Get Adobe Flash player

St Sebastian

செபஸ்தியார் உரோமை இராணுவத்தில் படைத்தளபதியாக பணியாற்றிக்கொண்டிருந்த நேரம், நிறைய மனிதர்களை அவர் விசுவாசத்தில் உறுதிபடுத்தி,  கிறிஸ்துவுக்குள் கொண்டுவந்துகொண்டிருந்தார்.

அப்போது உரோமைப் பேரரசனாகிய கிரோமாசியுஸ் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தார். அவர், சிறையதிகாரியாகிய நிக்கோகிராத்துஸ், கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெற்றதால் நோய்நீங்கப் பெற்றார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். அதனால் தானும் கிறிஸ்துவின்மீது நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெற்றால், தன்னுடைய நோய்நீங்கும் என்ற உறுதியான நம்பிக்கையோடு செபஸ்தியாரை அழைத்து, கிறிஸ்துவைப் பற்றி தனக்குப் போதிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்பிறகு அவர் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெற்றார். அதனால் விரைவிலே அவருடைய நோய் நீங்கியது. இதற்கு நன்றிக்கடனாக அரசர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவர்கள் அனைவரையும் விடுவித்து அனுப்பினார். அதோடு மட்டுமல்லாமல், தனக்கு கீழ் அடிமைகளாக இருந்த 1400 கிறிஸ்தவர்களையும் அவர் விடுதலை செய்தார்.

வாழ்க்கை வரலாறு 

தூய செபஸ்தியார் கி.பி.257 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் பிறந்தார். பிறந்தது பிரான்சு நாடாக இருந்தாலும், வளர்ந்தது அனைத்தும் இத்தாலியில் உள்ள மிலன் நகரில்தான். இவர் வளர்ந்து உரோமை இராணுவத்தில் படைவீரராகச் சேர்ந்தார். இராணுவத்தில் இவருடைய  பொறுப்புமிக்க பணியைப் பார்த்துவிட்டு, அதிகாரிகள் இவரை படைத்தளபதியாக உயர்த்தினார்கள். இவருடைய காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வேதகலாபனைகள் அதிகமாக நடந்தன. ஒவ்வொருநாளும் கிறிஸ்தவர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள், கொடுமைப்படுத்தப்பட்டார்கள், சித்ரவதை செய்யப்பட்டார்கள். இதனால் நிறைய கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசத்தைத் துறந்து வாழத்தொடங்கினார்கள். இந்த நேரத்தில் மார்க்ஸ் மற்றும் மார்சலின் என்ற இரு இளைஞர்கள் கொடிய அரசாங்கம் தரும் அச்சுறுத்தலுக்குப் பயந்து, தங்களுடைய விசுவாசத்தைத் துறந்து, கிறிஸ்துவை மறுதலிக்கத் தொடங்கினார்கள். இதைக் கேள்விப்பட்ட செபஸ்தியார் அந்த இரு இளைஞர்களையும் சந்தித்து, நம்பிக்கையில் உறுதிபடுத்தினார். அவர்களை கிறிஸ்துவுக்காக உயிர்துறக்கும் பேற்றினை பெறச் செய்தார்.

இவை அனைத்தும் கொடுங்கோலன் தியோகிளிசியன் காதுகளை எட்டியது. அவன் செபஸ்தியாரை அழைத்து, “இதுபோன்ற காரியங்களை விட்டுவிட்டு கிறிஸ்துவை மறுதலிக்கவில்லை என்றால், சித்ரவதை செய்யப்படுவாய்” என்று எச்சரித்தார். அதற்கு செபஸ்தியார், “நான் ஆண்டவரைத் தவிர, வேறு யாருக்கும் அடிபணிவதில்லை” என்று சொல்லி தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார். இதனால் சினங்கொண்ட அரசன், அவரை ஊருக்கு வெளியே இழுத்துச்சென்று ஒரு மரத்தில் கட்டிவைத்து, அம்புகள் விட்டுக் கொன்றான்.

அன்று இரவு, இறந்துகிடக்கும் செபஸ்தியாரை அடக்கம் செய்யலாம் என்று அவர் கட்டப்பட்டிருந்த மரத்திற்கு அருகே சென்ற இரேன் என்ற புனிதை, செபஸ்தியார் இன்னும் உயிரோடு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு நின்றாள். பிறகு அவர் அவரை தன்னுடைய இல்லத்திற்குத் தூக்கிக்கொண்டு வந்து, அவருக்கு மருத்துவ உதவிகள் செய்து அவரைக் காப்பாற்றினார். சில நாட்களுக்குப் பிறகு உடல்நலம் தேறிய செபஸ்தியார் மீண்டுமாக கொடுங்கோலன் தியோகிளிசியனுக்கு முன்பாகத் தோன்றி, “நீ கிறிஸ்துவை நம்பாவிடில், நீயும் உன்னுடைய அரசாங்கமும் விரைவிலே அழிந்துபோகும்” என்று துணிவோடு எடுத்துரைத்தார். இதனால் அரசன் வெகுண்டெழுந்து, தடியால் அடித்து, அவரைக் கொன்றுபோட்டான். இறந்துப்போன செபஸ்தியாரின் உடலை லூசினா என்ற பெண்மணி எடுத்துக்கொண்டு போய், தூய பேதுரு, பவுல் ஆகியோரின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்தார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்   

அஞ்சா நெஞ்சத்தினராய் இயேசுவின் நற்செய்தியை அறிவித்த தூய செபஸ்தியாரின் விழாவைக் கொண்டாடுகின்ற நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்து பார்த்து நிறைவு செய்வோம்.

இறைவன் ஒருவருக்கே பணிந்து வாழ்ந்தல்

இன்று நாம் விழாக் கொண்டாடும் தூய செபஸ்தியார் இறைவனுக்கு மட்டுமே (அடி) பணிந்து வாழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாது. அவருடைய வாழ்க்கையில் அரசனிடமிருந்து எவ்வளவோ எதிர்ப்புகளும் அச்சுறுத்தல்களும் வந்தபோதும் அவர் அரசனுக்குப் பணிந்து போகாமல் ஆண்டவர் ஒருவருக்கே பணிந்து வாழ்ந்தார். அதற்காக தன்னுடைய இன்னுயிரையே துறந்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் யாருக்குக் கீழ்படிந்து வாழ்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கூறுவார், “எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது” என்று (லூக் 16:13) ஆம், நாம் ஒருபோதும் இறைவனுக்கும் இந்த உலக காரியங்களுக்கும் - மனிதர்களுக்கும் - பணிவிடை செய்யமுடியாது. தூய செபஸ்தியார் இந்த உண்மையை உணர்ந்தார். அதனால் அவர் இறைவன் ஒருவருக்கே பணிந்து வாழ்ந்தார். நாம் யாருக்குப் பணிந்து வாழ்கிறோம் என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இங்கிலாந்தை ஆட்சி செய்த எட்டாம் ஹென்றியின் காலத்தில் ஹக் லாடிமர் (1487 – 1555) என்னும் ஆயர் இருந்தார். அவர் ஹென்றியின் அரசபையில் வேதம் போதிப்பவராக இருந்தார். உண்மைக்கும் நேர்மைக்கும் பேர் போனவர். வழக்கமாக அரசரின் பிறந்த நாளின்போது, அரசபையில் வேதம் போதிக்கின்றவர் அரசருக்கு ஏதாவது பரிசு வழங்கவேண்டும். லாடிமரோ விலை உயர்ந்த கைக்குட்டையை பரிசளித்தார். அதில் “Whoremongers and Adulterers God will forgive (கடவுள் விபச்சாரத்தில் ஈடுபடுவோரை மன்னிப்பார்) என்ற வசனம் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசர் இந்த வசனத்தை மிகவும் தாமதமாகத் தான் பார்த்தார். அதற்குள் லாடிமர் அரசபையிலிருந்து வெளியே கிளம்பிவிட்டார்.

அரசர் இந்த வசனத்தை படித்தபோது வெகுண்டெழுந்தார். லாடிமர் தன்னைக் குத்திக்காட்டவே இப்படிப்பட்ட ஒரு பரிசைத் தந்திருக்கிறார் என நினைத்த அரசர், அடுத்த  வாரம் ஞாயிற்றுக்கிழமை லாடிமர் அரசபைக்கு வரும்போது சபையாருக்கு  முன்பாக தன்னிடத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று சொல்லி வைத்தார்.

அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வந்தபோது, சபையாருக்கு முன்பாக வந்த லாடிமர், சிறிதுநேரம் யோசித்தார் மன்னிடத்தில் மன்னிப்புக் கேட்பதா? என்று. அப்போது அவருடைய உள்ளத்தில் இன்னொரு யோசனையையும் தோன்றியது. அதாவது மன்னருக்கு பணிந்து போவதை விட, மன்னருக்கெல்லாம் மன்னராகிய ஆண்டவரின் குரலுக்குப் பணிந்து போவதே சிறந்தது” என்று அவருக்குத் தோன்றியது. அதனால் அவர் மன்னருக்குப் பயப்படாமல், மன்னர் செய்ய செய்த தவறைப் புட்டுப் புட்டு வைத்துவிட்டு, அரசபையிலிருந்து வெளியேறிச் சென்றார். மன்னன் எல்லாருக்கும் முன்பாக அவமானப்பட்டு நின்றார்.

ஆண்டவர் ஒருவருக்கே அடிபணிந்து வாழவேண்டும் என்ற கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்த லாடிமர் என்ற அந்த ஆயரின் வாழ்வு உண்மையில் நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரி. தூய செபஸ்தியாரும் அப்படித்தான் வாழ்ந்தார். ஆகவே தூய செபஸ்தியாரின் விழாவில் ஆண்டவர் ஒருவருக்கே அடிபணிந்து வாழ்ந்வோம் என்ற சபதம் எடுப்போம்.

நம்பிக்கையில் உறுதிப்படுத்துவோம்

தூய செபஸ்தியார்  விசுவாசத்தில் தளர்ந்திருந்த கிறிஸ்தவர்களை உறுதிப்படுத்தினார் என்று அவருடைய வாழ்க்கையிலிருந்து படித்தறிகின்றோம். அவர் எப்போதுமே அப்படிப்பட்ட பணிசெய்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று நம்பிக்கையில் தளர்ந்திருக்கின்ற மக்களை இறைநம்பிக்கையில் உறுதிப்படுத்துகிறோமா? அதற்கு நாம் இறைநம்பிக்கையில் வேரூன்றி இருக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் சீடர்கள் இயேசுவிடத்தில், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்பார்கள். அதைப் போன்று நாமும் இறைவனிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும் என்று கேட்போம். அப்படி மிகுதியாக்கப்பட்ட நம்பிக்கையினால், மற்றவரையும் நம்பிக்கையில் உறுதிபடுத்துவோம்.

ஆகவே, தூய செபஸ்தியாரின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஆண்டவருக்கு மட்டுமே பணிந்து வாழ முயற்சி எடுப்போம். நம்பிக்கையில் தளர்ந்திருப்பவர்களைத் தேற்றுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org