Get Adobe Flash player

மறை உரை -  பெரிய வியாழன் :
தன்னையே உணவாகத் தரும் இயேசு
அருட்பணி மரிய அந்தோணிராஜ்
 

 

முன்பொரு காலத்தில் சிபிச் சக்ரவர்த்தி என்றொரு சோழ மன்னன் இருந்தான். அவன் மக்களிடத்தில் மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களிடத்தும் மிக்க அன்பு பாராட்டி வாழ்ந்து வந்தான். ஒருநாள் மாலைநேரம் சிபி அரண்மனை மேல்மாடத்தில் உலவிக்கொண்டு இருந்தார். அப்போது பறவை ஒன்று உயிருக்குப் பயந்து கிரீச்சிடுவதுபோல் சத்தம் வந்தது.


திடுக்கிட்டுத் தலையை உயர்த்தி ஆகாயத்தைப் பார்த்தார். அங்கே ஒரு வல்லூறு ஒரு புறாவைத் துரத்திக் கொண்டு செல்வதையும் உயிருக்குப் பயந்து புறா கத்தியபடி பறப்பதையும் கண்டார். இன்னது செய்வது என அறியாது திகைத்தபடி நின்றிருந்த சிபியின் முன் வந்து விழுந்தது அந்தப் புறா. அதைக்கையில் எடுத்து அன்புடனும் ஆதரவுடனும் தடவிக் கொடுத்தார் சிபிச் சக்ரவர்த்தி. சற்றுநேரத்தில் அதைத் துரத்திவந்த வல்லூறும் அங்கு வந்து அரசர் முன் அமர்ந்தது. அதைக் கண்டு திகைத்த சிபி தன் கையில் இருந்த புறாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். வல்லூறு வாய் திறந்து பேசியது. 

"அரசே! இந்தப் புறா எனக்குச் சொந்தம். இதை என்னிடம் கொடுத்துவிடுங்கள்". மன்னன் ஆச்சரியத்துடன் பார்த்தான். மீண்டும் வல்லூறு அரசனிடம் பேசியது, "இந்தப் புறா இன்று எனக்கு உணவாக வேண்டும். நான் பசியால் தவிக்கிறேன்". அதை சிபி அன்புடன் பார்த்தான். "ஏ! பறவையே உன் பசிக்காக இந்த சாதுவான பறவையை உனக்கு உணவாகத் தரமாட்டேன்” என்றான். "அப்படியானால் என் பசிக்கு என்ன வழி அரசே?" என்றது வல்லூறு. சக்ரவர்த்தி சற்று நேரம் சிந்தித்தான். ஊனுக்கு ஊனைத்தான் தரவேண்டும். வேறு உயிர்களையும் துன்புறுத்தக் கூடாது. என்ன வழி என் சிந்தித்தான். சற்று நேரத்தில் முகம் மலர்ந்தான். "உனக்கு உணவாக என் மாமிசத்தையே தருவேன் உண்டு பசியாறுவாய்" என்று சொன்னவன் காவலரை அழைத்து ஒரு தராசு கொண்டு வரச் சொன்னான். ஒரு தட்டில் புறாவை வைத்தான். அடுத்த தட்டில் தன் உடலிலிருந்து மாமிசத்தை அரிந்து வைத்தான். ஆச்சரியம் என்னவென்றால் எவ்வளவு தசையை அரிந்து வைத்தாலும் புறாவின் எடைக்கு சமமாகவில்லை. எனவே சிபிச் சக்ரவர்த்தி தானே அந்தத் தராசில் ஏறி அமர்ந்தான். தட்டு சமமாகியதும் மன்னன் மகிழ்ந்தான். “ஏ பறவையே இப்போது நீ என் தசையை உனக்கு உணவாக்கிக் கொள்" என்றவுடன் அங்கிருந்த வல்லூறும் புறாவும் மறைந்தன. மறுகணம் அங்கே இறைத்தூதர்கள் இருவர் தோன்றினர். அவர்கள் மன்னனிடம், "சிபிச் சக்ரவர்த்தியே! உமது நேர்மையையும் கருணை உள்ளத்தை யும் பரிசோதிக்கவே நாங்கள் பறவையாக வந்தோம். உமது உள்ளம் புரிந்தது. உலகம் உள்ளளவும் உமது புகழ் நிலைப்பதாக. நீர் பல்லாண்டு வாழ்க" என வாழ்த்தி மறைந்தனர். அழகிய உடலை மீண்டும் பெற்ற மன்னன் பல்லாண்டு புகழுடன் வாழ்ந்தான். 

சங்ககால இலக்கியங்களுள் ஒன்றான புறநானுற்றில் இடம்பெறக்கூடிய இந்த நிகழ்வு ஒரு சாதாரண புறாவிற்காக தன்னையே தந்த சிபிச் சக்கரவர்த்தி என்ற சோழ மண்ணின் கருணை உள்ளத்தை நமக்குத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. ஆண்டவர் இயேசுவும் நம்மீது கொண்ட பேரன்பினால் தன்னையே உணவாக, நற்கருணை வடிவில் தருகின்றார். அதைத்தான் இன்று ‘பெரிய வியாழனாக’ வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றோம். 

தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் - இன்றைய இரண்டாம் வாசகத்தில் – கூறுவதுபோல, ஆண்டவர் இயேசு தான் காட்டிக்கொடுப்பதற்கு முந்தின இரவு, அப்பத்தைக் கையில் எடுத்து, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். பின்னர் கிண்ணத்தை எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைநிறுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்கின்றார். ஆண்டவர் இயேசு தன்னுடைய உடலையும் இரத்தத்தையும் நமது உணவாகவும் பானமாகவும் தருகின்றபோது, இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்கின்றார். அப்படியானால், இயேசுவைப் போன்று நாமும் நம்முடைய உடல் பொருள் ஆவி அத்தனையும் மானுட மீட்புக்காகத் தரவேண்டும் என்பதுதான் இங்கே சொல்லப்படுகின்ற செய்தியாக இருக்கின்றது. ஆகவே, ஆண்டவர் இயேசுவின் நற்கருணை விருந்தில் பங்குகொள்ளக்கூடிய நாம் ஒவ்வொருவரும் அவரைப் போன்று நம்மையும் பிறருக்காகக் கையளிக்கத் தயாராக இருக்கவேண்டும். அதுவே சரியான செயல்.  “தன்னலம் மறுத்துப் பொதுநலத்துக்காகத் தன்னையே கையளிப் பவர்கள்தான் ஒப்பற்ற தலைவர்கள்” என்பார் சேகுவேரா. அந்த வகையில் பார்க்கும்போது இந்த மானுட சமூகம் வாழ்வுபெற என்பதற்காக தன்னையே உணவாகத் தந்த இயேசுவும் ஒப்பற்ற தலைவர்தான்.  எனவே நாமும் இயேசுவைப் போன்று பிறர் வாழ நம்மைக் கையளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org