தொழுநோயாளர் இருவர்-11.02.2018 ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்

தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி - மதுரை

I. லேவியர் 13:1-2, 44-46

II. 1 கொரிந்தியர் 10:31-11:1

III. மாற்கு 1:40-45

 தொழுநோயாளர் இருவர்

 'தொழுநோயாளர் ஒருவர்' என்று இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற்கு 1:40-45) தொடங்குகிறது. ஆனால், நற்செய்தி வாசகத்தில் இறுதிக்கு வரும்போது 'தொழுநோயாளர் இருவர்' என்று இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்கியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

 யார் அந்த இரண்டாவது தொழுநோயாளர்?

 நிற்க.

 

 

புத்தமதத்தில் 'போதி சத்துவா' என்ற கருதுகோள் உண்டு. 'போதி சத்துவா' என்பவர் ஏற்கனவே மீட்படைந்தவர். இவரின் பணி என்னவென்றால் மீட்படைய கஷ்டப்படுகின்ற ஆன்மாக்களுக்காக இவர் முயற்சி செய்து மீட்பைப் பெற்றுக்கொடுப்பார். 

 

மதுரை தமுக்கம் மைதானத்தில் சர்க்கஸ் போடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். சர்க்கஸ் பார்க்க 500 ரூபாய் தேவை. என்னிடம் 500 ரூபாய் இல்லை. ஆனால் சர்க்கஸ் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆக, நான் கேட்டிற்கு முன் நின்று எட்டி எட்டி பார்க்கிறேன். என்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்ற 'போதி சத்துவா' என்ன செய்வார் தெரியுமா? தன்னிடம் இருக்கும் நிறைய 500 ரூபாய் நோட்டுக்களில் ஒன்றை எடுத்து என்னிடம் கொடுத்து டிக்கெட் எடுக்கச் சொல்லி உள்ளே அனுப்பிவிடுவார். என்னிடம் அல்லது எனக்காக கொடுப்பதால் 500 ரூபாய் அவரிடம் குறைவுபட்டாலும் அதை என் மீட்புக்காக செலவிடுவதால் அந்த செலவை பெரியதாக எடுத்துக்கொள்ளமாட்டார். இப்படி நிறைய பேருக்கு உதவி செய்தவுடன் தன் கடைசி 500 ரூபாயை வைத்து இவரும் சர்க்கஸ்க்குள் வந்துவிடுவார்.

 

இவ்வாறாக, அடுத்தவரின் நலனுக்காக தன் நலனை விட்டுக்கொடுக்கும் அல்லது தியாகம் செய்யும் நிலையின் பொருளை போதி சத்துவா நமக்கு உணர்த்துகிறார். புத்த மதத்தின் போதி சத்துவா தான் இறந்தபின்தான் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும். ஆனால், தான் வாழும்போதே அத்தகைய உதவியைச் செய்கிறார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்கிறது.

 

'தொழுநோய்' என்ற வார்த்தையை மையமாக வைத்து இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் சுழல்கின்றன. 'தொழுநோய்' இன்று பூமித்தாயின் முகத்திலிருந்து முற்றிலம் துடைத்தெடுக்கப்பட்ட நோய் என்றாலும் இங்கொன்றும், அங்கொன்றும் சிலர் இந்த நோயினால் அவதிப்படுவதை நாம் பார்க்கிறோம். மருத்துவ வார்த்தைகளால் சொல்லப்போனால் இது ஒரு தோல் நோய். இந்தத் நோய் தோலின் அடுத்தடுத்த அடுக்குகளுக்குள் பரவி தொடு உணர்வு இல்லாமல்போகச் செய்கிறது. ஒருவர் மற்றவர்மேல் உள்ள தொடுதலால், அவர்கள் பயன்படுத்திய பொருள்களைப் பயன்படுத்துவதால் பரவக்கூடியது. இது பார்வை, கேட்கும்திறன் என அனைத்தின்மேலும் பாதிப்பை ஏற்படுத்தவல்லது. இதன் கனாகனத்தை நாம் 'ரத்தக்கண்ணீர்' திரைப்படத்தில் பார்க்கலாம்.

 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். லேவி 13:1-2,44-46) தொழுநோய் பிடித்தவர் செய்ய வேண்டியதும், தொழுநோய் பிடித்தவருக்கும் செய்ய வேண்டியது என்ன என்பதை மோசே ஆரோனுக்கு அறிவுறுத்துகின்றார். எதற்காக மோசே ஆரோனிடம் சொல்ல வேண்டும்? ஆரோன்தான் தலைமைக்குரு. இஸ்ரயேல் சமூக அமைப்பில் குரு தான் எல்லாம். மேலும், தூய்மை - தீட்டு என்றால் என்ன என்பதை தீர்மானித்து முன்வைப்பவரும் குருவே. தொழுநோய் வரக் காரணம் பாவம் என்ற சிந்தனை விவிலிய மரபில் இருந்தது.

 

தொழுநோய் பிடித்தவர் மூன்றுவகை அந்நியப்படுத்துதலை அனுபவிக்கின்றார்:

 

அ. தன்னிலிருந்து அந்நியப்படுதல்

 

தொழுநோய் பிடித்தவர் 'கிழிந்த ஆடை அணிந்து தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக்கொண்டு 'தீட்டு, தீட்டு' என்று கத்த வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்றையாவது நம்மால் செய்ய முடியுமா? சட்டையில் சிறு பகுதி கிழிந்திருந்தாலே அதை உடனடியாக மாற்றவிட நினைக்கின்றோம். தலை வாராமல் நம்மால் இருக்க முடியுமா? தூங்கும்போது கூட நம் சிகை சரியாக இருக்கிறதா என்று கண்ணாடி முன் நின்று சரி செய்துகொள்கிறோம். 'நான் தீட்டு, நான் தீட்டு' என்று என்னால் கத்த முடியுமா? கண்டிப்பாக இல்லை. ஆக, இந்த மூன்று காரியங்களையும் செய்யும் தொழுநோய் பிடித்தவர் எந்த அளவிற்கு தன்னிலிருந்தே அந்நியப்படுத்தப்படுகின்றார்.

 

ஆ. குடும்பம், உறவினர்கள், நண்பர்களிடமிருந்து அந்நியப்படுதல்

 

'தீட்டுள்ள அவர் பாளையத்திற்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்' என்கிறார் மோசே. மோசேயின் இந்த அறிவுரையில் பிறர்மேல் கொண்டிருக்கின்ற அக்கறை இருந்தாலும், பாளையத்தில் குடியிருக்கும் அடுத்தவர்கள்மேல் உள்ள நலனின் அக்கறை இருந்தாலும், அவர் இவரை மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறார் என்பதை நாம் மறுக்க முடியாது. பாளையத்திற்கு வெளியே தனியாகவோ அல்லது தன்னைப்போல நோய்பிடித்தவர்களோடோதான் இவர் தன் வாழ்வைக் கழிக்க வேண்டும். 

 

இ. இறைவனிடமிருந்து அந்நியப்படுதல்

 

'அவர் நோய் அவர் தலையில் உள்ளது' என்கிறார் மோசே. தலை என்றால் என்னைப் பெற்றவர். வாழையடி வாழையாக அல்லது என் முன்னோர் மற்றும் பெற்றவர் செய்த பாவம் தொழுநோயாக மாறுகிறது. நாம் பேச்சுவழக்கில் ஒருவர் பாவம் செய்யும்போது, 'இப்படிச் செய்யாதே! ஒருநாள் இது உன் தலையில் விழும்!' என்று சாடுகின்றோம். தொழுநோய் பாவத்தின் விளைவு என்பதால் இறைவனிடமிருந்தும் அந்நியப்பட்டவராகின்றார் தொழுநோயாளர்.

 

இந்த மூன்றுவகை அந்நியப்படுத்துதல் அவசியம் என்பது இன்றைய முதல் வாசகம் அறிவுறுத்துகின்றது.

 

லேவியர் நூலில் உள்ள சட்டங்களும், விதிமுறைகளும், ஒழுங்குகளும் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்று கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிச் சுற்றிக்கொண்டிருந்த குருக்கள், மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் வாழ்ந்த வந்த காலத்தில்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தின் நிகழ்வு நடந்தேறுகிறது:

 

தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். 'தொழுநோயாளர் தன் உதடுகளை மறைத்துக்கொண்டு 'தீட்டு,' 'தீட்டு' எனக் கத்தவில்லை.' மாறாக, 'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்' என்று கனிந்த குரலில் மொழிகின்றார். இந்த உரையாடலை வைத்துப் பார்க்கும்போது ஒருவேளை இயேசு தொழுநோயாளர்கள் தங்கியிருக்கும் பகுதியில் உலா வந்தாரோ என்று கேட்கத் தோன்றுகிறது. தொழுநோயாளர் உறைவிடப்பகுதிக்குதான் அவர் வந்திருக்க வேண்டும். ஏனெனில், குணமாக்குதலின் இறுதியில், 'நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டும்' என்று ஊருக்கு வெளியே இருந்த அவரை ஊருக்கு உள்ளே அனுப்புகின்றார். 

 

இயேசுவின் குணமாக்குதல் இரண்டு நிலைகளில் நடந்தேறுகிறது:

 

அ. அவரின் அந்நியப்படுதலிலிருந்து விடுதலை

'இயேசு அவர் மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு' என பதிவு செய்கிறார் மாற்கு நற்செய்தியாளர். அவர்மீது கொண்ட பரிவால் இறைவனுக்கும் அவருக்கும் இடையே இருந்த அந்நியப்படுத்துதலிலிருந்தும், அவரை நோக்கி கையை நீட்டியதால் பிறருக்கும் அவருக்கும் இடையே இருந்த அந்நியப்படுத்துதலிலிருந்தும், அவரைத் தொட்டதால் அவர் தன்னிடமிருந்து அந்நியப்பட்டதிலிருந்தும் விடுவிக்கின்றார் இயேசு.

 

ஆ. தொழுநோயிலிருந்து விடுதலை

தொடர்ந்து, 'நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக!' என்று அவரது நோயிலிருந்து அவரை விடுவிக்கின்றார் இயேசு.

 

இயேசுவின் இந்தக் குணமாக்குதல் அவரின் உடல்நலத்தை மட்டுமல்லாமல், சமூகம் மற்றும் சமயம் அவர்கள்மேல் சுமத்தியிருந்த தேவையற்ற சுமைகளையும் இறக்கி வைப்பதாக இருக்கிறது.

 

விளைவு என்ன?

 

இயேசு தொழுநோயாளர் ஆக்கப்படுகின்றார். எப்படி?

 

தொழுநோய் குணமானவர் ஊருக்குள் சென்று எல்லாருக்கும் செய்தியை அறிவிக்க அந்த ஊர் மக்கள் இயேசுவைப் பாராட்டுவதற்குப் பதிலாக, 'ஓ நீ அவனைத் தொட்டு குணமாக்கினாயா?' என்று சொல்லி, இயேசுவை அந்நியப்படுத்துகின்றனர்.

 

முதல் தொழுநோயாளர் குணமடைந்தார்.

இரண்டாமவர் தொழுநோய் ஏற்றார்.

 

இந்த நிலையை இயேசுவால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிந்தது?

 

அதற்கான விடை இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1 கொரி 10:31-11:1) இருக்கிறது: 'நான் எனக்குப் பயன் தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன்.'

இயேசு தனக்குப் பயன்படுவதை நாடியிருந்தால் தொழுநோயாளர் உறைவிடத்திலிருந்தும், அவரின் பிரசன்னத்திலிருந்தும் விலகிச் சென்றிருப்பார். ஆனால், அவர் தன் பயன் நாடாது பிறர்பயன் நாடுகின்றார். அது தன் பயனுக்கு குறைவு ஏற்படுத்தினாலும்கூட.

 

இந்த மனநிலை நம்மில் வளர நாம் என்ன செய்ய வேண்டும்?

 

இயேசுவிடமிருந்த மூன்று பண்புகள் நமதாக வேண்டும்: 'பரிவு,' 'அருகில் செல்லுதல்,' 'தொடுதல்.'

 

இறுதியாக, இன்று தொழுநோய் நம்மிடமிருந்து துடைத்தெடுக்கப்பட்டாலும், நம்மை அறியாமலேயே தொழுநோயின் மறுஉருவங்கள் வலம் வருகின்றன: பாலியல் நோய், சாதியம், நிறப் பாகுபாடு, மொழிப் பாகுபாடு, மாற்றுக் கலாச்சாரம். இதில் என்னவொரு கொடுமை என்றால், இவர்களோடு நாம் வாழ்ந்து, பழகி, உணவு உண்டாலும்கூட ஏதோ ஒரு நிலையில் நான் இவர்களைவிட பெரியவராக, நல்லவராக, தூய்மையானவராக நினைத்துக்கொள்கிறேன். அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் நான் வாழ என்னில் தடையாக இருப்பது எது? அந்த நிலைக்கு நான் கடந்து செல்ல, இரண்டாம் தொழுநோயாளராய் நான் ஆக்கப்பட்டாலும், என்னிடம் துணிச்சல் குறைவுபடுவது ஏன்?