Get Adobe Flash player

மறை உரை -  நல்ல வெள்ளி
நமக்காகப் பலியான இயேசு
-

அருட்பணி மரிய அந்தோணிராஜ்  

ஜப்பானில் உள்ள கடற்கரைக் கிராமம் அது. அந்தக் கிராமத்தில் நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் எல்லாம் அடிக்கடி ஏற்படும். மக்களும் அவையெல்லாம் தங்களுடைய வாழ்வில் ஓர் அங்கம் என்பதுபோல் வாழப் பழகிக்கொண்டார்கள்.  இவற்றுக்கிடையில் ஒருநாள் அந்தக் கிராமத்தில் இருந்த மலை உச்சியில் நெல் பயிரிட்டு சாகுபடி செய்துவந்த பெரியவர் ஒருவர் கடல் நோக்கி தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்தார்.


அப்போது அவர் கண்ட காட்சி அவரை ஒரு கணம் நிலைகுலைய வைத்தது. ஏனென்றால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடலில் அலைகள் கொந்தளித்துக் கொண்டு வந்தன. உடனே அந்தப் பெரியவர் ‘இச்செய்தியை மக்களுக்கு எப்படியாவது அறிவிக்கவேண்டும், இல்லையென்றால் கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்து மக்கள் எல்லாரையும் கொன்றொழித்துவிடும்’ என்று யோசித்தவாறு, பரபரப்பானார். பின்னர் ஏதோ சிந்தனைவயப்பட்டவராய், ஒரு தீப்பந்தத்தைப் பொருத்தி, தனது வயலுக்குத் தீ வைத்தார். அவர் வைத்த தீயில் வயல் கொழுத்துவிட்டு எரிந்தது. 

இதனைக் கீழேயிருந்து பார்த்த மக்கள், வாளியில் நீரை ஏந்திக்கொண்டு தீயை அணைப்பதற்காக மேலே ஓடிவந்தார்கள். எல்லாரும் மேலே ஓடி வருவதற்குள் வயற்காடு முழுவதும் எரிந்து சாம்பலாயிருந்தது. வந்தவர்கள் அனைவரும் அந்தப் பெரியவரிடம், “வயலில் எப்படி தீப்பற்றியது?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெரியவரோ, “நான்தான் தீ வைத்தேன்” என்றார். அவர் எதற்காகத் தீ வைத்தார் என்று சொல்வதற்குள் மக்கள் அனைவரும், “இந்த ஆள் சரியான லூசாக இருப்பாரோ” என்று திட்டத்தொடங்கினார்கள். அவர் அவர்களை அமைதிப் படுத்திவிட்டு தொடர்ந்து பேசினார், “நான் காரணமில்லாமல் என்னுடைய வயலைக் கொழுத்தவில்லை... தொலைவில் பாருங்கள். கடல் அலைகள் எப்படி கொந்தளித்துக் கொண்டு வருகிறன என்பதை. நான் உங்கள் அனைவரையும் இந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற நினைத்தேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் நான் என்னுடைய வயலைக் கொழுத்தி, உங்களை இந்த மலை உச்சிக்குக் கொண்டு வந்தேன்”.  பெரியவர் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே கொந்தளித்துக் கொண்டு வந்த கடல் அலைகள் ஊருக்குள் புகுந்து, வீடுகளையெல்லாம் தரைமட்டம் ஆக்கிவிட்டு, வந்த வேகத்தில் அப்படியே திரும்பிச் சென்றது. இதைப் பார்த்த மக்கள் அனைவரும், மிகப்பெரிய அழிவிலிருந்து தங்களைக் காப்பாற்றிய அந்த பெரியவருக்கு பெரிய நன்றிசொல்லிவிட்டு கீழே இறங்கிச் சென்றார்கள். 

ஊர் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, தன்னுடைய வயலையே தீயிட்டுக் கொழுத்திய பெரியவரைப் போன்று, நம் ஆண்டவர் இயேசுவும் நாம் அனைவரும் வாழ்வு பெறும்பொருட்டு தன்னையே சிலுவையில் கையளித்தார். அந்த நிகழ்வினைத்தான் இன்று நாம் அனைவரும் ‘பெரிய வெள்ளியாக’ நினைவுகூர்ந்து பார்க்கின்றோம். ஆண்டில் எத்தனையோ வெள்ளிகள் வந்தாலும், ஆண்டவர் இயேசு மரித்த வெள்ளி போன்று வராது என்பதால்தான் இதனை பெரிய வெள்ளி என்று சிறப்பித்துக் கொண்டாடுகின்றோம். 

ஆண்டவராகிய கடவுள் இந்த உலகின் மேல்கொண்ட பேரன்பினால் மக்களை பாவத்திலிருந்தும் சாவின் பிடியிலும் மீட்க நினைத்தார். அதற்காக தன்னுடைய ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை இந்த உலகிற்கு அனுப்பினார். இயேசுவோ தன்னுடைய பாடுகளாலும் சிலுவைச் சாவினாலும் தந்தைக் கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேற தன்னை முற்றிலும் கையளித்தார். ஆகவே, இயேசு பாடுகள் பட்டதும் கொடிய சிலுவைச் சிலுவைச் சாவை அனுபவித்ததும் நம்மீது கொண்ட அன்பினால்தான் என நாம் உறுதியாகச் சொல்லலாம். இதைத் தான் இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில், “அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிலைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்” என்கின்றார். 

இயேசு நமக்காக பாடுகளையும் துன்பங்களையும் பட்டதுபோன்று, நாமும் ஒருவர் மற்றவருக்காக, இந்த மானுட விடியலுக்காக துன்பங்களைத் துணிவோடு ஏற்க என்பதைத்தான் இந்த நாள் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நாம் பிறருக்காக, நாம் மானுட விடியலுக்காக துன்பங்களை ஏற்றுக் கொள்ள முன்வருகின்றோமா? அல்லது நாம் உண்டு, நம்முடைய வேலையுண்டு, குடும்பமுண்டு என்று இருக்கின்றோமா? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

வள்ளலார் ஒருமுறை குறிப்பிடுவார், “அடுத்தவரின் துன்பம் தீர்க்கத் துடிக்கும் அருட்கருணையே உண்மையான மனித நேயம்” என்று. நாம் இயேசு கிறிஸ்து போன்று மனிதநேய மிக்கவர்களாக வாழ, அவரைப் போன்று அடுத்வரின் துன்பம் துடைக்க முயற்சி செய்வோம். இறைத்திருவுளம் நிறைவேற நம்மையே முற்றிலும் கையளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org