Get Adobe Flash player

11 மார்ச் 2018 தவக்காலம் 4 -ஆம் ஞாயிற்றுக் கிழமை வாசகங்களின் விளக்கங்கள்

அளிப்பவர் : அருட்பணி இயேசு கருணாநிதி மதுரை

 I. 2 குறிப்பேடு 36:14-16,19-23

II. எபேசியர் 2:4-10

III. யோவான் 3:14-21

 கடவுளோடு இணைந்தே!

 திருவருகைக்காலத்தின் 3ஆம் ஞாயிறு 'மகிழ்ச்சி ஞாயிறு' என்று அழைக்கப்படுவதுபோல, தவக்காலத்தின் 4ஆம் ஞாயிறும் 'மகிழ்ச்சி ஞாயிறு' (லெயதாரே சன்டே) என அழைக்கப்படுகிறது. இது இவ்வாறு அழைக்கப்படுவதன் காரணம் 'அகமகிழ்வாய்! எருசலேமே!' எனத் தொடங்கும் இன்றைய திருப்பலியின் வருகைப் பல்லவியே.

இன்றைய நாள் சிந்தனைக்கு 'கடவுளோடு இணைந்தே மகிழ்ச்சி' என்ற தலைப்பை எடுத்துக்கொள்வோம்.

 ஓர் இரவில் தன்னிடம் வந்த நிக்கதேமிடம் இயேசு ஆற்றும் உரையின் இறுதிப் பகுதிதான் இன்றைய நற்செய்தி வாசகம். இந்த இறுதிப் பகுதியின் இறுதி வார்த்தைகளோடு நம் சிந்தனையைத் தொடங்குவோம்:

 'இதனால் இவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்!'

 'கடவுளோடு இணைந்தே செய்தல்' - இதுதான் மகிழ்ச்சிக்காக இன்றைய இறைவாக்கு வழிபாடு வைக்கும் ஒரு வழி.

 மகிழ்ச்சிக்காக ஒரு வழி இருக்கிறது என்றால், இன்பத்திற்கான ஒரு வழியும் இருக்கும். இந்த இரண்டு வழிகளை நாம் முதலில் புரிந்துகொள்வோம்:

 

அ. இன்பத்திற்கான வழி

 

படைப்பின் தொடக்கத்தில் கடவுள் ஆணும், பெண்ணுமாக மனிதரைப் படைக்கின்றார். தோட்டத்தில் தங்கள் விருப்பம்போல வாழ்ந்த இவர்களில் பெண்ணைத் தேடி பாம்பு வருகின்றது: 'கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக் கூடாது என்றது உண்மையா?' (தொநூ 3:1) என்ற கேள்வியை முன்வைக்கின்றது. தொடர்ந்து, '... நீங்கள் சாகவே மாட்டீர்கள் ... கடவுளைப் போல ஆவீர்கள்...' என்றும் சொல்கின்றது. 'கடவுளைப் போல' என்ற இந்த வார்த்தைகளில் கொஞ்சம் சரிந்துவிடுகின்றார் நம் தொடக்கத்தாய் ஏவாள். 'கடவுளைப் போல' இருப்பது என்பது கடவுளிடமிருந்து பிரிந்து கடவுளுக்கு இணையாக நிற்பது. ஆக, கடவுளைப் போல இருப்பது இன்பம்.

 

ஆ. மகிழ்ச்சிக்கான வழி

 

பாம்பின் பேச்சைக் கேட்டு ஏவாளும், தொடர்ந்து ஆதாமும் விலக்கப்பட்ட கனியை உண்ண, அவர்கள் கண்கள் திறக்கப்பட, தாங்கள் ஆடையின்றி இருப்பதை அவர்கள் உணர்ந்துகொள்கின்றனர். மென்காற்று வீசும் பொழுதில் ஆண்டவர் வரும்போது இருவரும் ஒளிந்து கொண்டிருக்கின்றனர். ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, 'நீ எங்கே இருக்கின்றாய்?' என்று கேட்கின்றார் (காண். தொநூ 3:8). மனிதன் எங்கிருக்கின்றான் என்று தெரியாமல் கடவுள் அவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. மாறாக, 'நீ இருக்க வேண்டிய இடத்தில் இல்லையே!' என்று அவனிடமும், அவளிடமும் உணர்த்துவதற்காகவே இக்கேள்வியைக் கேட்கின்றார். ஆக, 'என்னோடு இணைந்திருக்க வேண்டிய நீ என்னைப்போல ஆக முயற்சி செய்துவிட்டாயே!' என்ற ஆதங்கமாகத்தான் கடவுளின் கேள்வி இருக்கிறது. இணைந்திருந்த நிலையை அவர்கள் இழந்ததால் அவர்கள் வாழ்வில் வேதனையும், வேட்கையும், சாபமும், வலியும், வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. ஆக, கடவுளோடு இணைந்திருப்பது மகிழ்ச்சி.

 

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு சுட்டிக் காட்டும் மகிழ்ச்சியை நாம் நம் வாழ்வில் மீட்டெடுக்க நாம் கடவுளோடு இணைதல் அவசியமாகிறது.

 

இந்த அவசியத்தை இன்றைய வாசகங்களின் பின்புலத்தில் பார்ப்போம்:

 

இன்றைய முதல் வாசகத்தின் (காண். 2 குறி 36:14-16, 19-23) எட்டு வசனங்களில் விவிலிய ஆசிரியர் ஏறக்குறைய 300 ஆண்டுகள் நிகழ்வைச் சொல்லி முடிக்கின்றார். இறைவாக்கினர் எரேமியாவின் காலத்தில் (கிமு 587) இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய படையெடுப்பபுக்கு உள்ளாகி, நெபுகத்னேசர் அரசர் காலத்தில், நாடுகடத்தப்படுகின்றனர். அவர்களின் எருசலேம் நகரமும், ஆலயமும் அழிக்கப்படுகின்றன. திருச்சட்டம், ஆலயம், ஓய்வுநாள், சொந்த மண் என எதுவும் இல்லாமல் அந்நியநாட்டில் அடிமைகளாக நிற்கின்றனர். இவர்களின் இந்த நாடுகடத்தலுக்கும், அடிமைத்தனத்துக்குமான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், குறிப்பேடு நூலின் ஆசிரியர் குருக்கள், அரசாட்சி செய்பவர்கள், சாதாரண மக்கள் என எல்லாரையும் குற்றம் சாட்டி, ஓய்வுநாள் மீறலை முதன்மையான குற்றமாக முன்வைக்கின்றார். நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்களுக்கான மீட்பு பாரசீக மன்னன் சைரசு (கிமு 320) வழியாக வருகிறது. தான் வெற்றி கொண்ட பாபிலோனிய நாட்டில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை திரும்பவும் தங்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பும் சைரசு மன்னனின் வார்த்தைகள் முக்கியமானவை:

 

அ. 'ஆண்டவருடைய மக்களாக இருப்பவர் அங்கு செல்லட்டும்.'

 

ஆ. 'கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.'

 

மக்கள் ஆண்டவரோடு இருக்க வேண்டும். ஆண்டவர் மக்களோடு இருப்பார். ஆக, மக்கள் கடவுளோடு இணைந்திருத்தல் அவர்களுக்கு மறுவாழ்வை, நாடு திரும்பும் நல் மகிழ்ச்சியைத் தருகின்றது. அடிமைத்தனத்தில் இருந்தவர்கள் நாடு திரும்பக் காரணமாக இருந்தவர் சைரசு மன்னன் என்றாலும், நாடு திரும்புதலின் மகிழ்ச்சி ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வு தொடர்பானதாகவே இருக்கிறது. 

 

எனவே, கடவுளோடு இணைந்திருத்தல் என்பது பாரசீக மன்னன் சைரசு வழியாக வழங்கப்படும் கொடையாகவும், அதே நேரத்தில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய கடமை அல்லது செயலாகவும் இருக்கிறது. 

 

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 2:4-10) 'கிறிஸ்துவும் திருச்சபையும்' என்ற இறையியல் பதிவில், இறைமக்கள் சாவின் நிலையிலிருந்து வாழ்வின் நிலையை அடைதல் என்ற பகுதியில், 'நாம் கடவுளின் கைவேலைப்பாடு' என்றும், 'இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் இருப்பது அவரின் கொடை' எனவும் பதிவு செய்கின்றார் பவுலடியார். ஆக, கடவுளின் இணைப்பு அல்லது கடவுளின் இணைந்த நிலை என்பது இயேசு கிறிஸ்து வழியாக கடவுள் நமக்குக் கொடுத்த கொடையாக இருந்தாலும், நாம் கடவுளின் கைவேலைப்பாடு என்பதை உணர்ந்து, 'நற்செயல்கள் புரிந்து வாழும்படி' கடவுள் நம்மை அழைக்கிறார்.

 

இவ்வாறாக, கடவுளோடு இணைந்திருத்தல் தொடக்கமுதல் தரப்பட்ட ஒரு கொடையாகவும், தொடர்ந்து நடைபெற வேண்டிய செயலாகவும் இருக்கிறது.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 3:14-21) 'மீண்டும் பிறப்பது' அல்லது 'தூய ஆவியால் பிறப்பது' பற்றி நிக்கதேமோடு உரையாடும் இயேசு தொடர்ந்து, மானிட மகன் உயர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தையும், அவ்வாறு உயர்த்தப்படுதலால் மனுக்குலம் பெறும் பயனையும், அந்தப் பயனில் நிலைத்திருக்க மனுக்குலம் செய்ய வேண்டிய செயல்களையும் எடுத்துரைக்கின்றார்.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

 

1. மானிட மகன் உயர்த்தப்படும்போது அனைவரையும் அவர் ஈர்த்துக்கொள்வார்.

2. அப்போது அவரில் நம்பிக்கை கொள்வோர் வாழ்வு பெறுவர்.

3. இந்த வாழ்வைத் தரவே கடவுள் தன் மகனை அனுப்பினார்.

4. நம்பிக்கை கொள்ளாதவர்கள் தண்டனை பெறுவர்.

5. ஒளியிடம் வருவோர் கடவுளோடு இணைந்திருக்கின்றனர்.

 

இப்படிப் பிரித்துப் பார்க்கும் போது நற்செய்தியின் பொருள் எளிதாக விளங்குகிறது. மையமாக இருப்பது (3) கடவுளின் அன்பையும் அவரது கையளிப்பையும் உணர்த்துகிறது. (2) மற்றும் (4) நம்பிக்கை கொள்பவர்களையும், நம்பிக்கை கொள்ளாதவர்களையும் பற்றிச் சொல்கின்றது. (1) மற்றும் (5)ல் கடவுளோடு மக்கள் இணைக்கப்படுவதையும், அவரிடம் ஈர்க்கப்படுவதையும் சொல்கின்றது.

 

'கடவுள் - மனிதர் - கடவுள் - மனிதர் - கடவுள்' என்று கட்டமைக்கப்பட்டுள்ளது இயேசுவின்   பேச்சு.

 

இந்த நற்செய்தியை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன் அவற்றில் வரும் ஒருசில வார்த்தைகளுக்குப் பொருள் அறிவோம்:

 

1. 'உயர்த்தப்படுதல்' என்பது யோவான் நற்செய்தியில் மட்டுமே பயன்படுத்தப்படும் சொல் (3:14, 8:28, 12:32-34).  யோவானைப் பொறுத்தவரையில் இயேசுவின் இறப்பு, உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றம் என்ற மூன்று நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடந்தவை. இந்த மூன்றையும் குறிக்கும் சொல்தான் 'உயர்த்தப்படுதல்'. ஒத்தமைவு நற்செய்திகளில் இயேசு தன் பாடுகளையும், இறப்பையும், உயிர்ப்பையும் பற்றி மூன்று முறை முன்னுரைப்பது போல, யோவான் நற்செய்தியில் மூன்றுமுறை தனது உயர்த்தப்படுதல் பற்றிப் பேசுகின்றார்.

 

2. 'நிலைவாழ்வு' - இந்த வார்த்தையைப் பற்றி பல்வகைக் கருத்துகள் நிகழ்கின்றன. சிலர் இதை நிறைவாழ்வு எனவும் மொழிபெயர்க்கின்றனர். இயேசு வாழ்ந்த காலத்தில் இறப்பிற்குப் பின் உயிர்ப்பு அல்லது வாழ்வு இருப்பதாக மக்கள் நம்பவில்லை. ஆக, இயேசு இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வைப் பற்றிப் பேசியிருக்க வாய்ப்பில்லை. யோவான் நற்செய்தியில் 'வாழ்வு' என்பது இயேசுவை நம்புவதன் பரிசு என்றே சொல்லப்படுகிறது. வாழ்வு என்பதை மகிழ்ச்சி, மனநிறைவு, மனச்சுதந்திரம் என்ற பொருளில் நாம் எடுத்துக்கொள்வோம்.

 

3. 'உலகம்' - இதற்கு இரண்டு பொருள் உண்டு: ஒன்று, மனிதர்களின் உறைவிடம். இரண்டு, கடவுளின் செயல்பாடுகளுக்கு எதிரான இயங்குதளம்.

 

4. 'ஒளி' - கடவுளையும், கடவுளின் செயல்களையும், கடவுளின் மனிதர்களையும் குறிக்கும் உருவகம். 'ஒளியின் மக்கள்' என்ற உருவகம் கும்ரான் குகைகளில் வசித்த எஸ்ஸீன் சமூகத்தின் சொல்லாடல். ஊர் வேண்டாம், உலகம் வேண்டாம், பொன் வேண்டாம், பெண் வேண்டாம், பொருள் வேண்டாம் என்று தங்களையே பாலைவனத்திற்குள்ளும், மலைகளின் குகைகளுக்குள்ளும் அடைத்துக் கொண்டவர்கள் தங்களை ஒளியின் மக்கள் என அழைத்துக்கொண்டனர். யோவான் நற்செய்தியாளர் ஏதோ ஒரு வகையில் இவர்களோடு அல்லது இவர்களின் கருத்தியலோடு தொடர்பு கொண்டிருக்கலாம் என்பது பலரின் கருத்து. ஏனெனில் யோவான் நற்செய்தியில் பயன்படுத்தப்படும் சொல்லாடல்கள் பல இவர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டவை.

 

5. 'தண்டனைத் தீர்ப்பு' - இறைவனையும், அவரது மகனையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனுபவிப்பது. இந்தத் தண்டனைத் தீர்ப்பு நாம் வாழும்போதே இங்கே நாம் அனுபவிப்பதா, அல்லது இறந்தபின் அனுபவிப்பதா என்ற மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன.

 

இன்றைய நற்செய்தியில் சிதறிக்கிடக்கும் முத்துக்களை இணைக்கும் ஒரே நூல்: 'கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்' (யோவான் 3:16) என்பதுதான்.

 

யோவான் 3:16ஐ இரண்டு வகைகளில் நாம் மொழிபெயர்க்கலாம்:

 

1. தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

 

2. கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்ததால் தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளித்தார்.

 

முதல் வகை மொழிபெயர்ப்பில் கடவுளின் அன்பு முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டாம் வகை மொழிபெயர்ப்பில் கடவுளின் கையளிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 

 

அதிகமான பேரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல்வகை மொழிபெயர்ப்பையே நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

 

கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

எப்படி? தன் மகனையே அளிக்கும் அளவுக்கு.

ஏன்? மகனை நம்பினவர்கள் நிலைவாழ்வ பெற.

 

கடவுள்-மனித இணைப்பு இரண்டு நிலைகளில் நடந்தேறுகின்றன: (அ) கடவுள் மகனை அனுப்புகின்றார். (ஆ) மகன் தன்னை நம்புவோருக்கு நிலைவாழ்வைத் தருகின்றார்.

 

இந்த இணைந்திருத்தலை தொடர்ந்து 'ஒளி-இருள்' என்ற இருதுருவ உருவகம் வழியாக விரிக்கின்றார் யோவான். 'நம்புவோர்' உண்மைக்கேற்ப வாழ்வோர் என அழைக்கப்பெறுகின்றனர். இறுதியாக, இவர்களின் செயல்கள் அனைத்தும் 'கடவுளோடு இணைந்தே செய்யப்படுபவையாக' இருக்கின்றன.

 

ஆக, இங்கும் கடவுளோடு இணைந்திருத்தல் ஒரு பக்கம் கொடையாகவும், மற்றொரு பக்கம் கடமை அல்லது செயலாகவும் இருக்கிறது.

 

இத்தகைய புரிதல் எதைக் காட்டுகிறது?

 

கடவுளோடு இணைந்திருத்தல் நமக்கு 'ஆட்டோமேடிக்' மகிழ்ச்சியைக் கொண்டுவருவதில்லை. மாறாக, அந்த மகிழ்ச்சிக்கான பாத்திரமாக நாமே இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஆற்றல் இறங்கிய நமது கைபேசியை ஆற்றல் ஏற்றுவதற்காக சுவரில் உள்ள மின்வழங்கியில் பொருத்துகிறோம் என வைத்துக்கொள்வோம். பொருத்தியவுடன் ஆட்டோமேடிக்காக ஆற்றல் பரிமாறப்படுமா? இல்லை. ஆற்றல் பரிமாறப்படுவதற்கான மின்கற்றை, கைபேசியின் பேட்டரியின் உள்வாங்கு நிலை என அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், விடிய விடிய அது மின்வழங்கியோடு இணைந்திருந்தாலும் அது ஆற்றலைப் பெற்றுக்கொள்வதில்லை.

 

ஆதாம், ஏவாள், இஸ்ரயேல் மக்கள் என அனைவரும் செய்த தவறு இதுதான்: கடவுளோடு இணைந்திருத்தல் என்ற ஆட்டோமேடிக் செயலால் மகிழ்ச்சி வந்துவிடும் என நினைத்தது. 

 

ஒளி உலகிற்கு வந்திருந்தாலும் மனிதர்களுக்கு ஒரு சாய்ஸ் இருக்கிறது. அவர்கள் விரும்பினால் ஒளியிடம் வரலாம். விரும்பாவிட்டால் ஒளியைவிட்டுத் தூரமாகலாம். மனிதர் ஒளியைவிட இருளையே விரும்புவதாகவும், ஏனெனில் அவர்களின் செயல்கள் தீயனவாய் இருக்கின்றன என்றும் பதிவு செய்கின்றார் யோவான். ஒளி அனைத்தையும் ஒளிர்விக்கக் கூடியது. ஒளியிடம் எந்த மறைவும் இல்லை. அது இருப்பதை அப்படியே காட்டிவிடுகின்றது. ஒருவர் தானே விரும்பி அந்த ஒளியிடம் வர வேண்டும். வரும்போது தன் தீச்செயல்களை விட்டுவிட வேண்டும்.

 

முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் இருளை விரும்பியதால் நாடுகடத்தப்படுகின்றனர். சைரசு மன்னனால் ஒளியை நோக்கி திரும்பவும் அனுப்பப்படுகின்றனர்.

 

நற்செய்தி வாசகத்தில் பாவம் என்ற இருளால் மனுக்குலம் சூழப்பட்டிருக்கின்றது. கடவுளின் ஒரே திருமகனின் வருகை இருளை அகற்றி ஒளியைத் தருகின்றது.

 

கடவுளை விட்டு தூரமாக இருந்தவர்கள் மீண்டும் கடவுளோடு இணைந்திருக்கின்றனர்.

 

இணைந்திருத்தலின் மகிழ்ச்சி வீடுதிரும்புவதிலும், நிலைவாழ்வு பெறுவதிலும் புத்துயிர் பெறுகிறது.

 

இறுதியாக,

 

இன்று நான் ஒரே ஒரு கேள்வியைக் கேட்கின்றேன். கடவுளுக்கும் எனக்கும் உள்ள தொப்புள் கொடியை நான் எப்போதெல்லாம் அறுத்துக் கொள்கிறேன்? நானாக அறுத்துக்கொண்டு அவரை வி;ட்டு அகலும்போதெல்லாம் என்னிடம் வாழ்வும், இருப்பும், இயக்கமும் குறைவுபடுமே. அதை நான் எப்படி சரி செய்கின்றேன்?

 

அவரைவிட்டு நான் என்னை வெட்டிக்கொள்ளும்போதெல்லாம் நான் வேறு எவற்றோடு என்னை இணைத்துக்கொள்கிறேன்?

 

நான் அவரோடு இணைந்திருக்கும்போது மகிழ்ச்சியும், மற்றவற்றோடு இணைந்திருக்கும்போது வெறும் இன்பமும் மட்டுமே கிடைக்கிறது என்றால், நான் பின்னதிலிருந்து முன்னது நோக்கிச் செல்ல துணிச்சல் பெறாதது ஏன்?

 

நான் அன்றாடம் அணைத்துவிடத் துடிக்கும் வெளிச்சம் எது?

 

கடவுளோடு இணைந்திருத்தல் என்னும் அவரின் கொடையும், நம் கடமையும் நம்மை மகிழ்ச்சியாகட்டும் - இன்றும், என்றும்!

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org