Get Adobe Flash player

வல்லமையும், அன்பும், கட்டுப்பாடும் கொண்ட ஆவி!
வாசகங்களின் விளக்கங்கள்
அளிப்பவர் : அருட்பணி இயேசு கருணாநிதி, மதுரை
Pentecost

20 மே 2018 தூய ஆவியார் ஞாயிறு

 I. திருத்தூதர் பணிகள் 2:1-11
II. 1 கொரிந்தியர் 12:3-7,12-13
III. யோவான் 20:19-23

'பிளவுண்ட நாவுகள் இறங்கி வந்து பிளவுபட்ட மானிடத்தை இணைத்தது' - இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லி பெந்தகோஸ்தே திருநாளின் பொருளை விளக்கிவிட முடியுமா?

'தூய ஆவியானவர் திருவிழா' நம்முள் நிறைய கேள்விகளை எழுப்புகிறது:

 1. இவரை எப்படி அழைப்பது? 'தூய ஆவி' என்று அழைப்பதா? அல்லது 'தூய ஆவியார்,' அல்லது 'தூய ஆவியானவர்' என்று அழைப்பதா?

 2. 'தந்தை' மற்றும் 'மகன்' என்னும் இருவருக்குள் இருக்கும் உறவே தூய ஆவி என்றும், இந்த தூய ஆவியே மூவொரு இறைவன் என்று கற்பிக்கும் கத்தோலிக்க திருஅவை, கணவன்-மனைவி-பிள்ளை என்ற உருவகத்தையும் கொடுக்கின்றது. ஆனால், இந்த உருவகம் அடுத்த பிரச்சினைக்கு வழி வகுக்கிறது. 'தூய ஆவியானவர்' உறவின் கனியாகிய குழந்தை என்றால், அது அல்லது அவர் மற்ற இருவரைவிட சிறியவர் என்று ஆகிவிடுவதில்லையா? 

 3. 'தந்தை உலகைப் படைத்தார்,' 'மகன் உலகை மீட்டார்,' 'தூய ஆவி உலகை வழிநடத்துகிறார்' என்று அவர்களின் செயல்கள் அடிப்படையிலான புரிதலும் தூய ஆவியானவரைப் பற்றி நமக்கு முழுமையாகச் சொல்வதில்லை. 

 4. இன்று 'பெந்தகோஸ்தெ' என்றழைக்கப்படும் பிரிந்த சபையினர் தூய ஆவியானவரை மட்டுமே இறைவனாகக் கருதுகின்றனர். பொட்டு அணியக்கூடாது, பூ அணியக் கூடாது, வெள்ளைநிற ஆடைதான் அணிய வேண்டும் என்று சொல்லி நம் தெருக்களில் வழிநடக்கும் இவர்கள், 'நீங்கள் அக்கினி அபிஷேகம் பெற்றுவிட்டீர்களா?' என்று நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள்.

 5. 'அருங்கொடையாளர்கள்' ('charismatics') என்று தங்களையே அழைக்கும் ஒரு சிறு பகுதியினர், நம் திருஅவை மரபிற்குள் இருந்துகொண்டே ஒரு மாற்று வழிபாட்டு முறையையும் முன்வைக்கின்றனர்.

பவுல் எபேசு நகரில் எதிர்கொண்ட கேள்விதான் இங்கே நினைவிற்கு வருகிறது: 'தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!' (காண். திப 19:1-10)

 இந்த நாளின் பொருளைப் புரிந்து கொள்ளுமுன் 'தூய ஆவி' என்னும் பெயரைப் புரிந்து கொள்வோம். 

 விவிலியத்தில் 'தூய ஆவி' என்ற பெயர் நான்கு நிலைகளில் கையாளப்படுகின்றது:

 அ. 'ஆண்டவரின் ஆவி.' எபிரேயத்தில் 'ருவா' என்ற வார்த்தையை 'ஆவி' என்று மொழிபெயர்க்கிறோம். இந்த 'ஆவி' தான் படைப்பின் தொடக்கத்தில் நீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தவர் (காண். தொநூ 1:2). ஆதாமின் உடலுக்குள் ஊதப்பட்டவர். அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள்மேல் இறங்கி வந்தவர். இயேசுவின் திருமுழுக்கின்மேல் அவர்மேல் இறங்கி வந்தவரும், அவரை பாலைநிலத்திற்கு அழைத்துச் சென்றவரும், 'ஆண்டவரின் ஆவி என்மேல் உளது' என்று இயேசு தொழுகைக்கூடத்தில் சொன்னவரும் இவர்தான்.

 ஆ. 'இயேசுவின் ஆவி.' தன் உயிர்ப்புக்குப் பின் தன் சீடர்கள் மேல் ஊதுகின்ற இயேசு, 'தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்' என்கிறார். இங்கே தூய ஆவியானவர் இயேசுவின் கொடையாக, அவரிடமிருந்து ஊற்றெடுக்கின்றார்.

 இ. 'மூவொரு இறைவனில் ஓர் ஆள்.' தன் இறுதி இராவுணவில் சீடர்களின் பாதங்களைக் கழுவிவிட்டு அவர்களோடு தொடர்ந்து உரையாடும் இயேசு (காண். யோவா 13 -1 6) அவர்களிடம், 'தூய ஆவியானவர்' என்னும் துணையாளரைத் தான் அனுப்பவதாகவும், அவர் அவர்களுக்கு எல்லாவற்றையும் கற்பிப்பார், நினைவூட்டுவார் என்றும் வாக்களிக்கின்றார். இங்கே இயேசு மூவொரு இறைவனின் மூன்றாம் ஆளைச் சுட்டிக்காட்ட 'தூய ஆவி' என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். இந்தப் புரிதலை பிற்கால திருமடல்களிலும் பார்க்கின்றோம். உதாரணத்திற்கு, கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமடலை நிறைவு செய்யும் பவுல், 'ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!' (2 கொரி 13:13) என எழுதுகின்றார்.

 ஈ. தூய பவுலடியாரின் திருமடல்களுக்கு வரும்போது அங்கே புதியதொரு புரிதலைப் பார்க்கின்றோம். 'ஊனியல்பு,' 'ஆவிக்குரிய இயல்பு' என்று இருதுருவ வாழ்க்கை நிலைகளை எடுத்துச் சொல்லும் பவுல், ஒரு கட்டத்தில் 'ஆவிக்குரிய இயல்பு' என்பது இயல்பாகவே நம் ஒவ்வொருவரிடமும் இருப்பதுபோல எழுதி முடிக்கின்றார் (காண். கலா 5:16-26).

இந்த நான்கு புரிதல்களில் எந்தப் புரிதலை நாம் எடுத்துக் கொள்வது என்ற குழப்பத்திலிருந்து நாம் தெளிவாவதற்கே தூய ஆவியானவரின் துணை தேவைப்படுகிறது!

 திருத்தூதர்கள் மேல் இன்று தூய ஆவியானவர் இறங்கி வந்த நிகழ்வை வாசிக்குமுன் முதல் ஏற்பாட்டில் தூய ஆவியானவர் எப்படி இருந்தார் என்பதைப் புரிந்து கொள்வோம்:

 அ. 'ஒருசிலருக்கு மட்டுமே தூய ஆவியானவர்.' முதல் ஏற்பாட்டில் தூய ஆவியானவர் ஒருசிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டார். குறிப்பாக, அரசர்கள் மட்டும் இறைவாக்கினர்கள். ஆக, ஒரே அரண்மனையில் இருந்தாலும் அரசர்மேல் தூய ஆவியானவர் இருப்பார். ஆனால், அரசி மேலோ, பணிப்பெண் மேலோ இருக்கமாட்டார். இறைவாக்கினர்மேல் இருப்பாhர். ஆனால், சாதாரண மக்கள்மேல் இருக்க மாட்டார்.

 ஆ. 'நிபந்தனைக்குட்பட்டவர்.' தூய ஆவியானவர் ஒருவருக்கு கொடுக்கப்படுவதுபோல அவரிடமிருந்து திரும்பவும் எடுத்துக்கொள்ளப்படுவார். உதாரணத்திற்கு, சிம்சோன் பிறக்கும்போதே ஆண்டவரின் ஆவி அவருக்குள் இருக்கின்றார். அவரின் குழந்தைப் பருவத்தில் அவரை ஆட்டுவிக்கின்றார். ஆனால், அவரின் தலை மழிக்கப்பட்டபோது, அவரிடமிருந்து ஆவியானவர் விலகுகின்றார். அதேபோல, சவுல் அரசராக அருள்பொழிவு செய்யப்பட்டபோது அவர்மேல் தூய ஆவியானவர் இருக்கிறார். ஆனால், தாவீதின் மேல் பொறாமை கொண்டு அவரை அம்பு எய்து கொல்ல முயலும்போது, ஆண்டவரின் ஆவி அவரைவிட்டு அகல்கின்றார்.

 இ.  'அவர் ஒரு ஆற்றல்.' தூய ஆவியானவர் என்பவர் ஆற்றல், அல்லது சக்தி. அவர் ஒரு மனிதர் அல்லர். 

 இந்த மூன்று புரிதல்களும் இன்றைய முதல் வாசகத்தில் புரட்டிப்போடப்படுகின்றன:

 அ. 'அனைவருக்கும் தூய ஆவி.' திருத்தூதர்களும், அன்னை மரியாளும் தூய ஆவியானவரைப் பெறுகின்றனர். மேலும் இவர்கள் கைகளை விரிக்கும் அனைவர்மேலும் தூய ஆவியானவர் அருளப்படுகின்றார்.

 ஆ. 'நிபந்தனைகள் அல்லாதவர்.' ஒருவருக்கு ஒருமுறை வழங்கப்படும் தூய ஆவி அவரிடமிருந்து திரும்ப எடுக்கப்படுவதில்லை. அவர் தூய ஆவியின் ஆற்றல் பெற்ற வாழ்க்கையை வாழவில்லை என்றாலும், அந்த ஆவியானவர் அழியாத முத்திரையாக அவரின் உள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றார்.

 இ. 'அவர் ஒரு மனிதர்.' மூவொரு இறைவனின் மூன்றாம் நபராக இருக்கும் இவர் வெறும் ஆற்றல் அல்லது சக்தி மட்டுமல்ல. மாறாக, மூன்றாவதாக இருக்கின்ற ஒரு மனிதர். இவரின் பெயரால் ஆசி வழங்கவும் முடியும் (காண். 2 கொரி 13:13).

 இவ்வாறாக, முதல் ஏற்பாட்டுப் புரிதலைவிட இரண்டாம் ஏற்பாட்டுப் புரிதல் மாறுபட்டு நிற்கின்றது.

 இன்றைய முதல் வாசகத்தின்படி (காண். திப 2:1-11) தூய ஆவியானவர் பெந்தக்கோஸ்து என்னும் நாளில் திருத்தூதர்கள்மேல் பொழியப்படுகின்றார். எதற்காக இந்த நாளை இறைவன் தெரிவு செய்ய வேண்டும்? இதற்கு ஐந்து காரணங்களைச் சொல்கின்றது வரலாறு:

 1 'பெந்தக்கோஸ்து' என்னும் சொல்லுக்கு ஐம்பதாவது நாள் என்பது பொருள். இது அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழா. பாஸ்கா திருவிழாவுக்குப் பின் ஐம்பதாவது நாள் இது கொண்டாடப்பட்டது (காண். லேவி 13:15). யூதர்கள் தங்கள் முதற்கனிகளை தங்கள் இல்லங்களுக்கு கொண்டு வந்த இந்த நாளில்தான் திருத்தூதர்கள் ஆவியின் கொடைகளை முதற்கனிகளாகப் பெறுகின்றனர்.

 2. மோசேக்கு சீனாய் மலையில் பத்துக் கட்டளைகள் கொடுக்கப்பட்டதை இந்த நாளில்தான் யூதர்கள் நினைவுகூர்ந்தனர். இந்தக் கட்டளைகள் நமக்கு வெளியில் இருப்பவை. ஆனால் எரேமியா புதிய கட்டளைகள் நமக்கு உள்ளேயே இருக்கும் (31:33) என முன்னுரைக்கின்றார். நம் உள் உறையும் கட்டளையாக, நம் மனச்சான்றின் ஒளியாக இங்கே இறங்கி வருகிறார் தூய ஆவியானவர்.

 3. மோசே மலைக்கு ஏறிச்சென்று கட்டளைகளைப் பெற்று வந்ததுபோல, இயேசு விண்ணேற்றம் அடைந்து தூய ஆவியானவரை அனுப்புகின்றார்.

 4. மலையிலிருந்து இறங்கி வந்த மோசே வெறும் சத்தங்களை மட்டும் எழுப்பினார் என்றும், அந்தச் சத்தங்களை அங்கே கூடியிருந்த மக்கள் 70 மொழிகளில் கேட்டனர் என்றும் சொல்கிறது தாக்குமா 26 என்னும்  ரபிக்களின் விளக்கவுரை. இதேபோல, தூய ஆவியால் நிரப்பப்பட்ட திருத்தூதர்களின் பேச்சை அங்கே கூடியிருந்தவர்கள் தத்தம் மொழிகளில் கேட்கின்றனர்.

 5. தோரா அல்லது சட்டம் யூதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆனால், தூய ஆவியானவர் எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றார். மேலும், இங்கே; இறங்கி வரும் பிளவுண்ட நாவுகள், முதல் ஏற்பாட்டு பாபேல் நிகழ்வையும் நினைவூட்டுகின்றன (காண். தொநூ 11:1-9). தங்களுக்கென்ற ஒரே நகரம், ஒரே மொழி, ஒரே கோபுரம் எனக் கட்ட விரும்பியவர்களின் நாவுகள் பிளவுபடுகின்றன. இங்கே பிளவுபட்ட நாவுகள் எல்லாரையும் இணைக்கின்றனர். அங்கே கோபுரம் கட்டி மக்கள் கடவுளிடம் ஏறிச் செல்ல விரும்பினர். இங்கே கடவுளே தன் ஆவியானவரின் வழியாக இறங்கி வருகின்றார்.

 முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் இரண்டு நிலைகளில் துணிச்சல் பெறுகின்றனர்:

 அ. அவர்களின் நா கட்டவிழ்க்கப்படுகிறது. அவர்கள் வௌ;வேறான மொழிகளில் (க்ளோசலாலியா) பேசத் தொடங்குகின்றனர். மொழி அவர்களுக்கு இனி தடையல்ல. 

 ஆ. அவர்களின் இல்லக் கதவுகள் திறக்கப்படுகின்றன. 'எல்லாம் முடிந்தது!' என பயந்து கொண்டு, விரக்தியிலும், கவலையிலும் சோர்ந்திருந்தவர்கள் தங்களின் கதவுகளைத் திறந்து வெளியே வருகின்றனர். இனி யாரும் அவர்களை அடைத்து வைக்கவோ, அவர்களின் வேகத்திற்கு தடை போடவோ முடியாது.

 இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:3-7,12-13) தூய ஆவியாரின் இருப்பு அல்லது பிரசன்னம் என்பது செயல்களில் வெளிப்படவேண்டும் என்கிறார் தூய பவுல். மேலும், திருஅவையில் தூய ஆவி பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் அடிப்படையான இணைப்பாக இருக்கிறார். அதாவது, நீங்களும் நானும் வேறு வேறு கொடைகளைப் பெற்றிருந்தாலும் திருச்சபையில் ஒன்றாய் இருக்கிறோம் என்றால், வேறுபாடுகளைக் கடந்த ஓர் ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடியவர் தூய ஆவி.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 20:19-23) இயேசு தான் உயிர்த்த (விண்ணேற்றம் அடைந்த) நாளில் தன் சீடர்கள்மேல் ஊதுகின்றார். ஊதி, 'தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்' என்கிறார். முதல் ஏற்பாட்டில் 'ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்' (தொநூ 2:7) - முதல் ஆதாம் உயிர்பெறுகின்றான். இங்கேயும் கடவுளாகிய இயேசு சீடர்கள்மேல் ஊத அவர்கள் அவரின் உயிர்மூச்சைப் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாறாக, கடவுளின் பழைய செயலை புதிய செயலாக நிறைவு செய்கின்றார் இயேசு.

 இறுதியாக, இவ்வளவு விளக்கங்களுக்குப் பின் தூய ஆவி என் வாழ்வில் யார்? என்ற கேள்வியைக் கேட்போம். தூய ஆவியார் வெறும் அருங்கொடை இல்லத்தில் கிடைப்பவரா? அல்லது திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதல் அருளடையாளங்களில் மட்டும் நம்மிடம் வருபவரா? தூய ஆவியின் செயல்பாட்டை நாம் நம் அன்றாட வாழ்வில் தடுக்கின்றோமா? (காண். 1 தெச 5:19)

 பெந்தகோஸ்தே நிகழ்வின் சவாலாக நாம் 2 திமொத்தெயு 1:7 எடுத்துக்கொள்வோம்:

 'கடவுள் நமக்கு கோழையுள்ளம் தரும் ஆவியை அல்ல. மாறாக, வல்லமையும், அன்பும், கட்டுப்பாடும் கொண்ட ஆவியையே வழங்கியுள்ளார்.'

 திமொத்தெயு திருப்பொழிவின் போது பெற்ற அருள்கொடைகளை அவருக்கு நினைவுறுத்துகின்ற பவுல், 'கோழையுள்ளம்' விடுத்து 'வல்லமையும், அன்பும், கட்டுப்பாடும்' கொண்டிருக்க அவரை அழைக்கின்றார். கோழையுள்ளம் இருக்கும் இடத்தில் வல்லமை, அன்பு, கட்டுப்பாடு இருக்காது. கோழையுள்ளம் எதையும் துணிந்து முன்னெடுக்காது. அன்புக்கென்று வரையறைகளை விதித்துக்கொள்ளும். கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். நாம் வாழ்வில் பலவற்றை இழக்கக் காரணம் இந்தக் கோழையுள்ளம். கோழையுள்ளத்தில் இயல்பாகவே பயமும், குற்றவுணர்வும் குடியிருக்கும் - அடுத்து என்ன நடக்குமோ? என்ற பயம். அய்யோ அன்று இப்படி நடந்து விட்டதே? என்ற குற்றவுணர்வு. 

 இந்துக்கள் சாமியை கும்பிட்டுவிட்டு சிறிது திருநீற்றை அள்ளி தலையில் பூசிக்கொள்வர் அல்லது தலையில் போட்டுக்கொள்வர். இது எதைக்குறிக்கிறது என்றால் தான் வணங்கும் கடவுளின் ஆவி தன்னிடம் வந்துவிட்டதன் அடையாளமான ஆங்கரிங் தான் அது. இந்த ஆங்கரிங் கிடைத்தவுடன் எந்தக் கப்பலையும் (!) அவர்களால் நிறுத்துவிட முடிகிறது. எந்த வகை காற்று மற்றும் புயலையும் எதிர்க்க முடிகிறது. ஆக, இயல்பாகவே நம்மிடம் இருக்கின்ற ஆவியை நாம் மறந்துவிடுகிறோம். இந்த பெந்தகோஸ்தே விழாவில் அவருடைய இருப்பை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்வோம்.

 இந்த இருப்பு நம்மை வல்லமை, அன்பு, கட்டுப்பாடு நோக்கி நகர்த்துவதாக.

 இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் 'வல்லமை' கொண்டவர்களாக புறப்பட்டுச் செல்கின்றனர்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் முதல் கிறிஸ்தவர்கள் 'அன்பு' கொண்டவர்களாக ஒரே உடலாக இணைகின்றனர்.

இன்றைய மூன்றாம் வாசகத்தில் திருத்தூதர்கள் 'கட்டுப்பாடு' பெற்றவர்களாக ஆண்டவரின் அமைதியால் ஆட்கொள்ளப்படுகின்றார்கள்.

 தூய ஆவி என்பது நம் செல்ஃபோனில்; இருக்கும் சிம் கார்டு மாதிரி. அதை நாம் பார்ப்பது கிடையாது. ஆனால், அது தன் நெட்வோர்க்கோடு இணைந்துகொண்டு தன்னில் இணைந்திருக்கும் அனைவரையும் இணைக்கிறது. இந்த சிம்கார்டுக்கும் வேலிடிட்டி உண்டு. அதை நாம் புதுப்பிக்காமல் விட்டுவிட்டால் அது அப்படியே முடங்கிவிடும். 'என் ஆவியின் செயல்பாட்டை நான் அணைத்துவிட மாட்டேன்' என்ற உறுதியோடு அவரின் செயல்பாடுகள் நம்மில் நாளும் வளம்பெற இன்று மன்றாடுவோம்.

 தூய ஆவியார் பெருவிழா வாழ்த்துக்கள்.

 

 

AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE 

Copyright © 2001-2017

EMAIL : webmaster@aumonerietamouleindienne.org