர்த்தம் தான் என்ன?
Bro. A.Anton Gnanaraj Reval SDB, St. Thomas Theological College, Messina, Sicily, Italy
நன்றி : தமிழ் ஆன்மீகப் பணியகம், யேர்மனி

symbol01

ஏகம்

ஏகம் என்றால் ஒன்று என அர்த்தம். திருச்சபை ஒன்றாய் இருக்கிறது. கிறிஸ்துவை தலைவராகக் கொண்டுள்ளது. அதன் ஆண்டவர் ஒருவரே. அது ஒரே திருமுழுக்கினால் பிறக்கின்றது. அது ஒரே நம்பிக்கையின் பொருட்டு ஒரே ஆவியால் உயிரூட்டப்பெற்ற உடலாக விளங்குகின்றது.


விவிலிய ஆதாரங்கள் :
தேவ ஆவி அளிக்கும் ஒருமைப்பாட்டைச் சமாதானம் என்னும் பிணைப்பால் காப்பாற்றக் கண்ணும் கருத்துமாய் இருங்கள். ஒரே நம்பிக்கையில் பங்கு பெற நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே நம்பிக்கை இருப்பதுபோல், ஒரே உடலும் ஒரே ஆவியும் உண்டு. அவ்வாறே ஒரே ஆண்டவர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்தானம் உண்டு. எல்லாருக்கும் கடவுளும் தந்தையும் ஒருவரே, அவர் எல்லாருக்கும் மேலானவர், எல்லாரிலும் செயலாற்றுபவர், எல்லாருக்குள்ளும் இருப்பவர். (எபேசியர். 4:3-6)

இக்கிடையைச் சேராத வேறு ஆடுகள் எனக்கு உள்ளன. அவற்றையும் நான் கூட்டிச் சேர்க்கவேண்டும். அவை என் குரலுக்குச் செவிகொடுக்கும். ஒரே ஆயனும் ஒரே மந்தையும் உண்டாகும். (யோவான். 10:16)

எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக. தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்; நீர் என்னை அனுப்பினீர் என்று இதனால் உலகம் விசுவசிக்கும். (யோவான். 17:21)

பரிசுத்தம்

திருச்சபை பரிசுத்தமாய் இருக்கிறது. அதிபரிசுத்த இறைவனே அதை உருவாக்கினார். அதன் பத்தாவாகிய கிறிஸ்து அதை புனிதப்படுத்த தம்மைக் கையளித்தார். புனிதத்துவத்தின் ஆவி அதற்கு உயிரளிக்கின்றார். அது பாவிகளை உறுப்பினர்களாக கொண்டிருந்தாலும் பாவமற்றதாய் விளங்குகின்றது. புனிதர்களில் அதன் பரிசுத்த தனம் விளங்குகின்றது. திருச்சபையின் தாயாக விளங்கும் புனித மரியாளின் புனிதத்தன்மையும் திருச்சபையை புனிதவதியாக ஆக்குகின்றது.

விவிலிய ஆதாரங்கள் : மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன். உன் பெயர் 'பாறை.' இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா. வானகத்தின் திறவுகோல்களை உனக்குக் கொடுப்பேன். எதெல்லாம் மண்ணகத்தில் நீ கட்டுவாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் கட்டப்பட்டதாகவே இருக்கும். எதெல்லாம் மண்ணகத்தில் நீ அவிழ்ப்பாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்" என்றார். (மத்தேயு. 16: 18- 19)

நீங்களோ தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், அரசு குருத்துவத் திருக்கூட்டம், பரிசுத்த குலம், இறைவனுக்குச் சொந்தமான மக்கள்; உங்களை இருளினின்று தம் வியத்தகு ஒளிக்கு அழைத்த இறைவனின் புகழ்ச்சிகளை அறிவிப்பது உங்கள் பணி. ( 1 பேதுரு. 2:9)

பின்னர், அவர் தம் 'கொடைகளை' அருளிச் சிலரை அப்போஸ்தலராகவும் சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியின் தூதர்களாகவும் ஆயர்களாகவும் போதகர்களாகவும் ஏற்படுத்தினார்.கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும், திருப்பணிக்குரிய வேலையை முன்னிட்டு இறைமக்களைப் பக்குவப்படுத்தவும் அக்கொடகைளை அளித்தார். இவ்வாறு, இறுதியாக நாம் எல்லாரும் கடவுளின் திரு மகனைப் பற்றிய விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பாட்டை எய்துவோம்; கிறிஸ்துவினுடைய முழுப் பருவத்தின் அளவை அடைந்து முதிர்ச்சிபெற்ற மனிதனாவோம். (எபேசியர். 4:11- 13)

கத்தோலிக்கம்

கத்தோலிக்கம் என்ற இலத்தீன் மொழிச்சொல் அனைவருக்குமான அல்லது பொதுவான என்ற அர்த்தத்தை குறிக்கும். திருச்சபை பொதுவானதாய் இருக்கிறது. அது விசுவாசத்தின் முழுப்பொருளை அறிவிக்கின்றது. அது எல்லா மக்களுக்கும் அனுப்பப்பட்டு, எல்லா மக்களுக்கும் நற்செய்தியை அறிவிக்கின்றது. அது எல்லா காலங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது. அது தன்னியல்பிலே மறை அறிவிப்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.

விவிலிய ஆதாரங்கள் :
"மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: மண்ணுலகில் உங்களில் இருவர் தாங்கள் கேட்கும் எதைக்குறித்தும் மனமொத்திருந்தால் அது விண்ணுலகிலுள்ள என் தந்தையால் அவர்களுக்கு அருளப்படும். இரண்டு, மூன்று பேர்என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்." (மத்தேயு.18: 19- 20)

இயேசு அவர்களை அணுகிக் கூறியது: "விண்ணிலும் மண்ணிலும் எல்லா அதிகாரமும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள். இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்." மத்தேயு.28 : 18 – 20

அப்போஸ்தலிக்கம்:

திருச்சபை அப்போஸ்தலிக்க சபையாக இருக்கின்றது. அது தேவ செம்மறியின் பன்னிரு அப்போஸ்தலர்களை அடிக்கற்களாக கொண்டுள்ளது. ( திருவெளிப்பாடு. 21 : 14 ) அது ஒருபோதும் அழிந்து போகாது. அது உண்மையில் பிழையின்றி நிலைநாட்டப்பட்டுள்ளது. திருச்சபையை புனித பேதுரு மற்ற திருத்தூதர்கள் அவர்களைத் தொடர்ந்து வரும் பரிசுத்த பாப்பரசர், ஆயர் குழாம் வழியாக கிறிஸ்து ஆண்டு நடத்துகிறார். கிறிஸ்துவின் ஒரே திருச்சபையை விசுவாசப்பிரமாணத்திலே தாம் ஒரே, தூய, பொதுவான , அப்போஸ்தலிக்க திருச்சபையென்று வெளிப்படையாக அறிக்கையிடுகின்றோம். அது இவ்வுலகில் நிறுவப்பெற்றதும், ஒழுங்கு முறையில் அமைந்ததுமான ஒரு சமுகமாக பேதுருவின் வழி வருபவராலும், அவரோடு ஒன்றித்திருக்கும் ஆயர்களாலும் ஆளப்படும் கத்தோலிக்க மறையில் தான் உறைகின்றது.

விவிலிய ஆதாரங்கள் : எனவே, இனி நீங்கள் அந்நியரல்ல, வெளிநாட்டாருமல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உறுப்பினர், கடவுளுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அப்போஸ்தலர், இறைவாக்கினர் இவர்களை அடிக்கல்லாகவும். கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டமாயிருக்கிறீர்கள். கட்டடம் முழுவதும் அவரில் இசைவாய்ப் பொருந்தி, பரிசுத்த ஆலயமாக ஆண்டவருக்குள் வளர்ச்சி, பெறுகிறது. எபேசியர். 2: 19 – 21

கடவுள் நம்மை மீட்டு நமக்குப் பரிசுத்த அழைப்பை அளித்துள்ளார். நம்முடைய செயல்களை முன்னிட்டு அவ்வாறு செய்யவில்லை; தாமே வகுத்த திட்டத்திற்கும் தமது அருளுக்கும் ஏற்பவே அவ்வாறு செய்தார். இவ்வருள் எல்லாக் காலங்களுக்கு முன்னரே கிறிஸ்து இயேசுவில் நமக்குக் கொடுக்கப்பட்டது; இக்காலத்தில் நம் மீட்பராம் கிறிஸ்து இயேசு உலகுக்குப் பிரசன்னமானதால் வெளிப்படையாயிற்று. அவர் சாவை அழித்து சாவே அறியா வாழ்வை நற்செய்தியின் வழியாய் ஒளிரச் செய்தார். நானோ இந்த நற்செய்தியின் தூதனாகவும் அப்போஸ்தலனாகவும் போதகனாகவும் ஏற்படுத்தப்பெற்றேன். இதன் பொருட்டே நான் இத்துன்பங்களுக்கு உள்ளானேன் ஆனால், வெட்கப்படவில்லை, யாரை நம்பியிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். அவர் என்னிடம் ஒப்படைத்ததை அந்த இறுதி நாள் வரை பாதுகாக்க அவர் வல்லவரென்று நான் உறுதியாய் நம்புகிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் பெற்றுக்கொள்ளும் விசுவாசத்திலும் அன்பிலும் வாழ்பவராய் என்னிடமிருந்து நீர் கேட்டறிந்த நலமிக்க வார்த்தைகளை வாழ்க்கைச் சட்டமாகக் கொண்டிரும். நமக்குள் குடிகொண்டிருக்கும் பரிசுத்த ஆவியின் உதவியினால் உம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நற்போதனையைப் பாதுகாப்பீராக.( 2 திமோத்தேயு. 1: 9 – 14)

நகரின் மதில் பன்னிரு அடிக்கற்கள் மேல் கட்டப்பட்டிருந்தது. அவற்றின் மேல் செம்மறியின் பன்னிரு அப்போஸ்தலர்களின் பன்னிரு பெயர்களும் இருந்தன. ( திருவெளிப்பாடு. 21 : 14 ) உசாத்துணை நூல்கள்: கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி நூல் , திருவிவிலியம்
[2017-11-14 01:23:11]