Get Adobe Flash player

சுற்றுமுற்றும் பார்த்தார்கள்!
25 பிப்ரவரி 2018 தவக்காலம் இரண்டாம் ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்
தருபவர் : அருள்பணி இயேசு கருணாநிதி, மதுரை

I. தொடக்கநூல் 22:1-2, 9-13, 15-18
II. உரோமையர் 8:31-34
III. மாற்கு 9:2-10

இன்றைய முதல் வாசகத்தில் மோரியா நிலப் பகுதியின் மலையில் நடக்கும் ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடும் நிகழ்வும், நற்செய்தி வாசகத்தில் எருசலேமிற்கு அருகில் உள்ள ஒரு மலையில் நெருங்கிய அன்புச் சீடர்கள் முன்னிலையில் நடக்கும் இயேசுவின் உருமாற்ற நிகழ்வும் நமக்கு வாசகப் பகுதிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இன்றைய நம் சிந்தனைக்கு இரண்டு பேரை எடுத்துக்கொள்வோம்: (அ) ஆபிரகாம், (ஆ) சீடர்கள்: பேதுரு, யாக்கோபு, யோவான். முதலாம் நபர் தனிநபராகவும், இரண்டாம் நபர் ஒரு குழுவாகவும் இருக்கின்றார். இவர்களுக்கு குறிப்பிட்ட இந்த நாளில் நடந்தேறிய நிகழ்வின்போதும், நிகழ்விற்குப் பின்னும் உள்ள கடவுள் அனுபவம் நம் சிந்தனையின் மையப்பொருளாக இருக்கட்டும்.

 

'கடவுள் அனுபவம்'

 'அந்த அனுபவம்தான் நான்' என்று கடவுள் சொல்வதாக வாழ்வின் அனைத்து அனுபவங்களிலும் கடவுள் இருப்பதாக பதிவு செய்கின்றார் கவிப்பேரரசு கண்ணதாசன். 

 இத்தவக்காலத்தில் நாம் தொடங்கியுள்ள தவமுயற்சிகளின் இறுதி இலக்காக இருப்பது கடவுள் அனுபவமே. நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் கடவுள் அனுபவம் பெற ஏங்கிக்கொண்டிருக்கின்றோம். ஆலயத்திற்குச் செல்வதும், செபிப்பதும், நோன்பு இருப்பதும், பிறரன்புச் செயல்கள் செய்வதும், நம் வேலையை இன்னும் அதிக பொறுப்புடன் செய்வதும் என எண்ணற்ற நிலைகளில் கடவுள் அனுபவம் பெற்றுக்கொண்டிருக்கின்றோம். இவைகள்வழியாக கடவுள் அனுபவம் கிடைக்குமா? அல்லது இவைகள் வழியாக மட்டுமே கடவுள் அனுபவம் கிடைக்குமா? என்றும் ஏங்கிக்கொண்டிருக்கின்றோம்.

 

கடவுள் அனுபவம் என்பது கடவுளின் வெளிப்பாடு வழியாகவும் கிடைக்கலாம் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன. இந்த வெளிப்பாடு எங்கே நிகழ்கின்றன:

 

1. 'ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார்'

 

'கடவுள் ஆபிரகாமை சோதித்தார்' என்று இன்றைய முதல் வாசகம் தொடங்குகின்றது. கடவுள் மனதரைச் சோதிக்கும் நிகழ்வுகள் எல்லாமே கடவுளின் வெளிப்பாட்டு நிகழ்வுகளாகவே அமைகின்றன. அப்படித்தான் இங்கும் நடக்கின்றது. 'உன் மகனை, நீ அன்புகூறும் ஒரே மகன் ஈசாக்கை அழைத்துக்கொண்டு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின்மேல் எரிபலியாக அவனை நீ பலியிட வேண்டும்!' என்று கடவுள் ஆபிரகாமிடம் சொல்கின்றார்.

 

'நீ அன்பு கூறும் ஒரே மகன்' என்ற சொல்லாடலில்தான் கடவுளின் சோதனை அடங்கியுள்ளது: 'உனக்கு எது பெரிது? நீ என்மேல் வைக்கும் அன்பா? அல்லது ஈசாக்கின்மேல் வைக்கும் அன்பா?' தான் கடவுள்மேல் வைத்துள்ள அன்பே என்று கடவுளைக் கட்டிக்கொள்கின்றார் ஆபிரகாம். அவர் எடுக்கும் அந்த முடிவே அவரின் தொடர் செயலாக மாறுகின்றது. குழந்தைகளை எரிபலியாகக் கொடுக்கும் சமய வழக்கம் கீழைத்தேய மற்றும் மெசபதோமிய நாடுகளில் நிலவியுள்ளது என்பதற்கு தொல்லியல் சான்றுகள் நிறைய உள்ளன. ஆக, இந்த நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆபிரகாம் மலைக்கு தன் மகனை அழைத்துச் செல்கின்றார். தன் மகனையே விறகுகளைச் சுமக்க வைக்கின்றார். கட்டைகளின் மேல் கிடத்துகின்றார். வெட்டுவதற்கு கையை நீட்டி கத்தியை எடுக்கின்றார். 'எரிபலியாகத்தானே கேட்டார் கடவுள். அப்புறம் ஏன் ஆபிரகாம் வாளை எடுத்து வெட்டினார்?' என்ற கேள்வி உங்களுக்கும், எனக்கும் எழலாம். வெட்டியபின்தான் பலியை எரிப்பது என்பது எரிபலியின் ஒரு கூறு (காண். 1 அரசர்கள் 18:33, 38). கையை உயர்த்தும்போதுதான் அந்த அதிசயம் நடக்கிறது: 'பையன்மேல் கையை வைக்காதே. அவனுக்கு எதுவும் செய்யாதே. உன் ஒரே மகனையும் நீ பலியிட தயங்கவில்லை என்பதிலிருந்து கடவுளுக்கு நீ அஞ்சுபவன் என இப்போது நான் அறிந்துகொண்டேன்' என்று கடவுள் பலியைத் தடுக்கின்றார். அதிசயம் இதுவல்ல. இதற்குப் பின் வருவதுதான்: 'ஆபிரகாம் கண்களை உயர்த்திப் பார்த்தார். முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் காண்கின்றார். தன் மகனுக்குப் பதிலாக அதை பலியிடுகின்றார்.'

 

கொம்பு மாட்டிக்கொண்டு கிடந்த இந்த ஆடு - இதை ஆபிரகாம் கண்டுகொள்வதுதான் கடவுள் அனுபவம். 'கண்களை உயர்த்திப்பார்க்கும் ஆபிரகாம்' அதைக் கண்டுகொள்கின்றார். அப்படி என்றால் இவ்வளவு நேரம் இவர் அதைப் பார்க்கவில்லையா? இல்லை. 

 

கொம்பு மாட்டிக்கொண்டு கிடக்கும் ஆடு கத்திக்கொண்டே இருக்கும். மலையின்மேல் ஆபிரகாம் மற்றும் ஈசாக்கைத் தவிர வேறு யாருமில்லை. அங்கு நிலவிய மௌனத்தில் கண்டிப்பாக ஆபிரகாமின் காதில் ஆட்டுக்குட்டியின் கதறல் குரல் விழுந்திருக்கும். ஆனால், அந்தக் குரல் அவருடைய சோகத்தை ஊடுருவ முடியவில்லை. நாமும் ரொம்ப சோகமாக அமர்ந்திருக்கும்போது அருகில் கிடக்கும் செல்ஃபோன் அழைப்பு சத்தம்கூட நம் காதுகளில் விழுவதில்லை. இல்லையா? 

 

ஆபிரகாமின் சோகம் கடவுளின் வார்த்தையைக் கேட்டவுடன் மறைகிறது. நம் வாழ்வில் இயல்பாக எழும் ஓர் உணர்வு சோகம். இந்த சோகம் நாம் எதையாவது இழந்தால் அல்லது இழந்துவிடுவோமோ என்ற பயந்தால் வந்து நம்மைத் தொற்றிக்கொள்கிறது. தன் மகன் தன்னைவிட்டுப் பிரியப்போகிற சோகத்தில் குனிந்துகொண்டே நடந்த ஆபிரகாமின் கண்களுக்கு ஆடு தெரியவில்லை. சோகம் மறைந்தவுடன் மலையில் இருக்கும் அனைத்தும் தெரிகிறது. ஆக, ஆபிரகாம் மலையின் இந்தப் பக்கத்தில் தன் மகனை ஏற்றிக்கொண்டு வரும்போது, கடவுள் மலைக்கு அந்தப் பக்கத்தில் ஓர் ஆட்டை ஏற்றிக்கொண்டுவருகின்றார். இதுதான் வாழ்வின் ஆன்மீகம். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் பாருங்களேன். நாம் பாதியைத்தான் செய்கிறோம். மற்ற பாதியை கடவுள் செய்கிறார்.

 

நான் அரிசி வாங்க கடைக்குச் செல்கிறேன். கடவுள் யார் வழியாகவோ அந்த அரிசியை விளையச் செய்து அங்கே கொண்டுவந்திருக்கின்றார்.

 

நான் பேருந்தில் ஏறச் செல்கிறேன். கடவுள் யார் வழியாகவோ அந்தப் பேருந்தை இயக்கி அந்த இடத்திற்குக் கொண்டுவருகின்றார்.

 

நான் தேவை என்று தேடுகிறேன். 'இதுவா என்று பார்!' என்று கடவுள் யார் வழியாகவோ என் தேவையை நிறைவு செய்கின்றார்.

 

ஆனால், நான் அரிசி வாங்க வேண்டும், பேருந்தில் ஏற வேண்டும், தேவை நிறைய இருக்கிறது என்று மலையின் இந்தப் பக்கத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கின்றேன். ஆனால், மலைக்கு அந்தப் பக்கம் நடக்கும் நிகழ்வுகளைக் கண்களை உயர்த்திப்பார்க்க மறந்துவிடுகின்றேன்.

 

ஆக, கடவுள் அனுபவம் என்பது கண்களை உயர்த்திப் பார்த்து கொம்பு மாட்டியிருக்கும் ஆட்டை அடையாளம் கண்டுகொள்வது. 

 

கடவுள் அனுபவம் பெற்ற ஆபிரகாம் உடனடியாக அந்த ஆட்டைப் பலியிடுகின்றார்.

 

இதுதான் கடவுள் அனுபவத்தின் இரண்டாம் நிலை.

 

'மகனும் கிடைத்தான். வந்ததற்கு ஒரு ஆடும் கிடைத்தது' என்று ஆபிரகாம் ஆட்டையும், மகனையும் கூட்டிக்கொண்டு கீழே இறங்கவில்லை. வாழ்வின் அடுத்த முடிவை எடுக்கின்றார். 'ஆடா?' 'மகனா?' என்று கேட்டு, மேலானதைப் பெற கீழானதை இழக்க வேண்டும் என்று தான் கண்ட ஆட்டைப் பலியிடத் துணிகின்றார் ஆபிரகாம். 

 

இவ்வாறாக, முதல் வாசகத்தில் கடவுள் அனுபவம் என்பது 'கண்களை உயர்த்திப் பார்ப்பதிலும்,' 'தான் கண்ட முக்கியமில்லாத ஒன்றை, தான் கருதும் முக்கியமான ஒன்றிற்காக தியாகம் செய்வதும்' ஆகும்.

 

2. 'அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள்'

 

உருமாற்ற நிகழ்வில் வரும் சீடர்கள் என்னுள் எப்போதும் ஒரு பாவ அல்லது பரிதாப உணர்வையே தூண்டுகின்றனர். திடீர்னு உங்களையும் எங்களையும் ஒருத்தரு மலைக்குக் கூட்டிப்போய் திடீரென அவர் ஒரு பெரிய அமெரிக்க அதிபர் போல மாறி, அவருக்கு அருகில் பழைய அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர்கள் நின்றிருந்தால் எப்படி இருக்கும்?

 

'யார்ரா இவரு?' 'இவரா அமெரிக்க அதிபர்?' 'அமெரிக்க அதிபரை நாம ஏன் பார்க்கணும்?' இப்படி நிறைய கேள்விகள் நம்முள் எழும்.

 

இயேசுவின் உருமாற்ற நிகழ்வை ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் பதிவு செய்ய, இதை நேரில் கண்ட யோவான் பதிவு செய்யாமல் விடுவது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. 

 

இயேசுவின் உருமாற்றம் மூன்று அடையாளங்களில் நடந்தேறுகிறது: (அ) யாரும் வெளுக்க முடியாத வெள்ளை வெளேரென ஒளி வீசும் ஆடைகள், (ஆ) எலியா மற்றும் மோசேயின் உரையாடல், (இ) மேகத்தினின்று குரல். இந்த மூன்றும் இயேசுவின் உருமாற்றத்தை அல்லது வெளிப்பாட்டை அடையாளப்படுத்துகின்றன. இந்த அடையாளங்களை சீடர்கள்தாம் விரைவில் புரிந்துகொள்ள வேண்டும். 'ஒளி வீசும் ஆடை' சீயோன் மலையை நிரப்பும் யாவே இறைவனின் பிரசன்னம் என்றும், எலியா மற்றும் மோசே அனைத்து இறைவாக்கு மற்றும் சட்டங்களின் திலகம் என்றும், அவற்றை நிறைவு செய்ய வந்திருப்பவர் இயேசு என்றும், தந்தையின் குரல் இயேசுவின் அப்பா அனுபவத்தின் முன்னோடி என்றும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அவர்களின் புரிதல்கள் வேறு மாதிரியாக இருக்கின்றன: (அ) சீமோன் பேதுரு முந்திக்கொண்டு, 'நாம் இங்கேயே இருப்பது நல்லது' என்கிறார். (ஆ) 'இறந்து உயிர்த்தெழுதல்' என்றால் என்ன? என்று பேசிக்கொள்கின்றனர்.

 

என்னைப் பொறுத்தவரையில் சீடர்களின் கடவுள் அனுபவம் வெளிச்சத்திலும், புதிய நபர்களின் வருகையிலும், தந்தையின் குரலிலும் இல்லை. பின் எதில் இருக்கிறது?

 

'அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தபோது தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை'

 

இதுதான் அவர்களுக்குக் கிடைத்த கடவுளின் வெளிப்பாடு.

 

வெளிச்சமும், புது நபர்களும், தந்தையும் மறைத்து இயேசு தனியாக நிற்பவராக வெளிப்படுத்தப்படுகின்றார். ஆபிரகாம் எப்படி கொம்பு மாட்டிக்கொண்டிருந்த ஆட்டைக் கண்டாரோ அப்படியே அவர்கள் இயேசுவையும் கண்டுகொள்கின்றனர். அவர்கள் கண்முன் இருந்தவை மறைந்துபோகின்றன. மற்றவைகள் மறைந்துபோன பின் தோன்றும் 'ப்ளைன்' இயேசுதான் அவர்களின் அனுபவம்.

 

இங்கே சீடர்களின் எண்ணம், ஏக்கம் அனைத்தும் ஒன்றாக இருக்கிறது: 'இயேசுவோடு நாம் தங்க வேண்டும். அல்லது இயேசு நம்மோடு தங்க வேண்டும்.' 'இங்கே கூடாரம் அமைப்போம்' என்று பேதுரு சொல்லும்போது தான் பெற்ற கடவுள் அனுபவத்தை அவர் அப்படியே உறைபனியாக்க நினைக்கின்றார். ஆனால், இயேசு அவரின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை. 

 

'இங்கேயே இருப்பது நல்லது. மூன்று கூடாரங்கள் அமைப்போம்' என்று சொன்னவர்தான் மூன்றுமுறை இயேசுவை மறுதலிக்கின்றார். சில நேரங்களில் கடவுள் அனுபவத்தை நாம் அதிகமான வெளிச்சத்திலும், அந்த வெளிச்சம் நடத்தும் அற்புதங்களிலும் காண நினைக்கின்றோம். ஆனால் இது எல்லாவற்றையும் விட தனிமையில்தான் இறைவன் தெரிகின்றார். முதல் வாசகத்தில் சோகத்தில் தன் கடவுள் அனுபவத்தை இழந்த ஆபிரகாம் போல, நற்செய்தி வாசகத்தில் தனிமையில் இறைவனனின் அனுபவம் பெறுகின்றனர்.

 

இந்த இரண்டும் நமக்கு உந்துசக்தியும், ஊக்கமும் தருகின்றன. இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் அடிகளாரும், 'கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக யார் வாதாட முடியும்?' என்று கேட்கின்றார்.

 

இவ்வாறாக, கடவுள் அனுபவம் நம்மை அவரோடு மட்டுமல்லாமல் ஒருவர் மற்றவரோடும் ஒன்றிணைக்கச் செய்கிறது.

 

இன்று நாம் நம் கடவுளை எப்படி தேடுவோம்?

 

அ. ஆபிரகாம் போல கண்கள் உயர்த்தி

 

ஆ. சீடர்கள்போல சுற்றுமுற்றும்

'மேலே உயர்த்துவதும்,' 'சுற்றுமுற்றும் பார்ப்பதும்' சிலுவையின் இரண்டு மரத்தண்டுகள் போல இருக்கின்றன. மேல் நோக்கி இருக்கும் மரத்துண்டு நாம் அவரை நோக்கி உயர்த்துவதையும் (இறையன்பு), சுற்றுமற்றும் பார்ப்பது ஒருவர் மற்றவரை நோக்கி கரம் நீட்டுவதையும் (பிறரன்பு) குறைக்கிறது.

 

மேலே பார்க்க நமக்குத் தடையாக இருப்பது சோகம்.

 

சுற்றுமுற்றும் பார்க்க நமக்குத் தடையாக இருப்பது அச்சம் மற்றும் அவசரத்தனம்.

 

இவ்விரண்டும் களைதலே தவக்காலத்தின் இரண்டாம் வாரத்தின் நம் செயல்களாக இருக்கட்டும்!

 

இயேசுவின் உருமாற்றம் நிகழ்ந்த அதே நிகழ்வில் சீடர்கள் உளமாற்றம் அடைகின்றனர். ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடும் நிகழ்வில் அவர் தன்னையே கடவுளுக்கு உகந்த பலிப்பொருளாக மாற்றுகின்றார். ஆக, கடவுள் அனுபவம் நாம் பெறும் உளமாற்றத்திலும், நாம் பலிப்பொருளாக மாறுவதிலும் இன்னும் சிறப்படைகிறது.

 

இயேசுவின் ஆடை கறுப்பாக மாறினாலும், சிவப்பாக மாறினாலும், அல்லது மோசேக்குப் பதிலாக யோசுவாவும், எலியாவுக்குப் பதிலாக எலிசாவும் வந்தாலும், கடவுளின் குரல் ஆண்பிள்ளைக் குரலாகவோ, பெண்பிள்ளைக் குரலாகவோ மாறினாலும் இயேசுவின் உருமாற்றம் நிகழும். 

 

இயேசுவின் உருமாற்றம் இயேசுவுக்கு அல்ல. மாறாக, சீடர்களுக்கு.

ஆபிரகாமின் பலி கடவுளுக்கு அல்ல. மாறாக, ஆபிரகாமுக்கு.

 

நம் உருவத்தை மாற்றிக்கொள்வதில் காட்டும் அக்கறையை நம் உள்ளத்தை நோக்கி சற்றே திருப்புவோம். அங்கே ஓர் ஆடு கொம்பு மாட்டி நிற்கும். அங்கே ஒரு இயேசு தனியே நின்றுகொண்டிருப்பார்.

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org